வெற்றி பெற்ற மனிதர் எல்லாம் ...நேர்மறைவாதம் ஒரு வலுவான சமூக தொடர்புறுத்தல் பண்பு. பொதுவாக முழுக்க நேர்மறையானவர்கள் எதிர்மறையானவர்கள் என இருசாராரையும் உடனடியாக நம்ப மக்கள் தலைப்படுகிறார்கள். இவர்களில் நேர்மறையானவர்களுக்கு ஆரம்பத்தில் மக்களிடையே பரவலான வரவேற்பு இருக்கும். நேர்மறையானவர்கள் வாழ்வில் வெற்றி பெறுவார்கள் என்று எண்ணற்ற முறை பேசி, எழுதப்பட்டுவிட்டது. வெற்றிப்படிக்கட்டுகள் என்பது நமது ஊடகங்களில் அதிகம் தொய்ந்து போன ஒரு உருவகம். வாழ்வில் வெற்றிபெறுவது எப்படி என்று மேடையில் நீங்கள் பேச்சை ஆரம்பித்தால் எந்த கூட்டத்திலும் பார்வையாளர்கள் நிமிர்ந்து கவனிப்பார்கள். தோல்வி வெற்றியின் முதற்படி, ஆகையால் துவளாதீர்கள்,.தொடர்ந்து போராடுங்கள் என்று கர்ஜித்தால் பலத்த கைத்தட்டுகள் நிச்சயம். வாழ்வில் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு உண்டு, தோல்விகள் என்பது மாயை என்று நாம் நம்ப தலைப்படுகிறோம். தொடர்ந்து நம்ப வைக்கப்படுகிறோம். இப்படி தோல்விக்கு அப்பாற்பட்டவர்களாக கருதிக் கொள்பவர்கள் அதிகமான மனச்சோர்வுக்கு ஆளாகிறார்கள். நீண்ட நெடும் வெற்றிப் படிக்கட்டுகளை கீழே நின்று நிமிர்ந்து பார்த்து கொண்டிருப்பவர்கள் கடும் கழுத்துவலிக்கு ஆளாகி மீட்க முடியாத துயரத்துக்குள் ஆழ்வதாக சொல்கிறது நவீன உளவியல்.
நேர்மறையானவர்கள் வெளிமுகமானவர்களாக (extrovert) அதிகம் இருக்கிறார்கள். அரசியல், ஊடகங்கள், மக்கள் தொடர்பு, வணிகம் என எங்கும் இவர்கள் இயல்பாக ஆதிக்கம் செலுத்துகிறார்கள். இப்படி அதிகம் சமூகப்பார்வையில் உள்ளவர்களும் வெற்றியின் குறியீடுகளாகவும் தெரிபவர்களும் இவர்களே. வாழ்க்கையில் வெற்றி அடைய நினைப்பவர்கள் எளிதாக ஒரு ஊடகக் காட்சி போல் ஆக உத்தேசிக்கிறார்கள். நமது ஊடக அறிவுஜீவியாக கோபிநாத்தும், கலை உலக அறிவுஜீவியாக சினிமாக்காரர்களும் (முன்னர் நடிகர்களும் தற்போது உலகசினிமா எடுக்கும் தமிழ் இயக்குநர்களும்) முன்னிறுத்தப்படுகிறார்கள். மேற்தட்டினருக்கு ஸ்டீவ் ஜோப்சும், நாராயண மூர்த்தியும். ஆக பள்ளியில் இருந்து வேலை பார்க்கும் இடங்களில் வரை ஒருவர் நேர்மறையாக, வெளிமுகமானவராக வெற்றியாளராக இருக்கும்படி நெருக்கடி உள்ளது. இயல்பாக உள்முகமானவர்கள் (introvert) கூட தம்மை வெளிமுகமானவர்களாக போலியாக காட்டிக் கொள்ள தலைப்படுகிறார்கள். சமகால ஜப்பானிய நாவலாசியர்களில் உலகப்புகழ் பெற்றவரான ஹருகி முராகாமி ஆரம்பத்தில் ஒரு இசைத்தட்டு கடை வைத்து இருந்தார். அப்போது அவர் தினமும் ஏராளமான வாடிக்கையாளர்களுடன் பேச வேண்டி இருந்தது. முப்பது வயது தாண்டின பின் தனது வியாபாரம் தொய்வடையவதை, தான் நாள்தோறும் மிகவும் சோர்ந்து சுரத்தின்றி மாறி வருவதை உணர்ந்தார். அவரது பிரச்சனை அவருக்கு பிற்பாடு தெரிய வந்தது. அவர் இயல்பில் ஒரு உள்முகமானவர். தொடர்ந்து மக்களோடு பேசி தொடர்புறுத்துவது அவரது ஆளுமை பண்பல்ல. சுயவிருப்பமின்றி தினமும் நூற்றுக்கணக்கானவரோடு பேசும் ஒரு வேலையை வருடக்கணக்காய் செய்து கொண்டிருந்தார். விழித்துக் கொண்டதுடன் முராகாமி தான் இனி விருப்பமின்றி யாரிடமும் பேசப் போவதில்லை என்று முடிவு செய்தார். எழுத்தாளராகின பின் அவரது “நார்வேஜியன் வுட் நாவல் 36 லட்சம் பிரதிகள் ஜப்பானில் மட்டுமே விற்றது. வாசகர்கள் அவரை வழிபட்டார்கள். இளைஞர்கள் மத்தியில் ஒரு மைக்கேல் ஜாக்சன், செகுவேரா, ரஜினி காந்த் போல ஆனார். பலரும் தம்மை முராகாமியன் என்று சொல்லிக் கொள்ள விரும்பினார்கள். மீடியாவில் மழை பெய்தாலும் வெயிலடித்தாலும் அவரிடம் கருத்து கேட்டார்கள். சுருக்கமாக முராகாமி நமது சமூகம் மற்றும் வணிக நிறுவனங்களால் ஒரு விளம்பர லேபிளாக, பிராண்ட் பெயராக மாற்றப் பட்டார். ஆனால் இந்த புகழ் மழையில் நனையும் சாக்கில் ஒரு விற்பனைப் பண்டமாகும் விபத்துக்கு ஆளாகாமல் முராகாமி ஜப்பானை விட்டு ஓடி தலைமறைவானார். பல காலம் அமெரிக்காவில் ஐரோப்பிய நாடுகளிலுமாக வாழ்ந்தார். வெற்றி கிடைத்தாலும் இல்லாவிடிலும் அது ஒரு உபாதை தான். நமது நவீன கலாச்சாரத்தில் வேகமாக பரவி வரும் ஒரு வைரஸ் இது.
சினிமாவில் பெரும் துரதிஷ்டங்களை சந்திக்கும், சுமக்கும் விளிம்புநிலை பாத்திரங்கள் கூட தன்னம்பிக்கை சுடர்விடும் ஒரு புன்னகையுடன் வாழ்வை ஏற்றுக் கொண்டு இயல்பானவர்களுக்கான நேர்மறை உதாரணங்களாகத் தான் வருகிறார்கள். கடைசியாக நாம் பார்த்த எதிர்மறையான நோயுற்றவரோ குருடனோ யார்?
வாழ்வின் பிரச்சனைகள் சிக்கலானவை. பெரும்பாலானவற்றுக்கு நேரடியான சுமூகமான தீர்வுகள் இல்லை. ஊடகங்கள், பொதுநம்பிக்கைகள், மித்துகளுக்கு வெளியே நாம் பிரச்சனைகளை ஏற்று வாழும் எண்ணற்ற ஜன்மங்களை தான் காண்கிறோம். வாழக் கற்றுக் கொள்வது அது என்னவென்றே தெரியாமல் வாழ்ந்து கொண்டே முடிப்பது தான். மாறாக வாழ்க்கை கலை என்ற ஒன்றே இல்லை. வணிகப் போட்டியாளர்கள் சொல்வது போல் வெற்றியை ஒருவர் நாடி அடைய முடியாது. சமீபமாக பல அறிவியல் ஆய்வு முடிவுகள் இந்த வெற்றி எனும் தொன்மத்தின் காற்றை இறக்கி உள்ளன.

அடுத்து மகிழ்ச்சியாக அல்லது நிம்மதியாக இருப்பது. அதுவும் எளிமைப்படுத்தலுக்கு ஆளாகிறது. வெற்றி அடைந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று நாம் வெற்றிக்கு பின்னால் பாய்கிறோம். மற்றொரு தரப்பு வெற்றியாளர்கள் நிம்மதி இழக்கிறார்கள் என்று மறுத்து ஆன்மீகமும் சமூகத் தொண்டும் மட்டுமே நிம்மதியை தரும், அதை நாங்கள் அரைமணி நேரத்தில் தருகிறோம் கட்டணம் இவ்வளவு என்று நம்மை இழுக்கிறார்கள். சற்று நின்று நிதானித்து பார்த்தால் மகிழ்ச்சியும் நிம்மதியும் முழுமுதல் பொருட்களாக அனுபவங்களாக நம் வாழ்வில் என்றுமே இருந்ததில்லை, மிக சின்ன வயதில் இருந்தே நாம் அவற்றை தேடியதில்லை என்று புரிய வருகிறது. உண்மையில் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தேடி சிந்திக்கும் வரையில் நாம் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் தான் இருக்கிறோம். துக்கம் கூட இதே அளவில் கட்டி விநியோகிக்கப்படுகிறது. “ஸ்டீவ் ஜோபுஸுக்காக உலகமே கண்ணீர் வடிக்கிறது என்ற கட்டுரை ஒன்றை படித்து விட்டு உலகமே கலங்கும் இவ்வேளையில் நீ ஏன் ஸ்டீவ் ஜோபுசுக்காக வருத்தப்படவில்லை என்று ஒரு நண்பன் என்னை திரும்பத் திரும்ப கேட்கிறான். என்ன பதில் சொல்ல? அந்த பிரச்சனை முடியும் முன் முருகதாஸ் குழுவினர் ஒரு மைக்கை எடுத்துக் கொண்டு “போதி தர்மர் யார் என்று தெரியுமா? என்று சென்னை மகாஜனங்களை கேட்கிறார்கள். அதற்கு தாறுமாறாக பதில் அளித்தால் ஜப்பானில் எல்லாருக்கும் தெரிந்த ஒரு மாபெரும் பல்லவ-பௌத்த துறவியை, ஒரு மாபெரும் தமிழரை உங்களுக்கு தெரியவில்லையா, ஐயோ பரிதாபம் என்று கேட்கிறார்கள். எதற்கு தெரிய வேண்டும்? ஏன் தமிழ்ப் பெருமை அல்லது குற்றவுணர்வு என்ற இருமை நிலைக்கு தள்ளப்பட வேண்டும்? இதனிடையே, சாமிப் பாட்டு இசைத்தட்டு விற்பவர்கள் பாடல்கள் நடுவே வந்து  “பக்தர்களே திருட்டு சி.டி வாங்காதீர்கள். அப்படி செய்தால் உங்களுக்கு கண்டிப்பாய் புண்ணியம் கிடைக்காது என்று எச்சரிக்கிறார்கள். இதே வரிசையில் வரும் மத்தியவர்க்க ஊழல் எதிர்ப்பு போராளிகள் தாம் பின்வாசல் வழியாக ஊழலை ஆதரித்தபடியே அன்னா ஹசேராவுக்காக உண்ணாவிரதம், பேரணி என்று திரள்கிறார்கள். அன்னா பக்கம் நிற்காதவர்கள் சமூகப் பொறுப்பற்றவர்கள் என்கிறார்கள். “நீயா நானாவில் முத்துக்கிருஷ்ணன் சில வலுவான வாதங்களை அன்னாவின் அமைப்புக்கு எதிராக வைத்த போது கிட்டு போன்ற பிரபல அறிவுஜீவுகள் “இவனெல்லாம் ஒரு மனிதனா என்று கிருஷ்ணனை நோக்கி அருவருப்பான பார்வையை பார்த்தார்கள். எந்த அசட்டுத்தனமும் ஆயிரக்கணக்கான மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு நேர்மறையான ஒரு உடனடி தீர்வை தருவதாக பட்டால் அதனை உடனடியாய் ஏற்றுக் கொண்டு