Tuesday, September 13, 2011

திலீப் குமாரின் “கடவு” – நிலையாமையின் அபத்தம்கடவு தொகுப்பில் திலீப் குமார் 77இல் இருந்து 87வரை எழுதியவற்றில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 15 சிறுகதைகள் உள்ளன. திலீப்குமார் ஒரு குறுப்பிட்ட பிரதேசம் அல்லது சாதியின் அல்லது காலகட்டத்தின் மொழி வழக்கை பயன்படுத்தாமல் அல்லது அதன் பாதிப்பில்லாமல் ஒரு வித வடிகட்டப்பட்ட மொழியை பயன்படுத்துகிறார். அதனால் சு.ரா அல்லது க.நா.சுவை போல் அல்லாமல், அவரது உரைநடை இன்றும் ஓரளவு புதுமையை தக்க வைத்துள்ளது. தேர்ந்தெடுத்து உருவாக்கின தனதான தமிழை கொண்ட சுகுமாரனோடு இவ்விசயத்தில் திலீப் குமாரை ஒப்பிடலாம்.
திலீப் குமார் ஒரு குஜராத்தி என்று நமக்குத் தெரியும். அதற்காக அவர் நீலபத்மநாபன், அல்லது ஜே.டிகுரூஸ் போன்று தன் சமுதாயத்தின் கலாச்சார செய்திகளையோ வரலாற்றையோ ஒரு சின்ன சுவாரஸ்யத்துடன் சொல்ல முனைந்தவர் அல்ல. சுயசாதி கிண்டலும் விமர்சனமும் தான் அவரது பிரதான நோக்கம். அங்கதம் தான் அவரது வலிமை. ஆனால் கொஞ்சம் அடிபிசகி வேறுபிரதேசத்தில் நுழைந்தால் திணறுகிறார். எப்படி மகாபாரதபோரில் துரியோதனனை அர்ஜுனன் சந்திக்கக் கூடாதோ அதே போல் சீரியஸான கதைகளை திலீப்குமார நேரிடும் போது பல குழப்பமான கணங்கள் ஏற்படுகின்றன. உதாரணமாக எல்லாவற்றையும் சொல்லி விடும் அவசரம் காரணமாக ஒரு கதாபாத்திரம் தன் போக்கில் குறியீடாக மாற அவர் அனுமதிப்பதில்லை. தனது சீரியஸ் கதைகளில் கடைசி வரை கருத்தாக சுமந்து வந்த மூட்டையை திடீரென்று திறந்து பூனையை கொஞ்சம் தாவிப் போக விடுகிறார். அவரது கங்குப்பாட்டி, பப்லி பாட்டி போன்றோர் கொஞ்சம் அதிக நீளமாக, அதைவிட இன்னும் அதி சாமர்த்தியமாக பேசுவதனால் செயற்கையாக தோன்றுகிறார்கள். அதே நேரம் திலீப்குமாரின் சாமர்த்தியமான பாத்திரங்களின் வக்கணையான வம்பளப்பு தான் அவற்றின் முக்கிய சுவாரஸ்யம் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
துரதிஷ்டவசமாக இந்த பாத்திரங்கள் குழந்தையின் கையில் மாட்டின பேசும் பொம்மை போல் படாத பாடு படுகின்றன. அதே போல் அவரது அநேகமான தீவிர கதைகளில் கடைசி பத்தி ஒன்று தோன்றி அநாவசிய அழுத்தம் தருகிறது. துலாபாரத்தில் யானை அமர்ந்தது போல் ஆகிறது. மேலும் விபரீதமாக அவரது பாத்திரங்கள் “தான் இப்பிரபஞ்சத்தின் கண் ஒரு துகள் என்றெல்லாம் மிகையாக தத்துவம் உதிர்க்கிறார்கள். நகுலன் இதை செய்தால் நாம் ஏற்றுக் கொள்ளலாம். ஏனென்றால் நகுலன் கதைகளில் பாத்திரங்கள் அவரது ஆளுமையின் துண்டுபட்ட வடிவங்கள். படிப்படியாக தன்னையே அவர் ஒரு குறியீடாக மாற்றிக் கொள்கிறார். நகுலன் ஒரு கலாச்சார மனநிலை. அவரது பாத்திரம் ஒன்று தான் பேசுவதில் பயனில்லை என்று நினைத்து நாள்பூரா பிராந்தி குடித்து அர்த்தமற்ற ஒலிகளை எழுப்பிக் கொண்டிருக்கலாம் (வாக்குமூலம்). ஆனால் ஒரு மரபான சிறுகதை வடிவில் ஒரு சௌகார்பேட்டை கங்குப்பாட்டி அதை செய்ய முடியாது. இப்படியான சொற்றொடர்கள் திலீப்குமாரின் கதையை மேற்கொண்டு நகர விடாமல் அடைத்து விடுகின்றன. ஆனால் இந்த இடறுகின்ற தத்துவ ரத்தினங்கள் போக, பகடி எழுத்தில் திலீப் செய்யும் சாதனை அபாரமானது.
உதாரணமாக “மனம் எனும் தோணி பற்றி எனும் கதை. வாழ்க்கை நிலையற்றது என்பதால் அர்த்தமற்றது. அர்த்தமற்ற வாழ்வில் ஆர்வம் காட்டுவது ஒரு அபத்தம். இப்படி யோசிக்கிறான் இக்கதையில் வரும் ஒரு கவிஞன். அவன் ராஜகுமாரனின் மூலை என்ற பெயருள்ள துணிக்கடையில் வேலை செய்கிறான். அங்கு வேலை செய்யும் ராஜகுமாரி என்ற பெண் அவனை காதலிப்பதாக தெரிவிக்கிறாள். ராஜகுமாரி கவிஞனின் எதிர்தரப்பு. கவிஞனுக்கு வாழ்க்கை மாயை என்பதற்கு எந்த காரணமும் வேண்டாம். அதே போல் குள்ளமும் சராசரி அழகும் சுமாரான சம்பாத்தியமும் அக்குளில் சகிக்க முடியாத வியர்வை வீச்சம் கொண்ட ராஜகுமாரிக்கு வாழ்க்கை மீது மிகுந்த உற்சாகம் கொள்ளவும் காரணம் தேவை இல்லை. நடைமுறை வாழ்க்கையை நேர்மறையாய் ஏற்றுக் கொள்வது, அதில் மகிழ்ச்சி அடைவது அவள் இயல்பு. அபத்தத்தின் உச்சமாக இந்த ராஜகுமாரி கவிஞனை காதலிக்கிறாள். ஆனால் மாயையான வாழ்வில் காதலிப்பது சரியா தவறா என்று அவனுக்கு தெரியவில்லை. காதலிப்பதற்கு சாதகமான காரணம் கிடைக்காததால அவளை நிராகரிக்கிறான். ராஜகுமாரியிடம் அவளது அக்குள் நாற்றம் பிடிக்கவில்லை என்று சப்பைகட்டு கட்டுகிறான். பிறகு கோபத்தில் ராஜகுமாரி அவன் வேலைக்கு வேட்டு வைக்கிறாள். வேலை போன பின் அவன் தற்கொலை செய்ய கடற்கரைக்கு வருகிறான். அப்போதும் அவனுக்கு தற்கொலைக்கு ஒரு நல்ல காரணம் கிடைக்கவில்லை. சும்மா வேறொன்றும் செய்ய பிடிக்காமல் தறகொலை செய்ய முனைகிறான். முடிவில் அவனுக்கு புரியவருகிறது, ஆகப் பெரும் மாயை மாயையை மாயை என்று நம்புவது தான் என்று. மனித மனத்தின் அகம்பாவம் தான் இத்தகைய பாசாங்குகளை நோக்கி தள்ளுகிறது. இக்கதையில் வரும் கடையின் பெயரான “ராஜகுமாரனின் மூலை என்பதில் உள்ள நகைமுரணை கவனியுங்கள். இங்கு தான் மிக சலிப்பான ஜவுளி விறபனை வேலையை அற்பமான சம்பளத்துக்கு கதாபாத்திரங்கள் செய்கிறார்கள். இங்கு வேலை செய்யும் சராசரி பெண்ணுக்குத் தான் ராஜகுமாரி என்ற பெயரும் உள்ளது. இக்கதையில் ஒவ்வொரு சின்ன தகவலிலும் பிரமாதமான அங்கதம் உள்ளது. கவிஞன் வானிலும் ராஜகுமாரி மண்ணிலும் வசிக்கிறாள். நூற்றாண்டுகளின் தத்துவ வரலாற்றில் மண்ணிலும் விண்ணிலுமாக நின்று தத்துவவாதிகள் சண்டை போட்டிருக்கிறார்கள். இரண்டு தரப்புக்கும் ஒரு கோளாறு உள்ளது. நிலையாமை மண்ணுலகை அர்த்தமற்றது ஆக்குகிறது. ஆனால் எதிர்தரப்பு தத்துவவாதிகள் முழுக்க பிரக்ஞை வழி நாம் காணும் உலகம் செயற்கையானதாக உண்மையின் சாரம் குறைந்ததாக உள்ளது. பூமியில் நிலைத்து காலூன்றிய சிந்தனையாளன் தான் வாழ்வின் ரகசியங்கள் திறக்கிறான். மகிழ்ச்சியை அனுபவிக்க அதன் ஒரு பகுதியாக இருந்தால் போதும் அதை அறிய வேண்டியதில்லை என்று புரிந்து கொள்கிறான். இக்கதையில் கடற்கரையில் தொடர்ந்து தற்கொலை திட்டங்கள் இன்றி, உத்தேசங்கள் இன்றி, ஆனால் அதன் கிளர்ச்சியான அம்சத்தில் மட்டும் மனம் பறிகொடுத்து அமர்ந்திருக்கும் கவிஞன் ஒரு கற்பனை செய்கிறான். அந்த பகற்கனவு அவனுக்கு உண்மையாகவே தோன்றி விடுகிறது. அதில் ராஜகுமாரி தோன்றி அவனிடம் மீண்டும் காதல் யாசிக்கிறாள். அவனுக்கு காதலித்தால் ஒன்றும் மோசமில்லை என்று தோன்றினாலும் காதல் ஒரு மண்ணுலக சமாச்சாரம் என்பதால் அதை அவனது அகங்காரம் மறுக்கிறது. ஒரு தருணத்தில் அவன் அவளை முத்தமிடுகிறான். ஒரு அர்த்தமும் இல்லாத மண்ணுலக காதல் அவனுக்கு மிகுந்த மனநிறைவை அளிக்கிறது. முதன்முறை உற்சாகமடைகிறான். பிரமை விலகும் போது அவன் ஸ்தம்பித்து போகிறான். சுவாரஸ்யமாக இந்த தத்துவப் பகடியில் எந்த தத்துவ ரத்தினங்களும் இல்லை. திலீப் குமாரின் சிறந்த கதைகளில் ஒன்று இது.  இதே வரிசையில் கொஞ்சம் தாழ்வாக வைக்க வேண்டிய வேறு இரண்டு அங்கதக் கதைகள் ஜனம் மற்றும் தீர்வு .
திலீப் குமாரின் அநேக கதைகளில் நிலையாமை மீது பகடி பிரதானமாக உள்ளது. நிலையற்ற, அவலங்கள் நிறைந்த இந்த வாழ்வில் ஒரு நிலையான உயிர்த்தன்மை உள்ளது என்பதை அவரது கங்குப்பாட்டி, கவிஞன் போன்றவர்கள் மிக தாமதமாக புரிந்து கொள்கிறார்கள். வாழ்வின் இந்த ஆதார ஆற்றல் தான் அவர்களை பிரபஞ்சத்தின் போக்கோடு ஒழுகிப் போக வைக்கிறது. கடவு கதையில் பழுத்த கங்குப்பாட்டி சாவதற்கான தருணம் அருகில் வந்து மீண்டும் மீண்டும் தள்ளிப் போகிறது. கங்குப்பாட்டியின் அக்கிரகாரத்தில் உள்ளவர்கள் அவரது சாவை எதிர்பார்த்து அடையும் ஏமாற்றம் வெகு தமாஷானது. பாட்டிக்கு பாடை கட்டித் தருவதற்கென்றே ரஜ்னி என்ற ஒருவர் கங்கணம் கட்டி அலைகிறார். கடைசியில் எல்லாருடைய எதிர்பார்ப்பையும் கடந்து பாட்டி ஒரு அநாமதேய வேளையில் சாதுவாக இறந்து போகிறாள். நினைத்தபடிக்கு தன்னால் பாடை கட்டமுடியவில்லையே என்று ரஜ்னி பெரும் ஏமாற்றம் கொண்டு அழுகிறார். கடிதம் கதையில் கண்ஷியாம்ஜி எனும் தனது உறவுக்கார புரவலருக்கு மன்மோகன் தாஸ் துவாரகா தாஸ் எனும் வயதான வறுமையில் வாடும் மிட்டு மாமா பணம் கேட்டு ஒரு நீண்ட கடிதம் எழுதுகிறார். அதில் பணம் வராவிட்டால் தான் சாக வேண்டியது தான் என்று அடிக்கொரு தரம் மறைமுகமாக குறிப்பிட்டு நுட்பமாக மிரட்டுகிறார். இந்த மிரட்டல் கடிதத்தை இரண்டு மூன்று தரம் படித்து விட்டு அன்றே கண்ஷியாம்ஜி எதிர்பாராமல் செத்துப் போய் விடுகிறார். தன் சாவை தள்ளிப் போடுவதில் அக்கறை கொண்ட ஒரே மனிதரும் செத்துப் போய் விட மிட்டுமாமா மேற்கொண்டு என்ன செய்வது என்று விழிக்கிறார். ஒரு மாற்றத்தை - அது மரணமோ கழிப்பறைக்கு செல்வதோ - திட்டவட்டமாக எதிர்பார்த்து செய்வதில் ஒரு அபத்தம் உள்ளது. இது நம் நடைமுறை வாழ்வில் தினமும் ஒவ்வொரு நொடியும் நிகழ்கிறது. ஒரு விசயம் நிலைக்கும் என்று நினைப்பது மட்டுமல்ல நிலைக்காது என்று நம்புவது கூட அபத்தம் தான். திலீப்குமார் கதைகளின் மைய கருப்பொருள் இது தான்.
வெளியீடு: கிரியா
விலை: 160

No comments: