ராஜியின் அப்பா
ராஜி மூன்று முறை தும்மினாள். ஒவ்வொரு முறையும் அவள் கண்கள் சற்று வெளிப்பிதுங்கி பளபளத்தன. முதல் முறை தும்மும் போது “அப்பா நினைக்கிறார் என்றாள். இரண்டாம் முறை “அம்மா நினைக்கிறாள் என்றாள். மூன்றாம் முறை புன்னகை அரும்ப “அப்பா என்றாள். நான் அடுத்து நான்கு முறை தும்மினேன். நான்கு முறையும் “அம்மா நினைக்கிறாள் என்றேன். ராஜி தன் கையிலிருந்த புத்தகத்தால் என் உச்சந்தலையில் பட்டென்று அடித்தாள்.

முன்வழுக்கை பளபளக்க தொந்தி அதிர ராஜியின் அப்பா வேகமாய் ஓடி வந்து கொண்டிருக்கிறார். திடீரென்று வாழைப்பழத் தோல் வழுக்கி சப்பென்று மல்லாந்து விழுகிறார். விழுந்தவர் சாலையோடு அழுந்த பதிந்து போய் மற்றொரு வாழைப்பழத் தோல் போல் அசையாமல் கிடக்கிறார். தொடர்ந்து அவ்வழி ஓடி வந்தவர்கள் அனைவரும் சறுக்கி சப்பென்று விழுந்து வாழைப்பழ தோல்களாகிறார்கள். மஞ்சளும் கரும்புள்ளிகளுமாய் சிதைந்த கிழிந்த கால்கள் அகன்று கிடக்கும் பல்வகை தோல்கள். காலையில் எழுந்ததும் நான் இந்த கனவை எண்ணி வாய் விட்டும் பின்னர் வாய் பொத்தியும் சிரிக்கிறேன்.

அன்றே ராஜியிடம் இந்த கனவை பற்றி சொல்லும் போது சிரிப்பை கட்டுப்படுத்தவே முடியவில்லை. அவளுக்கு சிரிப்பும் கோபமும் சரிக்கு சமமாய் வந்தது. அவள் இமைகள் படபடக்க. மெல்ல சிணுங்கி சிணுங்கி சிரித்தாள்; பின்னர் நினைவு சட்டென வந்தது வந்தது போல் என் தலையில் குட்டி சொன்னாள் “மக்கு மக்கு எங்கப்பாவை தான் நீ பார்த்ததில்லையே. பிறகெப்பிடி?. இதுவரை நாம் பார்த்திராதவர்கள் மட்டுமே நம் கனவில் வரமுடியும் என்றேன். கடந்த நாள் கனவின் மிச்சம் அடுத்த நாள் இரவில் தொடர்ந்தது. சாலையோடு அழுந்திப் பதிந்து ராஜியின் அப்பாவின் வாழைப்பழ தோல் முகங்கள் எங்கும் இறைந்து கிடக்கின்றன. முன்னால் ராஜி வாழைப்பழம் தின்று தோலை விசிறி எறிந்தவாறே துள்ளலோடு நடந்து போகிறாள்.

அம்மா வீட்டுக்கு திரும்பிய பிறகு தொடந்து சில தினங்களாய் ராஜியை சந்திக்கவே இல்லை; அம்மாவை கட்டி அணைத்து கதகதப்போடு சேலைமணத்தோடு தூங்குவது பழையபடி வழக்கமாச்சு. மறுநாள் பள்ளிக் கூடத்தில் என்னை விட்டுப் போக வந்திருந்த அம்மாவிடம் ராஜியை கூட்டி வந்து காட்டினேன். “அம்மா இதுதான் ராஜி ... என் பிரண்ட். அம்மா குனிந்து தன் நீண்ட நேர்த்தியான் விரல்களால் ராஜியின் கன்னத்தில் கிள்ளியவாறே “சுட்டிப் பொண்ணு என்றாள். பிறகு மீண்டும் குனிந்து மெல்ல உதடு பதிய அவள் கன்னத்தில் முத்தமிட்டாள். அப்போது அம்மாவின் கையில் இருந்த நான் ராஜியின் காது ஜிமிக்கியை தட்டி ஆட்டி விட்டேன். அன்று முழுக்க ராஜி என்னிடம் பேசவே இல்லை.

பள்ளி இறுதி விழாவின் போது தான் ராஜியின் அப்பாவை முதன்முதலாய் பார்க்க கிடைத்தது. கனவில் தெரிந்ததை விட தோற்றம் நிறைய மாறுபட்டிருந்தாலும் எந்நேரமும் வாழைப்பழத் தோல் வழுக்கி விழக் கூடியவர் மாதிரி தான் இருந்தார். இரண்டு முறை நான் திரும்பி பார்க்கும் போதும் அவர் என் அம்மாவுடன் சிரிப்பு ததும்பி வழி பேசிக் கொண்டிருந்தார். அம்மாவின் முந்தானை காற்றில் மெல்ல அசைந்து கொண்டிருந்தது. பளிச்சென்று தெரிந்த இடுப்பை என் நினைவு ஓடிப் போய் கட்டிக் கொண்டது.

விழா அரங்கில் என் பக்கத்து இருக்கையில் இரட்டை ஜடை அசைய ஏதோ பாட்டை முணுமுணுத்தவாறே அமர்ந்திருந்த ராஜி சட்டென்று காதில் ரகசியம் போல் சொன்னாள், “நேத்து ஒரு கனவு கண்டேன். பிறகு தோள் உலுக்கி ஜடைகள் இரண்டு பக்கமும் ஆட குலுங்கி குலுங்கி சிரித்தாள். குழல்விளக்கின் செங்குத்து வெளிச்சத்தில் அவள் முகம் வியர்வை துளிகளுடன் பளிச்சென்று தெரிந்தது. பிறகு மீண்டும் என் காதருகே வந்து சிரிப்பை துண்டிக்காமலேயே கூறினாள் “கனவிலே உங்க அம்மாவை கோவில் யானை தூக்கி கொண்டு ஓடிச்சு, ஓடிப் போய் தெப்பக்குளத்தில போட்டுச்சு. அய்யோ பாவம். எனக்கு திக்கென்றது. பிறகு அவள் உச்சந்தலையில் குட்டியவாறே “அசடே அசடே பாக்காதவங்க தானே கனவில வர முடியும். என் அம்மாவை தான் நீ பாத்திருக்கியே. பிறகெப்பிடி அவங்கள யானை தூக்கீட்டு போய் குளத்தில போடும்? என்றேன்.

அன்றிரவு கனவில் நானும் ராஜியும் எங்களூர் நீலகண்ட பெருமாள் தெருவில் பேசிக் கொண்டே நடந்து சென்று கொண்டிருந்தோம். ராஜி தன் கையில் இருந்த வாழைப்பழ சீப்பில் இருந்து ஒவ்வொரு பழமாய் பிய்த்து தின்றபடி தோலை பின்னோக்கி விசிறி எறிந்தபடி ஷூவில் இருந்து விநோதமாய் விசில் சத்தம் எழ நடந்து கொண்டிருந்தாள். முன்னந்தலை வழுக்கையில் இளவெயில் மின்ன ஒருவித தாளத்துடன் குலுங்கும் தொப்பையுடன் ஓடி வந்து கொண்டிருந்த ராஜியின் அப்பா பழத்தோலில் கால் வழுக்க நொடியில் கைகால் பரப்பி சாலையில் முகம் அழுந்தி தட்டையாக மாறி கிடந்தார். அவர் அலறும் சத்தம் தெருவெங்கும் எதிரொலித்தது. சாலையில் தூசு மண்டி கிடந்தது. ராஜி தன் ஷூவால் ஓங்கி மிதித்து புழுதியை விசில் சதத்துடன் கிளப்புகிறாள். திடீரென்று அலறல் சத்தம் நின்று தரை பலமாய் அதிரும் ஓசை எங்கும் கேட்கிறது. ஒரு பருத்த யானை என் அம்மாவை தும்பிக் கையில் வளைத்து தூக்கியபடி எங்களை கடந்து ஓடுகிறது. அம்மாவின் சிவப்பு நிற பட்டுப்புடவை சூரிய வெளிச்சத்தில் மினுமினுக்கிறது. தெருமுனை தாண்டியதும் யானை அம்மாவை தெப்பக் குளத்தில் பச்சை தண்ணீர் சிதறித் தெறிக்க பொத்தென்று இடுகிறது. நாங்கள் எதையும் பொருட்படுத்தாமல் சிரித்தவாறே ஓட்டமும் துள்ளலுமாய் வாழைப்பழங்கள் தின்று கொண்டு ந்டந்து செல்லுகிறோம்.

நான் இந்த கனவை பற்றி இதுவரையிலும் யாரிடமும் சொன்னதில்லை. ஏன் ராஜியிடம் கூட. அப்பொழுதிலிருந்து வருடங்களும் எங்களுடன் கவலையில்லாமல் ரொம்ப தூரம் நடந்து வந்து விட்டன. நாங்களும் நிறையவே மாறி விட்டோம். காதலித்து திருட்டுத்தனமாய் ஓடி வந்து திருமணம் செய்து ... எங்களை சுற்றி வீடு குழந்தைகள், குடும்பம், நண்பர்கள் என்று படலம் படலமாய் சூழ்ந்து கொண்ட சித்திரங்களுடன்.

குழந்தைக்கு தலைவாரி பின்னலிட்டவாறே டி.வி பார்த்துக் கொண்டிருக்கும் ராஜி விழிகள் முன்னால் பிதுங்க கண்ணீர் திரை பளபளக்க அச்சென்று தும்முகிறாள் “யாரோ உன்னை நினைக்கிறாங்க போலிருக்கே என்கிறென். ராஜி புன்னகைத்தவாறே குழந்தைக்கு மையிடுகிறாள்.

Comments

நல்ல இருக்குங்க...புரிஞ்சுக்க கொஞ்சம் லேட் ஆச்சுங்க...
நான் ஒரு ட்யூப் லைட்டு...
Sai Ram said…
நன்றாக இருக்கிறது அபிலாஷ். கனவுகள் சூழ்ந்தது தான் குழந்தைகள் உலகம். இப்போது நிதானித்து யோசித்தால் ஆடவர்களுக்கும் கனவுகள் தான் உணவாகின்றன என்று தோன்றுகிறது. முடிவினை சட்டென திணித்து முடித்து விட்டீர்களோ என தோன்றியது. இன்னும் நீளமாக கூட எழுதியிருக்க முடியுமோ?
நன்றி டக்காலக்கடி
சாய்
கதை ஒன்பது வருடங்களுக்கு முன் எழுதியது; வளர்த்தெடுக்க மாற்ற மனம் வரவில்லை. நீங்கள் சொல்வது சரிதான் என்றாலும்.