Thursday, November 10, 2011

மனு ஜோசப்பின் “தீவிர மனிதர்கள்” (Serious Men): வெங்காயம் தேவைப்படாத நாவல்2010இன் தெ ஹிந்து சிறந்த புனைவுக்கான விருதை வென்ற மனு ஜோசப்பின் இந்நாவல் ஆங்கில இந்திய நாவல் மரபில் தனித்துவம் பொருந்தியது. ஆர்.கெ நாராயண், அருந்ததி ராய், அனிதா நாயரை விட தென்னிந்திய சமூக வாழ்வை அவர் தீவிரமாக அணுகியுள்ளார். வழக்கமாக ஆங்கில இந்திய நாவல்களில் காண்பது போல் ஒரு பிராந்திய அடையாளத்தை மொத்த இந்தியாவுக்கான அடையாளமாக மாற்றி உள்ளார். ஒரு நாஞ்சில்நாடன் நாவலில் தமிழன் மும்பையில் வேலை பார்த்து வாழ்கிறான் என்றால் அது முழுக்க தமிழகத்து கிராமம் ஒன்றின் சில குடும்பங்களையும் சாதி பண்பாட்டையும் பேசி மேலும் மேலும் ஒரு குறிப்பிட்ட புள்ளியை நோக்கி நுணுகி போகும். மனு ஜோசப் போன்ற ஆங்கில இந்திய எழுத்தாளர்களை இதே களத்தை எடுத்துக் கொண்டால் நாஞ்சில் பிரதேசத்தில் இருந்து மும்பை வரை மக்களையும் அவர்களின் அரசியல் பண்பாட்டை ஒரே போன்ற பண்புகளால் தட்டையாக்கி முணுசாமியை ஆங்கிலம்-இந்தி பேசும் இந்திய பிரஜை ஆக்கி விடுவார்கள். “தீவிர மனிதர்களிலும் இதுவே நடக்கிறது. அய்யன் மணி என்கிற தமிழக தலித்தும் ஆச்சாரியா, ஜன நம்பூதிரி ஆகிய கேரள பிராமணர்களும், ஒபர்ணா என்கிற வங்காளியும் ஒரே புள்ளியில் சந்தித்து தமது சாதியில் இருந்து அறிவியல், மனித சிருஷ்டி வரை வெவ்வேறு பிரச்சனைகளை எடை தூக்கி பார்த்துக் கொள்கிறார்கள். வெவ்வேறு பாத்திரங்களின் மோதலில் விளையும் சிடுக்குகள் தாம் நாவலின் எளிய களன். இக்களனுக்கு “போரும் வாழ்வின் ஐம்பது பக்கங்களுக்கான கனம் தான். இருந்தும் மூன்று விசயங்களுக்காக நாவல் முக்கியத்துவம் பெறுகிறது.
முதலில், இந்திய மக்கள் ஏன் சாதனை பிரியர்களாக இருக்கிறார்கள் என்ற கேள்வியை எழுப்புகிறது. நமக்கு அறிவார்ந்த தேடல்களிலோ, விளையாட்டு, கலாச்சார சாதனைகளிலோ அல்ல, உபயோகமற்ற லிம்கா புத்தக சாதனைகளிலே மிகுந்த ஆர்வம். உதாரணமாக ஒருவர் திருக்குறளை புதுக் கண்ணோட்டத்தில் விளக்க முயன்றால் யாரும் சீந்த மாட்டார்கள். ஆனால் ஐந்து வயது குழந்தை திருக்குறளை முன் பின்னாக, பின் முன்னாக, நடுவில் இருந்து ஆரம்பத்திற்கு ஒப்பிக்கும் என்றால் விழா எடுப்போம். டிஸ்கவரி சேனலில் ஒரு இந்தியர் பேட்டி அளித்தார். அவரது விதைப்பையில் ஐம்பது முறை கூட ஓங்கி மிதிக்கலாம். வலிக்கவே வலிக்காது. கடுமையாக முயன்று அப்படி விதைப்பையை பழக்கி இருக்கிறார். இதே போல் மணிக்கணக்காக தலைகீழ் தொங்குபவர், ஊசிகளை விழுங்குபவர், மின்சார வயரை உடம்பில் இணைத்து புன்னகைப்பவர் என இந்தியாவில் விநோத அசட்டு சாதனைகள் முயல்பவர்கள் ஏராளம். சன்நியூஸ் விளையாட்டு செய்திகளில் விநோத சாதனை நிகழ்வுகளையே முன்னிலைப்படுத்துவார்கள். பிஞ்சு குழந்தைகளை அலங்கரித்து ரியாலிட்டி ஷோக்களில் “தீம்தனக்கா தில்லானா என்று அர்த்தமற்ற வகையில் இடுப்பை வளைக்க ஏன் அனுப்புகிறோம்? அபஸ்வரத்தில் பொருந்தாக பாடல்களை இசைத்து போட்டியிட டீ.வி முன் தள்ளுகிறோம்? அரசியல் அறிவு இல்லாத குழந்தைகள் வசனங்களை மனப்பாடம் செய்து அரட்டை அரங்கத்தில் அரசை விமர்சனம் செய்து பேசுவதை பார்த்து ஏன் ரசிக்கிறோம்? நாமே ஒரு கதை புனைந்து அதில் நாமே ஒரு பாத்திரமாக ஏன் ஆகிறோம்?
செவிடனான தன் பத்து வயது குழந்தையை சமூகத்தில் முன்னிலைப்படுத்த அவனை prodigy எனப்படும் ஒரு குழந்தைப்பருவ மேதையாக போலியாக சித்தரிக்கிறார் அய்யன் மணி. அதற்காக அவர் எடுக்கும் முயற்சிகள் இந்நாவலின் கூர்மையான ஒரு பகுதி. அதிரடியாக மாறி வரும் சமூகத்தில் குழந்தைகள் தம்மை ஈடுகொடுக்க எண்ணற்ற பிரேமைகளை தம் மேல் திணித்து சிலாகித்து ஒரு கட்டத்தில் சுய அடையாளத்தை மறந்து போகிறார்கள். பெற்றோர்களால் ஒரு சூப்பர் மேனாக சிறுக சிறுக இரு பத்தாண்டுகள் பயிற்றுவிக்கப் பட்டு இறுதியில் டை கட்டின பன்னாட்டு குமாஸ்தாவாக முடிகிறார்கள். ஐயன் மணி தன் குழந்தைக்கு தினமும் சிரமமான அறிவியல் வினாக்களை மனப்பாடம் செய்வித்து அதை பள்ளிக் கூட வகுப்பில் ஆசிரியர்களிடம் கேட்டு திணறடிக்குமாறு செய்கிறான். மெல்ல மெல்ல அவன் பிரத்யேக திறமை கொண்ட சிறுவன் என்று பெயர் பெறுகிறான். அடுத்து பெல்ஜியம் நாட்டு அரசால் நடத்தப்பட்ட அறிவியல் தேர்வு ஒன்றில் தேறி அவன் வெளிநாட்டுக்கு செல்ல உதவித் தொகை கிடைத்துள்ளதாக ஒரு பொய்த்தகவலை லஞ்சம் கொடுத்து மராத்தி பத்திரிகை ஒன்றில் வெளியிடுகிறான். அடுத்து பள்ளிக் கூட விநாடிவினா தாள்களை திருடி அதிலும் தன் மகனை சரியாக பதில் சொல்ல வைக்கிறான். மற்றொரு ஏமாற்றின் மூலம் அவனால் ஆயிரம் பிரைம் எண்களை ஒப்பிக்க முடியும் என்று ஒரு செய்தியை ஒரு ஆங்கில பத்திரிகையில் கொண்டு வருகிறான் மகன் பெரும் புகழ் பெறுகிறான். அண்டை வீட்டார்களும், கூட வேலை பார்ப்பவர்களும், பள்ளிக் கூடத்திலும் அவனை மேதை என்று கொண்டாடுகிறார்கள். இத்தோடு இந்த நாடகத்தை நிறுத்திக் கொள்ளலாம் என்று அய்யன் முடிவு செய்கிறான். ஆனால அவன் உதவியாளனாக வேலை பார்க்கும் அறிவியல் ஆய்வு மையத்தில் பிராமண அறிவியல் அறிஞர்கள் அவனது தலித் அடையாளத்தை கேலி செய்கிறார்கள். அம்பேத்கரையும், இடஒதுக்கீட்டையும் பழிக்கிறார்கள். காயமுறும் அய்யன் இதற்கு பதிலாக ஆய்வு மையம் நடத்தும் மிக சிரமமான நுழைவுத் தேர்வில் தன் மகனை பங்கேற்க வைத்து மற்றொரு ஏமாற்று வழியில் தேறவும் வைக்கிறான். பத்து வயது சிறுவன் இருபது முப்பது வயதினராலே வெல்ல முடியாத தேர்வில் உயர்ந்த மதிப்பெண் பெற்றுள்ளது தேசிய செய்தியாகிறது. இதன் பொருள் தலித்துகள் தமது சமூக அநீதியை சூதால் வெல்கிறார்கள் என்றல்ல. இங்கு அய்யன் தலித் என்றாலும் அவன் இந்தியாவின் கீழ் மத்திய, கீழ் மட்ட மக்களை பிரதிநுத்தப்படுத்துகிறான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தலித் பாத்திரம் இங்கு பொதுமைப்படுத்தப்படுகிறது. பொதுமைப்படுத்தலின் ஒரு அனுகூலம் அதன் விரிவு. மனு ஜோசப் அய்யன் மூலம் முன்னேற முடியாத பாதை அடைக்கப்பட்ட ஒரு சமூகத்தின் குமுறலை, பிரயத்தனங்களை, மனக்கசப்பை வெளிப்படுத்துகிறார். தலித் ஒரு விளிம்புநிலை இந்தியனாக விரிவு பெறுகிறான்.
நாவலின் அடுத்த முக்கியமான பரிமாணம் மதத்துக்கும் அறிவியலுக்கும்/தலித் அரசியலுக்குமான உரையாடல். அய்யன் மணி அம்பேத்கர் வழியில் பௌத்தத்தை தழுவுகிறான். வீட்டில் பிராமண மதமான இந்துமதத்தை தடை செய்கிறான். அவன் மனைவி ஒரு எளிய பிறவி. அதனால் பிள்ளையார் விக்கிரகங்களை வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து கும்பிடுகிறாள். மணி அவற்றை கண்டெடுத்து குப்பைத் தொட்டியில் வீசுகிறான். மதத்தை பகிஷ்கரிப்பதால் தான் தனது குழந்தைக்கு செவிடாக போயிற்று என்று அவள் குற்றவுணர்வு கொள்கிறாள். அய்யன் மணிக்கு மற்றொரு பிரச்சனை. அவனுக்கு தன் மகனுக்கு ராமாயண, மகாபாரத கதைகள் சொல்லித்தர வேண்டும், கலாச்சாரம் அறிவுறுத்தும் விழுமியங்களை கற்றுத்தர வேண்டும். அதற்கு இந்துமத இதிகாசங்கள், சடங்குகள் தேவையானவை. ஆனால் அவற்றை சொல்லித் தந்து தன் மகனை ஒரு சாதி அடிமையாக்கவும் அவன் தயாரில்லை. வளர்ந்த பிறகு அக்கதைகள் மற்றும் சடங்குகளின் பின்னுள்ள சாதி ஒடுக்குமுறையை தன் மகன் புரிந்து கொள்ளுவானோ என்று அவர் ஐயப்படுகிறார். கடவுள் இல்லாமல் மதத்தையும் சடங்குகளையும் எப்படி கற்றுத் தருவது? அப்பமும் தின்ன வேண்டும். அதில் உள்ள குழிகளையும் எண்ண வேண்டும். அவரது மனம் தான் மறுத்தாலும் தன் மகன் அம்மாவை பேச்சைக் கேட்டு இந்துமதத்தை பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. இந்த ஊசலாட்டமும் அதன் நகைமுரணும் மிக சுவையான பகுதி. அடுத்து பள்ளிக் கூடத்தில் மகனின் தலைமையாசிரியர் சிஸ்டர் சேஸ்டிட்டி அவனை கிறுத்துவத்துக்கு மதம் மாற தூண்டுகிறார். “நீங்கள் தலித்துகள் ஏன் இப்போதும் சாதிவெறி பிடித்த இந்து மதத்தில் இருக்கிறீர்கள்? கிறுத்துவத்துக்கு வரலாமே, உங்கள் மகனுக்கு ஊக்கத்தொகை. கல்வி வேலை வாய்ப்புகள் அதிகமாகும், அவனது எதிர்காலமும் பிரகாசமாக இருக்கும் என்று கேரட்டுகளை வரிசையாக நீட்டுகிறார். அய்யன் சொல்கிறார் “நான் இந்து அல்லவே
“பின்?
 நாங்கள் பௌத்த மதம்
“அட நீங்க வேற, பௌத்தம் என்பது இந்துமத்தின் மற்றொரு பெயர்
நாவலின் மற்றொரு முக்கிய பாத்திரமான் ஆச்சாரியா இறைநம்பிக்கையுடன் சஞ்சலம் கொண்டுள்ள மற்றொரு பகுத்தறிவுவாதி. அவர் தேசிய ஆய்வு மையத்தின் இயக்குநர். நோபல் பரிசுக்காக அடிக்கடி பரிந்துரைக்கப்பட்ட உலகப்புகழ் வாய்ந்த விஞ்ஞானி. உலகில் ஜீவராசிகள் வெற்றுகிரக வாசிகளில் இருந்து தோன்றின, இந்த வெற்று கிரகவாசிகள் வேறொருவரும் அல்ல வெறும் நுண்கிருமிகள் தாம். அவை காற்றின் மேல்தளத்தில் இருந்து பூமி மீது தூவப்பட்டவாறே உள்ளன. இப்படியாக பூமியை கண்டடைந்து நுண்கிருமியில் இருந்து தான் மனிதன் தோன்றினான். இது தான் ஆச்சாரியாவின் கோட்பாடு. இதை நிறுவ அவர் விண்வெளிக்கு ராட்சத பலூன்கள் ஏவுகிறார். அவற்றில் உலோக பாத்திரங்களை இணைத்து விடுவார்கள். பலூன்கள் திரும்ப வந்திட ஆய்வு செய்து அவற்றில் நுண்கிருமிகள் கண்டால் தன் கோட்பாடு நிரூபணம் ஆகும் என்று நம்புகிறார். இப்படியாக தன் கற்பனையை நிரூபிக்கும் ஆவேசத்தில் அவர் இயங்கிக் கொண்டிருக்க சில அதிரடி திருப்பங்களால் அவர் தன் பதிவியையும் அந்தஸ்தையும் இழந்து குடும்பத்தையும் மனைவியையும் தொலைத்து பாதி பைத்தியமாக ஆக நேர்கிறது. அப்போது அவர் முன்னெப்போதும் இல்லாத அகசுதந்திரத்தை உணர்கிறார். தனது உள்ளார்ந்த ஈடுபாடு உண்மையில் நுண்கிருமிகளை மனிதர்களை சிருஷ்டித்ததாக வறட்டுத்தனமாக நிரூபிப்பதல்ல, இந்த பிரபஞ்சத்தின் இயக்கத்தை மேலும் நுணுக்கமாக அறிவது என்று புரிந்து கொள்கிறார். சமூக மைய நீரோட்டத்தில் இருந்து விலகிய பின் ஆச்சாரியாவுக்கு இனி அவர் அறிவது அனைத்தையும் நிரூபிக்க வேண்டியதில்லை. சுதந்திரமாக ஒரு தத்துவவாதி போல் சிந்தித்துக் கொண்டு போகிறார். பிரபஞ்சத்தின் அனைத்து அசைவுகளும் நிகழ்வுகளும் மாற்றங்களும் முன்-தீர்மானிக்கப்பட்டவை என்று அனுமானிக்கிறார். முன்னர் இதே விஞ்ஞானி உலகம் ஒரு பெருவெடிப்பில் இருந்து தோன்றியது என்ற Big Bang கோட்பாட்டை அது உலகத்திற்கு தீர்க்கமான ஆரம்பம் உண்டு என்கிற கிறுத்துவ சிந்தனை பாதிப்பில் இருந்து தோன்றியது என்று கூறி வன்மையாக நிராகரித்தவர். தன் வாழ்நாள் முழுக்க Big Bang கோட்பாட்டை எதிர்த்ததற்காக நோபல் பரிசு பெறும் வாய்ப்பை இழந்தவர். ஆனால் அதே மனிதர் பிற்பாடு பிரபஞ்ச மனம் என்று ஒன்று உண்டு, அதன் தீர்மானங்கள் தான் மனித வாழ்வின் செயல்கள் என்று ஒரு சற்றே இறையியல் வாடை வீசும் கருத்துக்கு வந்து சேர்கிறார். மிகச் சின்ன வயதில் இருந்தே அவருக்குள் இந்த கருத்தின் விதை விழுந்துள்ளது. தன் இறுதிக் காலத்தில் இதனை விஞ்ஞான ரீதியாக நிரூபிப்பதற்காக ஆய்வுகள் செய்வதில் ஈடுபடுகிறார். இவ்வாறு ஆச்சாரியா நுண்ணுயிரில் இருந்து கடவுளை சென்றடைவது மனித மனம் குறித்த ஒரு சுவாரஸ்யமான அவதானிப்பு. நாம் கற்பனைகளை பின்னிக் கொண்டு அதற்கு ஒரு கோட்பாடு உருவாக்குகிறோம். நேர்மாறாக கூட செய்கிறோம். இவ்விசயத்தில் எளிய பாமரனும் விஞ்ஞானியும் ஒன்று தான். தர்க்கம் அல்லாத ஒன்றை ஏற்பதற்கு அவிசுவாசிக்கு தயக்கம் உள்ளது. ஆனாலும் அவன் மனம் தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட பண்பாட்டு விழுமியங்கள் மற்றும் பிரபஞ்ச மனம் நோக்கி விழைகிறது. விசுவாசத்திற்கும் அவிசுவாசத்திற்கும் இடையில் அவன் ஊசலாடியபடியே இருக்கிறான். மதம் மட்டுமல்ல அறிவியலும் ஒரு வசதியான புனைவே என்பது நீட்சேயில் இருந்து பின்நவீனத்துவ வாதிகள் வரை முன்வைத்து வரும் ஒரு விமர்சனம். உதாரணமாக வெற்றுகிரக மனிதர்கள் பற்றின தேடல். அண்டத்தை அறிந்த மனிதன் தான் இந்த பிரபஞ்சத்தில் தனியாக இருக்கிறோம் என்ற தனிமையை தீர்க்க ஏற்பட்டதாக, அதனாலேயே மனிதன் வெற்றுகிரக வாசிகளை கற்பனை பண்ணிக் கொள்வதாக, அவர்களை தனது மனித எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றபடி வனைந்து கொண்டுள்ளதாக விமர்சிக்கும் ஒரு தரப்பினர் உள்ளனர்  இந்த பிரபஞ்ச தனிமையை தணிக்கும் கற்பனைக்கு ஆதரவாக ஒரு தர்க்க கட்டுமானம் அறிவியலால் உருவாக்கப்படுக்கிறது. அதற்கு கோடானுகோடி பணம் இறைக்கப்படுகிறது. இந்த அர்த்தத்தில் மதமும் அறிவியலும் ஒன்றிற்கொன்று நிகரானவை. ஒன்று கடவுளை தேடுகிறது, மற்றது வெற்றுகிரக வாசியை தேடுகிறது.
மூன்றாவதாக கவனிக்கத்தக்கது மனு ஜோசப்பின் அங்கதமும் தனித்துவமும் கூடிய மொழி. மனித வாழ்வின் அபத்தத்தை சுட்டும் எண்ணற்ற வரிகள் இந்த புனைவில் உள்ளன. உதாரணமாக வாமன் என்றொரு தலித் தலைவரும், மத்திய அமைச்சரும் வருகிறார். அவர் மைக்கேல் ஜேக்சனை சந்தித்தது பற்றி பெருமிதமாக குறிப்பிடுகிறார் “ஜாக்சன் மிக பணிவானவர். இயல்பானவர். வெள்ளைக்காரர்களில் இப்படி ஒருவரை காண்பது மிக அரிது என்கிறார். வெற்றுகிரக வாசிகள் ஆச்சாரியார் அனுப்பின பலூன் பாத்திரத்தில் நுண்கிருமிகள் உள்ளதாய் தவறுதலாய் கண்டறியப்படுகிறது. மீடியாவுக்கு இதனை அறிவுக்கும் ஆச்சாரியா சொல்கிறார் “மனிதனை சிருஷ்டித்ததை விடுங்கள் நம் வீட்டு தயிரை உறைய வைப்பது கூட வெற்றுகிரகவாசிகள் தாம்.
அய்யன் தன் மனைவியிடம் சொல்கிறான் “தீவிரமான மனிதர்களை போதுமான படி நீண்ட நேரம் முறைத்துப் பார்த்தோமானால் அவர்கள் வேடிக்கையாக தோன்ற ஆரம்பிப்பார்கள். இந்த வாசகத்தில் இருந்து தான் நாவல் ஆரம்பிக்கிறது எனலாம். மனித வாழ்வு எவ்வளவு அற்பத்தனமானதோ அந்தளவு நாடகத்தன்மையும் விளையாட்டுத்தனமும் கொண்டதாக உள்ளதை காட்டுகிறார். விஞ்ஞானிகளில் இருந்து வீட்டு மனைவி வரை ஒரு புனைவை உருவாக்கி வசதியாய் அதைத் தமது பட்டுக் கூடாக்கி கொள்கிறார்கள். மற்றொரு தருணத்தில் அய்யன் அவளிடம் சொல்கிறான் “மக்கள் ஏன் எதையாவது செய்கிறார்கள் என்றால் அவர்களுக்கு வேறொன்றும் மேலானதாய் இல்லை என்பதாலே. ஐன்ஸ்டினுக்கு சார்புக் கொள்கை என்ற ஒன்று இருந்தது. நீ தினமும் இருமுறை தரை துடைக்கிறாய்.
மற்றொரு பக்கத்தில் இந்த உரையாடல் வருகிறது.
 உனக்குத் தெரியுமா ஓஜா (அவனது மனைவி), அவன் சொன்னான், தான் வழக்கமாய் இவ்விசயங்களை ஆரம்பிக்கும் பாணியில் “பணக்காரர்களுக்கு எல்லாவற்றுக்கும் ஒரு பெயர் உண்டு. ஒருவன் தன் குடும்பத்துடன் செல்வழிக்கும் பெயருக்கு கூட ஒரு சொல் உண்டு
“நிஜமாகவா?, அவள் திரும்பாமலே கேட்டாள்.
“அவர்கள் அதை தரமான நேரம் (Quality Time) என்கிறார்கள்
ஆங்கிலத்தில் அப்படி ஒரு சொல் உண்டுமா என்ன?
“ஆமாம்
“ஏன் அப்படி ஒன்றுக்கு பெயர் சூட்ட வேண்டும்?
“அவர்கள் தம் உலகில் எல்லாவற்றுக்கும் பெயர் சூட்டுவார்கள், அவன் சொன்னான். “உனக்குத் தெரியுமா ஓஜா, அந்த நெடுதுயர்ந்த கட்டிடங்களில் உள்ள மனிதர்கள் திடீரென்று ‘நான் யார்? நான் எப்படியானவன்என்றெல்லாம் வியக்க தொடங்குவார்கள் அதற்கும் அவர்களிடம் ஒரு பெயர் உண்டு

மனிதர்களின் இந்த அறிவார்ந்த பாவனை நாவலின் மையம் எனலாம்.
மனு ஜோசப்பின் உவமைகள் சற்று பிரத்யேகமானவை. உதாரணத்துக்கு பாருங்கள்:
மாலைகளில் அவர்கள் (பள்ளிக்குழந்தைகள்) வாயிற்கதவுகளை நோக்கி, நம்மூரில் பி.பி.ஸி நிருபரை நோக்கி நிலநடுக்கத்தில் இருந்து தப்பினவர்கள் ஒடுவதைப் போல் மகிழ்ச்சியாக ஓடுவார்கள்
“அய்யன் மணியின் அடர்த்தியான கரும் தலைமயிர் பக்கவாட்டாய் வாரப்பட்டிருந்தது, பகையான அண்டை நாடுகளுக்கு இடையில் பிரிட்டிஷார் உருவாக்கும் எல்லைக்கோடுகளைப் போன்ற அசிரத்தையான ஒரு ஒழுங்கற்ற வகிடு சிகையை பிரித்தது
நாவலின் முக்கிய குறைகள் என்ன? ஒன்று அது இயல்பான போக்கில் விரிய மறுக்கிறது. அப்படி நிகழ்கிற போது மிகையாகவும் தேய்வழக்காகவும் மாறுகிறது. மனு ஜோசப் வேகம் மற்றும் விறுவிறுப்புக்காக நாவலை சில இடங்களில் நாடகீயமாக்குகிறார். நாடகீயத்தை கையாளுவதற்கான மொழி வன்மை அவருக்கு இல்லை. அவரது பேனா அங்கதத்திற்கு மட்டுமே நன்றாக வளைந்து கொடுக்கிறது. முரணான பாத்திரங்களை அவற்றின் போக்கில் கதையாடலின் ஊடே வளர விடுகிறார். இது பாராட்டத்தக்கது.
முழுக்க முழுக்க அங்கதம் சொட்டும் நாவல்களின் விதி பாத்திரங்கள் சவலையாகி விடும் என்பது. எழுத்தாளன் இடையிடையே யதார்த்தமோ, மிகு-எதார்த்தமோ கலந்து தான் பாத்திரங்களுக்கு உயிர்ப்பளிக்க முடியும். மனு அதை செய்யவில்லை. இது ஒரு சின்ன பலவீனம்.
மற்றபடி சாமர்த்தியமான மொழிநடைக்காகவும், கூர்மையான எண்ணவோட்டத்திற்காகவும் படிக்க விரும்புபவர்களுக்கு தடையில்லை. மேற்தட்டு இந்திய வாசகர்களுக்கு வெங்காயம் பிடிக்காது என்பதாலோ ஏனோ இந்நாவலை படித்து விட்டு நாளெல்லாம் அழுதேன் என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.
(உயிரோசையில் வெளியான கட்டுரை)

No comments: