Wednesday, April 6, 2011

உலகக் கோப்பை வெற்றி தோல்விகள், பாகிஸ்தான் மற்றும் தயார்நிலை எதிர்வினைகள்
பாகிஸ்தான் ஒவ்வொரு உலகக் கோப்பை தொடரிலும் ஏறத்தாழ ஒரே மாதிரி ஆடி ஜெயிக்கும் தோற்கும். அது இதுவரை யாரையும் ஏமாற்றியதோ நிறைவடைய வைத்ததோ இல்லை. ஒரே அணிக்குள் பலமாதிரி அணிகள் இருக்கும். அதே போல் ஒரே அணி பலமாதிரியும் ஒரே சமயத்தில் ஆடும். பதினொரு பேரும் பரஸ்பர சந்தேகத்துடன் வெவ்வேறு திசைகளில் ஆடுவார்கள்; சகோதர பிணைப்புடன் தனிப்பெரும் ஆற்றலாகவும் எதிரி மீது பாய்வார்கள். பதற்றமான இரவில் காணும் துண்டு துண்டு கனவுகள் தாம் பாக் அணியின் பொதுவான ஆட்டவகை. பாகிஸ்தான் எப்போதும் போல சரியாகத் தான் ஆடுகிறது என்று நம்புவோம்; ஆனால் உலகக் கோப்பையில் இருந்து வெளியேறினவுடன் அணிக்கு எதிராக ஊழல் குற்றசாட்டுகளும், விசாரணையும், பேட்டிகளும், அறிக்கைகளும் கல்லறை ஆவிகள் போல் போல் கிளம்பும். அணி துண்டு துண்டாக்கப்பட்டு மூத்த வீரர்கள் வனவாசம் அனுப்பப்பட்டு இளம் வீரர்கள் அறிமுகமாவார்கள். ஒரே மரபணுவில் இருந்து உருவானது போல் அவர்களும் முந்தைய அணி போலவே அடுவார்கள். அவர்களின் ஊழிக்காலம் அடுத்த உலகக் கோப்பை முடிவில். ஊழல் விசாரணை முடியாத நிலையில் திடீரென மன்னிக்கப்பட்டு மூத்த வீரர்கள் திரும்புவார்கள். இடையே சுணக்கத்தால் ஓய்வு அறிவித்தவர்களும் மீண்டு அணிக்கு திரும்புவார்கள். அதன் அத்தனை குறை நிறைகளுடன் ஒரு பாகிஸ்தான் அணி நேரிடப் போகும் முடிவு ஒரு இன்பியல் அல்லது துன்பியல் நாடகத்தின் பாதியில் இருக்கும் பார்வையாளனை போல் நமக்கு தெளிவாகவே தெரிகிறது. பச்சாதாபப்படவோ பரிகசிக்கவோ நமக்கு அவகாசம் இருப்பதில்லை. நாம் பாகிஸ்தானுடன் மனமொன்றி அத்தனையையும் நம்பி விடுகிறோம். அல்லது அப்படி செய்வதே அவசியம் என்று கருதுகிறோம். இன்பியலும் துன்பியலும் வாழ்வை சரிசமமாய் கொண்டாடுகிறது. கரிப்பிலும் இனிப்பிலும் பாகிஸ்தான் கிரிக்கெட்டும் அதையே செய்கிறது. 2011 உலகக்கோப்பை அரையிறுதியை இழந்து ஊர் திரும்பியதும் பாகிஸ்தானின் மேடையில் அரங்கேறும் காட்சிகளும் சொல்லப்படும் வசனங்களும் ஒரு பார்வையாளனாய் இருப்பதன் அதிர்ஷ்டத்தையும் துரதிர்ஷடத்தையும் உறுதிப்படுத்துகிறது.

இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே விதமான நோய்மைகளை வேறு விதமாய் பார்ப்பவை. பாகிஸ்தான் கிரிக்கெட்டிலும் குழு அரசியல் உண்டு. அங்கு கிரிக்கெட் வெளியாட்களின் சார்பில் அது இயங்குகிறது என்பதே வித்தியாசம். இங்கும் ஊழல் உண்டு. ஆனால் அங்கு வறுமையின் தராசில் அது உயரத் தூக்கப்படுகிறது. உதாரணமாய் இங்கு அசார், ஜடேஜா, மோங்கியா மீதெல்லாம் பச்சாதாபப்பட பாவமன்னிப்பு வழங்க யாரும் தயாராக இல்லை. மீடியாவில் கூட இவர்களுக்கு சொற்ப இடமே. அங்கு இன்சமாம், அக்ரம் போன்றோர் ஒவ்வொரு பெட்டிங் பரபரப்புக்கு பிறகு அணியில் திரும்பியது மட்டுமல்ல தலைமை பொறுப்பையே பெற்றிருக்கிறார்கள். வகார் தற்போதைய அணியின் பயிற்சியாளர். அக்ரமை பந்துவீச்சு பயிற்சியாளராக பெற இந்தியர்களே விரும்பினார்கள். ஊழல் காரணமாக நிரந்தரமாக விலக்கப்பட்ட முஷ்டாக் அகமது இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர். உலகின் தலைசிறந்த வேகவீச்சாளர்களில் ஒருவரான பாக் அணியின் ஆமிர் பெட்டிங் ஊழலில் அகப்பட்டு ஐ.சி.சி விசாரணையில் உள்ளார். அவர் மாட்டிக் கொண்ட போது பாகிஸ்தானியர்கள் மட்டுமல்ல இங்கிலாந்து, ஆஸ்திரேலிய ஊடக நபர்களின் அணுகுமுறை சற்று விநோதமாக இருந்தது: “ஆமிர் போன்றவர்கள் ஊழலை ஒரு ஒழுக்க குற்றமாக கருத மாட்டார்கள்; வறுமையாலும் தீவிரவாதத்தாலும் திண்டாடும் ஒரு வறிய கிராமத்தில் இருந்து வரும் இவரை போன்றோர் எப்படியும் நிறைய சம்பாதித்து தம்மை சார்ந்தோருக்கு உதவ வேண்டும் என்று தான் நினைப்பார்கள்என்று ஆமிரை ஒரு ராபின்ஹுட்டாக சித்தரித்தனர். இம்ரான்கான் மட்டும் அமீரை தாண்டிக்க கோரினார். சமீபமாக உலகக் கோப்பை அணியில் ஆமிர் இருந்திருந்தால் எவ்வளவு அற்புதமாய் இருக்கும்என்று பாக் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் எச்சில் முழுங்கினார்; பின்னர் கண்டனங்கள் வர பின்வாங்கினார். பாகிஸ்தான் கிரிக்கெட் ஊழலை உள்ளூரிலும் சர்வதேச அளவிலும் ஒரு உள்ளார்ந்த பண்பாகவே பலரும் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் இவர்கள் தாம் குற்றசாட்டுகளின் பட்டியலையும், விசாரணை கமிஷனையும், ஒரு நீண்ட சாட்டையையும் ஊழல் நிகழ்வதற்கு முன்னரே தயாராக வைத்திருப்பவர்கள். ஊழலின் பலிபிடத்தில் பாகிஸ்தானில் போல் வேறெங்கும் இத்தனை தலைகள் உருண்டிருக்காது. கடந்த சில வருடங்களில் எண்ணிக்கையிலடங்காத வகையில் அணி வீரர்கள் தலைவர்களும் மாற்றப்பட்டிருக்கிறார்கள். உலகக்கோப்பை ஆரம்பிப்பதற்கு சற்று முன் வரை அணித் தலைவரை தீர்மானிப்பதில் தேர்வாளர்கள் தயங்கினார்கள். ஒரு இளம் கீப்பர் ஊழலுக்கு பணியாததால் தன் மீது கொலை மிரட்டல் இருக்கிறது என்று அணியில் இருந்து தலைமறைவாகி இங்கிலாந்தில் தஞ்சம் அடைந்து மீடியா முன் பேட்டியளித்தார். பாப் உல்மர் விவாகாரமும் இதற்கு முன் பாகிஸ்தான் கிரிக்கெட் நிழலுலக தாதாக்களால் கட்டுப்படுத்தப் படுவதாக சந்தேகத்தை கிளப்பியது. ஆனால் இந்த புகைச்சல் குறித்த முன்னாள் வீரர்களும் பாக் கிரிக்கெட் நிர்வாகிகளும் கனத்த மௌனம் சாதித்தனர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் தான் அணியும் எத்தனையோ முகமூடிகளின் கீழ் இதனையும் மறைத்து கொண்டது. உண்மையில் ஊழலை பாகிஸ்தான் எப்படி விளங்கி கொள்கிறார்கள் என்று கேட்பது ஒரு கூட்டத்தில் யார் குசு விட்டார்கள் என்று கேட்பதை போன்றது.
எப்போதும் நாம் கற்பனையான சாத்தியப்பாடுகளுடன் தயாராகவே இருக்கிறோம். எம்.டியின் சுகிர்தம் என்றொரு படத்தில் மம்முட்டி புற்றுநோய் முற்றி சாகும் தறுவாய்க்கு சென்று மீண்டு திரும்புவார். அலுவலகத்துக்கு சென்று தன் மேஜை இழுப்பறையை திறந்தால் அவருக்கு ஒரு இரங்கல் குறிப்பு தயாராக இருப்பதை காண்பார். அதில் அவரது பிறந்த நாளும், இறந்த நாள் இருக்க வேண்டிய இடத்தில் நிரப்பப்படாமலும் இருக்கும். இந்த உலகக் கோப்பை தொடரில் மீடியா எதிர்வினைகள் தலைசுற்றும் படியான எளிமையை கொண்டிருந்தன. நாம் என்ன சொல்ல போகிறோம் என்பது நமக்கு ஏற்கனவே தெரிந்திருப்பது தெரியாமலே ஆட்டத்தை பார்த்து அது குறித்து பேசி கேட்டு படித்தோம். அவ்விசயத்தில் நாம் ஏமாற்றமடையவே இல்லை. நாம் என்ன எதிர்பார்த்தோம்? தோல்விக்கு பிறகு: ஆஸ்திரேலியா வெளியேறினால் பாண்டிங் தலைமையின் எதிர்காலம் இருளில் சென்று முடியும். தென்னாப்பிரிக்கா என்றால் நெருக்கடி கட்டங்களில் பதற்ற ஆட்டம் ஆடுபவர்கள் என்ற chokers அடையாளப் பட்டி மீண்டும் கழுத்தை சுற்றி பிணைக்கப்படும். மேற்கிந்திய தீவுகள் என்றால் எண்பதுகளின் பொற்காலத்தில் இருந்து எப்படி அந்திம காலத்துக்கு வந்து விட்டார்கள் என்று பிலாக்காணம் வைக்கப்படும். இந்தியா என்றால் ஐ.பி.எல், தொடர்ந்து ஆடும் களைப்பு, மீடியா தரும் நட்சத்திர மதிப்பு ஏற்படுத்திய அகங்காரம், விளம்பரங்களில் மிகுதி ஈடுபாடு, தேர்வு குளறுபடிகள் என்று ஒரு பழைய பட்டியல் தூசு களையப்பட்டு தயாராகும். இங்கிலாந்து டெஸ்டு ஆட்டங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறது என்ற புகார் அதிக சுவாரஸ்யமின்றி சொல்லப்பட்டு விரைவில் மறக்கப்படும். வங்கதேசம் கூட பாவம் பெரும்பாடு பட்டு விமர்சன வளையத்தில் நுழைய வேண்டி இருக்கிறது. ஒவ்வொரு உலகக் கோப்பை தடுமாற்றத்தின் பிறகும் அவர்களுக்கு சர்வதேச அந்தஸ்து வழங்கப்பட்டது தவறு என்று வலியுறுத்தப்படும். இம்முறை மிச்சமிருந்த அவகாசத்தில் மீடியா நிபுணர்கள் ஜிம்பாப்வே கூட நன்றாக ஆடவில்லை என்று கண்டனம் தெரிவித்தார்கள். குறைவான மக்கள் தொகை கொண்ட இலங்கையும் நியுசிலாந்தும் சறுக்கினாலும் எழுந்தாலும் நாம் எப்போதும் பரவாயில்லையே என்று நெற்றி சுளிக்கவே தலைப்படுகிறோம். உண்மையில், ஒரு அணி வெற்றி பெறும் போது நாம் ஒரு பெரும் திகைப்பை அடைகிறோம். இம்முறை இந்தியா உலகக் கோப்பையை வென்ற போது நமக்கு நியாயமாய் செய்ய முடிந்தது உளறிக் கொட்டுவதும் வியப்பில் மூச்சுவாங்குவதுமே.

இம்முறை இந்தியா பாகிஸ்தான் கால்-இறுதியில் மோதிக் கொண்ட போது ஆவேசமான மேற்கோள்களை மீடியாவுக்கு தர இரு சாராரும் தயங்கினர். பாக் பிரதமர் இந்தியா வந்து ஆட்டத்தை மன்மோகன் சிங்குடன் பார்க்கும் ஒரு வரலாற்று பூர்வ தருணத்தில் கண்ணியம் காக்கவே அனைவரும் தலைப்பட்டனர். “இந்தியாவை அரை-இறுதியில் வீழ்த்தி மும்பைக்கு சென்று அம்மக்கள் முன் ஆட அவர்கள் துணிய மாட்டார்கள் என்று பேச ஆரம்பித்த கவாஸ்கரே பிறகு மௌனித்தார். ஆனால் ஆட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே ரமீஸ் ராஜா போன்றோர் எதுவோ தீய்கிறது என்று ஐயப்பட்டார்கள். “பாகிஸ்தான் அவர்களாகவே தான் இனிமேல் தோற்க முடியும் என்றார் ரமீஸ். ஆட்டம் முடிந்ததும் அவர் தன் பெட்டிங் சந்தேகத்தை மீண்டும் மீண்டும் குறிப்புணர்த்தினார். இந்திய வர்ணனையாளர்களும் அவருடன் சேர்ந்து கொண்டர். குறிப்பாக யூனிஸ் கான் மற்றும் உல் ஹக் ஆகியோர் மெத்தனமாக ஆடியதும், நாலு காட்சுகள் தவற விட்டதும் தோதான காரணங்களாக அமைந்தனர். இதே தவறுகளை பாகிஸ்தான் வேறொரு ஆட்டத்தில் செய்திருந்தால் பொருட்படுத்தப்பட்டிருக்காது என்பதை கவனிக்க வேண்டும். பாகிஸ்தானுக்கான காரணங்களை இறைவன் ஒவ்வொரு தானிய மணியின் மீதும் எழுதி வைத்திருக்கிறான் போலும். பாகிஸ்தானின் குற்றங்களை பாகிஸ்தான் மட்டுமே செய்ய முடியும். உதாரணமாக, இறுதி ஆட்டத்தில் இலங்கை முதல் பத்து ஓவர்களில் முப்பது ஆட்டங்கள் மட்டுமே எடுத்தது. தில்ஷான் ஏன் வழமை போல் அதிரடியாக ஆட வில்லை என்று ஒருவரும் குற்றம் சாட்டவில்லை. ஆட்டப் போக்கை கவனித்தால் இலங்கையின் ஆரம்ப மட்டையாளர்கள் எப்போதும் போல் ஆடியிருந்தால் இறுதி இலக்காக 300ஐ தொட்டிருக்கலாம் என்பது விளங்கும். ஆனால் தில்ஷானின் தவறு நியாயப்படுத்தப்படும்; இதையே யூனிஸ்கான் செய்தால் சிலுவைக்கு தயாராக வேண்டும். ராணுவ வீரன் இறந்தால் தேசப்பற்று, சாமியார் இறந்தால் ஜீவசமாதி போன்றதொரு அசட்டு நம்பிக்கை தான் இது.
ஒரு பொம்மையின் விளையாட்டு பொருட்கள் போல பாக் அணி மீண்டும் கலைத்து போடப்படுகிறது. கம்ரான் அக்மால் உள்ளிட்டோர் மீது ஊழல் விசாரணை நடக்க உள்ளது. மூத்த வீரர்களை விலக்க வேண்டும் என்பதை பணிவாக “மூத்த வீரர்களுக்கு ஓய்வளித்து இளம் வீரர்களுக்கு நிறைய வாய்ப்புகள் அளிக்க வேண்டும் என்று அப்ரிடி கேட்டு கொண்டுள்ளார். கிட்டத்தட்ட இதையே தான் வெற்றிக்கு பின்னர் மீடியாவிடம் தம் அணி குறித்து வேறொரு மொழியில் தோனியும் கூறியுள்ளார். ஒவ்வொரு அணியும் சரக்கு தீர்ந்தவர்களை இறக்கி விட்டு விட்டு 2015ஐ நோக்கி தம் அடுத்த பயணத்தை ஆரம்பி உள்ளது. அவரவர் வழியில் என்பது தான் வித்தியாசம். இருவேறு பக்கங்களில் எழுதப்பட்ட ஒரே கிரிக்கெட் வரலாற்றை கொண்ட இந்தியாவும் பாகிஸ்தானும் வெவ்வேறு விதங்களில் கையாள்பவை அநேகமாய் ஒரே பிரச்சனைகள் தாம். அவர்கள் அவற்றுக்கு கண்டடையும் நியாயங்கள் மட்டும் எப்போதும் வேறுபட்டவையாகவே.
இம்முறை மீடியாவின் உலகக் கோப்பை ஒரு இந்திய மசாலா படம் போல் கச்சிதமாக இருந்தது. கடைசி காட்சியை பார்த்தாலே மிச்ச கதை சுலபமாய் புரிந்து விடும்படியாக.

6 comments:

தமிழ்வாசி - Prakash said...

abi. arumaiyaa alasiyirukkinga.

கக்கு - மாணிக்கம் said...

Amazing!

என்ன ஒரு ஆழ்ந்த, ஈடுபாடு உள்ள, உண்மையான அலசல்!வெறும் பொய் புரட்டுக்களை புறம் தள்ளி நேர்மையான ,உண்மைகளை விளக்கியவிதம் அருமை.

ஆர்.அபிலாஷ் said...

நன்றி பிரகாஷ்

ஆர்.அபிலாஷ் said...

நன்றி மாணிக்கம்

Anonymous said...

abilashchandran.blogspot.com என்று பெயரிட்டிருக்கலாமே? ஏன் thiruttusavi.blogspot.com என்று பெயரிட்டீர்கள்?

ஆர்.அபிலாஷ் said...

எனக்கு பிடித்த ஒரு ஹைக்கூவில் இருந்து எடுத்தது திருட்டு சாவி. அக்கவிதையில் ஒருவன் கனவில் ஒரு திருட்டு சாவியை கையில் வைத்திருப்பான்.