Sunday, January 29, 2012

நிழல்என் நீண்ட நாள் தோழியும் வகுப்புத் தோழியுமான ஆஷாவின் அம்மா இறந்து போன சேதி அறிந்ததும் எனக்கு அதிர்ச்சியோ வருத்தமோ ஏற்படவில்லை. இந்த செய்தி ஆஷாவை எந்த அளவுக்கு சிதைத்து பிழியப்போகிறது என்பதை கற்பனை செய்து பார்த்தும் கூட என் மனசை எந்தவொரு துக்க அலையும் புரட்டிப் போடவில்லை. எத்தனையோ வருடத்து நெருங்கிய நண்பர்களாய் இருந்தும் அவளது அம்மாவின் மரணம் என் மனதின் நரம்புகளை புடைத்து வீங்க செய்யாமல் வேகமாய் ஓடிக் கலந்தது ஏதோ ஒரு விதத்தில் என்னை நெருக்கி பிசைந்தவாறிருந்தது. இது சார்ந்த சுயபரிசீலனையில் ஆழ்ந்து பயணித்தவாறே வகுப்பறையை அடைந்து விட்டிருந்தேன்.

வகுப்பறையின் மங்கிய சுவர்களிலும் கரும்பலகையிலும் பெஞ்சுகளிலும் நண்பர்களின் தாழ்ந்த குரலிலும் அவள் அம்மாவின் மரணம் எதிரொலித்துக் கொண்டிருந்தது. என் நண்பர்களின் தேகங்களிலும் ஏதோவொரு ராட்சச பறவையின் கருநிழல் படிந்து கிடப்பதாய் தோன்றியது. அதன் கறுப்பும் சாம்பலும் கலந்த தூவல்கள் வகுப்பறையின் தரையிலும் பெஞ்சுகளிலும் எங்கும் சிதறிக் கிடந்தது. அதன் சிறகுகளில் இருந்து பிரியும் நாற்றம் அங்குள்ள காற்றை ஒவ்வொரு முறை உள்வாங்கி பிழியும் போதும் அதிகமாகிக் கொண்டு வந்தது. தலைக்கு மேலே அந்த ராட்சச பறவையின் கூரிய அலகு என்னை கொத்திக் கிளற தருணம் பார்த்து நிற்பதாய் எனக்குள் மீண்டும் மீண்டும் தோன்றிக் கொண்டிருந்தது. இது என் சுயஎரிச்சலை அதிகப்படுத்திக் கொண்டு வந்தது.

மரண வீட்டில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்பது பற்றி புரொபஸர் இப்ராஹிம் இந்நேரம் ஒரு உரை நிகழ்த்தி முடித்திருந்தார். பேச்சின் இடையிடையே அவர் தாளித்துப் போன நகைச்சுவை அம்சங்களை யாரும் சரியாக உள்வாங்கவில்லை. துக்கத்தில் பங்கேற்க எல்லாரும் கூட்டாக பேருந்தில் ஆஷாவின் வீட்டுக்கு போவதாய் முடிவெடுக்கப்பட்டது. புறப்படும் முன் புரொபசர் இப்ராஹிம் பெண்களிடம் மட்டும் தனியார் அவர்களின் பேருந்து செலவுக்கு பணமிருக்கிறதா என்று கேட்டார். அவர்களது அழகு முகங்கள் பலவிதமான பாவனைகளை வெளிப்படுத்தின. ஆம் என்றோ இல்லை என்றோ எந்தவொரு தீர்க்கமான முடிவையும் எட்ட முடியாமல் அவர்கள் குழப்பத்தில் தள்ளாடுவதாய் தோன்றியது. சிறிது நேரம் பார்த்துக் கொண்டு நின்ற புரொபஸர் இப்ராஹிம் திடீரென்று தன் தோள்களை விரித்து “இதில் எல்லாரும் ஏறிக் கொள்ளுங்கள் என்றார். ஒருவர் பின் ஒருவராக பெண்கள் அவரது தோளில் பற்றி ஏறி அமர்ந்து கொண்டனர். சிலர் அவரது இடுப்பிலும் கால்களிலுமாய் இறுக்க பற்றிக் கொண்டனர். இவர்களை எல்லாம் சுமந்து கொண்டு சிறிது நேரம் நடந்த புரொபஸர் இப்ராஹிம் திடீரென்றும் மேலெழும்பி அந்தரத்தில் உயரப் பறக்க தொடங்கினார். சில பெண்கள் அவர் தோளில் அமர்ந்தபடி குடையை விரித்து பிடித்துக் கொண்டனர். குதூகலம் மின்ன அவர் தோள்களில் எங்குமாய் உடைந்து வழிந்து கொண்டிருந்த பெண்கள் கூட்டத்தில் இருந்து காயத்ரி எனக்கு மட்டும் டாட்டா காட்டினாள். வானத்தில் அவர்கள் ஒரு புள்ளியாய் கரைந்து போகும் வரை பார்த்துக் கொண்டிருந்து விட்டு நாங்கள் எல்லாரும் பேருந்தில் ஏறி ஆஷாவின் வீட்டை அடைந்தோம்.

உலர்ந்த பருக்கைகளாய் என் மனதை சுற்றியெங்கும் ஏதோவொரு இனம் புரியாத சோகம் ஒட்டிக் கிடந்தது. நிச்சயம் அது ஆஷாவின் அம்மாவின் மரணம் பற்றியதல்ல. பேருந்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போதும் அந்த ராட்சச பறவையின் கருநிழல் என்னைத் தொடர்ந்து வருவதாயே தோன்றியது. இருக்கையோர ஜன்னல் மீது வைத்திருந்த என் கையை அது பற்றி இழுத்தது. நான் சடாரென்று உதறி விட்டு இடம் மாறி அமர்ந்து கொண்டேன். அது பற்றியிழுத்த இடத்தில் கை எரிந்தது. மனசு அங்கும் இங்குமாய் ஆடித் தத்தளிக்க தொடங்கியது. எத்தனை முயன்றும் அதன் ஆட்டத்தை நிறுத்த முடியவில்லை.

ஆஷாவின் வீட்டை சென்றடைந்த பின்னும் நான் என் நண்பர்களை ஒட்டியே நடந்து கொண்டிருந்தேன். ஆனாலும் என் பாதம் படும் இடத்தில் எல்லாம் அதன் நிழல் நீண்டு வந்து கொண்டே இருந்தது. என்னுள் நடுக்கமும் உதறலும் தீவிரமாகிக் கொண்டு வந்தது. அதன் பெரும் கூரிய அலகு என் கபாலத்தை எந்நேரமும் கொத்தி சிதறடித்து விடலாம் என்று தோன்றியது. வீட்டின் முற்றத்தில் இடப்பட்டிருந்த மரபெஞ்சில் நானும் அன்வரும் போய் உட்கார்ந்து கொண்டோம். முற்றத்தில் எங்கும் ஒழுங்கற்று நடப்பட்டிருந்த பூஞ்செடிகள் முன்பு எப்போதோ பார்த்து மறந்த ஒரு பாதி அழிந்து போன ஓவியத்தை நினைவுபடுத்தியது. அந்த ஓவியம் ஒருவேளை ஆஷா வரைந்ததாய் கூட இருக்கலாம். அந்த செடிகளையும் அவற்றின் இலைக் கொத்துகளிடையே துருத்தி நிற்கும் செம்பூக்களையும் ஆஷா ஒரு புன்னகை வட்டம் சூழ தன் கையால் வருடியவாறே காலாற நடந்து வந்து கொண்டிருந்தாள். அவள் தான் வழக்கமாய் அணியும் (எனக்குப் பிடித்த) வெள்ளை நிற சுடிதார் அணிந்திருந்தாள். கழுத்தைச் சுற்றி ஒரு கறுப்பு சால்வையும் அணிந்திருந்தாள். முற்றத்தில் இடது வரிசையில் கட்டுப்பாடின்றி கிலைகள் விரித்து சிலுப்பி நின்ற செம்பருத்தி செடிகளின் கரும்பச்சை இலைகளில் அங்கங்காய் சிவப்புச்சாயம் தெறித்தது போல் வெற்றிலைக் கறை படிந்து கிடந்தது. அதன் அருகே போடப்பட்டிருந்த சாய்வு நாற்காலியின் கையிருக்கையில் ஒரு வெற்றிலை செல்லம் வைக்கப்பட்டிருந்தது. அவளது அப்பா அங்கிருந்து தான் வெற்றிலை போடுவாராக இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். அந்த செம்பருத்திச் செடிகள் பூத்துக் கிடக்கும் இடத்தை வந்தடைந்ததும் ஆஷா முகம் சுளித்துக் கொண்டாள்.

இந்நேரம் வீட்டினுள்ளிருந்து ஆஷா அலறி அழும் சத்தம் கேட்டது. அவளது குரலின் சில்லுகள் முற்றத்தில் வந்து விழுந்து தெறித்தன. சின்ன சின்ன செம்பூக்களாய் பரவிக் கிடந்த அவை அந்த முற்றமே பற்றி எரிவது போன்ற தோற்றத்தை தந்தன.

வீட்டினுள் ஆஷா ஓர் அறையில் கட்டிலில் படுத்திருந்தாள். அவள் அணிந்திருந்த சிவப்பு சுடிதாரில் அங்கங்காய் கறுப்புக் கறை படிந்திருந்தது. அழுது அழுது அவள் களைத்துப் போயிருப்பதாய் தெரிந்தது. வியர்வை வழிந்து கொண்டிருந்த அவள் முன்நெற்றியில் சில முடிக்கற்றைகள் ஒட்டிக் கொண்டிருந்தன. கலைந்து போன அவள் கூந்தலில் அங்கங்கே ஜவ்வந்திப் பூவின் சிறுசிறு இதழ்கள் சிக்கிக் கிடப்பதாய் எனக்குத் தோன்றியது. ஆஷாவை சுற்றி அவளது தோழியர் நின்று ஆறுதல் சொல்லித் தேற்றிக் கொண்டிருந்தனர். அதில் ஆரஞ்சு நிறத்தில் தாவணி சுற்றியிருந்த ஒருத்தி நான் ஆஷாவை பார்த்துக் கொண்டிருப்பது கண்டதும் அங்கே வர வேண்டாம் என்பது போல் சைகை காட்டினாள். என் பார்வை நொண்டி நொண்டி வெளித்திண்ணையை அடைந்தது. அங்கே புரபொஸர் இப்ராஹிம் உட்கார்ந்து அழுது கொண்டிருந்த ஆஷாவின் உறவுக்கார பெண்களை எல்லாம் தேற்றிக் கொண்டிருந்தார்.

நான் எழுந்து அந்த வீட்டின் பின்புறமுள்ள தோட்டம் நோக்கி சென்றேன். நன்கு கனிந்த பலாப்பழத்தின் வாசம் அங்கே எங்கும் நிறைந்து இருந்தது. வலது பக்கத்தில் நான்கைந்து பலாமரங்கள் கூட்டமாய் நெருங்கி நின்றன. அவற்றின் கிளைகளில் தொங்கிக் கிடந்த பலாக்காய்கள் எவையும் அவ்வளவாய் கனிந்திருப்பதாய் தெரியவில்லை. காற்றெங்கும் அடர்ந்து நிற்கும் அந்த பலாப்பழ வாசம் என்னை ஞாபகங்களின் அகண்ட பெருவெளிக்குள் இழுத்து சென்றது. ஆஷாவிடம் இருந்து நான் பெற்றுள்ள ஒவ்வொரு புத்தகத்திலும் இந்த மணம் வீசிக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. இந்த கிளைகளிலெங்கோ தான் ஒரு ஊஞ்சல் கட்டியுள்ளதாகவும், மாலை நேரங்களில் அதில் அமர்ந்து ஆடும் போது நானும் அவளருகில் உட்கார்ந்திருப்பது போல் கற்பனை செய்து பார்ப்பதாகவும் சொன்னாள். அந்த ஊஞ்சலை அந்த மரக்கிளைகளில் எங்கும் தேடிப் பார்த்தேன், காண முடியவில்லை. அந்த மரக்கிளைகளில் எங்கும் ஒருவித வெறுமை ஒப்பாரி வைப்பதாக தோன்றியது. தங்கள் உடைகள், அணிகலன்கள் அனைத்தையும் பறிகொடுத்து விட்ட சில கரியநிற மூளி பெண்களைப் போல் அவை துக்கத்தில் கைவிரித்து நிற்பதாய் தோன்றியது. தோட்டத்துள் மேலும் நகர்ந்தேன். அதன் உட்புற சுவரின் மேல் சாய்ந்து நின்ற ஒரு உயரமான முதிர்ந்த பலாமரத்தின் கீழ் ஆஷா நின்று கொண்டிருந்தாள். ஏதோ ஆழ்ந்த யோசனையில் அவள் முகம் மிதந்து கொண்டிருந்தது. அந்த பகுதியில் செங்குத்தாய் விழுந்து கொண்டிருந்த வெளிச்ச கீற்றுகள் மொத்தமாய் அவள் அணிந்திருந்த வெள்ளைச் சுடிதாரில் பட்டுத் தெறிக்க, கண்கூசச் செய்யும் பிரகாசத்தில் ஆஷா ஜுவலித்துக் கொண்டிருந்தாள். மேலெழுவதும், தாழ்வதுமாக ஆஷாவின் பிம்பம் அந்த வெளிச்ச வெள்ளத்தில் மெல்ல மிதந்தவாறிருந்தது. என்னை பார்த்ததும் வழக்கமான புன்னகை விரிய தன் கையில் வைத்திருந்த பலாப்பழ துண்டிலிருந்து ஒரு சுளையை பிய்த்தெடுத்து என்னை நோக்கி நீட்டினாள். நான் அவளை நோக்கி வேகமாய் முன்னேறத் தொடங்கினேன். அவளிடமிருந்து அதை வாங்கித் தின்று கொண்டிருக்கும் போது அன்வர் அங்கே திடீரென்று வந்தான். முன்ஹாலில் கிடத்தப்பட்டிருந்த ஆஷாவின் அம்மாவின் பிணத்தை பார்க்க போவதாய் கூறி என்னையும் அழைத்துக் கொண்டு போனான். நான் இங்கு நடந்த சம்பவம் பற்றி அவனிடம் எதுவும் கூறவில்லை.

அந்த ஹால் முழுக்க மாணவர்களால் நிரம்பியிருந்தது. பெண்களில் பலரும் புரொபஸர் இப்ராஹிமின் தோள்களிலேறி விடைபெற தொடங்கியிருந்தனர். ஜவ்வாது ஊதுபத்தி புகை ஆகியவற்றின் வாசம் கரைந்து கனத்த காற்றில் அந்த அறை மூச்சு முட்டிக் கொண்டிருப்பதாய் தோன்றியது. நிமிடத்துக்கு நிமிடம் சுவர்கள் புடைத்து வீங்கிக் கொண்டு வந்தன. அங்கு இறுகி நின்றிருந்த வாசம் வைக்கோல் நார்களாலும் குச்சிகளாலும் நெஞ்சுக்குள் அங்கங்கே நான் கட்டி வைத்திருந்த கூடுகளை ஒவ்வொன்றாய் கலைத்துக் கொண்டிருந்தது. தேகம் முழுக்க வரிசை வரிசையாய் ஓடிக் கொண்டிருந்த நினைவுக் கம்பிகளை அது மீண்டும் மீண்டும் மீட்டிப் போனது. காரணமறியாத அழுகை ஒன்று நெஞ்சு வரை பொங்கி வந்தது. ஆஷாவின்  அம்மா ஒரு பாயின் மீது படுக்க வைக்கப்படிருந்தாள். அவர்களை நான் அப்போது தான் முதன்முறையாக பார்க்கிறேன். ஒருமுறை அது ஆஷா தானோ என்று கூட தோன்றியது. அவ்வளவு உருவ ஒற்றுமை இருவருக்கும். ஆஷாவைப் போலவே அவள் அம்மாவின் முன்பற்களும் சற்று எம்பி நீன்றன. எலுமிச்சம்பழ நிறம். உயரமும் குறைவு. இதையெல்லாம் நான் அன்வரிடம் கூறிய போது அவன் முழுமையாக மறுத்தான். அப்படியேதும் ஒற்றுமைகள் அவர்களிடையே இருப்பதாக தோன்றவில்லை என்றான்.

அங்கிருந்து விடைபெற்றுப் போகும் முன் அன்வர் என்னிடம் ஒருமுறை ஆஷாவை பார்த்து விட்டு வருவோமா என்று கேட்டான். நான் ஏற்கனவே பார்த்து விட்டதாக கூறினேன். என் கைக்குட்டையை வாங்கி முகம் துடைத்தவன் அதில் பலப்பழ வாசனை வீசுகிறதென்றான். “பலாப்பழம் சாப்பிட்டாயா? என்று கேட்டான். “ஆமாம் என்றேன்.

ஆஷா வீட்டு முற்றத்தில் அப்போதும் அந்த ராட்சச பறவையின் இறகின் நிழல் நீண்டு கிடந்தது. அதன் நிழல் அப்பாத இடைவெளிகளில் எங்கும் சிறு சிறு செம்பூக்கள் கிடந்து தீப்பொறிகளாய் தகதகத்துக் கொண்டிருந்தன. அந்த கருநிழலில் சிக்கிக் கொண்ட செம்பூக்கள் பலவும் நிறம் மங்கி அடையாளமற்று தெரிந்தன. வெளிச்சுவரோரம் ஒதுக்கிப் போடப்பட்டிருந்த அன்வரின் செருப்புகளின் மேல் சாம்பலும் வெள்ளையுமான வண்ணங்களில் சிறுசிறு தூவல்கள் கிடந்தன. அவற்றை ஒருமுறை உதறி விட்டு போட்டுக் கொண்டான். அப்போது மேலிருந்து மேலும் சில தூவல்கள் என் செருப்புகளின் மேலும் விழூந்தன. எத்தனை முறை உதறியும் அவை என் செருப்புகளில் இருந்து நீங்கவில்லை. என் பதற்றம் மேலும்  அதிகரித்தது. தொண்டை வரை அமிலம் பெருகி நின்று எரிந்தது. பேருந்தில் போகும் போது நான் கவனமாய் ஜன்னலோர இருக்கையை தவிர்த்தேன். அப்போதும் அந்த ராட்சச நிழல் என்னை துரத்தியவாறே பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. 
 (2000இல் சொல்புதிதில் வெளியான என் முதல் கதை)

No comments: