Saturday, September 18, 2010

உலகக் கோப்பை: தோனியின் முன்னுள்ள இரு கேள்விகள்
வரப்போகும் கிரிக்கெட் உலகக் கோப்பையை முன்னிட்டு இந்திய அணி மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளும், கட்டி எழுப்பப்படும் அவநம்பிக்கைகளும் சற்று மிகையானவையே. சமீபத்திய சில ஏமாற்றங்களை கணக்கில் கொண்டாலும் சொந்த ஆடுகளங்களில் இந்தியா மிக வலுவான அணியாகவே உள்ளது. அணிகளின் இதுவரையிலான பொதுவான ஆட்டவரலாற்றின் படி ஆஸ்திரேலியா மற்றும் இலங்கையுடன் கோப்பையை வெல்லும் சரிசமமான வாய்ப்பு இந்தியாவுக்கும் உண்டு.
இந்தியாவுக்கு உள்ள வெளிப்படையான பலவீனங்களும், அதனால் சந்திக்கப் போகும் பிரச்சனைகளும் வரும் உலகக் கோப்பைக்கு முன் தீர்க்க முடியாதவை. ஆனால் அவை என்ன என்பதில் ஒரு தெளிவும், தற்காலிக தப்பித்தல்களை வரையறுப்பதும் அணிக்கு அவசியம். தோனியின் முன்னுள்ள முக்கிய சவால்கள் அவையே. நாம் இங்கு இரண்டை கவனிக்கலாம்.

முதலில் தோனி மட்டையாட்ட பவர் பிளே மற்றும் இறுதி ஸ்லாக் ஓவர்கள் உள்ளிட்ட பதினைந்து ஓவர்களில் ஓட்டங்களை கட்டுப்படுத்தி வீசுவதற்கான ஒரு சிறப்பு பந்தாளரை முடிவு செய்ய வேண்டும். இந்தியாவின் வரலாற்றில் அப்படி ஒரு யார்க்கர் நிபுணர் இருந்ததில்லை. (அகார்க்கர் ஓரளவு அந்த கிரீடத்தில் தூசு படியாமல் பார்த்துக் கொண்டார்). தோனியின் முன்னுள்ள கேள்வி இதுதான்: புதிதாய் ஒருவரை இவ்விடத்தில் கொண்டு வருவதா அல்லது ஏற்கனவே துண்டு போட்டு வைத்திருக்கும் பழுத்த வீரர்களை நம்பி இப்பொறுப்பை ஒப்படைப்பதா? இலங்கையில் நடந்து முடிந்த முத்தரப்பு தொடரின் இறுதி ஆட்டத்தில் முனாப் படேல் ஸ்லாக் ஓவர்களில் சாமர்த்தியமாக வீசினார். அவரை ஸ்லாக் ஓவர் நிபுணராக பயன்படுத்துவதானால் பிரவீனை அணியில் இருந்து விலக்க வேண்டும். சமீப காலமாக புதுப் பந்தை சிறப்பாக பயன்படுத்தி ஏராள விக்கெட்டுகளை சாய்த்து வரும் பிரவீனை கக்கத்தில் வைப்பதா கையை தூக்குவதா என்பதே தோனியின் முதல் குழப்பமாக இருக்கும்.

அடுத்து சிக்கல் ரவீந்திர ஜடேஜாவின் ஆதாரத் திறமை என்ன, அவரது அடையாளம் என்ன என்பது. ஜடேஜா ஆரம்பத்தில் தனது மட்டையாட்டத்துக்காக விதந்தோதப்பட்டு பெரும் எதிர்பார்ப்புகளுடன் களமிறக்கப்பட்டார். இங்கிலந்தில் நடந்த T20 உலகக் கோப்பையின் போது இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆரம்ப விக்கெட்டுகள் சரிய, நிலையாக ஆடும் பொறுப்பை ஒப்படைக்கும் அளவுக்கு தோனிக்கு ஜடேஜா மீது நம்பிக்கை இருந்தது. ஆனால் அந்த ஆட்டத்தில் பதற்றமடைந்ததால் ஜடேஜாவில் அதிரடியாக ஆட முடியவில்லை. ஆட்டத்தை இந்தியா இழந்ததற்கு இதுவும் ஒரு காரணமாக ஜடேஜா கடுமையான நெருக்கடிக்கு உள்ளானார். அன்றில் இருந்து எந்த இந்திய தோல்விக்கும் விமர்சன பலிகடா ஜடேஜா தான். அடுத்து ஜடேஜா தன் பந்துவீச்சை கூர்மையாக்கினார். ஹர்பஜனை விட கட்டுப்பாட்டுடன் வீசினார். தோனி “ஜடேஜா ஒரு மட்டையாட்ட ஆல்ரவுண்டர் அல்ல, பந்துவீச்சு ஆல்ரவுண்டர் என்று அறிவித்து மீடியாவிடம் இருந்து தன் பலி ஆட்டை பாதுகாத்தார். பின்னர் ஐ.பி.எல் உடன்பாட்டை மீறி மும்பை அணிக்காக ஆட முயன்றமைக்காக ஜடேஜா கடந்த ஐ.பி.எல் தொடர் முழுக்க தடை செய்யப்பட்டார். இது அவரது தன்னம்பிக்கையை உருக்குலைத்தது; நிர்பந்திக்கப்பட்ட ஓய்வில் அவரது ஆட்டத்திறன் துருவேறியது. பின்னர் அவர் கடுமையாக முயன்று பந்து வீச்சுத் திறனை மீட்டெடுத்தாலும், மட்டையாட்டம் கிட்டத்தட்ட மறந்து போயிருந்தது. இலங்கையில் நடந்த சமீப தொடரில் நியூசிலாந்துக்கு எதிராக உயரப்பந்துக்கு அவர் புட்டத்தை காட்டியபடி ஆடிய வினோத முறை அணி மேலாண்மையை வெட்கப்பட வைத்திருக்க வேண்டும். மீண்டும் விமர்சனம் எழ, தோனி “ஜெடேஜா ஆல்ரவுண்டர் அல்ல, முதன்மை பந்து வீச்சாளர் என்றார். இந்த அறிக்கைக்கு நியாயம் செய்யும் விதத்தில் முத்தரப்பு தொடர் இறுதி ஆட்டத்தில் ஜடேஜா இடத்தில் தோனி ஒரு முதன்மை மட்டையாளரை கொண்டு வந்தார். இங்கு நிஜமான பிரச்சனை ஜடேஜா ஒரு இயல்பான, மரபுவழி சுழலர் அல்ல என்பதே. அவர் ஒரு புத்திசாலி சுழலர் மட்டுமே. பந்துவீச்சில் அவரை விட சேவாக் அதிக திறமையானவர். யுவ்ராஜால் ஜெடேஜாவை விட கட்டுப்பாடாக பத்து ஓவர் இடதுகை சுழல் வீச முடியும் என்பது மட்டுமல்ல, அவர் அதிக விக்கெட்டுகளும், அனுபவமும் கொண்டவர். ஜெடேஜாவால் தன் பந்து வீச்சால் இவ்விருவரையும் மிஞ்ச முடியாது. இந்த பட்சத்தில் ஹர்பஜன் அணிக்கு திரும்பும் பட்சத்தில் தோனி ஜடேஜாவை முழுநேர\பகுதிநேர சுழலராக பயன்படுத்தும் நியாயம் என்னவாக இருக்கும்? ஜடேஜாவை அவர் இனி எப்படி அடையாளப்படுத்தப் போகிறார்?

இந்த குழப்பங்களுக்கான விடை நமது உலகக் கோப்பை வெற்றி வாய்ப்பை அதிரடியாக பாதிக்காது என்றாலும் ஒரு தெளிவான ஆரம்பத்துக்கு வழிகோலும்.

1 comment:

Akash said...

அஸ்வின் ஐ ஜடேஜா க்கு பதிலாக எடுக்கலாம். அவர் திறமையான பந்து வீச்சாளர். ஐபில், சாம்பியன் லீக் போட்டிகளில் எல்லாம் தனது திறமையை நீருபித்துள்ளர். அதே போல யுவராஜ் சிங்ககிண form உம கவலை அளிப்பதாக உள்ளது.