Thursday, January 19, 2012

கிரிக்கெட்டுக்கு வயதுண்டா?
இந்திய கிரிக்கெட்டின் பொற்காலத்தின் நாயகர்களான சச்சின் திராவிட் லக்‌ஷ்மண் ஆகிய மூவரும் அலிபாபாவின் விளக்குக்குள் மாட்டிய ஜின்னைப் போல் ஒரு சிக்கலை சந்திக்கிறார்கள். வெளியே வந்தாலும் உள்ளே இருந்தாலும் அவர்கள் மீடியாவிடம் கட்டுண்டே இருக்க வேண்டும்.
நாற்பதை தொடும் ஆட்டவாழ்வின் பருவத்தில் அவர்கள் இனி நன்றாக ஆடினால் மக்கள் “அட என்று வியப்பார்கள், சின்ன சின்ன வீழ்ச்சிகளின் போது மலைமுகட்டில் இருந்து தள்ளி விட ஆயிரம் கைகள் நீளும். அவர்கள் இனி இந்த அபத்த நாடக மேடையில் இருந்து வெளியேற முடியாது.
திராவிடும் சச்சினும் லக்‌ஷ்ம்ணும் செய்த நூறு நூறு சாதனைகளில் ஆக உயர்வானது பத்தில் இருந்து இருபதாண்டுகள் கடந்தும் தளராமல் ஆடுவதும், ஆட்ட விருப்பத்தை தக்க வைப்பதும் தான். கில்கிறிஸ்டு, வார்னெ, மலிங்கா, டிவில்லியர்ஸ் போன்ற பல சமகால, அடுத்த தலைமுறை வீரர்கள் தேசிய அணியை T20 சம்பத்துக்காக பணயம் வைத்த போது இவர்கள் மரபுக்கவிதையை கொண்டாடின ஒரு நவீன சுஜாதாவை போல் டெஸ்ட் கிரிக்கெட்டின் மீது தூசு படியாமல் அபரித மதிப்புடன் அதை முன்னெடுத்து சென்றார்கள். ஜாக் காலிஸ், பாண்டிங் போன்ற பிறநாட்டு ஜாம்பவான்கள் முப்பத்தைந்துக்கு மேலும் தொடர்ந்து ஆடுவதற்கான ஊக்கமாக திகழ்ந்தார்கள். பணமும் எளிய கேளிக்கையும் மட்டுமே முன்னிலை பெற்ற சர்க்கஸ் கூடார கிரிக்கெட்டுக்கு வெளியே மரபான கிரிக்கெட்டை பாதுகாத்து வருபவர்கள் இந்த வயதான மட்டையாளர்களும் இவர்களின் காலடி தொடர் விரும்பும் ஹாஷிம் ஆம்லா, குக் போன்ற சிலரும் மட்டும் தான். இனி வரும் காலங்களில் குறைந்த காலத்தில் நிறைய புகழையும் பணத்தையும் ஈட்டி விடவே வீரர்கள் விரும்புவர். வாழ்வின் இருபதாண்டுகள் ஒரு ஆட்டத்துக்காக தியாகம் செய்வதை விடவும் அவர்களால் அதே பணத்தை சில ஆண்டுகளில் ஒரு freelance வீரனாக ஈட்டி சொகுசு வாழ்க்கை வாழ முடியும். இனி சச்சின் உள்ளிட்ட மூவரும் ஒரு தலைநரைத்த திராவிட கழக அனுதாபியை போல வேடிக்கையாக இந்த தலைமுறைக்கு தோன்றக் கூடும். 
இந்தியா தனது ஏழாவது டெஸ்டு ஆட்டத்தை வெளிமண்ணில் இழந்த நிலையில் மூத்த வீரர்களை நீக்க வேண்டும் என்கிற வேண்டுகோள் இவர்களை விட மூத்த கவாஸ்கர் உள்ளிட்ட முந்தின தலைமுறையினரிடம் இருந்து எழுந்துள்ளது. ஆனால் அதற்கு இவர்களின் நாற்பதை நெருங்கும் வயதைத் தவிர தீர்க்கமான வேறு காரணங்கள் யாருக்கும் தோன்றவில்லை. இவர்களுக்கு பதில் யாரை ஆட வைப்பது என்பதும் புரியவில்லை. ரோஹித் ஷர்மா, விராத் கோலி இருவரிடம் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்தை ஒப்படைப்பது ஒரு தீவிரவாதியை விடுவித்து பணயக்கைதியான ஒரு ஊழல் அரசியல்வாதியை விடுவிப்பதை போன்றது. எதிர்கால தேர்வு என்பது ஒரு முட்டுசந்தை பார்த்து திகைக்கும் செயலாக இருக்கிறது. இந்த கேள்வி வரும் போது நிபுணர்களிடம் கூட ஒரு நீண்ட மவுனம் மட்டுமே உருவாகிறது. கடந்த பத்து ஆட்டங்களில் மூவரின் ஓட்டங்கள் அவ்வளவு மட்டமும் அல்ல. ஒரு ஆட்டத்தின் தோல்விக்கு 11 பேரும் பொறுப்பு தான். ஆனால் ஒரு சிலரை மட்டும் குறிவைத்து எழுப்பப்படும் இந்த கண்டனங்கள் சந்தர்பவாதமாக மட்டுமே தெரிகிறது.

இம்மூவரால் எத்தனை ஆண்டுகள் இனி ஆட முடியும்? அவர்கள் தொடர்ந்து ஆடுவது இந்திய அணியின் எதிர்கால வளர்ச்சிக்கு தடையல்லவா?

கிரிக்கெட்டில் இளைய வீரர்களுக்கு தொடர்ந்து அளிக்கப்படும் வாய்ப்புகள் முதலீடு என்று அழைக்கப்படுகின்றன. ஆனால் உண்மையில் தேர்வு என்பது முதலீடு அல்ல, சூதாட்டமே. ஒரு பத்தாண்டுகள் ஆடும் திறமை உள்ள வீரரை கண்டடைவது என்பது தேர்வையும் தொடர்ந்த வாய்ப்புகள் மற்றும் ஆதரவு ஆகியவற்றால் முடியக் கூடியதல்ல. தொண்ணூறுகளில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளில் ஆடிய எத்தனையோ டெஸ்டு மட்டையாளர்களில் எத்தனை பேர் முதலீட்டை காப்பாற்றினார்கள்? பல சமயங்களில் அணிகள் பதிலுக்கு வேறு ஆள் கிடைக்காமல் சுமாரான வீரர்களையே மாற்றி மாற்றி தேர்வு செய்து காலத்தை ஓட்டியது நடந்துள்ளது. மேற்சொன்ன இரு அணிகளும் நல்ல உதாரணங்கள். அப்படியே மிகச்சிறப்பாய் கண்டடையப்பட்ட பலரும் பாதி வழியில் திசைமாறி அழிவதண்டு: யுவ்ராஜ், ஹர்பஜன், காம்பிளி, குரோனியே, கிரேம் ஹிக், டிரஸ்காத்திக் போல. காலத்தின் சோர்வு, மனச்சோர்வு, தன்னம்பிக்கை இழப்பு, அலட்சிய போக்கு என பல இடையூறுகள் ஒரு கிரிக்கெட் வாழ்வின் நீட்சியை தீர்மானிக்கின்றன. எத்தனையோ சிறந்த வீரர்கள் காயம் மற்றும் ஈகோ காரணமாக காணாமல் போயிருக்கிறார்கள். ஒரு கிரிக்கெட் சாதனையாளர் தோன்றுவது காலத்தின் பகடையாட்டத்தில் தோன்றும் அதிர்ஷ்டத்தினாலும் தான். ஆக ஒருவர் எத்தனைக்காலம் ஆடலாம் என தீர்மானிப்பது அவர்களின் வயது மட்டுமல்ல, காலத்தின் உள்ளிருந்து இயக்கும் ஒரு கண்காணா ஆற்றலும் தான்.
நடந்து வரும் ஆஸ்திரேலியா தொடர் துவங்கிய போது முதல் டெஸ்டு தான் ரிக்கி பாண்டிங் மற்றும் ஹஸ்ஸிக்கு கடைசி ஆட்டம் என மீடியா கணித்தது. இந்திய மட்டையாட்ட வரிசையின் வளமான அனுபவத்தின் முன் இளைய ஆஸி வீச்சாளர்களால் சுதாரிக்க முடியுமா என சந்தேகித்தது. ஆன இரு வாரங்களில் இதே மீடியா இந்திய மட்டையாளர்களின் முடிவு நெருங்கி விட்டது என்று எச்சரிக்கிறது. இரண்டே வாரத்தில் ஒரு தரப்பினரை பாதுகாப்பான இடத்திலும் மற்ற தரப்பினரை தூக்குகயிற்றின் முன்னேயும் நிறுத்தியது யார்? அவர்களின் திறமையும் மனவலிமையுமா? இல்லை. ஏனென்றால் ஒரு மரணம் கொலையோ சாகசமோ தியாகமோ ஆவது போல் கிரிக்கெட்டில் ஒரு தோல்வி தோல்வி ஆவது அப்போதைய சூழ்நிலையினால் தான்.
வயது உண்மையில் ஒரு பிரச்சனை அல்ல, அது மீடியாவுக்கு பரபரப்புக்கான ஒரு சிறு சொல் மட்டுமே. சச்சின், திராவிட், லக்‌ஷ்மணை நீக்கின இடத்தில் வருபவர்களின் தகுதி இளவயது ஏற்படுத்தும் நம்பிக்கையினால் அல்ல திறமையால் தீர்மானிக்கப்பட வேண்டும். கோலி, ஷர்மா போன்றோருக்கு ஒரு திட்டமிட்ட வகையில் நாம் வாய்ப்பளிக்கலாம். அதற்கு மூத்த வீரர்களை மொத்தமாய் நீக்க வேண்டியதில்லை. ஒரு முக்கியமற்ற நீண்ட தொடரில் புதியவர்களை பரீட்சித்து பார்க்கலாம். பிறகு மெல்ல மெல்ல அயல்நாட்டு தொடர்களில் வாய்ப்பளிக்கலாம். அவர்கள் தம்மை நிரூபித்து நியாயமான வகையில் மூவரின் இடத்தையும் அடையட்டும். சமரசமற்ற போட்டி மட்டுமே காலத்தின் முன் நிலையான வெற்றியை தரும். தாராள வாய்ப்புகளின் பெயரின் நாம் எதிர்கால இந்திய கிரிக்கெட்டை உருவாக முடியாது. அவசரமாக கங்குலியை வற்புறுத்தி ஓய்வு பெற வைத்தது போல் அதுவும் ஒரு அபத்த முடிவாகவே அமையும்.
மற்றபடி வயது பற்றின சர்ச்சை இளைய எழுத்தாளர்களுக்கு தமிழ் இலக்கிய பத்திரிகைகளில் நியாயமான வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டை போல் பாதி மட்டுமே உண்மை.

4 comments:

SELVENTHIRAN said...

மிகச் சிறப்பான கட்டுரை அபிலாஷ்.

Madumitha said...

ஒரு வெற்றி
மிக உயரத்திற்கும்
ஒரு தோல்வி
படு பாதாளத்திற்கும்
அனுப்புமெனில்
இது விளையாட்டல்ல..
வினைதான்.

ஆர்.அபிலாஷ் said...

நன்றி செல்வேந்திரன்

ஆர்.அபிலாஷ் said...

நன்றி மதுமிதா