Monday, October 25, 2010

நீட்சே: அறிமுகக் குறிப்புகள் 2

அப்பாவின் மரணத்தை எப்படி கடப்பது?நீட்சேவின் வாழ்க்கை நிகழ்வுகளை விட அவரைக் கவர்ந்த ஆளுமைகளின் பாதிப்பு அவரது கருத்தாக்கங்கள் உருவாக எப்படி பயன்பட்டன என்பது அறிவது ஒரு புதிய வெளிச்சத்தை தருகிறது. நீட்சேவின் அதிமனிதன், அதிகாரத்தை நோக்கிய மன ஊக்கம் போன்ற பிரபலமான கருத்தியல்களை தெளிவாக புரியவும் அவரது பின்புலத்தில் உள்ள சில ஆளுமைகளையும் அவர்களின் சிந்தனைகளையும் பரிச்சயப்படுத்துவது அவசியம். குறிப்பாக
முதலில், நீட்சேவின் அப்பா லுட்விக்
அடுத்து கீழ்வரும் சிந்தனையாளர்கள் (இவர்களை வரும் அத்தியாயங்களில் பேசலாம்)

ரிச்சர்ட் வாக்னர் (ஜெர்மானிய இசை அமைப்பாளர் மற்றும் கோட்பாட்டாளர்; 1813-83)
ஆர்தர் ஷோப்பன்ஹெர் (ஜெர்மானிய தத்துவவியலாளர்; 1788-1860)
சார்லஸ் டார்வின் (விஞ்ஞானி; 1809-82)
ஜேக்கொப் புக்ஹார்ட் (கலை மற்றும் நாகரிக வரலாற்று பேராசிரியர்; ஜெர்மானியர்; 1818-97)

அதற்கு முன் நீட்சேவின் குழந்தை மற்றும் பால்ய காலம் பற்றின சில குறிப்புகள்.

அம்மாவிடம் விட நீட்சேவுக்கு அப்பாவிடம் அபரிதமான நெருக்கமும் கற்பனாவாத பந்தமும் இருந்திருக்கிறது. இதற்கு அப்பா அவரது 36வது வயதிலே இறந்து போய் விட்டது காரணமாக இருக்கலாம். ஒரு வருடத்திற்கு பிறகு நீட்சேவின் தம்பியும் இறந்து விடுகிறார். பாரம்பரிய குடும்ப அமைப்பு சிதற நீட்சேவின் அம்மா தன் குழந்தைகள், நீட்சேவின் திருமணமாகாத இரு அத்தைகள் மற்றும் தாய்வழி பாட்டியுடன் நவும்பர்க் எனப்படும் பக்கத்து ஊரில் சென்று வாழ்ந்தார். இவ்வூர் ஒரு நெடுஞ்சுவாரால் சூழப்பட்டது. நவும்பர்க்கும் அவர் பிறந்த ஊரான ரோக்கனைப் போல் குறைந்த மக்கள் தொகை கொண்ட அந்நிய பிரவேசங்கள் அதிகம் அற்ற ஊர் தான். இங்கு நீட்சே பதிநான்கு வயது வரை வாழ்ந்தார். நீட்சேவின் அப்பா கார்ல் லுட்விக் காக்காய் வலிப்பால் அடிக்கடி அவதிப்பட்டார். அவர் ஒருவித மூளை நோயால் மரணப்பட்டார். லுட்விக்குக்கு மனநோய் இருந்ததாக ஒரு கதை நிலவுகிறது. தனக்கு மிக நெருக்கமான அப்பாவின் இளம் வயது மரணம் நீட்சேவை வாழ்க்கை நிலைப்பாட்டில் வலுவான பாதிப்பை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது. நீட்சே தான் தன் அப்பாவை போல் இளமையிலேயே இறந்து விடுவோம் என்று நம்பினார். நீட்சே தன் தொழில்வாழ்வில் வெற்றி அடைந்தாலும், அவரது கூர்மையான அறிவு மற்றும் வளமான ஆளுமைகாக நுண்ணுணர்வு கொண்டோரின் வட்டாரத்தில் புகழ் பெற்றிருந்தாலும், தோற்றத்தில் மிகுந்த கவனம் செலுத்துபவரும், திடகாத்திரமானவராகவும் திகழ்ந்த போதும் மணம் புரிந்து குடும்பம் வளர்ப்பதில் அதிக நம்பிக்கை அற்றவராக இருந்தார். திருமணத்தை அவர் ஒரு இடைக்கால லௌகீக வசதியாகத் மட்டும்தான் கருதினார். ஒரு நெடுங்காலப் பெண் துணை (அதாவது மனைவி) பற்றி நீட்சே கருத்தில் கொள்ளவே இல்லை என்பது சுவாரஸ்யமானது. நீட்சேவுக்கு தன் குறைவாயுள் பற்றி இருந்த விசித்திர நம்பிக்கை பெண்கள் மற்றும் குடும்பம் மீதான அவரது அணுகுமுறையை எந்த அளவுக்கு தீர்மானித்தது என்பது உங்கள் கற்பனை ஆற்றலை பொறுத்தது. ஆனால் நீட்சே மரணத்தை நேர்மறையாகக் கண்டார். இதை சுருக்கமாக விளக்குகிறேன்.

மரணம் என்பது அவருக்கு அதிமனிதர்களை தயாரிப்பதற்கான ஒரு தியாகமாக தெரிகிறது. உலகின் கீழ்மைகளை ஏற்றுக் கொண்டு கிறிஸ்து உயிர்த்தியாகம் செய்கிறார். இதன் பின்னுள்ள நிலைப்பாடானது உடல் அடிப்படையிலான வாழ்க்கை கீழானது என்பது. கிறித்துவம் உடலை பழிக்கும் ஒரு வலுவான தத்துவ நம்பிக்கையை கொண்டது. மேலும் நுணுக்கமாக பார்த்தால், உடலைக் கொண்டு புலன்களின் சாத்தியங்களை நம்பி நாம் அடையும் உண்மை முழுக்க பிழையானது; அதனால் உண்மையை காண நாம் மீபொருண்மை வழியை மேற்கொள்ள வேண்டும் என்றொரு தரப்பு தத்துவவாதிகள் இடையே உண்டு. இதனில் கிறித்துவத்துக்கு வேர் உண்டு.

உதாரணமாக சாக்ரடீஸ் மனிதனின் உண்மையை ஒரு பிரதியெடுக்கப்பட்ட உண்மை என்கிறார். ஆதி உண்மை ஒன்று உள்ளது; அதுவே அசலானது. நமது உலகம் என்பது பிரதிகளின் உலகம்; காகிதங்கள் பறக்கும் ஒரு பெரும் ஜெராக்ஸ் கடை. கிறித்துவம் இதனால் மனிதனை விட கிறித்துவை நம்ப சொல்கிறது. மனிதப் பிறவியில் அவர் கூட தன் புலன்களை நம்புவதில்லை; பிதாவின் கட்டளைப்படி சிலுவை ஏறுகிறார். உடல் மறுப்புவாதம் கிறித்துவத்தின் ஆதார கோட்பாடு. நீட்சே ஒரு மரபான கிறித்துவப் பாதிரியாரின் குடும்பத்தில் தோன்றி வளர்ந்தாலும், கல்லூரியில் மதக்கல்வி பெற்றாலும் தத்துவத்தில் தான் அவருக்கு அதிக ஈடுபாடு. அவர் தத்துவ மரபில் நின்றபடி தான் கடவுள் இறந்து விட்டார் என்கிறார். ஆனால் நீட்சே ஒரு இறைமறுப்புவாதி அல்ல. அவர் மீபொருண்மைவாத உண்மைத் தேடலின் மறுப்பாளர். உடலை மறுப்பவர்களின் எதிர்ப்பாளர். இந்த உலகை உடலைக் கொண்டு தான் புரியவும், மேன்மையாக வாழவும், ஆன்மீகப் பரிணாமத்துக்கு வழிகோலவும் முடியும் என்று நீட்சே நம்பினார். உடலை மறுத்து, வெறுத்து, அதிலிருந்து தப்பித்து நாம் எதையும் அடையப்போவது இல்லை என்று அவரது ஜாருதஷ்டிரன் கூறுகிறான் (Thus Spake Zaruthastra). இந்த மீபொருண்மைவாத மறுப்பின் காரணமாக நீட்சே இயல்பாகவே கிறித்துவத்தை எதிர்க்க வேண்டி வருகிறது. பாவம் என்ற கருத்தாக்கத்தின் கீழ் உடலை பலவீனமாக கருதும், அப்படியான பலவீனர்களை தங்கள் தவறுகளுக்கு சதா மன்னிப்பு கோரும்படி ஊக்குவிக்கும் மனப்பான்மையை நீட்சே கண்டித்தார். இது குறித்து மேலும் விளக்கமாக நாம் பிற்பாடு பேசலாம். ஐரோப்பாவில் அக்காலத்தில் மதம் ஏற்கனவே பலவீனப்பட்டிருந்தது. இந்த பின்னணியில் நீட்சே தன் தாக்குதலை தொடுக்கிறார். ஏற்கனவே ஆன்மீக ரீதியாக பலவீனமுற்றிருந்த நவீன மனிதன் கிறித்துவப் பாதையில் தாழ்வுமனப்பான்மையில் ஆழமாக புதைகிறான்; மதம் அவனது கீழ்மைகளை பிரதானப்படுத்தி எளிய சடங்குகளின் மூலம் அவனுக்கு கற்பனை விடுதலைகளை தருகிறது. இது நிலைமை மேலும் சீரழிக்கும் ஒரு தப்பித்தல் முறை மட்டுமே என்று நீட்சே நம்பினார். நீட்சேவின் ஆன்மீக அணுகுமுறை இதற்கு நேர்மாறானது. ஷோப்பன்ஹரின் கோட்பாட்டில் இருந்து அவர் உருவாக்கியது. இது குறித்தும் நாம் விரிவாக பின்னர் பேச இருக்கிறோம். ஆனால் நீட்சேவுக்கு கிறித்துவத்தின் மீது தனிப்பட்ட காழ்ப்பு ஏதும் இல்லை என்பதை இங்கு அழுத்தி சொல்ல வேண்டும். ஒரு கம்யூனிஸ்டு தன் மதத்தை எதிர்ப்பதை போல் அவர் கோட்பாட்டு ரீதியாகவே கர்த்தரை நிராகரித்தார். இறைமறுப்புவாதியாக நீட்சேவை புரிவது பிழையானது.

சொல்லப்போனால் பெரியாரைப் போன்று மதத்தை ஒரு சமூகவிரோத அமைப்பாக நீட்சே பார்க்கவில்லை. மார்க்ஸைப் போல் போதைமருந்து என்றும் அணுகவில்லை. சமூகத்தின் மேம்பட்ட கலாச்சார வாழ்வுக்கு மதம் அவசியம் என்று நீட்சே கருதினார். ஆனால் அம்மதம் கிறித்துவத்தை போல் அல்லாது தூய மிருக நிலையை முன்னிறுத்தும் கிரேக்கர்களின் டயோனா தெய்வ வழிபாட்டை போன்று இருக்க வேண்டும். இந்த மதம் பற்றின நிலைப்பாடு நமது சாரு நிவேதிதா மதம் மற்றும் கலை பண்பாட்டு வடிவம் மீது கொள்ளும் அணுகுமுறையை கிட்டத்தட்ட ஒத்தது  இத்தனையும் நாம் விவாதித்தது நீட்சே மரணத்தை எப்படி எதிர்கொள்கிறார் என்பதை புரிவதற்குத் தான். அவர் மரணத்தை ஒரு ஆன்மீக மீட்சியாகத் தான் சித்தரிக்கிறார். அவரும் கிறித்துவத்தைப் போல் மற்றொரு சிலுவையைத் தான் வடிக்கிறார். ஆனால் அது வானில் இருக்கும் சுவர்க்க வாழ்க்கைக்காக அல்ல. பூமியில் தோன்றி பூமியிலே மரிக்கப் போகும் மேம்பட்ட அதிமனிதனுக்காக; பூமியின் தேவகுமாரனுக்காக. கிறித்துவத்தின் மித்தை நீட்சே எப்படி உள்வெளியாக திருப்பி அணிந்து கொள்கிறார் என்பது சுவாரஸ்யமானது. அடுத்து, தனது வாழ்வு சுருக்கமானது என்பதை இளமையிலேயே தீர்மானிக்கும் நீட்சே அதற்கு தரும் நேர்மறையான திருப்பமா இந்த அதிமனித கோட்பாடு? அதிமனிதனை இந்த பூமிக்கு வரவேற்று தோதான சூழல் அமைக்க மனிதன் தன் அனைத்து ஆற்றலையும், காலத்தையும் தியாகம் செய்ய தயங்க வேண்டியதில்லை; அப்படி மரிப்பவன் அதிமனிதன் மூலம் தன் சுயத்தை நீட்டிக்கிறான் என்கிறார் நீட்சே. என்றோ வரப்போகும் ஒருவனுக்காக எதற்கு வீணே சாக வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் இங்கு மரணம் என்பது வெறும் உடல் மரணம் அல்ல. மனதின் உள்கட்டுகளை உடைத்து வெளிவருதல்; அதனால் வேண்டுமென்றால் மனம் சிதறி நிட்சேயைப் போல் பைத்தியமாதல், பாரதியை போல் சமூக நிந்திப்புக்கு உள்ளாகி சாதல். எப்படியாயினும் நீட்சேவின் சிந்தனையில் மரணம் அடிக்கடி குறிக்கிடும் எண்ணமாக இருக்கிறது. ஆனால் அவரது மரண அணுகுமுறையில் துளியும் சோர்வில்லை என்பது தான் மேலும் குறிப்பிடத்தக்கது. Ecce Homo நூலில் நீட்சே தன் அப்பாவை பற்றி இப்படி குறிப்பிடுகிறார்:

“அவர் மென்மையானவர், பிரியத்துக்குரியவர் மேலும், இவ்வுலகுக்கு ஒரு தற்காலிக பிரயாணம் மட்டுமே மேற்கொள்ளும் படி விதிக்கப்பட்ட உயிரைப் போன்று, அழியும் உடல் பெற்றவர் வாழ்வு என்பதை விட வாழ்வின் ஒரு கனிவான நினைவுறுத்தல்.
அப்பாவுக்கானதாக நீட்சே குறிப்பிடும் பண்புகள் வாழ்வுக்கானதும் என்பதை கவனியுங்கள். அழிவுக்குரிய உடலை அவர் நிந்திக்கவில்லை; வெட்கி மறுக்கவில்லை. மேன்மையாக வாழ்ந்தால் மரணத்திற்கு முன்னரும் பின்னரும் வாழ்வின் முக்கியத்துவம் குன்றுவதில்லை. காலத்தின் நெடும் இயக்கத்தில் மரணம் இடைபடும் ஒரு திரை அவ்வளவு தான். திரைக்கு அப்பால், எலும்புகளும் நிணமும் சிதறிய அழிவின் பெரும்பரப்புக்கு அப்பால் வாழ்வு மேலும் மகோன்னதமாகும் என்று அவர் நம்பினார். இந்த வாழ்வின் மீதான உவகை மற்றும் நவீன மனிதனின் பண்பாட்டு மீளெழுச்சி மீதான் நம்பிக்கை காரணமாகத் தான் நாம் அனைவருக்கும் நீட்சே பிரியத்துக்குரிய சிந்தனையாளராக உள்ளார்.

No comments: