Tuesday, May 24, 2011

மகாஎழுத்தாளர்களின் வரலாறுதமிழில்
ஆரம்பத்தில்
ஒரே ஒரு மகாகவிஞன் இருந்தான்
அவன்
பெருந்தனிமையில்
ஒரு துர்கனவில்
தனக்குத்தானே பேசி தன்னிடமே முரண்பட்டு
தன்னையே மன்னித்து மறைவாய் தனக்கே குழி பறித்து
கடவுளிடம் தன்னை காப்பாற்ற மன்றாடினான்
மற்றொரு மகாகவிஞன் தோன்றினான்
இருவரும் ஓய்வின்றி பேசினார்கள்
முடிவில் இருவரும் மகாகவிஞர்கள் என்பது புரிய வந்தது
ஆனாலும்
மற்றொரு பேச்சின் ஆரம்பத்தில்
அவர்கள் வெறுங்கவிஞர்களாகவே
தொடங்க வேண்டியிருந்தது
ஒவ்வொரு சொல்லின் முடிவிலும்
ஒரு கனியை முழுங்கி கொட்டையை துப்புவது போல்
மற்றொரு மகாகவிஞன் தோன்றுவது
தவிர்க்க முடியாததானது
அவன் தன்னை மகாகவிஞன் என்று அறிவதும் மறப்பதும் அப்படியே

பின்னர் அவர்கள் வேறுபட்டு
மகாசிறுகதையாளர்களும், மகாநாவலாசிரியர்களும், மகாவாசகர்களும், மகாபத்திரிகை ஆசிரியர்களும் ஆனார்கள்
அவர்கள் தொடர்ந்து கடவுளிடம்
தம் தனிமை குறித்து முறையிட்டார்கள்
கடவுள் விசனத்துடன்
அவர்கள் மகா எழுத்தாளர்களின் உற்பத்தியை நிறுத்தாவிட்டால்
தன்னால் ஏதும் உதவ முடியாது என்று முடித்துக் கொண்டார்
மகா எழுத்தாளர்கள் கடவுள் என்றில் இருந்து
குழப்பவாதியாய் ஆனார் என்று யோசித்தனர்
உற்பத்தி கடவுளில் இருந்து தோன்றவில்லை என்றால்
கடவுள் எதற்கு என்று வாதித்தனர்
அண்டத்தை நோக்கி கேள்விகளை சுழற்றி வீசினர்
சொற்களை ஒவ்வொன்றாய் எதிரொலிக்க வைத்து
முதல் பெரும் குறியீட்டு இரைச்சலை ஏற்படுத்தினர்
அனைவரும் உள்ளர்த்தங்களை மட்டுமே புரிந்து கொண்டபடியால்
ஏன் இரைச்சல் ஏற்படுகிறது
என்று மட்டும் புரியவில்லை

கைவிடப்பட்டதாய் அறிவித்துக் கொண்ட மகாஎழுத்தாளர்கள்
தற்கொலை செய்தனர், அவ்வாறு உத்தேசித்து நீண்ட காலத்துக்குப் பின்
அறிவித்துக் கொண்டனர்
மாபெரும் கலகங்களின் நிழல்களுடன் மட்டும் கவனமாய் இணைந்து கொண்டனர்
அமீபா போல் தோன்றி அசையும்
தொடர்ந்து பிளக்கும் குழுக்களில்
இணையவா அல்லது தோற்றுவிக்கவா என்று சஞ்சலித்து
பின்னர் அவை மறைந்த நிலையில்
பிளந்து விட்ட குழுக்களின் வெற்றிடத்தில் எஞ்சியிருப்பது
உள்ளேயே வெளியேயா என்று உரக்க கேட்டனர்
மேடை முழுதும் நாற்காலிகளால் நிரப்புபவர்களை நெருங்கி
மேடையென்பது உண்மையில்
ஒரு மாபெரும் பிருஷ்டம் அமர்வதற்கான பெரும் இருக்கை
என்று அறிவித்தனர்
சின்னஞ்சிறு நாற்காலிகளால் இடங்களை நிரப்புவது என்பது
அற்ப மனித மனதின் பெருத்த அகங்காரம் என்று நிறுவினர்

மகாஎழுத்தாளர்கள் ஒரு நெட்டை ஆள் ஒரு குட்டை ஆள்
என்று சங்கிலியாய் முடிவற்று கோர்த்து நின்றனர்
தமக்கு மேல் ஒரு கடவுளோ
தமக்குக் கீழ் ஒரு சாத்தானோ
இனிமேல் இருக்க சாத்தியப்படாது என்று
ரகசியமாய்
சோர்வுற்ற தூக்கத்தில் இருக்கும் தம் இதயத்தை
தட்டி தட்டி எழுப்பி சொல்லிக் கொண்டனர்
இந்த நிலைப்பாட்டின் படி
ஆக மகாஎழுத்தாளனும் மகாஎழுத்தாளனும் ஒருவனாகவே இருக்க இயலும்
என்று அவனுக்கு புரிந்தது
இருந்தாலும்
எந்த மகாஎழுத்தாளனும் தன்னை ஆக மகாஎழுத்தாளன்
என்று கோரிக் கொள்ளும் ஜனநாயகத்தன்மையும் இதில் உள்ளது
அவனுக்கு திருப்தி அளித்தது

மகாஎழுத்தாளர்கள்
ஒரு செல்லப்பிராணியை இழந்து தெருவில் திரிபவனைப் போல்
ஆக அமைதியான தருணங்களில்
தங்கள் பெயரை தாமே அழைத்துப் பார்த்து சமாதானம் கொண்டனர்,
தம் பெயருக்கு யாரும் பதிலளிக்காதது
சிறு பதற்றம் உருவாக்கினாலும் கூட.

மகாஎழுத்தாளர்கள் தமக்கு முன்னரும் பின்னரும்
வரலாறு
ஒன்றுமில்லை என்பது அறிந்து
தம் கற்பனையால்
அங்கு
தாராளமாய் நிரப்பி வந்தனர்
தமது சமகாலம் என்பது தம் காலம் என்பதால்
சற்று முன் தம்மால் எழுத நேர்ந்ததை
சற்று காலம் கழித்து பரிசோதித்து
பக்கத்து பிரதிகளுடன் ஒப்பிட்டு
உறுதி செய்து கொண்டனர்
இது தொடர்செயலாக
ஒவ்வொரு பிரதியும் தனக்கு அண்டைய பிரதியுடன் தன்னை எந்திரவாக்கில் ஒப்பிட்டபடியே சென்றது
ஒன்று போல் இருப்பதே உண்மை
அல்லது
உண்மையை அறிய வேறு வழியில்லை
என்பதால்
தாம் இனி
ஒன்று போல் இருத்தல் வேண்டும்
என்று உறுதி எடுத்துக் கொண்டன

மகாஎழுத்தாளர்கள் இதன் முடிவில்
ஒன்றை உணர்ந்தனர்
“நான்காவதாய் ஒரு காலம் ஏன் இல்லை
அல்லது
எங்கு போயிற்று
அதுவும் அல்லாவிடில்
ஏன் அப்படி ஒன்று இருக்க கூடாது?
முடிவில் ஒருமித்து
அந்நான்காவது காலத்தை
தம்மிடம் இருந்து
கடவுள் ஒரு கள்ளச்சீட்டைப் போல் ஒளித்து வைத்திருப்பதாய்
அறிந்தனர்
கடவுள் திரும்ப வரும் வரை
அல்லது
நான்காவது காலம் தரப்படும் வரை
தமது பிரதிகளை அக்காலத்தில் வைப்பது
என்று கூட்டாக முடிவெடுத்தனர்
அப்போது
நான்காவது காலத்தில் தாம் உண்மையில் பிரதிகள் உள்ளனவென்றும்
அவை முக்காலங்களால் கறைபட்டு
கண்ணுக்கு புலப்படுவதில்லை
என்றும்
அழுத்தமாக அமைதி காக்கும்
மகாஎழுத்தாளர்கள் சிலர்
சுட்டிக் காட்டினர்
அப்படித் தான் மகாஎழுத்தாளர்கள்
தாமும் கடவுள் என்பதை அறிந்தனர்

கடவுள் தம்மிடம்
அத்தனை வஞ்சகமும் அநீதியும் காட்டி இருக்கவில்லை
என்று முதல் தலைமுறையினர் மெல்ல அழுதனர்
மகாஎழுத்தாளர்கள்
கடவுளை பழிக்கவோ துதிக்கவோ மறக்கவோ
அதற்கு மேல் முயலவில்லை
அதற்கு அவகாசமும் இருக்கவில்லை
பலருக்கும்
முதல் கடவுளும் ஒரு மகாஎழுத்தாளனோ
என்ற சந்தேகம் ஏற்பட்டது
இது மேலும் பலருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது

ஒருநாள் மகாஎழுத்தாளர்களின் பூமியில் இருந்து
மலைகளும் பள்ளத்தாக்குகளும் மறைந்தன
பார்க்க பார்க்க விரியும் சமதளத்தில்
நின்றபடி மகாஎழுத்தாளர்கள் யோசித்தனர்
தாம் ஏன் ஒரே உயரமாகிப் போனோம் என்று
ஆகாயம் தொலைவில் ஒரு சிறு மேகமாக
மிதந்து கொண்டிருந்தது
தாம் அதாலபாதாளத்தில் விழுந்து கொண்டிருப்பதாய்
அவர்களுக்குள் பீதி எழுந்தது
மீண்டும் தனிமையில் இருப்பதாய்
அவர்கள்
தத்தமது மூலைகளில் நின்று தேம்பினர்
அன்று முதல்
நட்சத்திரங்கள் தோன்றின வாக்கில்
கோடையின் சிறுதூறல் போல் உதிர்ந்து மறைவதை
சூரியன் மிக ரகசியமாய் புலனாகாது உதித்து
எல்லாப்பகலிலும் தொடர்ந்து விழுந்து மறைவதை
காற்று தன்னையே உறிஞ்சிக் கொள்வதை
தண்ணீர் தன்னையே தவிப்படக்கி மறைவதை
சொற்களில் இருந்து சொற்களும்
காட்சிகளில் இருந்து நிறங்களும்
பிரதிகளில் இருந்து ஒத்த தன்மையும்
சின்னஞ்சிறு விதிகளில் இருந்து கூட அதன் தப்பித்தல் வழிகளும்
மறைவதை கண்டனர்

மகாஎழுத்தாளர்கள் தம் கண்முன்னே ஒன்று மாறுவதானால்
அது வெறும் நிகழ்வு
மாற்றங்கள் என்பவை
பின்னால் தாம் விளக்கும் போது
மட்டும் பார்த்துக் கொள்ளப்பட வேண்டியவை
என்று ஒரு நிலைப்பாட்டை ஸ்தாபித்தனர்
வெவ்வேறு மொழிகளில் இருந்து
அது புது உருவங்களில்
தம்மை நோக்கி திரும்ப வருவதை கண்டு வியந்தனர்
மகாஎழுத்தாளர்கள் தம்மை உலக எழுத்தாளர் என்று கோருவதை நிறுத்தி விட்டு
தாமே உலக எழுத்தாளர் என்று அறிவித்தனர்

ஒருநாள் அவர்களின் கதவு தட்டி சொல்லப்பட்டது
உலகம் இனிமேல் உருண்டை இல்லை
எந்த மூலையிலோ கோடியிலோ துருவத்திலோ
நின்று பார்த்தாலும்
தம்மையே அவர்கள் பார்க்க முடியும்
எதுவுமே இனி துவங்கி முடியாது
எழுந்து வீழாது
ஒளிர்ந்து இருளாது
முளைத்து மடியாது
அவர்களுக்கு இந்த ஏற்பாடு
முன்னெதையும் விட
பிடித்திருந்தது
அவர்கள் பிரம்மாண்ட காட்சி சாலை ஒன்று நிர்மாணித்து
அதற்குள் மாபெரும் கூண்டுகள் அடுக்கி
கடவுளை போன்று தோன்றியவர்களை கொண்டு
நிறைத்தனர்
வரிசை வரிசையாய் முடிவற்ற பகற்பொழுதுகளில்
காட்சிசாலையின் வாசல்களில் நின்றனர்
மகாஎழுத்தாளர்கள் தம் துர்கனவில் இருந்து மீள
அது ஒரு சிறந்த பொழுதுபோக்கு என்று நினைத்தனர்

நான்கு காலங்களையும் கடவுளையும் குறித்து
இடையறாது அதுவரை பேசினவர்கள்
தாம் காலாவதி ஆகிவிட்டோமோ என்ற பதற்றத்தில்
பூமிக்குள் பள்ளங்கள் பறிக்க முயன்று தொடர்ந்து தோற்றனர்
தப்பிக்க முயல்பவர்கள் மட்டுமே
அனைவர் கண்களிலும்
உடனடி வந்து விழும் அந்த விநோத உலகில்
அவர்கள் தப்பிக்காமல் இருப்பதாய் நடிக்க
வெகு சிரமப்பட்டனர்

மகாஎழுத்தாளர்கள் தமக்கிருந்த கணக்கற்ற நேரத்தில்
எவ்வேலை வேடிக்கை எது தீவிரம் என்று புரியாமல்
தவித்தனர்
அதனால்
முக்கியம் முக்கியமற்றவை சரி தவறு அற்பம் மேலானது
என்று வகைப்படுத்துபவர்களை கண்டித்து எச்சரித்தனர்
அனைத்தையும் வேடிக்கையாக கொள்வதே தீவிரம் என்றும்
அனைத்தையும் அற்பமாய் கொள்வதே மேலானது என்றும்
அனைத்துக்கும் மேலாய் தாம் இருப்பதாய்
ஒவ்வொருவரும் நம்புவதே ஆரோக்கியம் என்று
புரிய வைத்தனர்

மகாஎழுத்தாளர்கள்
மீத இருப்பதாய் பட்ட
தமது முடிவுறாத நேரங்களில்
ஒருவரை ஒருவரை சந்தித்து
பெயர்களை நினைவூட்டிக் கொண்டனர்
இது ஒரு மற்றொரு முடிவுறாத காரியமாக இருந்தது
ஆக
உலகம் எவ்வளவு பெரிது என்று
தமக்குள் மீள மீள வியந்து கொண்டனர்
அவர்கள் தினமும் நெடுவழி பயணித்தனர்
பல ஆண்டுகளுக்கு முன் சந்தித்தவர்களையும்
சற்றுமுன் கைகுலுக்கியவர்களையும்
பார்த்துக் கொள்ளும் போது
தம்மை மறந்து விட வேண்டாம்
என்று கெஞ்சி கேட்டுக் கொண்டனர்
தம்மை நினைவு கொண்டுள்ள
ஒவ்வொரு மகாஎழுத்தாளனின், மகாவாசகனின், மகாசிந்தனையாளனின், மகாபுரவலனின், மகாசோம்பேறியின், மகாஅரட்டையாளனின் பட்டியலை
தம் கையுடனே கொண்டு சென்றனர்
புத்தகங்களுக்கு அட்டையாக்கினர்
சிலர் பின்குறிப்பாக்கினர், சிலர் தனிபுத்தகமே பிரசுரித்தனர்
இந்த பட்டியல்கள் கைமாறின,
ஒன்றையொன்று விழுங்கி ஒன்றுடன் ஒன்று இணைந்து
நீண்டு சென்றன
பட்டியல்கள் உலகம் மொத்தததையும் இணைப்பதால்
இவையே சிறந்த வலைதொடர்பு செயல் என்று
அவர்கள் அறிவித்தனர்

மகாஎழுத்தாளர்களின் பட்டியல்கள்
படிக்கப்பட்ட உடன்
மகாபுத்தகங்கள் மறைந்து விடுவதால்
பட்டியல்களின் ஆவண முக்கியத்துவம்
அதிகம் ஆனது
பட்டியல்களை தக்க வைக்க
மகாஎழுத்தாளர்கள்
தமது வீடுகளின் ஜன்னல்களை சதா திறந்து வைத்தும்
வீதியில் எப்போதும் கைகளை குலுக்கும் பாவனையில் நீட்டி பயணித்தும்
விரோதிகளையும் அலுப்படைந்தவர்களையும் ஒவ்வாதவர்களையும் தப்பிக்க நினைப்பவர்களையும்
ஒரு சேர அரவணைக்க முயன்றும்
தம்மை நினைவூட்டிக் கொண்டிருந்தனர்
மகாபுத்தகங்கள் ஏற்கனவே எழுதப்பட்டதாலும்
எப்போதும் எழுதப்படக் கூடியவை என்பதாலும்
யாரிடம் இருந்து எங்கும் கடன்பெற்றுக் கொள்ளக் கூடியவை என்பதாலும்
அவர்களுக்கு மகாபுத்தகங்களை எழுதும் நேரம்
அதற்கு மேல் வாய்க்கவில்லை
தமது பொழுதுகள் இப்படி பிஸியாக ஆகும் என்று
அவர்கள் ஒருபோதும் கற்பனை செய்திருக்கவில்லை
அப்போது தான் அவர்களுக்கு
ஆக மகாபட்டியல் செய்யும்
எண்ணம் உதித்தது

ஆக மகாபட்டியல் ஒன்றே
சமகாலத்தின் தேவை என்று
தொடர்பயணங்களில் சோர்வுற்று
பஞ்சாய் உலர்ந்திருந்த ஒவ்வொரு மகாஎழுத்தாளனும் நம்பினான்
அல்லது ஆமோதித்தான்
ஆக மகாபட்டியல் சுருக்கமாக இருக்க வேண்டும்
மாற்றங்களோ பருவங்களோ பிரிவுக் கோடுகளோ அற்ற உலகத்தில்
ஒரு தெளிவை தீர்க்கத்தன்மையை ஏற்படுத்துவதாக
அது இருக்க வேண்டும்
என்பதும் அனைவரது ஒருமித்த கருத்தாயிருந்தது
மிகச்சுருக்கமான ஆக மகாபட்டியலில்
முதல் சில இடங்களில் வருபவர்களுக்கு
பட்டயங்களும் பளபளப்பான கிரீடங்களும் சிறு பொம்மை நாற்காலிகளும் வழங்கப்படும்
அவர்களின் பெயர்கள் முடிவற்று உச்சரிக்கப்படும்
வாழ்த்துக்களும் மறுப்புகளும் ஆதரவுகளும் கண்டனங்களும்
ஒரே தரப்பால் சொல்லப்பட்டு அதே தரப்பால் கவனிக்கப்படும்

ஆனால்
எதிர்பாராதபடி
மிகச்சுருக்கமான ஆக மகாபட்டியலின்
கணக்கிலடங்கா பிரதிகள்
சின்னசின்ன ஆனால் முக்கிய மாற்றங்களுடன்
ரகசியமாய் தோன்றி கைமாறின
பட்டியல் பிரதிகள் தொடர்ந்து திருத்தப்பட்டதால்
யாரும் புரியாதபடி ஆயிற்று
இறுதியில் மகாஎழுத்தாளர்கள்
தம்மில் யார் யாரென்பதை
காலம் நிச்சயமாய் ஒருநாள் சொல்லும் என்று
இரண்டாவது மாபெரும் இரைச்சலை உருவாக்கினர்

பல நாட்களுக்கு பிறகான
ஒரு காலை சவரத்தின் போது
மகாஎழுத்தாளர்களின் வரலாற்றை
இவ்விடத்தில் நிறுத்தி
திரும்பி ஓட விட்டு பார்க்க எத்தனித்த கடவுள்
தமது சிறிய எளிய கரங்கள்
இந்த மாபெரும் உயிர்களை எப்படி
உருவாக்கியது
என்று எதேச்சையாய் வியந்து பின்
தொடர்ந்தார்.

3 comments:

வருணன் said...

மிக நல்ல அனுபவமாக இருந்தது இக்கவிதை வாசிப்பு. எழுத்தாளர்களைப் போலவே விசித்திரமானவை அவர்களது அக உலகங்கள். இப்படைப்பில் அதன் பல பரிமாணங்களை, ஆங்காங்கே குபுகுபுக்கும் குறும்புடன் அணுகியிருப்பது வாசிப்பை இன்னும் அழகான அனுபவ நிலைக்கு இட்டுச் சென்றது. எழுத்தின் மீது தீராக் காதலுள்ள யாவரும் இப்பிரதியில் லயிப்பர்.

எனக்கு கவிதைகளின் பால் மோகமிருப்பினும் நெடுங்கவிதைகளை இதுவரை ஏனோ பொறுமையுடன் வாசித்ததில்லை. தங்களின் படைப்பு அதனை இன்று உடைத்தது...

வாழ்த்துக்கள் நண்பா !

ஆர்.அபிலாஷ் said...

நன்றி வருணன்

rajeshuniverse said...

நிறுத்தம் இன்றி படித்து முடித்த பின் நானும் ஒரு மகா எழுத்தாளன் ஆனேன் அவ்வாறான அனுபவம் தந்தது அருமை நண்பரே .

///ஒவ்வொரு மகாஎழுத்தாளனின், மகாவாசகனின், மகாசிந்தனையாளனின், மகாபுரவலனின், மகாசோம்பேறியின், மகாஅரட்டையாளனின் பட்டியலை
தம் கையுடனே கொண்டு சென்றனர்
புத்தகங்களுக்கு அட்டையாக்கினர்
சிலர் பின்குறிப்பாக்கினர், சிலர் தனிபுத்தகமே பிரசுரித்தனர்
இந்த பட்டியல்கள் கைமாறின,
ஒன்றையொன்று விழுங்கி ஒன்றுடன் ஒன்று இணைந்து
நீண்டு சென்றன
பட்டியல்கள் உலகம் மொத்தததையும் இணைப்பதால்
இவையே சிறந்த வலைதொடர்பு செயல் என்று
அவர்கள் அறிவித்தனர்//