Tuesday, February 7, 2012

செகோவின் 15 கதைகளும் தமிழ்ச்சூழலில் வாசக பிரசுரமும்இணையம் இன்று பிரசுரத்தை சுலபமாக்கி உள்ளது நமக்கு தெரியும். இதன் அடுத்த கட்டம் சுயபிரசுரம். தமிழில் பிரசுர வாய்ப்பில்லாத எழுத்தாளர்கள் தாம் இதை செய்து வந்தார்கள். அதுவும் தங்கள் நூல்களைத் தாம். இன்னொரு பக்கம் வியாபாரிகள், அரசியல் செயல்பாட்டாளர்கள், சித்தாந்தவாதிகள், பத்திரிகையாளர்களும், நிறுவனங்களும் பதிப்பித்தார்கள். மேற்கத்திய எழுத்தாளனால் இன்று தன் புத்தகத்தை மின்நூலாக பிரசுரித்து பதிப்பாளர் ஆதரவின்றி அமேசான் தளம் மூலமாக தானே விற்று கோடிக்கணக்கில் சம்பாதிக்க முடிகிறது. முதன்முதலில் சுயபிரசுரம் இன்று எழுத்தாளனை முன்னெப்போதையும் விட விரைவில் மில்லியனராக்கி வருகிறது. பிரசுரம் இன்று முதலீடு தேவைப்படாத முழுக்க எழுத்துத்திறனை நம்பிய ஒரு செயல்பாடாக மாறி வருகிறது. தமிழில் இன்றும் இந்த பதிப்பக நிலைமை வரவில்லை. இங்கு என்ன நிகழ்கிறது?
இப்போது இங்கு வாசகனின் காலகட்டம். வலைதொடர்பு தளங்கள், பிளாகுகள் வழியாக வாசகன் எழுத்தாளனாக மெல்ல மெல்ல உருப்பெற்று வருகிறான். மற்றொரு பக்கம் வாசகன் பதிப்பாளனாகவும் மாறுகிறான். தொழில்நுட்பமும் பொருளாதார வளர்ச்சியும் இதை சாத்தியமாக்குகிறது. தியாகியாக பிரம்மச்சாரியாக கண்கள் சிவக்க பேசும் சித்தாந்தவாதியாக அல்லாதவர்களும் இன்று புத்தகம் பிரசுரிக்கிறார்கள். உதாரணமாக ல.ம சரவணன் எனும் வாசகர் அ.முத்துலிங்கம் ஒரு கட்டுரையில் குறிப்பிட்ட செகோவின் “வேட்டைக்காரன் சிறுகதையால் தூண்டப்பட்டு மேலும் விரிவாக செகோவை வாசித்து மொழிபெயர்ப்பாளர் எம்.எஸ்சை கொண்டு ஒரு சிறப்பான  ஆண்டன் செகோவ் சிறுகதைகள் என்ற நூலை தந்துள்ளார். இது ஒரு நல்ல போக்கு. வாசகர்கள் தமக்கு பிடித்த அந்நிய மொழி எழுத்தாளர்களை மொழிபெயர்ப்பது மட்டுமல்லாமல் அவர்களை தாமே நேரடியாக பிரசுரிப்பது இந்த போக்கின் அடுத்த கட்டம் எனலாம். இந்த நூலை சற்று விரிவாக பார்ப்போம்.

செகோவின் மிக பிரபலமான வான்கா, “பந்தயம், “நாயுடன் நடந்த பெண், “வேட்டைக்காரன் போன்ற கதைகள்,  நெல்லிக்காய்கள் (நெல்லிக்காய் என்று ஒருமையில் தந்திருக்கிறார் எம்.ஸ்), துக்கம் போன்ற மானுட மனதின் ஆழங்களை அலசும் பிரமாதமான கதைகளில் இருந்து,எதிர்க்க முடியாத பிராணி, “ஆக்கிரமிப்பு“ போன்ற கரிப்பான நகைச்சுவை கொண்ட கதைகள், மற்றபடி சுமாரான பச்சோந்தி போன்ற சில கதைகளும் இதில் உள்ளன. செகோவை அறிமுகப்படுத்த இதனாலே இது ஒரு தகுதியான நூல் தான். இக்கதைகளும் அடுக்கப்பட்டுள்ள விதமும் பாராட்டுக்குரியது. எம்.எஸ் தனது முன்னுரையில் தான் படித்த விதத்தில் எதேச்சையான முறையில் கதைகளை மொழிபெயர்த்ததாக சொன்னாலும் படிக்கும் போது திட்டமிட்ட வகையில் அடுக்கப்பட்டதான எண்ணமே ஏற்படுகிறது.

செகோவின் கதைகள் ஏழை எளியவர்கள், நிராதரவானவர்கள், நிராசையுற்றவர்கள், வாழ்வின் பொருள் அறியாத குழப்பமானவர்கள், தம்மைத் தாமே குடியினாலும் உடல் இச்சையினாலும் அழித்துக் கொள்பவர்கள் என ஒருவித “விளிம்புநிலையானவர்களின் நிலைமையை பேசினாலும் அவை துக்கத்தை பற்றின ஒரு நேரடியான சித்தரிப்பு அல்ல. சுவாரஸ்யமாக செகோவ் மனித வாழ்வின் துக்கம் கசப்பானதே அல்ல என்கிறார். மனித வாழ்வு துக்கம் நிரம்பியது என்றாலும் அது அத்தனை கசப்பானது அல்ல. அழிவின் விளிம்பிலும் மனிதனுக்கு வாழ்வின் மீதான வசீகரமும் அதன் புதிர்தன்மை மீதான சுவாரஸ்யமும் தொடர்கிறது. அவரது கதைகளில் அதிகமும் அறியாமையில் உழல்பவர்கள் தாம் வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு அந்த அறியாமையை எப்படியோ வெளிச்சமாக மாற்ற தெரிந்திருக்கிறது. மூடநம்பிக்கையும் அறியாமையும் மந்தைமனநிலையும் மிகுந்த சாதாரணர் வாழ்விலும் ஏதோ ஒரு தெளிவு உள்ளது. செகோவ் மனிதர்கள், குறிப்பாய் அறிவையும் தர்க்கத்தையும் நாடாத மனிதர்கள் வாழ்வை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்று ஆராய்கிறார். புனைவின் கரடுமுரடான பாதை வழி, எந்த சித்தாந்தத்தின் கோஷங்களோ, கோட்பாடுகளின் அறுவைசிகிச்சை கத்திகளின் துணையோன்றி, அனைத்து தரப்புகளுக்கும் நியாயம் நல்கியபடி இந்த ஆய்வை அவர் செய்கிறார். செகோவின் எளிய மனிதர்கள் மீதான அக்கறைக்கு அவரது குடும்பப் பின்னணி ஒரு காரணமாக இருக்கலாம்.
இளமையில் குடிகார, கடன்கார அப்பாவால் கைவிடப்பட்ட குடும்பத்தை உழைத்து கரையேற்றியவர் செகோவ். பின்னர் மருத்துவரான பின் அவர் ஏழைகளுக்கு இலவச மருத்துவம் செய்து வந்தார். பஞ்சத்தாலும் காலராவாலும் அவதிப்பட்ட மக்களை காப்பாற்றினார். அவர்களுக்காக மூன்று பள்ளிக்கூடங்கள், ஒரு மருத்துவமனை மற்றும் ஒரு தீயணைப்பு நிலையம் கட்டினார். இது குறித்து “ஷேம்பெய்ன் குடித்து எவ்வளவு நாளாகிறது என்றொரு நல்ல கட்டுரை எம்.எஸ் இந்நூலில் எழுதியுள்ளார். இந்த தலைப்பு செகோவ் காசநோய் முற்றி சாகும் முன் சொன்ன வாக்கியம். கசப்பு மிகுந்த வாழ்வு இனிமையானதும் தான் என்று அவர் நம்பியதே இதற்கு அடிப்படை. செகோவ் தன் நகைச்சுவை உணர்வை கடைசி வரை இழக்கவில்லை. உதாரணமாக தனது காசநோய்க்கு அவர் மருத்துவம் பண்ண ஏன் மறுக்கிறார் என்பதற்கு அவரது மிக பிரபலமான பதில் இது: “எனது சகமருத்துவர்கள் மீது பயமாக உள்ளது. இந்த நகைச்சுவை எழுத்தில் அவருக்கு தனது மிக நாடகீயமாக உணர்ச்சிகரமான “வருத்தம், “வான்கா ஆகிய கதைகளுக்கு ஒரு சமநிலைமை அளிக்க பயன்படுகிறது.

ரஷ்ய இலக்கியத்தில் அன்று மனிதனின் களங்கமின்மைக்கும் பேதைமைக்கும் ஆன உறவு பற்றி ஒரு விவாதம் நடந்திருக்கிறது. தஸ்தாவெஸ்கி மிஷ்கினையும் தல்ஸ்தாய் பியரையும் கொகோல் அகாகி அகாகியேவிட்சையும் வெவ்வேறு தளங்களில் உருவாக்கினார்கள். பலவீனமும் தடுமாற்றமும் அபத்தமும் நிரம்பிய இந்த பேதை பாத்திரங்கள் மனித வாழ்வின் ஒரு சிக்கலை முன்வைத்து விவாதித்தன. தனது மங்கலான உள்ளொளியின் துணை மட்டும் கொண்டு ஒரு மனிதன் கடும் இருட்டில் இருந்து மெல்ல மெல்ல வெளிவருகிறான். அந்த உள்ளொளி மதமோ நம்பிக்கையோ சடங்கோ தர்க்கமோ மனித ஆதரவோ அல்ல. அது கடவுளோ, இயற்கை ஆற்றலோ, உள்தூண்டலோ அல்லது ஏதோ ஒரு இயல்பான மனித பண்போ ஆக இருக்கலாம். ஒரு மருத்துவராகவும் சமூக ஆர்வலரகாவும் மனிதனின் அவலங்களை சீரழிவுகளை அருகில் இருந்து பார்த்த செகோவ் அவனை விமர்சிக்கவோ திருத்தவோ வழிநடத்தவோ முயலவில்லை. அவர் மனிதனின் சீரழிவை அப்படியே சித்தரிக்கவோ சீரழிவே நடைமுறை மோஸ்தர் என்று நம்மூர் பின்நவீனத்துவாதிகள் பாணியில் கொண்டாடவோ இல்லை. அவர் மனிதன் மீது அபார நம்பிக்கை கொண்டவர். மனிதன் எந்த சிர்கெட்ட நிலையில் இருந்தும் எந்த புறசக்தியின் துணையின்றி மீட்சி அடையும் அபார திறன் கொண்டவன் என்று நம்பினார். செகோவின் கதைகள் நமக்கு பிரியமாக இருப்பதற்கு அவர் வாழ்வை ஒரு ஆழமான தளத்தில் நம்பினார் நேசித்தார் என்பதே காரணமாகும். இத்தொகுப்பில் வரும் “வான்கா  “ஒரு மகிழ்ச்சியான மனிதன் ஆகிய கதைகளில் இருவிதமான மகிழ்ச்சியான மனிதர்கள் வருகிறார்கள். கடுமையான துக்கத்தில் மகிழ்ச்சியை கண்டடைபவர்கள், உச்சபட்ச மகிழ்ச்சியில் தனது அவலநிலையை அறியாமல் திளைப்பவர்கள்.
வான்கா எனும் 9 வயது சிறுவன் தன் தாயின் மரணத்துக்கு பிறகு மாஸ்கோவில் அல்யாஹின் எனும் செருப்பு தலைப்பவரிடம் வேலையில் இருக்கிறான். கிறித்துமஸ் முன்தினம் தனக்கு கிடைக்கும் அரிய அவகாசத்தின் போது கிராமத்தில் உள்ள ஒரே உறவான தன் தாத்தாவுக்கு ஒரு கடிதம் எழுதுகிறான். நகரத்தில் தனக்கு போதுமான உணவோ தூங்கும் இடமோ இல்லை. யாரும் ஆதரவில்லை. முதலாளியும் அவரது மனைவியும் தன்னை தொடர்ந்து அடித்து துன்புறுத்துகிறார்கள் என்று புகார் சொல்லி தன்னை அங்கிருந்து அழைத்து சென்று விடும்படியாய் கெஞ்சி கேட்கிறான். முதலாளி அச்சுருவால் தலையில் அடிக்கிறார். எஜமானி மீனால் அடிக்கிறாள். இரவில் அவர்களின் வீரிட்டழும் குழந்தை அவனை தூங்க விடுவதில்லை. மூத்த பணியாளர்கள் அவனை ஏய்க்கிறார்கள், கேலி செய்கிறார்கள், திருட வற்புறுத்துகிறார்கள். பிறகு வான்காவுக்கு கிராமத்தில் உள்ள இனிய நினைவுகள் எழுகின்றன. முதிர்ந்த வயதிலும் துடிப்பாக வேலை செய்யும், சமையற்காரிகளை கிள்ளி விட்டு தமாஷ் செய்யும், அப்பாவி நாய்க்கு மூக்குப் பொடி போட்டு விடும் இரவுகாவலாளி தாத்தாவின் சித்திரம் மனதில் உருவாகிறது. அவரது தந்திரமும் அப்பாவித்தனமும் கொண்ட இருவேறுபட்ட நாய்கள் வருகிறார்கள். அந்த பருவத்தில் பனியில் இயற்கை வண்ணங்களில் துலங்கும் கிராமம் வருகிறது. பிறகு மாஸ்கோவில் உள்ள நகரத்துக்காரர்கள் எவ்வளவு வேறுபட்டவர்கள், இங்குள்ள வசதிகள் என்ன, விநோதங்கள் என்ன, என்ன விதமான தூண்டில்கள், துப்பாக்கிகள் வாங்கக் கிடைக்கின்றன ஆகியவற்றை விவரிக்கிறான். பிறகு கிராமத்து முதலாளியின் மனைவியான ஒல்கா பற்றின இனிமையான நினைவுள் எழுகின்றன. ஒரே கதையில் இவ்வளவு விதமான மனிதர்கள்! வன்மம் மிக்க முதலாளி, சுயநலவாதிகள், அசட்டையான தாத்தா, கருணை மிகுந்த எஜமானி என. பிறகு வான்கா ஒருமுறை கடைசியாக தன்னை காப்பாற்றும் படி தாத்தாவிடம் வேண்டி விட்டு கடிதத்தை உறையில் இட்டு கிராமத்தில் இருக்கும் தாத்தா என்று போட்டு அவரது பெயரையும் எழுதி தபால் பெட்டியில் சேர்க்கிறான். கிராமத்து முகவரி தெரியாததால் எழுதவில்லை. கடிதம் போய் சேர அது அவசியம் என்று அவனுக்கு தெரியவில்லை. அக்கடிதத்தை ஊரில் தாத்தா பிற வேலைக்காரர்களிடம் படித்துக் காட்டுவதை கனவு கண்டபடி சுகமாக உறங்கிப் போகிறான்.
“ஒரு மகிழ்ச்சியான மனிதனில் நண்பர்களான இவானும் பியோடரும் ரயிலில் சந்தித்து கொள்கிறார்கள். இவான் புதுமணமானவன். மகிழ்ச்சியில் தள்ளாடியபடி இருக்கிறான். அவன் ரயிலில் பெட்டி மாறி ஏறி விட்டதாக சொல்லி தன்னையே நொந்து கொள்கிறான். மகிழ்ச்சியை தக்க வைத்து அதை விரித்து ரசிக்க அறிந்தவன் அவன். அதன் பொருட்டாக பிராந்தி வாங்க இறங்கிய போது தான் பெட்டி மாறி ஏறி விட்டான். தன் நண்பனிடம் தான் விண்ணில் பறந்து கொண்டிருப்பதாகவும் தான் ஒரு மகிழ்ச்சியான முட்டாள் என்றும் விளக்குகிறான். திருமணம் செய்தது தான் அவனது மிகுந்த மகிழ்ச்சியின் பரபரப்பின் பெருமிதத்தின் காரணம். மனிதர்கள் மகிழ்ச்சியை தள்ளிப் போட்டு வேறு எத்தனையோ வீணான விசயங்களுக்கு பின்னே ஓடுகிறார்கள். அப்படி செய்வது இயற்கைக்கு விரோதமானது என்கிறான். அங்கு கூடியிருப்பவர்கள் அவனை கவனிக்க துவங்குகிறார்கள். அவன் தன் மனைவியை எண்ணி சிலாகித்துக் கொண்டே இருக்கிறான். மகிழ்ச்சி தாளாமல் பிறகு அவன் தன் நண்பன் பியோடரை கட்டி அணைக்கிறான். பயணிகள் இந்த விநோதமான மகிழ்ச்சியான மனிதனை ஆர்வமாக பார்த்து சிரிக்கிறார்கள். செகோவ் எந்த ஒரு தரப்புக்கும் நியாயமான எதிர்தரப்பையும் தருவார். ஆக பியோடர் ஒரு கேள்வி கேட்கிறான். மனிதன் தன் மகிழ்ச்சியை உருவாக்கி கொள்ளலாம் சரி. ஆனால் விபத்து, நோய் போன்ற ஒரு புறச்செயல் அந்த மகிழ்ச்சியை குலைத்து விடலாமே. வாழ்வை சூழ்நிலை அல்லவா தீர்மானிக்கிறது! இவான் அப்படியெல்லாம் ஒருவர் பயப்படக்கூடாது என்று பேசிக்கொண்டிருக்கும் போது எதேச்சையாக அவர்களின் உரையாலில் அவன் தவறான ரயிலில் மாறி ஏறியிருப்பது தெரிய வருகிறது. இவானின் மனைவி எதிர்திசையில் வேறு ஒரு ரயிலில் தனியே அவனை எதிர்பார்த்த படி போய்க் கொண்டிருக்கிறாள்.
செகோவின் வேறு பல பாத்திரங்களைப் போலவே இவானும் மிக மகிழ்ச்சியான மனிதனான இவானும் தனது இந்த கையாலாகாத நிலையை உணர்ந்து என்ன செய்ய என்று வியக்கிறான். மனைவிக்கு தந்தி கொடுப்பதற்கான பணம் கூட அவனிடம் இல்லை. எல்லாப் பணமும் அவள் வசம் இருக்கிறது. அப்போது அந்த மகிழ்ச்சியான பேதை மனிதனின் களங்கமின்மையை ரசித்து சிரிக்கும் சகபயணிகள் அவனுக்கு காசு கொடுத்து அனுப்பி வைக்கிறார்கள்.
வான்காவும் இவானும் இருவேறுபட்ட ஆளுமைகள். ஆனால் அவர்கள் தங்கள் புறக்காரணிகளால் கட்டுப்படுத்தப்படாமல் வாழ்வை இனிமையாக்க அறிந்து வைத்திருக்கிறார்கள். தத்தமக்கு இயல்பான வழிகளில். வான்காவுக்கு கற்பனையும் நினைவேக்கமும், இவானுக்கு தற்காலிக சிறு மகிழ்ச்சியை பெரிதாக வளர்த்து தக்க வைக்கும் மனநிலையும் உதவுகிறது. வாழ்வு இப்படித்தான் அதன் அத்தனை கடுமை மற்றும் கையாகாலத்தனத்திற்கு மத்தியிலும் வாழத்தக்கதாகிறது என்கிறார் செகோவ். அசலான வாழ்வு தர்க்கத்தையும் அறிவாக்கத்தையும் கடந்தது என்கிறார் அவர். ஒன்றுமே அறியாமல் இருப்பது ஒன்றுமே அறியாதது அல்ல என்பது செகோவ் கதைகளின் அடிநாதமாக இருக்கிறது.

நெல்லிக்காய் கதையில் வாழ்வின் துக்கம் பற்றின விசாரணையை ஒரு நாவலுக்குரிய விரிவான தளத்திற்கு கொண்டு செல்கிறார். இக்கதையில் பலதரப்பட்ட மனிதர்கள் வருகிறார்கள். சேறும் சகதியும் மண்ணில் கடுமையான உழைப்பும் வாழ்வின் பகுதியாக கொண்ட எளிய மனம் படைத்த நாற்பது வயதான அலேஹின் எனும் கிராமத்து விவசாயி. அவரது பண்ணை வீட்டில் வந்து தங்கும் இவான், பார்க்கின் எனும் இரு நண்பர்கள். இவான் ஒரு கால்நடை மருத்துவன். மானுடநேயம் கொண்ட லட்சியவாதி. இவானின் சகோதரன் நிக்கோலே. பெலகியா எனும் மிக அழகான வேலைக்காரி. இவானும் பார்க்கினும் அப்பெண்ணால் கவரப்படுகிறார்கள். பிறகு அவர்கள் குளித்து உணவருந்திய பின் சேர்ந்து அமர்ந்து அலேஹினுடன் பேசுகிறார்கள். அப்போது இவான் தன் தம்பி நிக்கோலேயின் கதையை சொல்கிறான். அவர்கள் குடும்பத்துக்கு சொந்தமாக இருந்த எஸ்டேட்டை பிற்பாடு கடன் காரணமாக இழக்கிறார்கள். நிக்கோலே ஒரு அரசு அதிகாரியாக நகரத்தில் சென்று வசிக்கிறான். ஆனால் அவன் மனம் முழுக்க கிராமம் பற்றின கனவுகளே நிரம்பி இருக்கின்றன. கிராமத்துக்கு எப்போது திரும்பி ஒரு பண்ணை வாங்கி அங்கு ஏரியோ வயலோ பார்க்க வீடு கட்டி, அங்கு ஒரு நெல்லிக்காய் மரம் வைக்க வேண்டும். சொந்த நிலத்தில் வளைந்த முட்டைக்கோஸ் தின்ன வேண்டும், வெட்டவெளியில் படுத்து உறங்க வேண்டும் என்று பலவாறு கனவு காண்கிறான். சதா தோட்டக்கலை நூல்கள் படிக்கிறான், விற்பனைக்கான நிலங்கள் பற்றின விளம்பரங்களை வாசிக்கிறான். சிக்கனமாக வாழ்ந்து பணம் சேர்க்கிறான். நாற்பது வயதில் ஒரு வயதான விதவையை திருமணம் செய்கிறான். அவளையும் தன் கஞ்சத்தனத்தால் வருத்துகிறான். பிற்பாடு அவள் இறந்த பின் அவன் மூன்னூற்று ஐம்பது ஏக்கர் நிலம் ஒன்றை வாங்கி அங்கே விருப்பபடி பண்ணை அமைத்து வீடு கட்டி 20 நெல்லிச் செடிகள் நட்டு வளர்க்கிறான். இப்போது நிக்கோலேய்க்கு வயதாகி விட்டது. அவனது குணமும் ஒரு வனமம் மிக்க நிலச்சுவான்தாருக்கு ஆனதாகிறது. அவனது இந்த மாற்றம் இவானை திகைக்க வைக்கிறது. ஒருநாள் அவனது வீட்டிற்கு செல்லும் இவான் ஒரு காட்சியை காண்கிறான். தனது தோட்டத்தில் முதன்முறை விளைந்த கனியாத கசப்பான நெல்லிக்காய்களை ஒரு பைத்தியம் போல் நிகோலேய் தின்கிறான். அவை இனிக்கிறது என்று பொய்யாக சிலாக்கிக்கிறான். இரவெல்லாம் தூங்காமல் அதே நெல்லிக்காய்களை தின்று அவை இனிப்பாக உள்ளதாக தன்னையே ஏமாற்றிக் கொள்கிறார்ன். உண்மையில் நிக்கோலேய் மகிழ்ச்சியாக இல்லை. அவன் தன்னையே வருத்தி மகிழ்ச்சியாக உள்ளதாக கற்பித்துக் கொள்கிறான். இது தான் உச்சபட்ச அவலம் என்கிறார் செகோவ். ஒரு மனிதன் வாழ்நாள் பெரும்பகுதியையும் தியாகம் செய்து தன் குறிக்கோளை அடைகிறான். அதன் பிறகு தான் அக்குறிக்கோள் தன்னை மகிழ்ச்சிப்படுத்தாது என்பதை, தனது மனநிலை வெகுவாக மாறி விட்டதை அறிகிறான். அவன் இனி என்ன செய்வான்? இழந்த காலத்தை, இளமையை மீட்க முடியாது. தன்னைத் தானே மகிழ்ச்சியாக இருப்பதாக ஏமாற்றிக் கொள்ள மட்டுமே முடியும். இக்கதையை சொல்லி இவான் மனிதர்களுக்கு தங்களுக்கு தேவை என்னவென்றே தெரியவில்லை என்கிறான். தான் மிக மகிழ்ச்சியாக இருப்பதாக நினைக்கும் மனிதனுக்கு தன் வெகு அருகில் பிற மனிதர்கள் துயரத்தில் வாடுவது புரிவதில்லை. அதையும் அறிந்தாலே அசலான வாழ்வின்பம் அவனுக்கு கிடைக்கும் என்கிறான். லட்சியவாதியான இவானுக்கு மனிதர்களை துயரத்தில் இருந்து விடுவிக்கும் ஒரு பாதையை அறிய வேண்டும். மனிதர்களை உயர்த்துவதற்காக காத்திருக்கும் அவகாசம் அவனுக்கு இல்லை. ஒவ்வொரு நாளும் மனித துயரத்தை பற்றின எண்ணங்கள்,. அது குறித்த குழப்பங்கள் தன்னை வாட்டுவதாக சொல்கிறான்.
இவானின் வாழ்வு பற்றின அறிவார்ந்த லட்சியபூர்வமான விசாரணை மற்ற இருவருக்கும் ரசிக்கவில்லை. அவர்களுக்கு அந்த மாளிகையின் சற்று பிரமிப்பான சூழலும் அங்கு தொங்கும் பிரபுக்கள், சீமாட்டிகளும் சித்திரங்களும் அழகிய வேலைக்காரி பெலஹியாவின் அருகாமையும் மேலும் சுவாரஸ்யமாக படுகிறது என்கிறார் செகோவ். இது முக்கியமானது. செகோவ் எப்போதுமே கதைகளில் ஒரு தரப்புக்கு இணையான மற்றொன்றுக்கும் இடம் அளிக்கிறார்.
இவானும் பர்கினும் அழகி பெலஹியாவால் தயாரான குளிர்ந்த கட்டில்களில் சுத்தமான விரிப்புகள் மீது படுக்கின்றனர். இவானுக்கு உடனடி தூக்கம் வருகிறது. ஆனால் பர்கினால் தூங்க முடியவில்லை. அக்கதையில் அவனைப் பற்றி மிகக் குறைவாகவே செகோவ் சொல்கிறார். ஆனால் கதையின் முடிவில் “இரவு முழுவதும் மழை ஜன்னல் கதவுகளில் மோதிக் கொண்டிருந்தது என்கிறார். இப்படி மோதிக் கொள்ளும் கதவுகள் பர்கினின் அகக் கதவுகள் தாம். உறக்கம் வராதபடி அவனை அலைகழிப்பது எது? மௌனமாக அவனை அரிக்கும் துயரம் என்ன? இப்படியான ஒரு திறந்த கேள்வியை எழுப்பி அக்கதையை செகோவ் முடிக்கிறார். கதை அங்கிருந்து நம் கற்பனையில் மீண்டும் வளர்கிறது.
எம்.எஸ்ஸின் மொழிபெயர்ப்பு இயல்பிலேயே மிக சரளமானது. அநேகமாக அவர் நீண்ட ஆங்கில மொழியாக்க சொற்றொடர்களை உடைத்து தமிழில் எழுதவே பிரியப்படுகிறார். கிறுத்துமஸ் மாஸை பூஜை என்ற இந்துச்சொல்லால் குறிக்கிறார். இதுகூட எம்.எஸ்ஸின் பொதுவான பாணி தான். தினசரி வாழ்வில் பயன்படும் பல சொற்களை தமிழ்ப்படுத்துவதை தவிர்த்து நேரடியான ஆங்கிலச் சொற்களையே உபயோகப்படுத்துகிறார். உதாரணத்துக்கு ஆபீஸ், கேஸ், ஹோட்டல் வெயிட்டர், ஆர்மி மெடிக்கல் டிபார்ட்மெண்ட், பிரைவட் வங்கி, கம்பெனி பண்ட், டிஸ்மிஸ்... இப்படி. ரொம்ப தமிழ்ப்படுத்தாமல் இருப்பது அவரது சரளத்துக்கு உதவுகிறது. அதே வேளையில் கலைச்சொற்கள் மிகுந்த நவீன தமிழுக்கு சற்று பின்னாலும் அவரது மொழி போய் விடுகிறது. செகோவுக்கு ஆங்கில மொழியாக்கங்கள் பல உள்ளன. அவை பல இடங்களில் ஒன்றுக்கு பின் முரணாக இருக்கின்றன. எதை எம்.எஸ் பயன்படுத்தியிருக்கிறார் என்று அறியாமல் அவரது மொழிபெயர்ப்பின் நேர்மையை நாம் ஆராய முடியாது. உதாரணமாக வான்கா கதையில் அச்சிறுவன் துருபிடித்த நிப் கொண்ட பேனாவை எடுப்பதாக நான் படித்த இரு மொழியாக்கங்களில் வருகிறது. எம்.எஸ் அதை துருபிடித்த பேனா என்று தருகிறார். அவன் கடிதம் எழுதும் முன் தன்னைச் சுற்றி இருக்கும் பல பொருட்களை அச்சத்தோடு பார்க்கிறான். அதில் அலமாரியில் உள்ள அச்சுருக்களும் ஒன்று. ஆனால் எம்.எஸ் வெறும் அலமாரியை மட்டுமே குறிப்பிடுகிறார். அச்சுருவை விட்டு விடுகிறார்.
அடுத்து வரப்போகும் நூல்களில் புத்தகத்தின் வடிவமைப்பில் ல.ம சரவணன் இன்னும் சற்று அதிக அக்கறை காட்டலாம். உதாரணமாக பொருளடக்கம் பக்கம் இல்லாதது இந்நூலில் ஒரு குறை. அது போன்றே செகோவின் சிலை எட்டிப் பார்க்கும் அந்த சின்னக் குழந்தைகளை அழ வைப்பதற்கான அட்டைப்படம். ஆனாலும் இந்த சின்ன குறைகளை மறக்கடிக்கும் பொருட்டு கதைகள் எந்த பிழையும் இன்றி நேர்த்தியாக தரப்பட்டுள்ளன.
சொந்தக் கைக்காசு போட்டு அதே இளைய மூத்த எழுத்தாளர்களின் அதே கவிதைகளை அட்டையில் நவீன ஓவியத்துடன் பிரசுரித்து அதே எழுத்தாளர்களுக்கு அனுப்பி சின்ன அளவில் அதிகாரத்தை கைப்பற்றும் வழமையான சிறுபத்திரிகை முயற்சிகளை விட தனக்கு பிடித்த சர்வதேச எழுத்தாளனின் படைப்புகளை ஒரு வாசகனாக தமிழுக்கு பிரசுரித்து கொண்டு வருவது பல மடங்கு அதிக உபயோகமானது.

(ஆன்டன் செகோவ் சிறுகதைகள்
தமிழில் எம்.எஸ்
பாதரசம் வெளியீடு
தொடர்புக்கு: 9551250786

1 comment:

ka said...

//தனக்கு பிடித்த சர்வதேச எழுத்தாளனின் படைப்புகளை ஒரு வாசகனாக தமிழுக்கு பிரசுரித்து கொண்டு வருவது பல மடங்கு அதிக உபயோகமானது.//------>


தனக்கு பிடித்த எழுத்தாள‌ருக்காக இவர் தன் நேரத்தை பணத்தையும் செலவு செய்யவில்லை. தனக்காகவேதான் செய்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. இப்படி சொல்லும் என் கருத்து தவறாகவும் இருக்கலாம்.


தனக்கு பிடித்தது மற்றவர்களுக்கும் பிடிக்க வேண்டும் என விரும்பும் இதே மனிதருக்கு தனக்கு பிடிக்காத ஒன்று‍( அது எதுவாக இருந்தாலும்) மற்றவர்களுக்கும் பிடிக்காமல் போய் விட வேண்டும் என்று விரும்பும் இயல்பும் உண்டு தானே?

தனக்கு பிடிக்காதது மற்றவர்களுக்கும் பிடிக்காமல் போக வேண்டும் என்று நினைப்பது தன்னை எரிச்சல் ஊட்டிய ஒன்றின்(or ஒருவரை) பழி வாங்க மட்டுமே.

அப்படி என்றால் தனக்கு பிடித்த ஒன்று எல்லோருக்கும் பிடிக்க வேண்டும் என்று நினைப்பது எதற்காக?

தான் எதை சரி(or சிறப்பு) என்று நினைக்கிறாரோ அந்த கருத்தே தான் என்பதினால் அதை 'டிக்' போட்டுக் கொள்ள மற்றவர்களுக்கும் தருகின்றாரோ?