கொண்டாடுவதே இன்றைய பிரபல அறிவுவாத போக்கு. ஆழமான விசாரணைக்கும் தொலைநோக்குக்கும் இடமில்லை. யாருக்கும் அவகாசமில்லை. இவர்கள் பரவாயில்லை. அன்னா ஹசாரேயை ஆதரித்து தொடர்கட்டுரைகள் எழுதின ஜெயமோகன் அன்னாவை ஆதரிக்காதவர்கள் வாழ்வை எதிர்மறையாக பார்க்கும் இடதுசாரி சிந்தனையாளர்கள் மட்டுமே என்றார். ஜப்பானில் அணு உலைகள் கசியும் முன்னர் பலகாலமாய் அவற்றின் கடும் விமர்சகர்களாய் இருந்து வந்த ஒரு சிறுபான்மை குழுவினரை பெரும்பான்மை சமூகம் இதே போன்று எதிர்மறைவாதிகள் என்று தான் திட்டியது. கதிரியக்கம் எங்கும் நிறைந்ததும் ஜப்பானிய மக்கள் இன்று கையில் கதிரியக்கம் அளக்கும் கருவியுடன் ஆறு, குளம், குட்டை என்று நீரை மொண்டு எடுத்து ஆராய்ந்தபடி பித்து பிடித்து அலைகிறார்கள். ஒரேயடியாக நேர்மறை மனநிலையில் இருந்து எதிர்மறைவாதத்துக்கு தாவி விட்டார்கள்.
புஷ் அரசின் போர் வெறியாட்டத்தில் அமெரிக்கர்களுக்கும் கூட பொருள் உயிர் இழப்புகள் இருந்தன. பொருளாதாரம் மெல்ல மெல்ல சாய்ந்து வந்தது. பல்-இன கலாச்சாரம் ஒரு சமூக ஆபத்தாக கருதப்பட்டது. வேலையில்லா திண்டாட்டம் தொடர்ந்து மீடியாவில் விவாதிக்கப்பட்டது. அதற்கு இந்தியா போன்ற மூன்றாம் உலக பி.பி.ஓ நாடுகள் குற்றம் சாட்டப்பட்டன. இதனை அடுத்து ஒபாமா “நம்மால் முடியும் என்ற ஒரு பிரபல ஊக்குவிக்கும் பேச்சுடன் புத்துணர்ச்சி ஊட்டும் மாற்றுத் தலைவராக தன்னை மீடியாவில் முன்னிறுத்தி வெற்றி பெற்றார். இன்று ஒபாமா அன்னாவை போல் அதிகார மிக்க பன்னாட்டு நிறுவனங்களின் கருவி மட்டுமே என்று வெளிப்படையாகி விட்டது. புஷ்ஷின் அதே வேகத்துடன் அமெரிக்காவின் உலகப் போர் தொடர்கிறது. அவர்களின் உள்ளூர் பொருளாதார சரிவையும் அவரால் தடுத்த நிறுத்த முடியவில்லை. திரும்பவும் we can என்றால் காறித் துப்புவார்கள். அன்னா ஹசாரே தான் தூய்மையான காந்தியவாதி என்று பட்டம் விட்டவர். ஆனால் அவரது இயக்கத்துக்கு கோடிக்கணக்கிலான பண ஆதரவு எங்கிருந்து வந்தது, என்.ஜி.ஓக்களின் நிதிநிலவரத்தை விசாரனை செய்ய அவர் ஏன் மறுக்கிறார் என்பது போன்ற முக்கிய கேள்விகளுக்கு அச்சுபிச்சென்று அவர் பதில் உளறுவதும், தன்னை விமர்சிக்கும் அரசியல் தலைவர்களை பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அனுப்ப பணிப்பதும், ஆர்.எஸ்.எஸ் தன் பின்னே தானே சேர்ந்த கூட்டம், நானாக அழைக்கவில்லை என்று ரஜினி வசனம் பேசுவதும் அவர் எந்த பிரச்சனைக்கும் தொலைநோக்காக யோசிக்க தெரியாத பிரச்சனைகளின் ஆழம் புலப்படாத ஒரு எளிய அரசியல்வாதி என்று புரியவருகிறது. ஜெயமோகன் இத்தகைய அசட்டு களப்பணியாளர்கள் தான் நமது சமூகத்துக்கு இன்று தேவை என்கிறார். ஆனால் விழிப்புணர்வற்றவர்கள் இன்றைய சமூகத்தில் எளிதில் கைப்பாவையாகி கட்டுப்படுத்தப்படுவார்கள். அவர்கள் ஆபத்தானவர்களாக் மாறுவார்கள். முராகாமி இதே போன்றதொரு பெரும் சமூகப் புயலில் இருந்து தப்பித்து போனதன் காரணம் இது தான். ஒபாமாவின் ஆளுமையை ஆராயும் உளவியல் நிபுணர்கள் அவர் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு நாடும் ஒரு வெளிமுகமான மனிதர். ஆழமான பிரச்சனைகளை ஏற்றுக் கொள்ள மறுத்து அதனோடு தொடர்ந்து மோதி காயம் பட்டு ஒரு கட்டத்தில் முழுக்க மனம் தளர்ந்து போகக் கூடியவர் என்கிறார். எதற்கும் பொறுமையற்றவர்களாக, இந்திய அரசியலமைப்பையே நிராகரித்து (அவ்விடத்தில் சர்வாதிகாரி வரவேண்டும் என்று விரும்பும் காவி) எண்ணம் கொண்டவர்களாக அன்னாவின் கட்சியினர் இருப்பதும் இந்த எளிமையான நேர்மறைவாதத்தால் தான்.
நவீன உளவியல் நேர்மறையானவர்களை விட எதிர்மறையானவர்கள் தாம் பிரச்சனைகளை நடைமுறை சாமர்த்தியத்தத்துடன் சமாளிக்கிறார்கள் என்கிறது. ஒரு பிரச்சனையை இரண்டு விதத்தில் நேரிடலாம். எளிதில் தீர்க்க முடிவது முடியாதது என்று பிரச்சனையை வகைப்படுத்தலாம். நேர்மறையானவர்கள் இப்படி வகைப்படுத்துவதில்லை. அவர்கள் எல்லாவற்றுக்கும் தம்முன் ஒரு தீர்வு உள்ளது, அதை அடைவது தான் தம் பணி என்று மூர்க்கமாய் முனைகிறார்கள். இதனால் ஒரு போக்குவரத்து நெருக்கடியில் மாட்டினாலோ கழிவுநீர் தேங்கி சாலை குளமானாலோ அதற்கு காரணம் என்ன என்று நின்ற வாக்கில் யோசித்து “நாட்டை படித்த எலைட்டுகள் ஆண்டால் எல்லாம் சரியாகி விடும், ஊழலை கடுமையாக தண்டித்தால் இந்தியா ஒரே நாளில் ஒளிர்ந்து விடும் என்று கற்பனை செய்கிறார்கள்..ஒரு தீவிரவாத குண்டுவெடிப்பு நிகழ்ந்தால் அப்சல் குருவையோ கசாப்பையோ தூக்கிலிட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று குரலெழுப்புகிறார்கள். எதிர்மறைவாதிகள் பிரச்சனைகள் எளிதில் மாயாது, அவை இருந்து கொண்டிருக்கும் என்று நம்புகிறார்கள். ஆக போக்குவரத்து நெரிசலில் நின்று சமூகப் புரட்சியை சிந்திக்காமல் வேறு பாதையில் சிந்தனையை திருப்பி விடுகிறார்கள். தீராத பிரச்சனையை தற்காலிகமாய் மறப்பது நல்லது தான். வாழ்க்கை சிக்கல்களின் பிரம்மாண்டம் உணரும் மனிதன் எளிமையுடன் அவற்றின் முன் தலைவணங்குகிறான். வேளை வரும் போது தீர்வை நாடுகிறான். அதுவரை பொறுமையுடன் கவனிக்கிறான். வெற்றிப்படிக்கட்டுகளில்ஏறிக் கொண்டே இருப்பேன் என்று விரைகிறவர்கள் பிரச்சனை என்பது முட்டுசந்து என்றாலும் அதை தொடர்ந்து மோதினால் ஒரு வாசலாக மாற்றிடலாம் என்று கனவு காண்கிறார்கள். ஆனால் தூக்கம் இழந்து உடல் மன நலத்தை இழந்து வீழ்ச்சியை நோக்கி சறுக்குகிறார்கள். பிறகு சற்று சுதாரித்து மீண்டும் ஒரு விட்டிலை போல் சுடரை நோக்கி எகிறுவார்கள். இப்போதைக்கு ஊழல், அடுத்து காஷ்மீர் என்று அன்னா கூறுவது இதனால் தான்.

கொஞ்சம் எதிர்மறையாகவும், அவநம்பிக்கையுடனும் இருப்பது தொடர்ந்து பொய்கள் விற்கப்படும் சமூகத்தில் நல்லது. தராசின் எந்த தட்டிலும் ஏற மறுப்போம். நாம் ஊழலை எதிர்க்கவும் வேணாம், வெற்றியை துரத்தவும் வேண்டாம். துக்கப்படவும் வேண்டாம் பெருமைப்படவும் வேண்டாம். நாளை ஒரு டாக் ஷோவில் கலந்து கொண்டால் நீங்களும் நானும் கூட எண்ணற்ற கதைகளில் ஒன்றாக மாற்றப்படுவோம். நமது அசலான வாழ்க்கை இவற்றுக்கு வெளியே இருக்கிறது.
(நவம்பர் 2011 உயிர்மையில் வெளியானது)

Comments

karthik said…
satru ennai yosika vaithathu intha katurai nithanamaga
Anonymous said…
உருவகத்தைப் பற்றி ஏற்கனவே யாரிடமாவது கேட்கலாம் என்று இருந்தேன். உங்களின் இக்கட்டுரையில் உருவகம் என்ற வார்த்தை வருகிறது. உவமை எல்லோருக்கும் தெரியும். அவனைப் போல் இவன்; அதைப் போல் இவன் என்றெல்லாம் சொல்வது உவமை(simile).

உருவகத்தை(metaphor) பற்றி நான் அறிந்து வைத்திருப்பது இது.

அவனை இவனாகவே காண்பது உருவகம். அதையும் இவனாகவே காண்பது உருவகம்.

நான் சரியா?

உருவகம் என்பதில் அகம் என்று மனதைக் குறிக்கும் வார்த்தை வருகிறது. உரு என்பது என்ன? உரு + அகம் என்று பிரிக்கலாமா? உருவகம் என்பதன் அர்த்தம் உண்மையில் என்ன? உருவகம் என்பதற்கு ஒரு example தரவும்.
நன்றி கார்த்திக்
d,
நீங்கள் ஒரு சூரப்புலி என்று சொன்னால் அது உருவகம். மேலும், அவன் நாற்காலிக்காக ஏங்கினான் எனும் போது நாற்காலி அதிகாரத்தை மட்டுமே குறிக்கிறது. ஆக அது உருவகம். ஜெயமோகனின் “தேவதேவனை முன்வைத்தில்” நல்லதொரு விளக்கம் உள்ளது.
Anonymous said…
'தேவதேவனை முன்வைத்தில்'--->is it a book or an essay in jeyamohan's blog?(i searched in his blog. it is not there)
d
தேவதேவனை முன்வைத்து என்பது அவரது நூல். இணையத்தில் கிடைக்காது.
நேர்மறையானவர்கள் எதிர்மறையானவர்கள் என இருசாராரையும் உடனடியாக நம்ப மக்கள் தலைப்படுகிறார்கள் என்ற வரி மிக நல்ல வரி. ஆனால் கட்டுரையில் எதிர்மறையானவர்கள் பற்றி அதற்குமேல் ஒன்றும் சொல்லப்படவில்லை. ஒரு வேலை கட்டுரைக்கு தேவையில்லை என்பதால் இருக்கலாம் என்று நினைக்கிறேன். எப்படி அப்துல் கலாம் , ஏ.ஆர்.ரகுமான் போன்ற நேர்மறையானவர்கள் வணக்கத்திற்குரியவர்களாக மாறுகிறார்களோ அது போல எதிர்மறையானவர்களான அருந்ததி ராய் , அ.முத்துகிருஷ்ணன் போன்றோரும் ஒரு கட்டத்திற்கு பின் சமூகத்தில் முக்கியமானவர்களாக கருதுப்படுகிறார்கள் என்பதும் உண்மையே. அ.முத்துக்கிருஷ்ணன் உண்மையானவர்தான்.நேர்மையானவர்தான்.ஆனால் அவர் உண்மையில் இருக்கும் எதிர்மறை அம்சம் அவரை விரைவிலேயே மிக முக்கியமான ஒருவராக ஆக்கும் என்பதை தான் சொல்ல விரும்புகிறேன்.
நல்ல அவதானிப்பு சர்வோத்தமன்.
Anonymous said…
//நல்ல அவதானிப்பு சர்வோத்தமன்.//-->

google translate shows அவதானிப்பு equals observation. is it right? what is d differene between விமர்சனம் and அவதானிப்பு?
Anonymous said…
ஒபாமா இன்னொருமுறை we can என்றால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது இருக்கட்டும். வேறு ஒரு புதிய வேட்பாளர் வந்து அவர் we can என்று சொன்னால் மட்டுமே ஏற்றுக் கொள்வார்கள்.

ஜப்பானில் பித்து பிடித்து அலையும் மக்கள் தங்களுக்கு தற்போது பித்து பிடித்திருக்கின்றது என்பதையே உணர்ந்திருக்க மாட்டார்கள். அந்த பித்தாக மட்டுமே இருப்பார்கள்.

மனிதர்கள் நெருப்பைத் தொட்டால் டக்கென்று விரலை பின்னுக்கு இழுப்பதைப் போல் டக்கென்று நெகட்டிவ்வாக அடுத்தவன் சொல்லும் எதையும் நிராகரிப்பவர்கள். ஆனால் அதே மனிதர்கள் சாதாரணமாய் பர்மா பசாரில் டிவிடி கடைக்கு சென்றால் கூட ஒவ்வொரு டிவிடியையும் 'இது அறுவையா இருக்கும்' 'இது அறுவையா இருக்கும்' என்று நெகட்டிவ்வாக மட்டுமே யோசிக்கின்றார்கள்.
Anonymous said…
abilash sir,

மக்கள் நல்லவன் என்று ஒருவனை முழுமையாக நம்புகிறார்கள் அல்லது முழுமையாக கெட்டவன் என்று நம்புகிறார்கள். மக்களிடம் உள்ளது அடிப்படை நேர்மை என்ற அளவுகோல் மட்டும் தான். அந்த ஸ்கேல் மட்டும் தான் மக்களிடம் உண்டு. அந்த ஸ்கேலில் உள்ளவை 1,2,3 அல்ல. சமூகம் வழங்கி இருக்கும் ஒழுக்கங்கள். அதை ஒருவன் மீறும் போது ஏற்படும்
தவறு அவுட்டர் வேர்டில் கண்களால் பார்க்க முடியும். அந்த ஸ்கேலில் உள்ள ஒழுக்கத்தை மீறியவன் யார் என்றே தெரியாவிட்டாலும் கூட தவறு அடையாள எச்சமாக அவுட்டர் வேர்ல்டில் விழுந்து விடுகிறது. ஆகவே அவன் மனோரீதியாக நல்லவனாக பாவலா செய்தாலும் கூட அவன் தவறு வெளியே அவனை எளிமையாக காட்டி விட்டு விடக் கூடியது. மேலும் இந்த அடிப்படை நேர்மை என்ற ஸ்கேலில் உள்ள ஒழுக்கங்களை ஒருவன் கடை பிடிக்கும் போது அன்சட்டைனிட்டியை ஃபீல் செய்வது இல்லை! மாறாக இந்த ஒழுக்கங்களை மீறும் போதே அன்சர்ட்டைனிட்டியை ஃபீல் செய்கின்றான். ஆகவே அடிப்படை நேர்மையை கடை பிடிப்பது ஈசியும் கூட.

ஆனால் வேறு ஒரு நேர்மையும் உள்ளது. அதன் பெயர் உண்மையான நேர்மை. அதை மக்கள் அறிய மாட்டார்கள். அறிந்தாலும் அதை கடை பிடிக்க மாட்டார்கள். ஏன் என்றால் அந்த உண்மையான நேர்மைகள் ஒழுக்கங்கள் அல்ல. அவை உண்மைகள். அந்த உண்மைகளை கடைப் பிடிப்பவனையே உண்மையிலேயே நல்லவன் என்று சொல்ல முடியும். ஆனால் உண்மையை கடை பிடிக்க முடியுமா? உண்மையை கடை பிடித்தால் அந்த கணத்தில் இருந்தே மனிதன் அன்சர்டைனிட்டியை ஃபீல் செய்ய வேண்டி இருக்கும்.

மேலும் ஒன்று. உண்மையை ஒருவன் மனோரீதியாக மட்டுமே மேற்கொள்ள முடியும். மனோரீதியாக உண்மையை கடைப்பிடிக்காமல் அதை மீறும் போது தவறு அவுட்டர் வேர்ல்டில் அடையாள எச்சமாக விழுந்தாலும் விழுந்த எச்சம் 'சரி' என்றே நம்பப்பட்டு விடும். மேலும் கொடுமை ஒன்று உண்டு.

உண்மையான நேர்மையான உண்மையை ஒருவன் மனோரீதியாக கடைப் பிடிக்காவிட்டால் கூட பரவாயில்லை. கடைப் பிடிப்பதாக பாவனையை மேற்கொண்டால் அந்த தவறு அவன் மனதுக்குள்ளேயே செயல்படுவதால் மாட்டிக் கொள்ளவும் மாட்டான். மற்றவர்களுக்கு பெரிய லாஸ் ஏற்படும். ஆகவே உண்மையான நேர்மைகளான உண்மைகளை அறிந்தவர்கள் கூட அதை மறைத்து விடுவார்கள்.

சமூக அமைதி முக்கியம்.