Friday, November 12, 2010

நாவலின் தகவல்கள் எத்தகையவை?


நாவலின் சமையற்குறிப்பு எனும் பதிவில் ஜெயமோகன் நாவலில் சித்தரிப்பும், தகவல்களை அடுக்கிக் கொண்டே போவதன் முக்கியத்துவத்தை பற்றி சொல்கிறார். உதாரணமாக ஒரு விஷ்ணுபுர பாணியிலான சித்தரிப்பை விளக்குகிறார். எப்போதுமே ஒரு செயலை சுருக்கி சொல்ல நாவலில் முயலக் கூடாது என்கிறார். அவன் கதவைத் திறந்தான் என்று எழுதுவது நாவல் அல்ல, கதவின் நிறம், நீள் அகலம், அறையின் வெளிச்சம் அல்லது இருள், சுற்றிலும் ஊறி வரும் ஒலிகள் என்று பல்வேறு தகவல்களை தந்து எழுதுவதே உத்தமம் என்கிறார். தனது கருத்தை அவர் இப்படி பொதுமைப்படுத்தலாமா என்ற விவாதத்தை பின்னால் வைத்துக் கொள்வோம். நான் இதை எழுத முற்பட்டது வேறொரு குழப்பத்தை தீர்க்க.

நாவல் தகவல்களால் உருவானது என்பது சரிதான். ஆனால் இத்தகவல்களின் நோக்கம் என்ன? ஜெயமோகன் இத்தகவல்கள் வாசகனின் மனதை ஒன்ற வைக்க பயன்படும் என்று மட்டும் சொல்லி செல்கிறார். படுக்கையை தூங்க மட்டும் பயன்படுத்துகிறோம் என்பது போன்றது இது. நுண்மையான, விரிவான தகவல்கள் இலக்கியத்தனமான, ஜனரஞ்சகமான நாவல்களில் உள்ளனதாம். அவை எப்படி வேறுபடுகின்றன என்பது முக்கியம். நல்ல நாவல்களில் தகவல்கள் தனியாக ஒரு கதை சொல்கின்றன. அவை உருவகமோ குறியீடோ படிமமோ ஆகின்றன. குறைந்த பட்ச தகவல்கள் சுவாரஸ்யத்தை நிலைக்க வைக்கவும், கதையை நம்பும்படி செய்யவும் பயன்படுகின்றன. உதாரணமாக ஜெயமோகனின் பெரும்பாலான எழுத்துக்களில் தகவல்கள் உருவகமாகின்றன. விஷ்ணுபரத்தை கா.நா.சுவின் பித்தப்பூவுடன் ஒப்பிட்டு பாருங்கள். பித்தப்பூவில் தகவல்கள் இப்படி உருவகமாவதில்லை. வர்ணனை தகவல்கள் ஒரு மனநிலையை உருவாக்கவும் பயன்படலாம். சிறந்த நாவல்களில் தகவல்களில் அவதானிப்புகள் பொதிந்துள்ளன. சில இலக்கிய நாவல்கள் கதைக்கோ மையநோக்கிற்கோ வளம் சேர்க்காத கலாச்சார, சமூகவியல் தகவல்களுக்காக மட்டுமே வெளிச்சம் பெற்றவை; தொடர்ந்து வாசிக்கப்படுபவை. உதாரணமாக, நீலபத்மநாபனின் தலைமுறைகள், பாமாவின் கருக்கு. ஜனரஞ்சக நாவல்களில் தகவல்கள் வெறுமனே சுவாரஸ்யத்துக்காக மட்டும் தொடர்ந்து அளிக்கப்படும். தகவல்களின் கிளர்ச்சிக்காகவே படிக்கிறோம். ஆர்தர் ஹெய்லி போன்றவர்கள் உதாரணம்.

சுருக்கமாக இலக்கியத்தில் தகவல்கள் வெறும் மசாலா அல்ல. ஊமையான தகவல்கள் தாம் சீரியசான் நாவல்களை மிக சலிப்பானவை ஆக்குகின்றன. ஜான் அப்டைக்கின் Rabbit is Rich படித்த போது எனக்கு இந்த பிரச்சனையே ஏற்பட்டது. ஒரு சூழலை நிறுவுவதற்கு, பொருண்மையான அடித்தளம் அமைப்பதற்கு ஓரளவு தகவல்களை குழைத்து நாவலை கட்டலாம். ஆனால் அதைவே தொடர்ந்து ஒரு நாவலாசிரியன் செய்தால் நாம் புத்தகத்தை குளிர்பதனப்பெட்டிக்குள் வைக்க வேண்டியது தான். ஆக தகவல்களின் ஆழம் பொறுத்து நாவல் ஒன்றின் தரத்தை நாம் கண்டறியலாம்.

ஜெயமோகனை குற்றம் சொல்ல நான் இதை எழுதவில்லை. அவர் இதே விசயத்தை 98இல் ஒருமுறை என்னிடம் சொல்லி இருக்கிறார். அப்போது நான் மிகவும் குழம்பியிருக்கிறேன். தவறு அவர் சொன்ன விதத்திலா அல்லது நான் விஷயங்களை ஜீரணிக்கும் முறையிலா என்பது உறுதியில்லை. காரணகாரிய முறையில் புரிந்து கொள்வதே எனக்கு வசதி. இதை எனக்கு நானே சொல்வதாகவோ என்னைப் போன்று சிந்தனை முறை கொண்டவர்க்கு என்றோ உத்தேசிக்கிறேன்.

7 comments:

மதுரை சரவணன் said...

//தகவல்களின் ஆழம் பொறுத்து நாவல் ஒன்றின் தரத்தை நாம் கண்டறியலாம். //


நாவல் பற்றி சுவரசியமாக சொல்லி உள்ளீர்கள் ... வாழ்த்துக்கள்

வருணன் said...

தோழரே நான் தற்போது ஜெயமோகனின் “நாவல் கோட்பாடு” படித்துக் கொண்டிருக்கிறேன். இவ்வேளையில் மிகச் சரியாக இப்பதிவு கண்ணில் பட்டது. ஆழ்ந்த யோசனைகளையும் சில கேல்விகளையும் துவக்கி வைத்திருக்கிறது இப்பதிவு என்னுள்.

நானும் கவிதைகள் கிறுக்குகிறேன். பொழுதிருந்தால் எனது வலைப்பூவிற்கு வருகை தாருங்கள்.

தங்களும் ஆசிரியர் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி...

Madumitha said...

தகவல் பலமா அல்லது
பலவீனமா என்பது
அந்தந்த நாவலைப்
பொறுத்தது.
நாவலைப் பொறுத்தவரை
There is no hard and fast rule.

Baski.. said...

"காடு" நாவலின் பலமே காடு பற்றிய சித்தரிப்புகளும் தகவல்களும் தான் என்று நினைக்கிறேன்.

ஆர்.அபிலாஷ் said...

ஆம் பாஸ்கி. அது ஒரு எளிய காதல் கதை மற்றும் ஒருவனின் வாழ்கை பரிணாமதத்தை சொல்லும் கதையும் கூட. அதிலுள்ள ஒவ்வொரு தகவலையும் ஜெயமோகன் உருவகமாக அல்லது குறியீடாக மாற்றுகிறார். நாவலின் வலு அதுதான். “காடு” என்பது இயற்கை தான். இயற்கைக்குள் நுழைவது. மைய பாத்திரம் இயற்கைக்குள் நுழைந்து இழக்கிறான், பெறுகிறான், வயோதிகத்தில் நினைவுகளை அசை போட்டு கழிக்கிறான். இயற்கை எனும் பெரும் இருப்பு குறித்த விசாரம். நாவல் முதல்நிலையில் பலரையும் வசீகரித்ததற்கு இந்த தகவல் உருவகங்கள் காரணம். ஆனால் இந்த உருவக சட்டையை உருவி விட்டால் நாவலின் கதி என்ன என்பதே பிரச்சனை. நான் பேசின சில கூர்மையான மனிதர்கள் காடு நாவல் அதிருப்தி அளிப்பதாய் சொன்னார்கள். அதற்கு மேற்கூறியதே காரணம். ஆனால் ஜெயமோகன் இயங்கும் பாணியை அறிய காடு ஒரு உதாரணம்.

jrc said...

Dear Mr Abilash,

On going through your writing on the subject, your reference about Jeyamohan is totally irrelevant and uncalled for. Perhaps, you may think, such sneerings against him may be liked by your bosses. If you are to be seriously read, please try to cross such literary adolescence.

- RAVICHANDRAN

ஆர்.அபிலாஷ் said...

அன்பர் ரவிச்ச்சந்திரன்
பின்னூட்டத்திற்கு நன்றி. நான் என் நண்பர்களை மட்டுமே கேலி செய்வேன். ஜெயமோகனை பற்றி சீரியஸாகவே எழுதுகிறேன். :)