உலகக் கோப்பை இந்தியாவில் நடப்பதால் யாருக்கு அனுக்கூலம்?
2011 உலகக் கோப்பை கால் இறுதியை நெருங்கப் போகும் நிலையில் உள்ளூர் கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களின் ஊகங்களும் எதிர்பார்ப்புகளும் பொய்யாகி உள்ளன. சுவாரஸ்யமாக வெள்ளைகார நிபுணர்கள் ஊகித்தவை நிஜமாகி உள்ளன. அவர்கள் ஆசிய அணிகளை விட தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய ஆகிய அணிகளுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்றார். சார்பு மனப்பான்மையால் அப்படி சொல்லவில்லை. சில எளிய அபிப்பிராயங்கள் இந்த நிலைப்பாட்டுக்கு பின் உண்டு. முதலில் உள்ளூரில் ஆடும் போது கோடானுகோடி பார்வையாளர்களும் மீடியாவின் கழுகு சிறகடிப்புகளும் ஏற்படுத்தும் அழுத்தம் ஆசிய அணிகளை கொஞ்சம் முடமாக்கி விடும் என்பது. அடுத்து ஐரோப்பிய அணிகள் பலவும் அடிக்கடி ஆசியா வந்து கிரிக்கெட் ஆடி வருவதால் இங்குள்ள சூழலும் ஆடுதளமும் முற்றிலும் அந்நியமல்ல. மேலும் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற அணிகளின் வேகப்பந்தாளர்களாலும் முக்கியமான நேரங்களில் கொத்தாக விக்கெட்டுகளை அடைய முடியும். உலகக் கோப்பை காலிறுதியை நெருங்கி வரும் இவ்வேளையில் இத்தனை அவதானிப்புகளும் தேறி உள்ளன. ஒரு சிறிய அணியான வங்க தேசமே உள்ளூரில் ஆடிய போது மக்களின் எதிர்பார்ப்பால் திணறியது. கொஞ்சமே என்றாலும் பாகிஸ்தானுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் எதிரே இலங்கையும் நிலைகொள்ளாமல் தவித்தது. ஸ்டுவர்ட் புராட், பிரெட் லீ, டெய்ட் மற்றும் ஸ்டெயின் ஆகியோர் சுழலர்களுக்கு இணையாக விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணிகளை கவிழ்த்துள்ளன. இங்கிலாந்து தடுமாறி வருகிறதென்றாலும் தெ.ஆ அணி மெத்தன ஆடுதளங்களுக்கு ஏற்றபடி தகவமைத்து ஆடுகிறது. தங்களது மரபான ஆட்டமுறையை மாற்றி சுழலர்களை மையமாக்கி அவர்கள் பல ஆட்டங்களை இந்த தொடரில் வென்றுள்ளனர். உலகக்கோப்பையில் மூன்று முதல்நிலை சுழலர்களுடன் ஆடின ஒரே அணியும் தெ.ஆ தான். மற்ற எந்த அணியையும் விட  அவர்களின் சுழலர்கள் தாம் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர்.
ஆசிய அணிகளுக்கு உள்ளூர் சூழல் நன்றாக அத்துப்படி என்பது ஒரு பெரும் பலம் என்றனர் ஆசிய விமர்சகர்கள். இது இலங்கையை தவிர பிற அணிகளுக்கு பொருந்தவில்லை. குறிப்பாய் இந்தியாவில் ஆடுகளங்களை வாசிப்பது நாளிதழ்களில் ஊழல் கணக்குகளை படிப்பது போல. இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தோனியே தவறாய் ஆடுதள சுபாவத்தை ஊகித்துள்ளார். இரண்டு ஆட்டங்களிலும் இரண்டாவதாக எதிரணி மட்டையாடிய போது ஆடுதளம் பனி காரணமாக சுலபமாகியது. தெ.ஆவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆடுதளம் மிக மெத்தனமானது என்பதை புரியாமல் 350 உத்தேச இலக்கை நோக்கி எகிறிய இந்தியா வழுக்கி 296இல் வந்து நின்றது. இரண்டாவதாக ஆடிய அணி சூழ்நிலையை நன்றாக கணித்து ஆடியது. அடுத்து, சுழல் இத்தொடரில் ஒரு பெரும் பங்கை வகிக்கும் என்று கோரப்பட்டது, தொடர்ந்து கோரப்படுகிறது. இந்திய அணி இந்த அடிப்படையிலே தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால் இந்திய ஆடுதளங்கள் சமீபமாக மாறி விட்டன என்பதை நம்ப நம் மீடியா தயாராக இல்லை. இந்த இறந்த கால மீள்விருப்பம் கிட்டத்தட்ட வேடிக்கையானது. இந்தியாவில் ஆடுதளங்கள் மெத்தனமாக இருக்குமே அன்றி பெருமளவில் சுழலுக்கு சாதகமாக ஆகப் போவதில்லை. கோடை முற்றி ஆடுதளங்கள் வறண்டு இளகினாலும் மிகச் சில ஆட்டங்களிலே பந்து பம்பரமாகும். அப்படியான ஆட்டங்கள் எந்த அணிகளுக்கிடையே எந்த மாதிரி முக்கிய கட்டத்தில் நடக்கிறது என்பதே சுவாரஸ்யம். நவ்ஜோத் சித்து சொன்னது போல் இந்தியாவில் சுழல் சாதக ஆடுதளங்களை அமைப்பது ஒன்றும் அசாத்தியம் இல்லை. ஆனால் அப்படி ஆடுதளத்தை கலப்படமாக்க இது ஒன்றும் உள்ளூர் ஐந்து போட்டி ஆட்டத்தொடர் அல்ல. ஓட்டங்கள் புரண்டொழுகும் திருவிழாவே உலகக்கோப்பை தொடர் ஒருங்கிணைப்பாளர்களின் கனவு. அதற்கேற்றபடியாக செயல்படவே ஆடுதள தயாரிப்பாளர்களும் முயல்வார்கள். இதுவரை தட்டை, மெத்தனமானவை, சற்றே சுழல்பவை, மாற்று ஸ்விங்கை தூண்டுபவை என ஒரு கலவையாகத் தான் ஆடுதளங்கள் அமைந்துள்ளன. ஒரே நிலையில் எந்த அணியும் தொடரில் ஆதிக்கம் செலுத்தாதற்கு இதுவும் காரணம்.
கடைசியாக, உள்ளூர் எதிர்பார்ப்புகளின் நெருக்கடி இந்தியாவை தாக்காது என்று நம்மூர் விமர்சகர்கள் சொன்னது நிஜமாகவில்லை. இந்தியா தொடர்ந்து உள்ளூரின் எதிர்பார்ப்பு அழுத்தத்தில் ஆடி ஆடி வைரமாகவே விளைந்திருப்பதாய் சொல்லப்படுவது உண்மையென்றாலும் கூட உலகக் கோப்பை நெருக்கடி தனித்துவமானது. இந்தியாவின் முதல் ஆட்டத்தில் ஸ்ரீசாந்த் பந்து வீசிய விதம் இந்த நாயக பிம்ப ஆட்டத்திற்கு முன்மாதிரியாக அமைந்தது. ஆட்டம் துவங்கும் முன்னாலே ஸ்ரீ ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்துவது என்று முடிவு செய்து விட்டார். விளைவாக அது அவரது கடைசி ஆட்டமாகியது. ஆனால் ஸ்ரீசாந்த் இல்லாவிட்டாலும் அவரது பாணியில் தான் அணியில் பலரும் ஆட முயல்கிறார்கள். அதாவது ஒரே ஆட்டத்தில் 11 பேரும் ஆட்டநாயகர்களாக முயல்வது. துணை பாத்திரங்கள் யாருக்கும் வேண்டாம். இந்திய அணி இந்த கோப்பையில் இறுதி கட்டம் வரை வர வேண்டியது அணியை விடவும், உலக கிரிக்கெட்டை விடவும் ஊடகங்களுக்கும் விளம்பரதாரர்களுக்கும் அதிமுக்கியமாக உள்ளன. இந்திய அணியின் துரதிர்ஷ்டம் இந்த திசைதிருப்பிகள் தாம். 11 பேருக்காக பதினாயிரம் பேர் யோசிக்கிறார்கள். அவர்கள் தோற்றாலும் வென்றாலும் சறுக்கினாலும் நிமிர்ந்தாலும் ஒரு காவியத்தனம் வந்து விடுகிறது. எஸ்.வி சேகர் நாடகம் பார்த்து விட்டு ஒருமுறை சுஜாதா வியந்தார். எசகுபிசகாய் என்ன வசனம் வந்தாலும் பார்வையாளர்கள் சாவி கொடுத்த பொம்மை மாதிரி சரியான நேரத்தில் மிகச் சரியாக சிரித்து விடுகிறார்கள் என்று. எஸ்.வி சேகர் பார்வையாளர்களை அசடுகளாக்குகிறாரா அல்லது பார்வையாளர்கள் அவரை ஏமாற்றுகிறார்களா என்பதே சுஜாதாவின் உள்ளார்ந்த குழப்பம். இந்திய கிரிக்கெட்டர்கள்-ஊடகங்கள்-பார்வையாளர்கள் என்ற உறவுநிலையில் அசட்டுத்தனம் எங்கிருந்து ஆரம்பமாகிறது? இந்தியா எனும் அவ்வப்போது நன்றாக ஆடும், அரிதாக மிக நன்றாக ஆடும் ஒரு சுமாரான அணி ஏன் ஆகச்சிறந்த அணி என்று அடம் பிடிக்கிறோம். யாரை யார் ஏமாற்றுகிறோம் என்று அறிவது தெரிந்து கொண்டே ஒரு அபத்த நாடகத்தை பார்த்து களிக்க பயன்படும்.
உலகக் கோப்பையை அதை நடத்திய நாடுகள் என்றுமே வென்றதில்லை என்ற வெள்ளை விமர்சகர்கள் சொன்னதில் நிச்சயம் ஒரு நியாயம் உள்ளது. ஆனால் இம்முறை உலகக் கோப்பையின் மவுசு மிகவும் குறைந்துள்ளது என்பதே உண்மை. உலகக்கோப்பை தொடரில் இருந்து சுவரில் அடிக்கப்பட்ட பந்தாக இந்தியா திரும்பினாலும் துக்கம் அனுஷ்டிக்க கூட யாருக்கும் அவகாசம் இருக்காது. உலகக்கோப்பையை விட பொழுதுப்போக்கு தன்மை கொண்ட வண்ணமயமான ஐ.பி.எல் உடனே வந்து விடும். ஐ.பி.எல் வெற்றிகரமாக முடிந்த உடன் அடுத்து எத்தனையோ ஆட்டத்தொடர்களும் பயணங்களும் நிகழப் போகின்றன. இருந்தும் 2011 உலகக் கோப்பைக்கு தகுதியை மீறின பரபரப்பு அளிக்கப்பட்டது கிரிக்கெட்டை உறிஞ்சி வாழ்பவர்களின் வணிக நன்மைக்காக மட்டுமே. இது தெரிந்தும் எஸ்.வி நாடகத்தின் பார்வையாளனை போல் இந்திய அணி தன்னை கோடி கரங்கள் கட்டுப்படுத்த அனுமதிப்பது பரிதாபகரமானது. அவர்களுக்கு வேறு வழியில்லை எனலாம்.

மேற்கத்திய நிபுணர்களின் மற்றொரு ஊகம் போலவே ஆஸி, தெ.ஆ போன்ற அணிகள் ஊடக சூட்டுக்கு தப்பித்து சமதளத்தில் தமக்கு தோதான வேகத்தில் ஆடி வருகின்றன. இந்த அணிகளில் தெ.ஆவின் தகவமைவும் சமநிலையும் சற்று பிரமிப்பூட்டியுள்ளன.  கடந்த முறை இந்தியாவில் ஒருநாள் தொடர் ஆடிய போது தென்னாப்பிரிக்கா மரபான முறையில் பந்து வீசி மிகுந்த குழப்பத்துடன் ஆடியது. சுழலர்களை அதிகம் பயன்படுத்தவும் தயங்கியது. இந்தியாவை போல் மிக தாமதமாக உலகக் கோப்பை ஆரம்பிப்பதற்கு சற்று முன்னர் நடந்த இந்தியாவுடனான ஒருநாள் தொடரில் தான் அவர்கள் புதிய வீரர்களை அறிமுகப்படுத்தி சோதித்து பார்த்தார்கள். அதில் தேறிய டூபிளெயிஸ், பீட்டர்ஸன், தாஹிர் போன்றோர் நேரடியாக உலகக் கோப்பையில் சோபித்துள்ளது ஒரு நேர்மறை சமாச்சாரம். டூமினி ஆப் சுழலர்களுக்கு எதிராக தொடர்ந்து எல்.பி.டபிள்யு ஆகி வெளியேறி வந்தார். உலகக் கோப்பைக்கு சற்று முன்னர் அவர் அந்த தொழில்நுட்ப குறையை சரிசெய்தார். அவர்களின் கீழ்மத்திய வரிசை மட்டையாட்டத்தை டூமினி இப்போது வலுவாக்குகிறார். அவர்களின் தலைவரான கிரேம் ஸ்மித் ஆட்ட சாதுர்யம் குறைவானவராக இருக்கலாம். ஆனால் அவரது தலைமையில் தான் தென்னாப்பிரிக்கா சற்று சுதந்திரத்துடன் மட்டையாடவும் ஆவேசமாக பந்து வீசவும் தொடங்கியது. தொடக்க நிலையில் எதிரணியின் விக்கெட்டுகளை கொத்தாக சாய்ப்பதும், சுழலர்களை கொண்டு மத்திய வரிசையை தாக்குவதும் தெ.ஆ மரபில் அந்நியமானவை. ஸ்மித் இம்மரபை புத்துருவாக்கி உள்ளார். இந்த உலகக் கோப்பையுடன் ஓய்வு பெறும் ஸ்மித் அதற்கு முன் தன் அணியை மற்றொரு தளத்துக்கு உயர்த்தி உள்ளார்.
இதுவரையிலான உலகக் கோப்பை ஆட்டங்களில் இரண்டு பொய்கள் அம்பலமாகி உள்ளன. இந்திய நிபுணர்கள் நம்ப வைத்தது போல் இந்த உலகக் கோப்பையில் வெற்றிக்கு சாதகமான எந்த ஒரு குறிப்பிட்ட அணியும் இல்லை. ஊடக சாதக அணிகள் மட்டும் இருக்கலாம். இந்த தொடரில் சூழல் என்னதான் ஆசியத்தனமாக இருந்தாலும் கிரிக்கெட் அடிப்படையில் ஒன்று தான். மேற்கத்தியர்களுக்கு ஆசிய கிரிக்கெட் மீது இருந்த புதிர்தன்மை வெகுவாக குறைந்து விட்டது. எதிர்பாரா தன்மை காரணமாக ஆடுதளம் மட்டும் தான் மர்ம பாத்திரமாக இருக்கப் போகிறது. இதனுடன் உள்ளுர் அணிகளின் நெருக்கடி, சமநிலை குலைவு, தடுமாற்றம், ஊடக மிகை சேர்ந்து கொள்ள இந்தியத்தன்மை கூடிய கிரிக்கெட் உருவாகிறது. பார்வையாளனை கிளர்ச்சியில் ஆழ்த்தும் திகில் போட்டிகள் நிகழ்கின்றன. பெரும்பாலான ஆட்டங்கள் இந்தியாவில் நடப்பதன் ஒரே அனுகூலம் பார்வையாளனுக்கு மட்டும் தான். இந்த தனித்துவமான மசாலா இம்மண்ணுக்கு மட்டுமே உரியது.

Comments

நல்ல அலசல்...அப்ப இந்தியா கோப்பையை கைப்பற்ற வாய்ப்பே இல்லையா?


எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - 1. (150 வது பதிவாக)
Rettaival's said…
Fantastic View!

ஊகியுங்கள் அபிலாஷ்! எந்த அணி கோப்பையை வெல்லும் என உங்கள் பட்சி சொல்கிறது?
என் பட்சி அமைதி காக்க சொல்கிறது ரெட்டைவால்!