Sunday, September 4, 2011

ராஜீவ் மற்றும் குற்றவாளிகளின் கொலைகள்: அமைதியான கண்களுடன் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்


ராஜீ கொலை வழக்கு குற்றவாளிகளை நீதிபதி வி.நவநீதம் ஒரு ஊர்வலத்தில் பங்கெடுப்போர்களுடன் ஒப்பிட்டார். ஒரு ஊர்வலத்தை நடத்துபவர்கள் ஒரு பிரிவு, ஒருங்கிணைப்பவர்கள் அடுத்த பிரிவு, வந்து இணைந்தபடியும், பிரிந்தபடியும் இருப்பவர்கள் இறுதிப் பிரிவு. இக்கொலை வழக்கின் மூளையாகிய பிரபாகரனை இந்திய அரசு மறைமுகமாக தீர்த்துக் கட்டியது. கே.பியை இங்கே கொண்டு வந்து விசாரிப்பது இந்திய அரசியல்வாதிகளுக்கு சிக்கலானது என்று சொல்லப்படுகிறது. இரண்டாவது பிரிவினரான சுபா, தனு உள்ளிட்டோர் உயிரோடில்லை, சிவராசன் சிறப்பு விசாரணைக் குழுவால் கொல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது. கடைசியில் எஞ்சியவர்களில் 26 பேர் “ராஜீவ் கொலைகாரர்கள் என்று மீடியாவால் முத்திரை குத்தப்பட்டு 98இல் கொலைத் தண்டனை விதிக்கப்பட்டனர். உச்சநீதிமன்றம் இவர்களில் 4 பேருக்கு மட்டுமே மரண தண்டனை என்று தீர்ப்பை திருத்தியது. நளினி மன்னிக்கப்பட்டு விட்ட நிலையில் சாந்தன், முருகன், பேரறிவாளன் மட்டும் தூக்கிலப்படுவர். இந்த மரணதண்டனையை ரத்து செய்யக் கோருபவர்கள் இடையே பல தரப்புகள் உள்ளன.
முதலில் மரணதண்டனையை எதிர்ப்பவர்கள். ராஜீவ் குற்ற்வாளிகள், அப்சல் குரு போன்றோர்களை வெளிப்படையாக ஆவேசமாக ஆதரிக்கும் மனிதஉரிமையாளர்கள் அஜ்மல் கசாப் விசயத்தில் அதே நிலைப்பாட்டை எடுக்கப்போவதில்லை. தமிழக ஈழ ஆதரவாளர்கள் ஏன் அதே போன்ற உரிமைக்காக போராடும் காஷ்மீர் தீவிரவாதிகளை ஆதரிப்பதில்லை என்ற கேள்விக்கான விடையே இதற்கும். தேசியவாதம். மற்றொன்று அப்சல் குரு, முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோர் கொலைத்திட்டத்தில் பங்கு வகித்ததாக மட்டுமே குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கசாப்பை போல் துப்பாக்கி ஏந்தி நிற்கும் கொலைகார சித்திரம் இவர்களைப் பற்றி பொது மனநிலையில் இல்லை. நீதிபதி நவநீதம் ராஜீவ் குற்றவாளிகளை கொலையின் வெளிவட்டத்தில் இருப்பவர்கள் என்றே குறிப்பிட்டார். மேலும் இவர்களின் குற்றத்தை புலனாய்வாளர்கள் தீர்மானமாக நிரூபிக்கவில்லை. தோராயமான சந்தேகத்தின் அடிப்படையில் குற்றத்தின் பின்னணியில் மட்டும் இருந்தவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கலாமா என்பதே மீடியா நிபுணர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் எழுப்பும் வினா. இங்கு நாம் இரண்டு விசயங்களை கவனிக்க வேண்டும்.
போலீஸ் என்றுமே ஒரு குற்றத்தை ஆராயும் போது முன்முடிவுகளுடன் தான் செயல்படுகிறது. குற்றமற்றவர்கள் தொடர்ந்து பலியாவதற்கு இது ஒரு முக்கிய காரணம். இது ஒரு உலகளாவிய பிரச்சனை. ஈராக்கில் சதாம் ஆதரவாளர்களுக்கு பக்கத்து வீட்டில் இருந்தவர்கள், எப்போதாவது நலம் விசாரித்தவர்கள், தூரத்து உறவினர்கள் என பலர் அமெரிக்க ராணுவத்தால் அள்ளிக் கொண்டு போகப்பட்டு தேசலான சந்தேகத்தின் அடிப்படையில் மாதக்கணக்காக சித்திரவதை செய்யப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட போது அவர்கள் மனநோயாளிகளாக திரும்பினர். சிரியாவிலும், இலங்கையிலும், முன்னர் சோவியத்திலும் அரசுக்கு எதிரானவர்கள் என்ற பெயரில் லட்சக்கணக்கானவர்கள் காணாமல் போவது, கொன்று புதைக்கப்படுவது வாடிக்கை. ராஜீவ் புலனாய்வு குழுவின் தலைவரான கார்த்திகேயன் இந்திய அமைதிப்படைக்கும் புலிகளுக்கும் போர் நடந்த போது அதைப் பற்றி புலனாய்ந்து அறிக்கை தயாரிக்க இலங்கை சென்றவர். புலிகளைக் குறித்த முன்தீர்மானம் கொண்டவர். அவர் ராஜீவ் வழக்குக்காக ஸ்ரீபெரும்புதூர் வந்ததுமே “இது புலிகளின் வேலை என்று தனக்கு புரிந்து விட்டதாய் சொல்கிறார். அதற்கு பின் அவர் செய்ததெல்லாம் அதற்கான ஆதாரங்களை ஒன்று திரட்டியது தான். அவர் அந்த வேலையிலும் தோல்வி அடைந்தார் என்றே சொல்ல வேண்டும். தடாவின் கீழ் விசாரணை நடந்ததால் மட்டுமே சிறப்பு நீதிமன்றம் கார்த்திகேயனின் மரபுக்கு மாறான, குறைவான ஆதாரங்களை ஏற்றுக் கொண்டது. குற்றவாளிகளை வதைத்து மிரட்டி வாங்கப்பட்ட, பின்னர் அவர்களே நீதிமன்றத்தில் மறுத்த, வாக்குமூலங்கள் முக்கிய சாட்சியமாக கருதப்பட்டது இன்றளவிலும் விமர்சிக்கப்படுகிறது. வழமையான நடைமுறை என்றால் சி.பி.ஐ அடிக்கடி செய்வது போல் நீதிமன்றம் முன் சாட்சிய போதாமை காரணமாய் கார்த்திகேயன் முழிபிதுங்கி நின்றிருப்பார். பேரறிவாளன் குண்டு தயாரித்தார் என்பதற்கு அவர் வழ்ங்கிய ஆதாரம் தான் இருப்பதிலேயே வேடிக்கை. ஒன்பது வால்ட் பேட்டரிகள் இரண்டு வாங்கியதற்கான பில். இதுவும் போலியாக தயாரிக்கப்பட்டது என்கிறார் பேரறிவாளனின் அம்மா அற்புதம்மாள்.
மூன்றாம் நிலை குற்றவாளிகளை பிடித்தது, பங்களூரில் சிவராசனின் இருப்பிடத்தை அடைந்து தாக்கியது ஆகியவை கார்த்திகேயனுக்கு உடனடி நட்சத்திர அந்தஸ்தை மீடியாவில் பெற்றுத் தந்தது. பூஜ்யத்தில் இருந்து விசாரணையை ஆரம்பித்து யாரும் எதிர்பாரா வகையில் குற்றவாளிகளை அவர் கண்டடைந்து வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தது வெகுவாக பாராட்டப்பட்டது. ஆனால் இன்று அவரது இந்த சாமர்த்தியம் கேள்விக்குள்ளாகிறது. ராஜீவ் கொலையில் இந்திய அரசியல்வாதிகளுக்கு, குறிப்பாக காங்கிரஸ், தி.மு.க, தொடர்புள்ளதாக ஜெயின் கமிசன் சந்தேகித்தது. தொடர்ந்து விசாரணை அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் மீடியாவிடம் இது உண்மை என்று உறுதி செய்தனர். ரஹோத்தமன், ராஜீவ் சர்மா ஆகியோரின் சமீப புத்தகங்களும் இது ஒரு இட்டுக்கட்டப்பட்ட விசாரணையோ என்ற ஐயத்தை எழுப்புகின்றன. அன்று விடுதலைப்புலிகளுக்கு நம் அரசியல்வாதிகளிடையே பொதுவான ஆதரவு இருந்தது உண்மை. இதை நாம் இரண்டு கோணங்களில் பார்க்க வேண்டும்.
ஒன்று ராஜீவ் கொலைக்கு முன் புலி ஆதரவு மத்திய அரசின் அதிகாரபூர்வ நிலைப்பாடாக இருந்தது. கொலைக்கு சில மாதங்கள் வரை ராஜீவுக்கு புலிகளின் பிரதிநிதிகளுடன் தொடர்பு இருந்தது. இது ஜெயின் அறிக்கையில் தெரிய வருகிறது. தூக்கில் தொங்கப் போகும் சாந்தனை தனது கோவை பண்ணைவீட்டில் பதுக்கி வைத்தவர் இன்று எம்.பியாக உள்ள தி.மு.கவின் சுப்புலட்சுமி ஜெகதீசன். தி.கவின் டி.எஸ் மணி இரண்டரை கிலோ தங்கம் புலிகளின் செயல்பாட்டுக்காக அளித்ததாக சொல்லப்படுகிறது. இக்கொலையில் முக்கிய பங்கு வகித்த சந்திரஹாசனை (வேலை முடிந்த பின் இவரை கத்தியால் குத்த வேண்டாம், துப்பாக்கியால் சுட்டு விடு என்று பிரபாகரன் சிவராசனுக்கு கட்டளையிடுகிறார்) சென்னையில் கொலை நடந்த நாள் ஒரு உயர்தர ஓட்டலில் அப்போது மத்திய அமைச்சராக இருந்த சுப்பிரமணியம் சாமி சந்திக்கிறார். அதே நாளில் டிரைடெண்ட் ஹோட்டலில் ராஜீவின் எதிரி என்று அறியப்பட்ட சந்திராசாமி வந்து தங்குகிறார். கொலைக்கு முன் நரசிம்மராவின் குருவான இந்த சந்திராசாமியிடம் ஒரு பூஜையின் போது சிவராசன் ஆசீர்வாதம் பெற்றார். இந்தியாவில் புலிகளின் புழக்கம் முதல் மும்பை குண்டுவெடிப்புக்கு முன் தாவூத்துக்கு இந்தியாவில் இருந்த ஆதரவுக்கு நிகரானது. ஆனால் ஒரு சில நொடிகளில் வரலாறு மாற, அதுவரை புலிகளுடன் நெருக்கம் காட்டிய அதிகார மட்டத்தினர் பதுங்கத் தொடங்கினர். ராஜீவ் மரணத்துக்குப் பின் ஏற்பட்ட அவநம்பிக்கையான சூழலில் பழைய புலி நண்பர்கள் யார் வேண்டுமானாலும் சந்தேகிக்கப்பட்டிருக்கலாம். இந்த அடிப்படையில் தான் வைக்கோ, கலைஞர் உள்ளிட்ட பல தமிழக அரசியல்வாதிகள் ஏன் தீர விசாரிக்கப்படவில்லை என்று ஜெயின் கேட்டார். புலிகளை ஒரு விடுதலை இயக்கமாக கொள்கை ரீதியாக ஆதரிப்பவர்கள் அவர்களது படுகொலைகளுக்கு பொறுப்பாக முடியாது. ஜெயின் தனது முதல் அறிக்கையில் ஒட்டுமொத்தமாக தமிழர்களை குற்றம் சாட்டி இருந்தார். தனது இந்த அவரச புத்தியை கடிந்து கொண்டு இரண்டாது அறிக்கையில் இதை திருத்திக் கொண்டார். புலி ஆதரவு இந்திய அரசியல்வாதிகள் ராஜீவ் கொலைக்கு எந்தளவு பொறுப்பாக முடியும் என்பது ஒரு சிக்கலான கேள்வி. அடுத்து இக்கொலையால் பயன்பெறும் அரசியல்வாதிகள் யார் என்ற கோணத்திலும் ஜெயின் யோசித்தார். இதை மேலும் துப்புத்துலக்கிய Frontline பத்திரிகை ராஜீவ் கொலைக்கு பின்னணியில் உள்ள இரட்டையராக நரசிம்மராவ் மற்றும் சந்திராசாமியை சாடியது. சந்திராசாமி அத்னான் கஷோகி என்ற ஆயுத கடத்தல்காரருடன் சேர்ந்து ராஜீவ் கொலைக்கு பண ஆதரவு தந்ததாக சொல்லப்படுகிறது. BCCI எனும் புலிகள் பயன்படுத்தின வெளிநாட்டு வங்கியில் அவர் பெயரில் செலுத்தப்பட் 11 மில்லியன், அவரது ஆதரவாளர் பெர்னாண்டோ எனும் இலங்கைக்காரருக்கு கொடுத்த ஒன்பது லட்சம் ரூபாய் போன்றவை அவர் பெயரில் சந்தேகங்களை கிளப்பின. “ராஜீவ் அவரது அம்மாவை போல சாகப் போகிறார் என்று சந்திராசாமி பக்த்ர்கள் முன்னிலையில் சபித்ததாகவும், அவர் தொடர்ந்து எதிர்க்கட்சியினருடன் சேர்ந்து ராஜீவை கவிழ்க்க சதி செய்தததை ரா அதிகாரிகள் கண்காணித்து வந்துள்ளதாகவும் ஜெயின் கூறுகிறார். ராஜீவின் உட்கட்சி எதிரிகளின் ஒருமித்த முகம் தான் சந்திராசாமி. இந்தியாவில் சாமியார்கள் என்றும் பினாமிகளாகவும், மத்தியஸ்தர்களாகவும் அரசியல் தலைவர்களுக்கு நெருக்கமானவர்களாக இருந்து வந்துள்ளனர். சிவராசன் குழுவினருக்கு அடைக்கலம் அளித்த பெங்களூரை சேர்ந்த ஜெயராம் ரங்கநாத் சிவராசன் சந்திராசாமியை பற்றி அடிக்கடி குறிப்பிட்டவதாக சொல்லுகிறார். (“ஜெயின் சாமியார் என்னை நேரடி விமானம் மூலம் வெளிநாடு அனுப்புவார். அதற்குத் தான் நேரடியாக பெங்களூர் வந்தேன்). சந்திராசாமியை சந்திரகுப்தனின் சாணக்கியனாக ஊகிப்பதற்கான முகாந்திரங்கள் ஏராளம். ராஜீவ் மரித்த பின் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், நரசிம்ம ராவ் பிரதமரானதும், அவர் தனது குருநாதரை விடாப்பிடியாக காப்பாற்ற முயன்றதும் இந்த ஊகங்களை வலுவாக்கின. இந்துத்துவ காங்கிரஸ்காரரான ராவ் பிரதமரானதால் அயோத்தி இடிப்பது பி.ஜெ.பிக்கு சாத்தியமானதாகவும், அதனாலேயே அவர்கள் மத உணர்வின் அடிப்படையில் அடுத்து ஆட்சிக்கு வந்ததாகவும். இதனால் இக்கொலைக்கு பின் பி.ஜெ.பியின் கரமும் உண்டு என்று ஊகித்துக் கொண்டே போகலாம். ஜெயின் மேலும் பாலஸ்தீன, சீக்கிய பயங்கரவாதிகள் மீதும் சந்தேகம் எழுப்புகிறார். கொலையை நடத்தியது சி.ஐ.ஏவாக இருக்கவும் கூடும் என்றார். விடுதலைப்புலிகளுக்கு அப்பால் நூலில் சர்மா இலங்கைப் பிரதமர் பிரேமதாசாவை சந்தேகிக்கிறார். பால்ஸ்தீன் பிரதமர் அராபத் ராஜீவ் மீது கொலை சதி உள்ளதாக தெரிவித்தும் கொலைக்கு சில நாட்களுக்கு முன் ராஜீவின் பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கை பெருமளவில் குறைத்தது, தமிழகத்தில் பாதுகாப்பான சூழல் இல்லை என்று அஞ்சப்பட்ட போதும் அவரை இங்கு அழைத்து வர சில தமிழக தலைவர்கள் வற்புறுத்தியது, பிரச்சார நிகழ்ச்சிக்கான மேடை போலீஸ் அனுமதி இல்லாத இடத்தில் அமைத்தது, குண்டு வெடித்த போது எந்த அரசியல் தலைவரும் ராஜீவ் அருகில் இல்லாமல் இருந்தவை பல சந்தேகங்களை எழுப்புகின்றன. விசாரணைக்கு நரசிம்ம ராவ் ஒத்துழைக்கவில்லை என்றும், சந்திராசாமி தொடர்பான முக்கிய ஆவணங்களை அவர் மறைத்து விட்டதாகவும் ஜெயின் குற்றம் சாட்டினார். கொலை நடந்த சில நாட்களில் குற்றம் துலங்காத நிலையில் தான் ஒரு விடுதலைப் புலி பெண் ஒரு கூடையில் வெடிகுண்டுடன் செல்வதை பார்த்ததாக வாழப்பாடியார் தெரிவித்தார். விடுதலைப்புலிகள் ராஜீவை தாக்கியிருக்கக் கூடும் என்ற நம்பிக்கை காங்கிரஸ் அதிகார மட்டத்தில் நிலவியது என்பதை இது சொல்கிறது. ஆனால் தாக்கியது பெண் என்று அவருக்கு எப்படித் தெரியும்? சிறப்பு புலனாய்வு குழுவினர் மத்தியில் சிலருக்கு விசாரணைப் போக்கு அதிருப்தி அளித்தது. அரசியல் பிரமுகர்கள் விசாரிக்கப்படாதது, சிவராசன் தங்கி உள்ள விபரம் கிடைத்தும் உடனடியாக அவனை பிடிக்காமல் ஒன்றரை நாள் தாமதித்தது, இந்த விசாரணைக்கான அவசர தொலைபேசி எண்ணில் வரும் அழைப்புகளை எடுத்து பேச தமிழறியாத தெலுங்கர் ஒருவரை நியமித்தது ஆகியன சில காரணங்கள். ஒரு அதிகாரி விசாரணையின் இந்த மெத்தன போக்கை குறித்து தன் நணபர் மூலம் மூப்பனாரின் பரிச்சயக்காரர் ஒருவரிடம் தெரிவித்திருக்கிறார். “வழக்கு அப்பிடியா போகுது என்று கேட்டு மூப்பனார் மகிழ்ச்சியில் சிரித்தாராம். (யூடியூபில் உள்ள குமுதம் டாட்காம் பேட்டியில் காணலாம்). ஆக ராஜீவ் கொலை ஒரு உள்ளூர் சதியா, சர்வதேச சதியா? இதற்கு பொறுப்பு காங்கிரஸ், பி.ஜெ.பி, திமுக, தி.கவா அல்லது சி.ஐ.ஏ, பிரேமதாசாவா? தொடர்ந்த எச்சரிக்கைகளை மீறி ராஜீவ் தமிழகம் வருகிறார். அதற்கு முன் வெளிநாட்டில் உள்ள தன் மகனை அழைத்து கவனமாக இருக்கும் படி எச்சரிக்கிறார். சற்று முன் சந்திரசேகர் அரசால் அவரது பாதுகாப்பு பலவீனமாக்கப்படுகிறது. முந்தின நாள் அவரது விமானம் பழுதாகி பயணம் ஒரு நாள் தள்ளி வைக்க முடிவு செய்கிறார்கள். ஆனால் அவசரமாக அதை பழுதுபார்த்து ராஜீவை அன்று மாலையே தமிழகம் அனுப்புகிறார்கள். “அவர் தில்லியில் இருந்தால் கொல்லுவது மிக மிக சிரமம். தமிழகம் வந்தால் எளிது என்று சிவராசன் பிரபாகரனிடம் வயர்லெசில் சொன்னதை ரா உளவாளிகள் ஒட்டுக் கேட்கிறார்கள். ஆனால் குறியீட்டு மொழியை தமிழில் இருந்து மொழியாக்கும் நபர் அப்போது அங்கில்லாததால் அச்செய்தியை அவர்கள் உடனடியாக டீகோட் செய்யவில்லை. மூன்று நாட்களுக்கு பிறகு புரிந்து கொள்ளும் போது அது பழைய பத்திரிகை செய்தியாகி விடுகிறது. வெடிகுண்டுடன் ராஜீவின் அருகில் செல்லும் தனுவை ஒரு பெண் உதவி ஆய்வாளர் திரும்பத் திரும்ப விரட்டியடிக்கிறார். ராஜீவே குறுக்கிட்டு தனுவை அருகில் வர அனுமதிக்கும்படி சொல்கிறார். சர்வதேச உள்ளூர் சதியாலோசனைகளை கடந்து இக்கொலை நாம் விவாதிக்க விவாதிக்க மேலும் மர்மம் கூடும் ஒரு புனைவாக மாறுகிறது. ஒரு அர்த்தத்தில் மார்க்வெஸின் முன்கூறப்பட்ட மரணத்தின் வரலாற்றில் போல் ராஜீவ் தன் மரணத்தை நோக்கி ஒவ்வொரு தடையாக கடந்து நடந்து செல்கிறார். ஒரு துயரநாடக நாயகனைப் போல் அவர் தப்பிக்க ஆயிரம் வழிகள் இருந்தும் சாவை நோக்கி அந்த குறுகின வழியை தேர்ந்தெடுக்கிறார். அவர் கால்கள் பயணிப்பதை வியாசனின் துயரக் கண்களுடன் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தோம்.
ஆனால் மேற்சொன்ன ஊகங்களுக்கு நீதி விசாரணையில் மதிப்பில்லை. இருந்தும் சமூக கோபம், மீடியா நெருக்கடி காரணமாக இதே போன்ற ஊகங்களின் அடிப்படையில் தான் மூன்றாம் நிலை புலிகளையும், அவர்களின் ஆதரவாளர்களையும் கார்த்திகேயன் குற்றவாளிகளாக முன்னிறுத்தினார். எப்போதும் போல் நீதிபதிகள் வெளி நெருக்கடிக்கு பணிந்து அவசர தீர்ப்பு வழங்கினர். நீதித்துறை பொதுப்புத்தியின் ஆயுதமாவது கண்டனத்துக்குரியது, விவாதத்துக்குரியது. ஆனால் எல்லா நாடுகளிலும் இதுவே நீதிபதிகளின் நடைமுறை. அவர்கள் காவல் அதிகாரிகளின் தரப்பை நம்பத்தான் முதலில் ஒப்புகிறார்கள். மீடியாவின் திருகலுக்கு வளைகிறார்கள். ஒரு கூட்டத்தில் கண்டனக்குரல்களுக்கு மத்தியில் தயங்காமல் ஊடகங்களை இக்காரணத்துக்காக குற்றம் சாட்டினார் பேரறிவாளனின் அம்மா அற்புதம்மாள். “எந்த தடயமும் இல்லாத பட்சத்திலும் இந்தியா டுடே என் மகனின் போட்டோவை போட்டு ‘ராஜீவ் காந்தி கொலைகாரன் என்றது. அது ஒரு திருப்புமுனை. இது என்ன நியாயம்? என்றார். பிரவீன் சாமி போன்ற ஆங்கில பத்திரிகையாளர்கள் போலீஸ் தம் காதில் சொல்லும் அரைகுறை ஊகத்தை கூட இரட்டிப்பு நம்பிக்கையுடன் ஆவேசமாக எழுதுபவர்கள். அது மக்களிடம் சென்று பூம்ராங் போல் நீதித்துறையிடமும் காவலர்களிடம் திரும்ப வருகிறது. இறையாண்மைக்கு எதிரான குற்றத்துக்கு மரணத்தண்டனையை ஒப்புக் கொள்பவர்கள் கூட போதுமான ஆதாரங்கள் இல்லாமல் தண்டிப்பதை எதிர்க்கிறார்கள். மேலும் முதல், இரண்டாம் நிலை குற்றவாளிகள் ஏன் உயிரோடு பிடிக்கப்படவில்லை, வெடிமருந்தை அனுப்பிய கே.பியை விசாரிக்க ஏன் தயங்குகிறோம், பின்னணியில் இருந்த அரசியல் தலைவர்கள் ஏன் காப்பாற்றப்பட்டார்கள் என்பதைக் கேட்டு இதனால் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் ஒரு மாபெரும் குற்றத்தை மறைப்பதற்கான பலிகடாக்கள் என்ற முடிவுக்கு வருகிறார்கள்.
நளினி மட்டும் ஏன் மன்னிக்கப்பட்டார்? அவர் ஒரு தாய் என்ற சலுகை உச்சநீதிமன்ற நீதிக்குழுவால் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டது. கொலை பற்றின சங்கடமான சில உண்மைகளை முருகன் புத்தகமாக எழுத தீர்மானித்ததாகவும் அதை தடுப்பதற்கான சமரசம் தான் மன்னிப்பு என்று ஒரு ஊகம் உள்ளது. நளினி மூளைச்சலவை செய்யப்பட்டார், பின்னர் வருந்தினார், ஆனால் அப்போது சதியாலோசனையில் இருந்து வெளியேற முடியாதபடி மாட்டி இருந்தார் எனப்படுகிறது. இதே தர்க்கம் பேரறிவாளனுக்கு செல்லுபடியாகும். குண்டு தயாரித்ததோ ரெண்டு பாட்டரிகள் வாங்கிக் கொடுத்ததோ அவரும் இளமையின் உந்துதலில் செயல்பட்டிருக்கலாம்.
மரண தண்டனையின் நோக்கம் என்ன? தேசத்துரோகம் செய்யாதபடி மக்களை அச்சுறுத்துவது  அடுத்து தேசத்துக்கும் மக்களுக்கும் ஆபத்தானவர்களை அழிப்பது. புலிகள் இயக்கம் விழுந்து விட்ட நிலையில் இம்மூவரையும் தூக்கிலிடுவது யாரையும் அச்சுறுத்தவோ, இறந்த பாம்பான புலிகள் இயக்கத்தை அடிப்பதன் மூலம் இந்திய சமூகத்தை பாதுக்காக்கவோ பயன்படாது. குறைந்தது ஐந்து வருடங்களுக்கு முன்னாவது நாம் பாபர் மசூதி இடித்தவர்களை தூக்கிலிட்டிருந்தால் குண்டுவெடிப்புகளில் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் இறந்திருக்க மாட்டார்கள். குஜராத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர் படுகொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள். காஷ்மீர் மற்றும் வடமேற்கு பிரதேச மக்களை சமமாக பாவித்து அவர்களுக்கான உரிமைகளை அளித்து வளர்ச்சியில் கவனம் காட்டி இருந்தால், வனப்பிரதேசத்தை, விவசாய நிலங்களை தொழிலதிபர்கள், பன்னாட்டு நிறுவனங்கள் பறிக்க அனுமதிக்காதிருந்தால் ஏகப்பட்ட தீவிரவாத நக்சலைட் தாக்குதல்களை, அதைத் தடுப்பதற்கான ராணுவ செலவுகளை தவிர்த்திருக்கலாம். ஆனால் நாம் என்றும் நிழல்யுத்தம் செய்து கரகோசம் பெறத் தான் விரும்புகிறோம்.
அமெரிக்க ஜனாதிபதி கென்னடி 1963இல் ஓஸ்வால்ட் என்பவரால் கொல்லப்ப்பட்டார். ஆனால் ஓஸ்வால்ட் இரண்டு நாட்களில் உண்மையை மறைக்கும் நோக்கத்துடன் ஜேக் ரூபி என்பவரால் கொல்லப்பட்டார். கென்னடியின் படுகொலை ஒரு தனிப்பட்ட தாக்குதல் என்று வாரென் கமிஷன், எப்.பி.ஐ மற்றும் சி.ஐ.ஏவால் ஆரம்பத்தில் கூறப்பட்டது அமெரிக்க மக்கள் அதை நம்ப தலைப்பட இல்லை. அவர்கள் பின்னணியில் உள்ள நிஜத்தை அறிய தலைப்பட்டார். நூற்றுக்கணக்கான புத்தகங்கள், மீடியா அறிக்கைகள், விவாதங்கள் நடந்தன. 79இல் ஹவுஸ் செலக்ட் குழு அமைக்கப்பட்டு அதன் விசாரணை முடிவில் புலனாய்வு அதிகாரிகளின் தவறுகளும், அவர்கள் உண்மையை மூடி வைக்க முயன்றதும், சதியாலோசனை என்ற கோணத்தில் விசாரிக்க மறுத்ததும் கண்டறியப்பட்டன. அடுத்து வந்த அரசுகள் ராக்பெல்லர் மற்றும் சர்ச் கமிட்டிகள் விசாரித்து சி.ஐ.ஏ மீது சந்தேகத்தை எழுப்பின. உண்மையை அறிவதற்கான மக்களின் இந்த தொடர் நிர்பந்தம் அமெரிக்காவில் விசாரணையை இன்றும் செலுத்துகிறது. இறுதியில் மாபியா திட்டமிட்டு இக்கொலையை நடத்தியிருக்கலாம் என்றும், அரசியல் தலைவர்களின் குறுக்கீடு காரணமாய் சி.ஐ.ஏ மற்றும் எப்.பி.ஐ தடயங்களை அழித்தது, சதியாலோசனை பின்னணியை ஆராய தயங்கியது என்றும் தெரிய வந்துள்ளது. அது மட்டுமல்ல 92இல் சமூக அழுத்தத்தின் விளைவாக இக்கொலை வழக்கு சம்மந்தமான 98 சதவீத ஆவணங்களை அமெரிக்க அரசு வெளியிட்டது. 2004இல் நடந்த கணக்கெடுப்பில் 75 சதவீக அமெரிக்கர்கள் தங்களுக்கு இக்கொலை வழக்கில் இன்னமும் சந்தேகம் உள்ளதாக தெரிவித்தனர். ஓஸ்வால்ட் எனும் தனிமனிதரை பலி வாங்கியதும் அவர்கள் நம்மைப் போல் அமைதியடையவில்லை. 32 வருடங்களுக்குப் பின் Science and Justice என்ற பத்திரிகையில் ஒருவர் விஞ்ஞான ஆய்வு செய்து கென்னடியின் கொலையாளி ஒருவர் அல்ல, இரண்டாவது ஒருவர் இருந்திருக்கலாம் என்று கண்டறிந்துள்ளார். அவர்கள் அநீதியின் சிதையை அணைய விடுவதே இல்லை. ஆனால் இதற்கு மாறாக, நம்மைப் போன்ற ஒரு சமூகம் தேசத்தலைவரின் கொலையின் ஆதார காரணத்தை அறிய விரும்பாது புனைவுகளை எளிதில் நம்பத் தலைப்படுகிறது என்றால் அதன் பொருள் நாம் அக்கொலையை மறைமுகமாக ஆதரிக்கிறோம் என்பதே. சமூகத்தின் கொலை விழைவு தான் தனிநபர் தாக்குதலாக வெடிக்கிறது.
ராஜீவை கொன்றது நாமா அல்லது முருகன், சாந்தன், பேரறிவாளனா? இருட்டில் தெரியும் அவ்விரு கண்கள் யாருடையவை?

No comments: