Saturday, September 18, 2010

இந்திய பந்து வீச்சின் பொற்காலமும் வரலாற்றின் அழுத்தமும்
தற்போதைய இந்திய அணியை அலசும் விமர்சகர்கள் முதலில் சுட்டுவது பந்துவீச்சு பலவீனத்தை தான். தோனியின் நான்கு வருடங்களுக்கு மேலான தலைமையின் கீழ் நமது வீச்சாளர்கள் நேர்ச்சை ஆடுகளாக எப்போதும் தோற்றம் அளித்து வந்துள்ளார்கள். முன்னணி பந்து வீச்சாளர்கள் தங்களுக்கு சவால் விட வேறு யாரும் இல்லாத காரணத்தினாலே தொடர்ந்து இடத்தை தக்க வைக்கும் வருந்தத்தக்க நிலைமை உள்ளது.
அவர்களும் காயத்தினால் விலகும் பட்சத்தில் பரிட்சையில் காப்பி அடித்து மாட்டிக் கொள்வது போல் அணித்தலைமை மற்றும் தேர்வாளர்கள் முழிக்கும் சங்கடமான சூழ்நிலை ஏற்படுகிறது. கிரிக்கெட் மீடியாவால் ஒரே நேரம் மிகைப்படுத்தி கொண்டாடவும் கடுமையாக விமர்சிக்கக் கூடிய ஒன்றாகவும் மாற்றப்பட்டு விட்ட இந்த காலத்திருப்பத்தில் விவாதத்துக்கு உள்ளாகும் செய்திகள் அல்லது பிரச்சனைகளின் நியாயத்தை மற்றும் நிஜத்தன்மையை நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். மீடியா விமர்சகர்கள் ஆவேசமாக சொல்வது போல் தோனி அணியின் பந்து வீச்சு பலவீனம் இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டின் பொதுவான போதாமையை, ஆழமின்மையை, வாரிய நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் மற்றும் அணி மேலாண்மையின் பொறுப்பின்மையை சுட்டுகிறதா? கடந்த ஐந்து வருடங்களில் இந்திய பந்து வீச்சின் தரம் குறிப்பிடும்படியான வீழ்ச்சியை கண்டுள்ளதா?
கடந்த ஐந்து வருடங்களில் இந்த கேள்வி இந்திய கிரிக்கெட்டின் பல்வேறு தளங்களில் ஒரு அதிர்வை ஏற்படுத்தி உள்ளது. விளைவாக தோனி தலைமையின் கீழ் முதல் முறையாக அணிக்கு ஒரு பந்து வீச்சு பயிற்சியாளர் நியமிக்கப்பட்டார். வெங்கடேஷ் பிரசாத். கூடவே களத்தடுப்பு பயிற்சியாளராக ராபின் சிங்கும் சேர்க்கப்பட்டார். கிர்ஸ்டனுக்கு இதில் அதிருப்தி என்று தகவல். ஒரு குறுகிய அவகாசத்துக்கு பின் பிரசாத் நீக்கப்பட்டார். பின்னர் எரிக் சிம்மன்ஸ் பந்து வீச்சு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். தோனியின் கீழ் தான் அதிகபட்சமான புது வேக வீச்சாளர்கள் முயன்று பார்க்கப்பட்டார்கள் – 16. உள்நாட்டு போட்டிகளுக்கான ஆடுகளங்களை வேகமானவையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ச்சியாக வைக்கப்பட்டது. விளைவாக கடந்த ரஞ்சி கோப்பை தொடரின் போது ஆடுகளம் வேகவீச்சுக்கு சாதகமாக மாற்றப்பட்டது. வழக்கத்துக்கு மாறாக இக்கோப்பை தொடரில் வேக வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினார்கள். மிக அதிகமான விக்கெட்டுகள் வேகவீச்சுக்கு வீழ்ந்தது. ஆனால் பந்து வீச்சின் தரம் மட்டும் சமதளத்திலே இருந்தது. ஸ்ரீசாந்த், நெரா, சகீர்கான் போன்ற முன்னணி வீச்சாளர்கள் காயம் காரணமாக ஆட இல்லை. இஷாந்த், பதான், ஆர்.பி சிங், பாலாஜி போன்ற படிநிலையில் அடுத்த தட்டை சேர்ந்தவர்களின் ஆட்டநிலை மேம்படவில்லை. நம்பிக்கைக்கு உரியவர்களாய் கருதப்பட்ட தவல் குல்கர்னி, சுதீப் தியாகி போன்றோர் ஏமாற்றமளித்தார்கள். பெரும்பாலான முக்கிய வீச்சாளர்கள் நன்றாக மட்டையாடினார்கள். இப்படி ஆடுகள மண்ணை மாற்றி பதப்படுத்தியதன் விளைவாக பயன்பெற்றவர்கள் சுமாரான வீச்சாளர்கள் மட்டுமே. ஆடுகளத்தின் அபரித உதவியால் அவர்கள் அச்சுறுத்துக்கூடியவர்களாக தோன்றினார்கள். 2009-10 ரஞ்சி தொடர் விறுவிறுப்பாக இருந்தாலும், களத்தை மரபான தன்மையில் இருந்து மாற்றியமைக்காக இந்திய வாரியம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்த வேகவீச்சு சார்பு ஆட்டங்களில் இருந்து நாம் கண்டடைந்த இரு பந்து வீச்சாளர்கள் வினய் குமாரும் மிதுனும் மட்டுமே. இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே வேறெப்போதும் வேகவீச்சு நிர்வாகம், அணி மற்றும் ரசிகர்களின் கற்பனையை இவ்வளவு ஆக்கிரமித்தது இல்லை; கடுமையான ஏமாற்றங்களையும் விவாதங்களையும் உருவாக்கியதும் இல்லை.

இந்தியா என்றுமே வேகப்பந்தாளர்களுக்காக அறியப்பட்டது இல்லை. இங்கிலாந்தின் ஆடுகளமும் சூழலும் மிதவேக வீச்சுக்கு தோதாக அமைந்ததனால் தான் 83 உலகக் கோப்பையை இந்தியா வென்றது. எண்பதுகளில் கபில்தேவ், தொண்ணூறுகளில் ஸ்ரீநாத், ரெண்டாயிரத்துக்கு பிறகு சஹீர் என்று உலகத்தரமான வேகவீச்சாளர் ஒருவரைத் தான் இந்திய கிரிக்கெட் பத்து வருடங்களுக்கு ஒருமுறை கண்டெடுத்து வந்துள்ளது. இவர்களுக்கு என்றுமே வலுவான துணை இருந்ததில்லை. அமர்சிங்-முகமது நிசாருக்கு பிறகு கடந்த 78 வருடங்களில் இந்தியாவால் ஒரு வேகவீச்சு ஜோடியை கூட கண்டெடுக்க முடியவில்லை. நாம் மட்டையாட்டத்தில் நிபுணத்துவம் பெற்றவர்களாக என்றும் இருந்து வந்திருக்கிறோம். விடுதலைக்கு முந்தின காலத்திலேயே ரஞ்சித் சிங்ஜி இங்கிலாந்து கவுண்டி ஆட்டங்களில் பங்கேற்று பெரும் பாராட்டையும் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளார். ஆனால் முற்றிலும் மாறுபட்ட ஒரு மரபு பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்க போன்ற அணிகளுக்கு இருந்துள்ளது. வரலாறு வேறு விதமாய் உள்ள போது பந்து வீச்சுத் தரம் வீழ்ந்து விட்டதாக நாம் ஏன் விசனிக்கிறோம்? எழுந்தால் தானே விழுவதற்கு! இந்த விசும்பல்களுக்கு இரு காரணங்கள் உள்ளன.

இந்திய நவீன கிரிக்கெட்டின் நான்கு பெரும் ஆளுமைகளான சச்சின், கங்குலி, திராவிட் மற்றும் தோனியின் தலைமை காலங்கள் பந்து வீச்சின் வேறுபட்ட பருவங்களை சுட்டுவதாக இருப்பன. முன்னணி பந்து வீச்சாளர்களின் காயம், ஓய்வு அல்லது புதிய வீச்சாளர்களின் வரவு அவர்களது வெற்றிகள் மற்றும் பொதுவான அணுகுமுறையை தீர்மானிப்பதாக இருந்தது. பொதுவாக மட்டையாட்டத்தின் தரம் நிலையாகவே நால்வரின் கீழும் இருந்தது. தொண்ணூறுகளின் பிற்பகுதியில் இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட முக்கிய அயல்நாட்டு பயணங்களை இந்திய அணி மேற்கொண்டது. இந்த கட்டத்தில் சச்சின் தலைவரானார். அப்போது இந்தியாவின் ஒரே வேகப்பந்து நட்சத்திரமாக இருந்த ஸ்ரீநாத்தை தென்னாப்பிரிக்காவில் அதிமாக வேலை வாங்க வேண்டிய கட்டாயம் சச்சினுக்கு ஏற்பட்டது. அடுத்து வந்த மேற்கிந்திய தீவுகள் பயணத்தில் ஸ்ரீநாத்துக்கு தோள்பட்டை காயம் ஏற்பட்டு அவர் தொடர்ந்து பல தொடர்களில் பங்கெடுக்க இல்லை. மே.இ தீவுகளில் இருந்து திரும்பிய பின்னர் ஒரே சுழல் நட்சத்திரமான கும்பிளே முதன்முறையாக ஆட்டநிலையில் பின்தங்கினார். அவர் அணியில் இருந்து விலக்கப்பட்டார். தொண்ணூறுகளின் பிற்பகுதியில் திராவிட் மற்றும் கங்குலியை தவிர குறிப்பிடத்தகுந்த திறமைகள் யாரும் கண்டடையப்படாத நிலையில் சச்சினின் அணி எப்போதும் தடுமாற்ற நிலையிலே இருந்தது. தொடர்ச்சியான தோல்விகளுக்கு பிறகு ஓட்டங்கள் வறண்டு போன சச்சின் நீக்கப்பட்டு அசருதீன் தலைவரானார். அவர் அதிர்ஷ்டத்துக்கு அப்போது கும்பிளேவும் சச்சினும் சிறந்த ஆட்டநிலைக்கு திரும்பினார்கள். ஸ்ரீநாத்தும் உடல்தகுதி பெற்றார். இதனால் அசருதீன் தனது இரண்டாம் ஊழத்தில் நன்றாகவே சுதாரித்தார். ஆனால் இக்காலகட்டத்தில் புதிய பந்தை நிலையாக சில ஓவர்கள் வீசி அதிக சிரமமளிக்காமல் சுழலர்களிடம் பத்திரமாக அளிப்பதே வேகவீச்சாளர்களின் ஒரே பணியாக இருந்தது. சற்றேனும் சிரமத்தை அளிப்பதானால் அது ஸ்ரீநாத்தாக தான் இருக்கும். அசருதீனின் இரண்டாம் வரவை கும்பிளே மற்றும் அவரது உதவியாள சுழலர்கள் இன்றி நாம் கற்பனையே பண்ண முடியாது. ஒருநாள் ஆட்டமென்றால் முப்பது ஓவர்களுக்கு குறையாமல் சுழல் தான். அசர் பின்னர் நீக்கப்பட்டு தற்காலிகமாக சச்சின் பதவிக்கு வந்து மேலும் கொஞ்சம் மதிப்பை இழந்து ராஜினாமா செய்தபின் கங்குலியின் தலைமைப் பருவம் ஆரம்பித்து இந்திய கிரிக்கெட்டின் நிறத்தை அதிரடியாக மாற்றியது. கங்குலி சுழலர்களை ஜீரணிக்காத, வேகவீச்சை முக்கியமாக கருதிய தனித்துவமும், அதிகாரமும் நிரம்பிய தலைவராக விளங்கினார். பல ஆட்டங்களில் கும்பிளேவை இறுதி 11 இல் சேர்க்காமல் ஆடும் அளவுக்கு கங்குலி வேகவீச்சு முன்னெண்ணம் கொண்டவராக இருந்தார். தனிப்பட்ட மட்டையாட்டத்திலோ கங்குலி சுழலர்களை ஆட விரும்புபவராகவும், வேகவீச்சாளர்களின் உயரப்பந்துகளை கொக்கி போல் வளைந்து தவிர்ப்பவராகவும் இருந்தார். கங்குலியின் இந்த தனிப்பட்ட ஆட்ட விருப்பத்தேர்வு அவரது வேகவீச்சு ஆதரவை எந்தளவு பாதித்தது என்பது ஒரு ஆர்வமூட்டும் கற்பனையாக உள்ளது. கங்குலி புதுவீரர்களை கண்டடைய தேர்வாளர்களின் வாக்கை மட்டும் நம்பியிராமல் இம்ரான்கானைப் போன்று உள்ளுணர்வை நம்பி செயல்பட்டார். ஒரு பயிற்சி முகாமில் சஹீர்கானின் திறமையால் கவரப்பட்டு அணிக்குள் கொண்டு வந்தார். U-19 உலகக்கோப்பை அணியில் இருந்து அனுபவமற்ற சிறுவனான இர்பான் பதானை ஆஸி அணிக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் பந்து வீச அழைக்கும் துணிச்சல் மிக்கவராக இருந்தார். பின்னர் காயத்தில் இருந்து திரும்பிய ஆஷிஷ் நேராவும் அனுபவமிக்க ஸ்ரீநாத்தும் 2003 உலகக் கோப்பை வரை சஹீருடன் ஒரு வலுவான மூவரணியாக ஆடினர். உலகக் கோப்பையின் போது இவர்களின் கூட்டணி விசேசமாக பேசப்பட்டது. 140 கிமீ மேல் தொடர்ச்சியாக வீசி ஆரம்ப விக்கெட்டுகளை கூட்டாக சாய்த்தனர். கங்குலி இளைஞர்களை தொடர்ந்து ஊக்குவிப்பவராக இருந்தார். அவர்களை தனக்கு விசுவாசமிக்க ஆதரவாளர்களாக மாற்றினார்..19 வயதுக்கு உட்பட்டோரின் ஆட்டங்களில் சோபித்தவர்களான ஆர்.பி சிங், இர்பான் பதான், ரஞ்சி தொடரில் கவனம் கவர்ந்த பாலாஜி ஆகியோர் இந்த பட்டியலில் சேர்ந்து கொள்ள ரெண்டாம் நிலை வீச்சாளர்களின் தரமும் உயர்வாக இருந்தது. வரலாற்றில் முதல் முறையாக இந்தியா சுழலர்களை சாராமல் வேக பந்துவீச்சைக் கொண்டு பல வெற்றிகளை, குறிப்பாக அயல்பயணங்களை, பெற்றது.. உலக அளவில் விமர்சகர்கள் இந்தியாவின் உள்நாட்டு கிரிக்கெட் அமைப்பை, ஆட்டதரத்தை, இளம் திறமைகளின் செழிப்பை பாராட்டினர். இந்தியாவின் உள்நாட்டு கிரிக்கெட் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதான ஒரு சித்திரத்தை மேற்குறிப்பிட்ட இருபது வயதுக்கு உட்பட்ட திறமையாளர்கள் ஏற்படுத்தினர்.
சுவாரஸ்யம் என்னவென்றால் இவர்களில் பலரும் உள்நாட்டு ஆட்டங்கள் மூலம் அல்ல, பத்தொன்பது கீழானவர்களின் தொடர்கள், A அணியின் அயல்நாட்டு பயணங்கள் மூலம் கவனம் பெற்றவர்கள். பார்த்திவ் படேல் எனும் Huggies விளம்பரத் தோற்றம் கொண்ட பாலகன் மற்றும் இர்பான் போன்றவர்கள் உள்ளூர் ஆட்டங்களில் கால்பதிக்காதவர்கள் அல்லது நடைபழகிக் கொண்டிருந்தவர்கள். இந்த நடைமுறை மிக சமீபமாக தோனியின் காலகட்டம் வரை பிரபலமாக இருந்தது. இவ்வாறு மத்திய 2000த்தின் வேகவீச்சு எழுச்சிக்கான அங்கீகாரமும் பாராட்டும் இந்திய உள்ளூர் கிரிக்கெட் அமைப்புக்கு அதன் தகுதிக்கு அப்பாற்பட்டு விமர்சகர்களால் அளிக்கப்பட்டது. கங்குலியின் கீழான வேகவீச்சாள குழு ஸ்ரீநாத்தின் ஓய்வுக்கு பின்னரும் சளைக்காதபடி வலுவாக இருந்தது. கங்குலி நீக்கப்பட்ட பின் திராவிடின் தலைமையின் கீழ் நீண்ட காலம் சஹீர்கான் மற்றும் நேரா காயம் காரணமாக ஆடாமல் இருந்தனர். ஆனாலும் பாலாஜி, இர்பான் பதான் மற்றும் ஆர்.பி சிங்கின் ஆட்டத்திறன் உச்சத்தில் இருந்ததாலும் முனாப் படேல் மற்றும் ஸ்ரீசாந்தின் பங்களிப்பினாலும் பாகிஸ்தான், மே.இ தீவுகள் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு சென்று ஆடிய தொடர்களில் இந்தியாவால் திராவிட் தலைமையின் கீழ் முதல்முதலாக தொடர் வெற்றிகளை பெற முடிந்தது. இப்படி ரெண்டாயிரத்தின் பாதி வரை இந்திய வேக வீச்சின் ஆற்றல் ஒரு அணையாத எரிமலையைப் போன்று திளைத்தபடியே இருந்தது. தொண்ணூறுகளில் ஸ்ரீநாத் காயம்பட்ட போது மேற்கிந்திய தொடரை வெல்லும் எண்ணத்தையே சச்சின் கைவிட்டார். தற்போது இலங்கையில் சஹீர்கானை இழந்த உடன் தோனியும் ஏறத்தாழ இத்தகைய மனநிலையிலேயே இருந்தார். நடுவில் ஒரு ஐந்து வருடங்கள் நம்மால தொடர்ச்சியாக சிறந்த வேக வீச்சாளர்களை எப்படி தொடர்ச்சியாக அறிமுகப்படுத்த, ஸ்ரீநாத், சஹீர், நேரா போன்றோரின் இன்மையை சுலபமாக தன்னிம்பிக்கையோடு எதிர்கொள்ள முடிந்தது? இந்த ஆச்சரியமான அதிர்ஷ்டம் ஒரு சந்தர்ப்பவசமான திருப்பம் மட்டும் தான்.
திராவிட் டாஸ் வென்றதும் துணிச்சலாக பந்து வீச தேர்வு செய்கிற தலைவராக இருந்தார். 16 ஆட்டங்களில் தொடர்ச்சியாக இந்தியா இரண்டாவது முறை மட்டையாடி இலக்கை அடைந்து சாதனை படைத்தது. இது அவரது அணியின் மட்டையாட்ட வலிமையை மட்டுமல்ல பந்து வீச்சின் மீதான நம்பிக்கையையும் சுட்டுகிறது. முன்னூறுக்கு மேல் விரட்ட வேண்டியிருக்கும் என்ற பயத்தினால் தோனி பெரும்பாலும் டாஸ் வென்றால் மட்டையாடத் தான் தேர்கிறார். திராவிடின் தலைமைப் பருவத்துடன் இந்திய கிரிக்கெட்டின் வேகவீச்சு வசந்தமும் கிட்டத்தட்ட முடிவுக்கு வருகிறது. முனாப் படேல், பாலாஜி, இர்பான் பதான் என ஒவ்வொருவராக காயமுற்று வெளியேறுகிறார்கள். உள்ளூர் அளவிலும் எந்த புது கண்டுபிடிப்பும் நிகழவில்லை. திராவிடுக்கு பின்னர் தற்காலிகமாக தலைமை தாங்கிய கும்பிளேவின் பருவத்தின் அறிமுகமான முக்கிய பந்து வீச்சாளர் இஷாந்த் மட்டுமே. இங்கிலாந்திலும் பின்னர் ஆஸ்திரேலியாவிலும் மிகச்சிறப்பாக வீசிய ஆர்.பி சிங் அடுத்து காயமுறுகிறார். காயத்திலிருந்து மீண்டு வந்த அனைவரையும் கவரும் இர்பான் பதானுக்கும் அதிர்ஷ்டம் இல்லை; அவரும் காயத்தினால் வெளியேறுகிறார். கும்பிளே தோனியிடம் சாவியை தந்து போகையில் இஷாந்த் மற்றும் சஹீரைத் தவிர இந்தியாவின் பந்து வீச்சு கையிருப்பு காலியாக உள்ளது. உள்ளூர் ஆட்டங்களில் முன்னெப்போதையும் விட கடுமையான வறுமை. கங்குலியின் தலைமையில் பந்து வீச்சு உச்சத்தை எட்டினால் இப்போது தோனியின் வருகையின் போது சுவடே இல்லை. ஏற்கனவே அறிமுகமானவர்கள் காயத்தில் இருந்தோ ஆட்டத்திறனின் வீழ்ச்சியில் இருந்தோ பிறகு மீளவே இல்லை. ஒரு சுமோ வீரனை போல் மட்டையாட்டத்தால் மேல்பக்கம் வீங்கிய அணியாக இந்தியா தன் மரபான நிலைக்கு மீள்கிறது.

கூடுதலாக தோனியின் கீழ் அதிரடியான மட்டையாளர்கள் அதிகம் சேர்க்கப்படுகிறார்கள். தோனியின் முதல் தலைமைத் தொடர் T20 உலகக் கோப்பையாக இருந்ததும், ஐ.பி.எல்லின் கோலாகல வரவும் இந்திய மட்டையாட்டத்தின் தற்சமய அச்சுறுத்தும் ஆக்ரோசத்தின் பின்னணியாக அமைந்தன. அத்துடன் தலைமைப் பொறுப்பு மறுக்கப்பட்ட யுவ்ராஜும், அணியில் இருந்து நீக்கப்பட்ட சேவாகும் மறுவரவு நிகழ்த்த தங்களை மிக தீவிரமாகவும் அழுத்தமாகவும் வெளிப்படுத்தின பருவம் அது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் போட்டிகளில் பவர் பிளே எனப்படும் ஐந்து ஓவர்களுக்கான உபரி களத்தடுப்பு கட்டுப்பாட்டை ஒரு விதியாக்க, துணைக்கண்ட நாடுகளில் 400 ஓட்டங்கள் மட்டுமே பாதுகாப்பான இலக்கு என்ற நிலைமை ஏற்பட்டது. தோனி இந்நிலைமையை நன்கு புரிந்து கொண்டு மட்டையாட்டத்தை அதிகம் நம்பி இயங்கினார். கங்குலி, திராவிடை விட எதிர்மறையான கள அமைப்புகளை பயன்படுத்தினார். விக்கெட்டுகள் சாய்ப்பதை விட ஓட்டங்களை வறள வைப்பதில் முனைப்பு காட்டினார். தோனியின் ஆரம்பகால தொடர் வெற்றிகள் பல கூட்டான முயற்சிகளாலும், துணைக்கண்ட ஆடுகளங்களில் அதிகம் ஆடும் சந்தர்ப்ப சூழ்நிலையாலும் வாய்த்தவை. தோல்விகளின் விகிதம் அதிகமாக விழித்துக் கொண்ட மீடியாவும் பார்வையாளர்களும் பந்து வீச்சின் மழுங்கின தன்மையை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தனர். எந்த தோல்வியின் பின்னரும் தோனி தனது வீச்சாளர்களை விட்டுக் கொடுக்க தயங்கினார். “இந்தியா ஒரு வலுவான மட்டையட்ட அணி. மட்டையாளர்கள் தாம் மேலும் சிறப்பாக அட வேண்டும்” என்று பதிலளித்தார். 78 வருடங்களில் வேக வீச்சு வன்மத்துடன் திகழ்ந்த 5 வருடங்கள் மிகச்சிறிய காலகட்டம் என்பதை பலரும் சௌகரியமாக மறந்து விடுகின்றனர். மிகுந்த நம்பிக்கையளித்த இந்த வேகவீச்சாளர்கள் ஏன் மேலும் 5-10 வருடங்கள் நிலைக்க முடியவில்லை என்ற விவாதம் ஊடகங்களில் நடந்தது. மோசமான உடல்தகுதி, அடிப்படையான தொழில்நுட்ப போதாமை, அதை திருத்துவதற்கான அவகாசமின்மை, காயங்கள், காயமேற்படுமோ என்ற அச்சம், மந்தமான உள்ளூர் அடுதளங்கள், மேலதிகமான ஆட்டங்கள் என பல்வேறு காரணங்கள் கண்டறியப்பட்டன. இந்தியாவில் வேகப்பந்து வீச்சின் சோர்வுக்கு சமீபமாக அதிக கவனம் அளிக்கப்படுவதற்கு மேற்சொன்ன பவர்பிளே ஓவர்கள் மற்றும் 35 ஓவர்களுக்கு பின்னர் பந்தை மாற்ற வேண்டும் எனும் கட்டாய விதிகளின் அறிமுகம் மற்றொரு காரணம். இந்த விதிகளினால் சுழல்பந்தாளர்கள் மென்மையான பந்தைக் கொண்டு பரந்த கள அமைப்புக்கு இறுக்கமாக வீசும் வழமையான வசதியை இழக்கிறார்கள். இன்றைய நிலையில் குறைந்தது 35 ஓவர்களுக்கு வீசுவதற்கு வேகவீச்சாளர்களை கொண்டிருப்பதே ஒரு அணிக்கு வலிமை சேர்க்கும். மெதுவான ஆசிய களங்களில் கூட அவர்களுக்கு ரிவர்ஸ் ஸ்விங் கிடைக்கும். வேகமான யார்க்கர்கள் மற்றும் மென்பந்துகளை தொடர்ச்சியாக வீச முடியும். தொண்ணூறுகளில் போல் இனிமேல் இரு மிதவேக வீச்சாளர்கள் – இரு சுழலர்க்ள் என்ற சூத்திரத்தை கொண்டு ஒருநாள் போட்டிகளில் இந்தியா இயங்குவது சிரமம். இந்த சூழலும் இந்தியாவின் மரபான வேகவீச்சு போதாமையை சமகால பார்வையாளனுக்கு பலமடங்கு பெருக்கி காட்டுகிறது.

மேற்சொன்னபடி வேக வீச்சாளர்களை இளமையிலேயே இழப்பது என்பது இங்கிலாந்து, நியுசிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் சந்தித்து வரும் பிரச்சனை தான். அவர்களின் கோப்பை காலியாக இல்லை என்பது தான் வித்தியாசம். அதற்கு அவர்களின் மரபும் முக்கிய காரணம். நமது கிரிக்கெட் வரலாற்றின் ஐந்து வருட பொற்காலம் பின் தொடர்ந்து வந்தவர்களுக்கு பெரும் அழுத்தத்தையும் விடையளிக்க முடியாத சிக்கலான கேள்வியையும் கைமாற்றி அளித்து உள்ளது என்பது ஒரு நகைமுரண். ஒரு புன்னகையுடன் கடந்து செல்லப்பட வேண்டிய முரண்!

No comments: