பாலியலும் தமிழ்ப்புனைவும்: பிராய்டில் இருந்து கலகம் வரை
பாலியலை காத்திரமாக நேரடியாக பேச பொதுவெளியில் தடை உள்ளது. அதனால் வெகுஜன இதழ் கதைகளில் பாலியல் வேறுவிதமாக எழுதப்பட்டது. மிகையாக குற்றவுணர்வு தோன்ற சற்று வக்கிரமான சித்திரங்களுடன். ஆனால் சிற்றிதழ்களில் பாலியல் எழுத அபாரமான சுதந்திரம் இருந்தது. பாலியல் கதைகள் எழுதினவர்கள் உடனடியாக கவனிக்கப்பட்டார்கள்
அவை பொதுவாக மூன்று வகை. கிளர்ச்சி பாலியல் எழுத்து. உளவியல் பாலியல். அரசியல் பாலியல். இந்த மூன்று வகையுமே முக்கியம் தான்.
கிளர்ச்சி பாலியல் எழுத்தின் சமகால உதாரணம் வா.மு.கோமு, ஜே.பி சாணக்யா ஆகியோர். இருவருக்கும் சில வித்தியாசங்கள் உண்டு. கோமுவின் சித்தரிப்புகள் பெண் காமம் பற்றின ஆணின் பகற்கனவுகள். ஏற்கனவே பாலகுமாரன், புஷ்பா தங்கதுரை போன்றவர்கள் ஒரு ஒழுக்கமனதுக்குள் இருந்து எழுதியவற்றை அநேகமாய் அதே மொழியில் ஆனால் ஒழுக்க நெருக்கடி இன்றி அரை சிட்டிகை எதார்த்தமும் சேர்த்து எழுதுவது கோமுவின் பாணி. அவரை தீவிர இலக்கிய-வணிக இலக்கியத்துக்கு இடையேயான பாலியல் பாலம் எனலாம். ஜே.பி சாணக்யா ஒருவகையில் கோணங்கி, எஸ்.ராவின் மரபின் தொடர்ச்சி. குறியீட்டு/உருவக மொழியில் பாலியல் உறவுகள் பற்றி பேசுபவர். ஆனால் நமது பாலியல் கதை மரபை உடைத்து காமப் பிறழ்வை சுவாரஸ்யமான நடையில் எழுதியவர் சாரு நிவேதிதா. ஒருபால் உறவு, சுயமைதுனம், taboo காமம் ஆகியவை அவரது களம். பரவசமான நடையில் எழுதப்பட்ட உன்னத சங்கீதம்தமிழின் கிளர்ச்சியான பாலியல் எழுத்தின் சிறந்த உதாரணம். சாருவை நாம் தி.ஜானகிராமனுடன் ஒப்பிடலாம்.
தி.ஜா இரண்டாவது வகை பாலியல் எழுத்தாளர். Taboo தான் அவரது முக்கிய களம். ஆனாலும் நிகழாமல் அடக்கி வைக்கப்பட்ட காமம். இதனால் மிக கற்பனை சாத்தியம் கொண்டதாக தி.ஜாவின் புனைவுகள் விளங்குகின்றன. வயதில் மூத்த யமுனாவை பாபு மோகிக்கும் கதை மோகமுள். மகன் அம்மாவை காமுறும் கதை அம்மா வந்தாள். தி.ஜா சாரு, கோமு, சாணக்யா அளவுக்கு சர்ர்சைகளை உருவாக்கவில்லை. அதற்கு இரு காரணங்கள். ஒன்று அவர் ஒரு இலக்கிய காமத்தை எழுதினார். நிஜ வாழ்வில் இருந்து சற்றே விலகிய நாடகீயமான காமம் ஆ.மாதவனும் இந்த ராஜபாட்டையில் தான் சென்றார். உதாரணமாய் “முலைகளை வெறித்தான் என்பதை “கழுத்துக்கு கீழ் மேடிட்ட பகுதியில் பார்வையை ஓட்டினான் என எழுதுவது. இரண்டாவது சொற்றொடர் தான் அதிக கிளர்ச்சி தருவது என்று சொல்லத் தேவையில்லை. ஆனால் அது நம்மை அதிர்ச்சியுற வைக்காது. தி.ஜாவும் ஆ.மாதவனும் பிராய்டின் உளப்பகுப்பிவியலால் கவரப்பட்டவர்கள். வெளிப்படாமல் மனதுக்குள் தேங்கிய காமமே மனிதனின் அனைத்து செயல்பாடுகளையும் செலுத்துகிறது என்றார் பிராயிட். ஆக “அம்மா வந்தாளில் அம்மா தன் பாலியல் குற்றவுணர்வில் இருந்து விடுபட மகனை வேதபாடசாலையில் பயிற்றுவிக்க அனுப்புகிறாள். மகனுக்கு அம்மா மீது உள்ள மோகத்தில் இருந்து விடுபட வேண்டும்  அதற்கு அவன் வேதம் படிக்காமல் அம்மாவுக்கு நிகரான மற்றொரு பெண்ணை அணுகி காதலிக்கிறான். ஆனால் ஆ.மாதவனை விட தி.ஜாவில் வாசிப்பு சுதந்திரம் அதிகம். சமீபமாக வெளிவந்த பிரான்சிஸ் கிருபாவின் “கன்னி மற்றொரு குறிப்புணர்த்தும் taboo கதை. சாரு “மோகமுள்ளுக்கான ஒரு எதிர்வினைக்கதை எழுதி உள்ளார். “முள் என்றொரு சிறுகதை. அதில் கதைசொல்லி தன் அத்தை உடனான காமத்தை வெளிப்படையான லகுவான மொழியில் பேசுகிறான். தி.ஜாவில் இருந்து சாரு மற்றும் கோமுவரை உள்ள தூரம் வாசலுக்கும் படுக்கைக்கும் இடையே இருப்பது தான். இன்றுள்ள “மலர்மஞ்சத்தை அடைய நமக்கு ஐம்பது ஆண்டுகள் பிடித்துள்ளன. அதே வேளையில் நிகழ்ந்து முடியும் காமத்திற்கு இலக்கியமதிப்பு குறைவு என்ற நகைமுரணையும் சொல்லியாக வேண்டும்.
இன்றைய பாலியலுக்கும் நேற்றைய பாலியலுக்கும் மற்றொரு முக்கிய வித்தியாசம் உள்ளது. அது அரசியல்.
காமமும் வன்முறையும் நமக்குள் உறைந்துள்ள பண்புகள். அவை நம் தீமையை வெளிப்படுத்துகின்றன என்று இருபதாம் நூற்றாண்டின் நவீனத்துவ எழுத்தாளர்கள் நம்பினார்கள். உதாரணமாக புதுமைப்பித்தனின் “காஞ்சனையில் காமம் ஒரு மோகினிப் பேயின் வடிவில் வெளிப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக ஜெயமோகன் தம்புரானும் தம்புராட்டிகளும் தோன்றும் காமப் பேய்க் கதைகள் (நிழல்வெளிக் கதைகள்) எழுதினார். தீமை கொடியது என்பதால் இந்த வகை கதைகளில் காமத்துடனான மனப்போராட்டம் பிரதானமாகிறது. ஜெயமோகன் காமத்தை தூயமிருக நிலையாக (ஊமைச்செந்நாய்), உளவியல் சிடுக்கின் விடுபலாக (பின்தொடரும் நிழலின் குரல்) சித்தரிப்பவர். அவரது பாத்திரங்கள் காமத்தின் உச்சத்தை எட்டியதும் ஏமாற்றமும் வெறுப்பும் அடைகின்றனர் (நாகம், காடு)
ஜி.நாகராஜன் விபச்சாரிகளை முன்வைத்து பல கதைகள் எழுதினார். ஆனால் அவரது விபச்சாரிகள் அபலைகள். ஒரு ஆண் தோன்றி தன்னை காப்பாற்றக் கூடும் என்று ஏங்கும் காமக் கைதிகள். இவர்கள் ஆணின் பார்வையில் படைக்கப்பட்ட கற்பனாவாத பாத்திரங்கள் என்றொரு குற்றச்சாட்டு உண்டு. ஜி.நாகராஜன் பாலியலை கையாண்ட விதம் பிரத்யேகமானது.
அவரது பாத்திரங்களுக்கு கட்டற்ற காமம் லட்சியம். ஏன்? ஜி.நாவுக்கு காமம் என்பது காமம் அல்ல. மரபில் இருந்து விடுதலை. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் எந்திரமயமாக்கம், உலகப்போர், அறிவியல் வளர்ச்சி ஆகிய காரணங்களால் மரபான விழுமியங்கள் மீது மனிதன் நம்பிக்கை இழந்தான். பரஸ்பர அன்பும் காதலும் அப்படியான ஒரு விழுமியம். ஜி.நாவின் நாயகன் காதலை மறுத்து காமத்தை மட்டும் ஏற்கிறான். அதன் எதிர்விளைவுகளை சந்திக்கிறான். இந்த மரபு vs காமம் மோதலை லா.ச.ரா தனது “அன்புள்ள ஸ்நேகிதனுக்கு கதையில் சித்தரித்திருக்கிறார்.
ஆனால் கலாச்சார அரசியல், அதிகார அரசியல், பெண்ணியம் போன்ற சமகால கருத்தாக்கங்கள் காமத்தை ஒரு அரசியல்/தத்துவப் பிரச்சனையாக்கின. சுருக்கமாக காமம் ஒரு கலகம் ஆகியது. சமூகம் காமத்தைக் கொண்டு மனிதனின் மீது அதிகாரம் செலுத்துகிறது. காமத்தை நேரடியாக எழுத்தில் சந்திப்பது இந்த அதிகாரத்துக்கு எதிரான ஒரு கலகம். ஆக இன்றைய எழுத்தில் ஒருவன் சுயமைதுனம் அல்லது ஆசனப்புணர்ச்சியில் ஈடுபட்டால் அது பீறிடும் காமத்தால் மட்டுமல்ல, சமூக அடக்குமுறையை எதிர்க்க; பொதுப்போக்கோடு உடன்படாத தனது அடையாளத்தை வலியுறுத்த. இவர்களுக்கான முன்னோடிக் கதைகளை எண்பதுகளில் எழுதியவர்கள் ராஜேந்திர சோழன், ஜெயகாந்தன் போன்றோர். பிராயிடிய காமத்துக்கும் இன்றைய அரசியல் காமத்துக்கும் இடையில் உள்ள புள்ளி இவர்கள்.
குழந்தைகள் மீதான காமம்? சுஜாதாவின் சங்கிலிகதையில் ஜெஞ்சுலட்சுமி என்ற லட்சணமான சின்ன குழந்தை ரயிலில் வருகிறது. பிரயாணிகள் அதை வாங்கி ஆளாளுக்கு ‘பச்சக் பச்சக் என்று முத்துகிறார்கள். சுஜாதா எழுதுகிறார் “பேருக்கு பேர் கொடுத்த எல்லா முத்தங்களிலும் களங்கமில்லை என்று என்னால் சொல்ல முடியவில்லை
கவிதையில் கடந்த பத்துவருடங்களில் எழுத வந்த பெண் கவிஞர்கள் அனைவருமே அநேகமாக பாலியல் அரசியல் கவிதைகள் எழுதினார்கள். பெண்மொழி என்ற சொல்லாடல் பிரபலமாகியது. சரி “ஆண்மொழி என்றால் என்ன? “திமிறிப் புடைத்து எழுந்தது காமம் என்ற சாதாரண வாக்கியத்தில் உள்ளது ஒரு ஆண்குறி விரைப்பு பற்றின உருவகம் தான் அது. இப்படி தமிழ் முழுக்க கறைப்பட்டுள்ளதால் அதனை பெண்மொழியாக்கி சலவை செய்வது இவர்களின் நோக்கம் சுகிர்தராணி குறிப்பிடத்தக்கவர். சுவாரஸ்யமாக, பிரமிளை தவிர நமது ஆண்கவிஞர்கள் மிக அரிதாகவே பாலியல் தொனிக்கும் வரிகளை (ஆடையின் இரவினுள் உதயத்தை தேடும் பருவ இருள்) எழுதினர். பெண்ணிய கவிஞர்கள் தங்களது லட்சியம் “இரவினுள் உதயத்தை (லிங்கத்தை) தேடுவது அல்ல என்று உறுதியாக மறுக்கிறார்கள். 1960இல் இருந்து இன்று நாம் பாலியல் கவிதையில் வந்துள்ள புள்ளியை பிரமிள் vs பெண்ணியம் என்று சுருக்கலாம்.
(2011 டைம்ஸ் நவ் தீபாவளி மலரில் வெளியானது)

Comments