Sunday, November 13, 2011

தமிழக வானிலை அறிக்கை – மோனிகா, ரமணனில் இருந்து கடவுள் வரைஆரம்பத்தில் வானிலை அறிக்கைகள் தொலைக்காட்சி செய்தியின் முடிவில் சில அசுவாரஸ்யமான வாக்கியங்களாக சுருக்கப்படுவதில் இருந்து இன்று கிராபிக்ஸ் மற்றும் வரைபடங்களையும் கொண்டு செல்வி மோனிகாக்கள் திக்கித் திக்கி தலையை ஆட்டி ஆட்டி விளக்குவது வரை வளர்ந்துள்ளது. பருவநிலை அறிக்கைகள் அறிவியல்பூர்வமாகிய சூழலில் அறிவிப்பாளினியும் மரபான சேலையில் அல்லாமல் நவீன ஆடையில் வருவதும் கவனிப்புக்குரியது. இந்த மசாலா சேர்க்கைக்கு ஒரு காரணம் இந்தியாவில் பொதுவாக மழைக்காலங்களில் தான் வானிலை அறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது என்பது.
காய்கறி விலை ஏற்றம், வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு செய்திகளில் இருந்து அன்றாட போக்குவரத்தை பாதிக்கும் இன்று குடை மழைகோட்டு எடுக்க வேண்டுமா, சாலையில் எந்தளவு நீர்த்தேக்கம் போன்ற கேள்விகள் வரை உயிர் பெறுகின்றன. நமது பருவகாலம் நான்காக பிரிக்கப் படுகிறது. குளிர்காலம், கோடை, முன்மழைக்காலம், மழைக்காலம். ஆனால் நமது பருவச்சூழல் ஐரோப்பாவில் போல் இங்கு தினசரி வாழ்வை தொடர்ந்து பாதிக்கிற ஒன்றாக இல்லை. போக்குவரத்தை பாதிக்கும் கடும் பனிப்பொழிவு, புயல், காட்டுத்தீ போன்ற இயற்கை சீற்றங்கள் இங்கு குறைவே.
போலாந்து இயக்குநரின் டெகலாக்ஸ் எனும் தொலைக்காட்சி படங்களில் ஒன்றில் ஒரு விஞ்ஞானி தனது மகனுக்கு வெளியே விளையாடுவதற்கு தோதாக சூழல் உள்ளதா என்று வானிலையை சில அறிவியல் சூத்திரங்கள் கொண்டு ஆய்ந்து சொல்வார். வெளியே தரையில் அடர்த்தியான பனி படர்ந்துள்ளது. குறிப்பாக, உறைந்துள்ள ஒரு ஏரியில் பனிச்சறுக்கு விளையாட குழந்தைகள் பிரியப்படுகிறார்கள். வானிலை நிமிடத்துக்கு நிமிடம் மாறக் கூடியது. அப்பாவின் விஞ்ஞான கணிப்புக்கு எதிராக ஏரி உருகி அவரது மகன் மூழ்கி இறந்து போகிறான். நாத்திகவாதியான அப்பா தேவாலயத்திற்கு சென்று மண்டியிட்டு அழுகிறார். ஒருவிதத்தில் மனித அறிவு எவ்வளவு குறைபாடுள்ளது, நாம் வாழும் பிரபஞ்சம் எவ்வளவு பிரம்மாண்டமான எளிதில் வரைவறுக்க முடியாத கணித சூத்திரங்களால் இயங்குவது என்பதை நடைமுறை வாழ்வில் அடிக்கடி நினைவுபடுத்துவதற்கான ஒரு கருவியாகவும் வானிலை அறிக்கைகள் இயங்குகின்றன. இவ்வாறு மழை நாட்களில் ரமணனின் சொற்களில் அடிக்கடி கடவுளும் எட்டிப் பார்க்கிறார்.
மனித அறிவின் எல்லை பற்றி இப்படியான உயர்ந்த தத்துவ விசாரங்களில் இருந்து டீ.வியில் ரமணனின் கணிப்புகளும், அவரைத் தொடர்ந்து “இன்று டீவியில் மழை பெய்யாது என்றால் கண்டிப்பாக பெய்யும் என்று நக்கலாக குடை எடுத்துக் கொண்டு செல்லும் சினிமா நகைச்சுவை பாத்திரம் வரை நமது மீடியாவிலும் பொதுமக்கள் பிரக்ஞையிலும் நீங்காத இடம் பெற்றுள்ளது. வானிலை கணிப்பின் நிச்சயமின்மை ஜோதிடத்தை போன்றே அதனளவிலான சுவாரஸ்யம் கொண்டது. இதனாலேயே கிரகங்களின் நிலையை அவதானித்து வாழ்வைப் போன்றே பருவநிலையையும் கணிக்க இந்தியர்கள் கி.மு 300இலேயே முயன்றிருக்கிறார்கள். 
(2011 டைம்ஸ் தீபாவளி மலரில் வெளியான கட்டுரை)

4 comments:

Kamuthi said...

Monika is not Selvi.Monika anymore. She is married and Mrs. Monika Sam now. :)

- Paul Raj, Hyd

ஆர்.அபிலாஷ் said...

:) அப்டேட்டா இருக்கீங்க பால்

d said...

சென்ற அல்லது அதற்கு முந்தைய அல்லது அதற்கும் முந்தைய குமுதத்திலோ விகடனிலோ மோனிகாவின் பேட்டி வந்திருந்தது. அவள் பிராமின். சைவம். அவள் கணவர் வேறு மதம்(கிரிஸ்டின் என்று ஞாபகம்). அவள் கணவன் அசைவம். அவருக்காக மோனிக்கா அசைவத்திற்கு மாறி விட்டாளாம். சிக்கன் சாப்பிடுகின்றாளாம்.(தங்களை நல்ல விதமாய் feel செய்து கொள்ள‌ மசோகிச வேலைகளில் கூட மனிதர்கள்(especially women) இறங்கி விடுவார்கள்.)

ஆர்.அபிலாஷ் said...

விடுங்க D
ரொம்ப பீல் பண்ணாதீங்க!