இணையம் இன்று இலக்கியத்தை எப்படி பாதித்துள்ளது


கடந்த சில வருடங்களில் இணையம் தமிழ் உரைநடையை கவனிக்கும்படியாய் மாற்றி உள்ளது. சுஜாதா ஒருமுறை குறிப்பிட்டது போல், தொண்ணூறுகளில் தீவிர உரைநடையாளர்கள் சிடுக்காக நீளமாக எழுதுவதை கௌரவமாக கருதினார்கள். பொதுவாகவும் தனிப்பட்ட முறையில் நம்பப்படுவது போல் எனக்கு சளி பிடித்துள்ளது என்பதை சொல்லியாக வேண்டும் என்று நினைக்கிறேன் என்பது போல் எதையும் வளைத்து சுழித்து சொன்னால் மேலானது என்று நினைத்தார்கள். ஒரு புத்தகத்தை சற்று குதர்க்கமாய் பார்க்க முடிந்தால் “கட்டுடைத்ததாய் கோரினார்கள். இணைய வருகையால் நேரடியாக கிளர்ச்சியாக சுருக்கமாக எழுதும் பாணி பிரபலமாகி உள்ளது. இணைய பாதிப்பை நாம் கடந்த பத்து வருடங்களில் தமிழில் புத்தகப் பதிப்பு அடைந்த அபரித வளர்ச்சி மற்றும் இடைநிலை பத்திரிகைகள் பெற்றுள்ள வெற்றியையும் கணக்கில் கொண்டே புரிய வேண்டும்.
கடந்த பத்தாண்டுகளில் ஜெயமோகன், எஸ்.ரா, சாரு உள்ளிட்ட எழுத்தாளர்கள் புனைகதைக்கு நிகராக பத்திகளும் எழுதினார்கள். வாசகர்களை பெருக்கினார்கள். கவனத்தை தொடர்ந்து தக்க வைத்தார்கள். இது அவர்களின் புத்தக விற்பனையை அதிகப்படுத்தியது. எஸ்.ரா இடைநிலை, ஜனரஞ்சக இதழ்களிலும், சாரு மற்றும் ஜெ.மோ தம் இணையதளங்களிலும்.
சாரு இணைய பத்தி எழுத்தை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர். வாசகனுக்கு அணுக்கமாக, தன்னிலையாக, கொஞ்சம் அதிரடியாக, நிறைய சுவாரஸ்யமாக படுக்கையறை ரகசியங்கள், சமையலறை விவகாரங்கள், புலம்பல்கள், புகார்களில் இருந்து துவங்கி லத்தீன் அமர இலக்கியத்தில் சென்று முடிவது சாருவின் பாணி. இன்று ஏராளமான இளம் எழுத்தாளர்கள் இணையத்தில் உருவாகி அங்கிருந்து பத்திரிகைகளுக்கும் வருகிறார்கள். இவர்களிடம் சாருவின் வலுவான பாதிப்பை காண முடிகிறது. கட்டுடைக்கும் ஆர்வமின்றி தன்னிலையாக கிளர்ச்சியாக எழுத முயல்கிறார்கள். உடனடியான ஆனால் நிலையற்ற கவனமே நோக்கம்
ஜெ.மோ தன் இணையதளத்தில் வழமையானவற்றை தான் எழுதினாலும் அவரது உரைநடை லகுவாகி நேரடியானதாக மாறி உள்ளது. உலோகம் “அனல் காற்று போன்ற அவரது சமீப நாவல்களும் “சோற்றுக்கடன் போன்ற சிறுகதைகளும் எளிய லட்சியங்களும் வளவள சித்தரிப்புகளும் மிகையான உணர்ச்சிகளும் கொண்டவை. ஜனரஞ்சக வாசகனை தக்க வைக்கும் பதற்றம் இதற்கு காரணமாக இருக்கலாம்.
கனமான கவித்துவ மொழிக்காக அறியப்பட்ட எஸ்.ரா இன்று எளிமையான சற்று உணர்ச்சிகரமான மொழியையே பயன்படுத்துகிறார். “உபபாண்டவத்தில் இருந்து உறுபசியில் இருந்து “துயிலில் அவரது மொழி குறிப்பிடும்படியாய் மாறி உள்ளது. உருவக இறுக்கத்தில் இருந்து உலர்வான சொற்களில் இருந்து இன்று அது மாறி இளகிப் போய் உள்ளது. இதற்கு கடந்த பத்தாண்டுகளில் நிகழ்ந்த மேற்சொன்ன மாற்றங்கள் ஒரு காரணம் எனலாம்.
வேறெந்த இந்திய மொழியை விடவும் தமிழில் தான் அதிகபட்சமாக இணையத்தில் இலக்கியம் வாசிக்க கிடைக்கிறது. 10,000 இலக்கிய வாசகர்களில் கணிசமானோர் இணையத்தில் மட்டும் வாசிப்பவர்கள். பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு இணையதளம் உள்ளது. பழந்தமிழ் இலக்கியத்தில் இருந்து கடந்த ஐம்பது வருட நவீன இலக்கியம் வரை அநேகமாய் அனைத்து எழுத்தாளர்களின் பல அல்லது ஒரு மாதிரி படைப்பாவது வாசிக்க கிடைக்கிறது. முன்பிருந்த அறியப்படாத எழுத்தாளன் என்ற மர்மவெளி இன்றில்லை. இணையம் நல்கும் சுயபிரசுர வாய்ப்பு எழுத விரும்புபவர்களுக்கு இன்று தரும் சுதந்திரம் அபாரமானது. சுயமேம்பாட்டுக்கும் பரஸ்பர தாக்குதலுக்கு அது மலினப்படுத்தப்பட்டாலும் எதிர்காலம் நம்பிக்கை ஏற்படுத்துவதாகவே உள்ளது.
(2011 டைம்ஸ் தீபாவளி மலரில் வெளியான கட்டுரை)

Comments