Monday, February 6, 2012

மற்றொரு இனிய பயணமும் சுவையான உரையாடல்களும்கடந்த சனிக்கிழமை (04-02-12) திருச்சி சமயபுரம் எஸ்.ஆர்.வி பள்ளியில் நானும் முத்துக்கிருஷ்ணனும் உரையாற்றினோம். எனக்கு இது இரண்டாம் முறை. முத்துக்கிருஷ்ணன் ஊடகம் பற்றி நான் சிறுகதைகள் குறித்து. அந்த பள்ளியில் உள்ள இனிமையான உபசரிப்பு மற்றும் அமைதியான சூழல் ஒரு பயணியின் உல்லாசத்தை ஏற்படுத்தும். அங்குள்ள புத்திசாலியான மாணவர்கள் தொடர்ந்து இலக்கியம் படிப்பு மீது நமது நம்பிக்கையை வலுப்படுத்துவார்கள். இம்முறை பேசும் போது பெரிய கூட்டம். போன முறை கவிதை பட்டறையில் பார்த்த மாணவர்கள் அன்பாக ஆர்வமாக ஒளிதுலங்கும் கண்களுடன் கூட்டத்தின் நடுவில் இருந்து என்னை பார்த்துக் கொண்டிருந்தனர். நவீன சிறுகதைக்கான பண்புகள், பிரபலமான மேற்கோள்கள், ஏழு வகையான சிறுகதைகள் என அறிமுகப்படுத்தினேன். பின்னர் செக்கோவின் வான்கா கதையை வாசித்து உரையாடினோம். ஒன்றரை மணிநேரம் போனதே தெரியவில்லை.
கடந்த முறை பகலெல்லாம் விருந்தினர் அறையில் தனியாக அமர்ந்திருந்தேன். உள்ளே செல்போன் டவர் எடுக்காது. எந்த மனிதக் குரலும் மனித வாடையும் உணராமல் ஒரு நூதனமாக தனிமை இருக்கும். இம்முறை முத்துக்கிருஷ்ணன் கூட இருந்ததால் அவருடன் பேசி சிரித்துக் கொண்டே இருந்தேன். கல்லூரி விடுதி நினைவுகள் கிளர்வதை தடுக்க முடியவில்லை. மனதுக்கு வயதாவதில்லை என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். நன்றாக மனம் விட்டு சிரிக்க தடை நாம் வாழும் மாறாத இறுக்கமான சூழல்கள் தாம் என நினைத்துக் கொண்டேன்.
வரலாறு மற்றும் கணித ஆசிரியர்கள் முரளி மற்றும் ராதாகிருஷ்ணனை சந்தித்து போன முறை நிறுத்திய இடத்தில் இருந்து தொடர்வது போல் சரளமாக பேசிக் கொண்டிருந்தேன். முரளி தான் வாசிக்கும் நூல்கள் பற்றி சொன்னார். ராதாகிருஷ்ணன் தனக்கு ஒரு நாவல் எழுத திட்டம் உள்ளதாய் சொன்னார். எனது “கிரிக்கெட்டின் மாறும் நிறங்களை புத்தக கண்காட்சியில் வாங்கி வாசித்ததாய் சொன்னார். பொதுவாக கல்வி முறை, அதில் உள்ள ஊழல் என சுவாரசியமாக பேசினார். ஒரு அரசு உதவி பெறும் ஒரு பள்ளிக்கூடத்துக்கு externalஆக சென்றாராம். அங்கு மாணவர்கள் C++ நிரலை மனப்பாடமாய் ஒப்பிக்கிறார்களாம். ஆனால் லேபில் ஒரு கணினி கூட திறந்து பயன்படுத்தப்படாமல் உறைபிரிக்காமல் இருக்கிறதாம். புத்தம் புதுசாய் இருக்கும் கணினிகளை பார்த்து அவருக்கு வியப்பு. விசாரித்தால் கணினி ஆசிரியர்களை நியமிக்கவில்லை என்று தெரிய வந்ததாம். இப்போதைக்கு காம்ர்ஸ் வாத்தியார்கள் தாம் கணினிக்கும் பொறுப்பாம். இப்படி ஆரம்பித்து பள்ளிக்கு externalஆக வந்த உடனே ஒரு வார சாப்பாட்டுக்கான மெனு பட்டியலை அளிக்கும் நபர்கள் வரை குறிப்பிட்டு விரிவாக பேசினார். சமச்சீர் பாடத்திட்டம் மாணவர்களுக்கு மிக கவர்ச்சியாக உள்ளதாக நேரடி பயன்பாட்டு பயிற்சிகள் மிகுந்ததாக உள்ளதாக குறிப்பிட்டார். ஆனால் சற்று அதிகமாக எளிமைப்படுத்துப்படுவதாக, அதனால் தரம் தாழ்ந்து விட்டதாக விசனித்தார். மேலும் அப்பாடத்திட்டத்தின் படி பாடம் எடுக்க நிறைய உதவிக்கருவிகள் தேவைப்படுமாம். அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்களே போதுமானதாக இல்லாத நிலையில் யார் கருவிகளை வாங்கப் போகிறார்கள் என்று அவநம்பிக்கை தெரிவித்தார்.
அங்குள்ள மெஸ் உணவில், குறிப்பாக பரோட்டா, நான் படித்த விடுதியின் அதே சுவை கொண்டிருந்தது. பொதுவாக விடுதி உணவு ஒரு சுவையில்லாத சுவையை கொண்டிருக்கும். ஒருவிதமாய் நாவு அதற்கு பழகிப் போய் விடும்.
அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் துளசிதாசன் ஒரு நல்ல இலக்கிய வாசகர், சமூக ஆர்வலர். அவர் எஸ்.ராவுடன் இணைந்து சிறுகதைகளை புதுமையாக கற்பிக்கும் ஒரு புது புத்தகத்தை வடிவமைத்திருக்கிறார். ஒரு சிறுகதை வாசிக்கப்பட்டு, நாடகமாக்கப்பட்டு, திரும்ப சொல்லப்பட்டு விளக்கப்படுவதே அந்த முறை. சிறு சிறு பிரிவுகளாய் மாணவர்களை பிரித்து ஒரே கதையில் வேறுபட்ட முறைகளில் இவ்வாறு இயங்க வைப்பார்கள். அவர் தனது புது திட்டங்களை சொல்ல சொல்ல கல்வித்துறை மீது எனக்குள்ள நம்பிக்கை மேலும் மேலும் வலுவானது. தனிநபர்களாலும் ஒரு சீரழிந்த சூழலை ஓரளவுக்கு சீர்திருத்த முடியும். முழுக்க கட்டமைப்புகளையே குற்றம் சொல்லி ஓய்வதில் பயனில்லை. எங்காவது ஓர் அணில் ஒரு சிறுகல்லை தூக்கிப் போட்டால் போதும். எதிர்காலம் நோக்கின பாலம் எழுந்து விடும்.
எஸ்.ஆர்.வி பள்ளியில் ஆண்டுமலரை பார்த்தேன். கனமான பிரம்மாண்ட இதழ். புரட்டியபோது அசோகமித்திரன் உள்ளிட்ட பல முன்னோடிகள் அங்கு வந்துள்ளதை கண்டேன். மிக நெகிழ்ச்சியாக இருந்தது. பள்ளிக்கு வந்த அனுபவத்தைக் குறிப்பாக எழுதுகையில் கூட அசோகமித்திரனின் நகைச்சுவையும் கூர்மையும் பளிச்சிடுகின்றன.
திரும்ப ஞாயிறு சென்னைக்கு திரும்பியதுமே எழுத வேண்டியவை, படிக்க வேண்டியவை, செய்ய வேண்டிய வேலைகள், சாப்பிட வேண்டிய உணவுகள், தூங்க வேண்டிய தூக்கம் என்று பரபரப்பு பழையபடி தொற்றிக் கொண்டது.

No comments: