Tuesday, December 14, 2010

நீட்சே: அறிமுகக் குறிப்புகள் 7


ஷோப்பென்ஹெர்: உள்ளிருந்து இயக்கும் ஆற்றல் - 1

 
ஒரு புத்தகத்தாலோ அல்லது மனிதராலோ தூண்டப்படும் முன் ஒரு மனிதனின் தேடல் எங்கிருக்கிறது? ஒரு மனிதனின் தேடல் அவனது நீண்ட சிந்தனை மரபின் அவனறியாத ஒரு தொடர்ச்சியா?
ஷோப்பென்ஹெர் (1788-1860) ஒரு ஜெர்மானிய தத்துவஞானி. இவரது சோர்வுவாத கோட்பாடு தத்துவவரலாற்றில் ஒரு திருப்புமுனை. ஷோப்பென்ஹெரின் ஊக்க கோட்பாட்டை நாம் இவ்வாறு எளிதாக விளக்கலாம். ஷோப்பென்ஹெர் மனிதர்கள் அனைவரையும் ஒரு பிரபஞ்ச ஊக்க ஆற்றல் இயக்குவதாக கூறினார். இந்த ஊக்க ஆற்றல் நன்மை தீமைகள் கடந்தது. இதற்கு மனிதனின் ஷேமம் பற்றின எந்த கவலையும் இல்லை. மனித வாழ்க்கை துயர் மிகுந்ததாகவும் அசட்டுத்தனமாகவும் இருப்பதற்கு இந்த துஷ்ட ஊக்க ஆற்றலே காரணம். ஷோப்பென்ஹெர் ஒரு தனிப்பட்ட அசல் சிந்தனையாளராகவும், வரலாற்றின் பெரும் சிந்தனையாளர்கள், கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களை தீவிரமாக பாதித்த வகையிலும் மிகவும் குறிப்பிடத்தக்கவர். ஷோப்பன்ஹெரால் பாதிக்கப்பட்டவர்களில் நீட்சே, வாக்னர், பிராயிட், தல்ஸ்தாய், ஜேம்ஸ்ஜாய்ஸ் ஆகியோர் முக்கியமானவர்கள். தல்ஸ்தாய் தனது போரும் வாழ்வும் நாவலில் போரின் வெற்றி தோல்வி விளக்க முடியாத ஒரு ஆற்றலால் உருப்பெறுவதாக அவதானிப்பார். போர் எந்தளவு துல்லியமாக கவனமாக திட்டமிடப்பட்டு நடத்தப்படுகிறதோ அந்தளவு அது அத்திட்டத்தின் எல்லைகளை வெகு இயல்பாக தாண்டி தனதான ஒரு உள்ளுணர்வுடன் செயல்படுகிறது. ஒரு குறிப்பிட்ட காட்சியில் ரஷ்ய படையின் தலைமை தளபதியான ஒரு முதியவர் ஒரு தீவிரமான யுத்த தந்திர விவாதத்தின் போது நன்றாக தூங்கி விடுவதை இங்கு நினைவுபடுத்தலாம். என்னதான் வழிநடத்தினாலும் போர் அதன் போக்கிலே வழிநடக்கும் என்று அம்முதிய தளபதி நம்புகிறார். இந்த அவதானிப்பை தல்ஸ்தாய் ஷோப்பென்ஹெரின் பாதிப்பிலே உருவாக்குகிறார். பிராயிடின் நனவிலி கோட்பாடு நாம் நன்கு அறிந்ததே. சுருக்கமாக பிராயிட் சொல்லும் நனவிலி நமது அடிமனம். அமைதியான எரிமலையின் உள்ளார்ந்த கொதி நிலை. இதை பிராயிட் ஒரு காமப் பெருங்கடலாக கருதினார். இதன் சீற்றங்கள் மீது நாவாய்கள் நாம். இந்த கோட்பாட்டில் ஷோப்பென்ஹெரின் நிழல் அசைவதை நாம் கவனிக்க முடியும். ஷோப்பென்ஹெர் தத்துவப் பரப்பில் ஒரு புதிய பாதையை உருவாக்கினவர் மட்டுமல்ல அவர் கூர்மையும் பகடியும் பளிச்சிடும் எழுத்தாளரும் கூட. நீட்சேவைப் போன்று தனது ஆளுமையின் மையத்தில் இருந்து சிந்தனைகளை தோற்றுவித்தவர். ஆனால் ஷோப்பென்ஹெரின் ஆளுமையில் ஒரு ஆழமான முரண்பாடு இருந்ததாக தத்துவ விமர்சகர் போல் ஸ்டுரேதெர்ன் கருதுகிறார். பிராயிடிய மொழியில் இது அவரது id மற்றும் super-egoவுக்கு இடையிலான உரசல் என்று ஸ்டுராதெர்ன் ஊகிக்கிறார். காரணம் ஷோப்பென்ஹெரின் சோர்வுவாத தத்துவ கோட்பாடுகளுக்கு அவரது வாழ்க்கை முறை மற்றும் மனப்போக்குக்கும் குறிப்பிடும்படியான வேறுபாடுகள் இருந்தன. வாழ்வு அடிப்படையில் தீமையானது என்றும், இத்தீமையில் இருந்து விடுபட ஒருவர் இச்சைகளில் விலகி ஒரு துறவியின் விடுதலை நிலையை அடைய வேண்டும் என்று அவர் கூறினார். ஆனால் நிஜவாழ்வில் ஷோப்பென்ஹெர் ஒரு மைனராகவே வாழ்ந்தார். ஒருபக்கம் உணவும், காமமும் அவரது லௌகீக இலக்குகளாக இருந்தன. மற்றொரு பக்கம் அவர் கலை, இலக்கிய ஈடுபாடுகளின் வழி தனது ஆன்மீக விடுபடலை நாடினார். நீட்சேயையும் வாக்னரையும் போன்று தனது படைப்புக்கு சமமாகவே வாழ்க்கையின் விபரீதங்களால் அறியப்படுபவரானார்.

1819-இல் நீட்சே ஒரு பழைய புத்தகக் கடையில் எதேச்சையாக ஷோப்பென்ஹெரின் உலகம் எனும் ஊக்க ஆற்றல் மற்றும் கருத்து (The World as Will and Idea) என்னும் நூலை கண்டெடுத்து அங்கேயே சில பக்கங்கள் படித்து பார்க்கிறார். நீட்சே எளிதில் எந்த புத்தகத்தையும் வாங்கக் கூடியவரல்ல. ஆனால் அந்த சிறு நூல், அதிகம் அறியப்படாத அந்நூல், அவரது அவநம்பிக்கையை கடந்து பெரும் ஆர்வத்தை தூண்டுகிறது. வீட்டுக்கு போன பின் சோபாவில் படுத்து ஒரே மூச்சில் மொத்த நூலையும் படித்து விடுகிறார். நீட்சே ஷோப்பென்ஹெரால் ஆட்கொள்ளப் படுகிறார். நீட்சே அவரது கருத்துக்களை மட்டுமல்ல ஆசான்களையும் எதேச்சையாக கண்டுபிடித்தவர் ஆகிறார். நீட்சேவின் பிரபலமான அதிகாரத்துக்கான ஊக்க ஆற்றல் என்ற கருத்தாக்கம் ஷோப்பன்ஹெரின் கருத்தாக்கத்தில் இருந்தே துவக்கம் கொள்கிறது. இந்த சிந்தனைத் தாவல் மட்டுமல்ல ஷோப்பென்ஹெருக்கு சற்று பின்னால் சென்று தத்துவ மரபில் நீட்சேயியத்தின் முளை எங்கு உள்ளது என்று தேடுவதும் அதிக வெளிச்சம் தருவது. ஆக நாம் ஷோப்பன்ஹெரின் தூரத்து தத்துவ உறவுக்காரர்களின் கண்டுபிடிப்புகளை சுருக்கமாக அறிமுகம் செய்யலாம்.

பிளேட்டோவில் இருந்து காண்ட் வரை
தத்துவம் தனது பரப்பில் உண்மை என்ன என்ற கேள்வியையே மீண்டும் மீண்டும் வரைந்து பார்த்துள்ளது. வெவ்வேறு காலகட்டங்களில் இதற்கு வெவ்வேறு பதில்கள் காணப்பட்டுள்ளன. கிரேக்க தத்துவஞானி பிளேட்டோ நாம் உண்மை என்று அறிவன நம் புலன்களால் ஏற்படும் ஒரு தோற்றம் மட்டுமே என்று நம்பினார். அவர் அறிவை அசல் உண்மை, பிரதிநுத்துவ உண்மை என்று இருவாறாக பிரித்தார். மனிதனின் உலகம் பிரதிநுத்துவ உண்மையாலே உருவாகிறது. பொய்யான உலகம் யாருக்கு தேவை? நமது சமதளமான வாழ்வில் இருந்து கைக்கு எட்டிய உலகம் தாண்டிய ஒரு உன்னத உண்மைக்காகத் தானே மனம் ஏங்குகிறது! நகல்களின் திரைக்கு அப்பால் அசல் எங்குள்ளது? அதை எப்படி கண்டடைவது? பிளேட்டோ இதற்கு பகுத்தறிவை ஒரு கருவியாக முவைக்கிறார். இது எளிய கறுப்பு சட்டை பகுத்தறிவு அல்ல. தத்துவத்தின் பகுத்தறிவு கூர்மையான தர்க்கத்தால் வழிநடத்தப்படுகிறது. பிளேட்டோவின் இருள்குகை கதை அவரது மேற்சொன்ன இருபொருள் வாதத்துக்கு (அசல்-பிரதுநுத்துவ உண்மைகள்) பிரபலமான உதாரணம். இந்த கதைப்படி உலகம் ஒரு பெரும் குகை. அங்கு சிறைப்பட்டுள்ள மனிதர்கள் இருளை மட்டுமே அறிந்தவர்கள். அவர்களுக்கு முன் ஒரு வெற்று சுவர். பின்னால் நெருப்பு கொழுந்து விட்டு எரிகிறது. நெருப்பின் முன் அசையும் பொருட்களின் நிழல்கள் முன்னுள்ள சுவரில் விழுகின்றன. சிறைப்பட்ட குகைவாசிகள் நெருப்பையோ அசையும் பொருட்களையோ பார்ப்பதில்லை. அவர்கள் நிழலை மட்டுமே கண்டு அர்த்தப்படுத்திக் கொள்கின்றனர். ஒரு தத்துவஞானி இந்த குகையில் இருந்து வெளியே வந்து நிழல் தோற்றங்கள் உண்மை அல்ல என்று கண்டறிபவனாக இருப்பான் என்றார் பிளேட்டோ.
அடுத்து நாம் ஒரு தாவு தாவி ரெனெ டெகார்டே எனும் பிரஞ்சு சிந்தனையாளருக்கு செல்லலாம். நான் சிந்திக்கிறேன்; அதனால் நான் இருக்கிறேன்(I think therefore I am) என்ற மேற்கோளுக்காக மிக பிரபலமானவர் இவர். இந்த உலகம் இருக்கிறது என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது? இதை படித்து கொண்டிருக்கும் நீங்கள் இந்நொடி இறந்து போனால் நான் எழுதியுள்ளது இக்கடைசி எழுத்துவரை இல்லாமல் போய் விடுமா? அதாவது நீங்கள் வாசிப்பதனால் தான் என் எழுத்தும், அதனால் நானும் இருக்கிறோமா? இதற்கு ஆம், இல்லை என்று இருவிதமாய் பதில் சொல்லலாம். ரெனெ டெகார்டே ஆம் என்பார். நீங்கள் வாழும் உலகம் புலன்களால் தான் தெரிய வருகிறது; அதனால் அது புலன்களால் கட்டுப்படுத்தப்பட்டது ஆகிறது. டெகார்டே இதை திருப்பிப் போட்டு நான் பார்த்து கேட்டு முகர்ந்து தொட்டு உணரும் இந்த உலகம் நிஜம் தான். ஏனென்றால் அது என்னில் இருந்து ஆரம்பிக்கிறது. நான் சிந்தித்துக் கொண்டு இருக்கும் வரை அதுவும் இருக்கிறது. என் சுயம் உலகை நிர்மாணிக்கிறது என்றார். ஆக டெகார்டே பிளேட்டோவின் இருபொருள்வாதத்துக்கு (dualism) வேறொரு வடிவம் அளிக்கிறார். இரண்டே உண்மைகள்/இருப்புகள் தாம். ஒன்று நான் என்கிற சுயம். வெறும் சுயம் அல்ல, சிந்திக்கும் சுயம். மற்றொன்று, இதன் நீட்சியான பொருள். அதுவே வெளியே தெரியும் உலகம்.
பதினேழாவது நூற்றாண்டை சேர்ந்த தத்துவவியலாளர் பரூக் ஸ்பினோசா ஒரு டச்சுக்காரர். அவர் டெகார்டேவின் இருபொருள்வாதத்தை பாதி மட்டுமே ஒத்துக் கொள்கிறார். மீதிப் பாதியில் கடவுளை சேர்த்துக் கொள்கிறார். ஆக சிந்திக்கும் சுயமும் அதன் நீட்சியான சுயமும் கடவுளில் இருந்தே ஏற்படுகின்றன. இது அனைத்திறைக் கொள்கை (pantheism) எனப்படுகிறது.
(தொடரும்)

1 comment:

anathe said...

"I think therfore i am"
ஒரளவுக்கு ஒத்துகொள்ளலாம்.