Thursday, August 12, 2010

ரவீந்திர ஜடேஜா: தேர்வின் குளறுபடி மற்றும் தோல்வியின் பலிகடா
இந்திய அணி சொதப்பும் போதெல்லாம் இந்திய மனநிலை அதற்கான காரணத்தை தவறான இடத்தில் தேடும். நமது பழங்குடி உள்ளுணர்வு பலியிட ஒரு உயிரை நாடும். பெரும்பாலும் அது நட்சத்திரமல்லாத ஒரு இளைய வீரராகத் தான் இருக்கும். வங்கதேசத்தில் நாம் மோசமாக ஆடிய போது தினேஷ் கார்த்திக் விமர்சிக்கப்பட்டார்.இலங்கையில் முதல் டெஸ்டை இழந்த போது அனுபவமற்ற இளம் பந்து வீச்சாளர்கள் வறுக்கப்பட்டார்கள். தற்போது விமர்சகர்களின் நூடுல்ஸ் சட்டியில் ஆல்ரவுண்டராக கருதப்படுகிற ரவீந்திர ஜடேஜா.


ரவீந்திர ஜடேஜா ஐ.பி.எல்லுக்கு முன்னரே நம்பிக்கைக்கு உரிய ஆல்ரவுண்டராக இனம் காணப்பட்டார். ஆனால் உள்ளூர் ஆட்டங்களில் அவரது பந்து வீச்சோ மட்டையாட்டமோ யாரையும் கவரவில்லை. ஐ.பி.எல்லிலும் ஜடேஜா ஒரே ஆட்டத்தை தான் ராஜஸ்தான் அணிக்காக வென்று தந்தார். உச்சி குளிர்ந்த அணித்தலைவர் வார்ன் வழக்கம் போது ஜடேஜாவை மிகையாக புகழ்ந்தார். “Rock Star” என்றார். வார்னின் புகழுரைக்கு பிறகு ஜடேஜா அதிக கவனம் பெற்றார். இந்திய அணிக்குள் கொண்டு வரப்பட்டார். முதல் ஆட்டத்திலேயே அவர் கடுமையாய் உழைக்கக்கூடிய ஒரு எளிய கிரிக்கெட்டர் என்று தெரிந்து போயிற்று. ஆனால் வர்ணணையாளர்கள் தொடர்ந்து அபார திறமையாளி என்று பாடை கட்ட ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் ஜடேஜாவின் சரளமின்மை அணியை சங்கடமான சூழ்நிலைகளில் கொண்டு நிறுத்தியது. ஆனால் இது ஜடேஜாவின் தவறு அல்ல. அவர் மீது மிகையான எதிர்பார்ப்பை கரகம் ஏற்றி திணற வைத்த தேர்வாளர்களும் அணி மேலாண்மையும் தான் பொறுப்பாக வேண்டும்.

ஜெடேஜா அதிகம் சுழல வைக்கும் வீச்சாளர் அல்ல. அவரால் கூர்மையாக நேராக வீச முடியும். அவரது ஆர்ம் பந்து பல மட்டையாளர்களை குழப்பி உள்ளது. பல நெருக்கடியான கட்டங்களில் ஜடேஜா துணிச்சலாக வீசி ஓட்ட ஒழுக்கை கட்டுப்படுத்தி உள்ளார்; ஜடேஜாவின் பந்து வீச்சு மற்றும் துடிப்பான களத்தடுப்பால் அணி நிச்சயம் பயன்பட்டுள்ளது. மட்டையாட்டத்தில் அவரால் அதிக பட்சம் பந்து வீச்சாளர்களுடன் சேர்ந்து சின்ன சின்ன கூட்டணிகளை உருவாக்க முடியும். அவர் நிச்சயம் யூசுப் பதானோ உத்தப்பாவோ அல்ல. ஜடேஜா ஒரு சிறந்த மட்டையாட்ட ஆல்ரவுண்டராக தற்போது இல்லாமல் இருக்கலாம். ஆனால் அது அவரது தவறு அல்ல.

அணியில் ஜடேஜாவின் இடம் கேள்விக்குள்ளாகும் நிலைமைகள் ஏற்படும். தற்போது அது நிகழ்கிறது. சேவாக், யுவ்ராஜ் ஆகியோர் காயத்திலிருந்து மீண்டு அணிக்குள் வந்து நன்றாக பந்து வீசும் நிலைமையில் அவர்களால் ஜெடேஜாவின் பாத்திரத்தில் மேலும் சிறப்பாக இயங்க முடியும். ஜெடேஜா ஒரு மிதவேக பந்து வீச்சாளராக இருந்தால் மட்டுமே இந்த நெருக்கடியை சமாளிக்க முடியும். அணி மேலாண்மை இனிமேல் ஜெடேஜாவை தக்க வைப்பதற்கு ஒரு காரணம் மட்டுமே இருக்க முடியும். அவரது பந்து வீச்சு அபாரமான முன்னேற்றத்தை பெற்று அவரால் ஓஜ்ஹாவை நெருக்கித் தள்ள முடிய வேண்டும். அல்லாத பட்சத்தில் ஜெடேஜாவின் இருப்பு தொடர்ந்து ஒரு உறுத்தலாக இருக்கும். ஆனால் யுவ்ராஜை போல் அவரால் எந்த எதிர்மறை பாதிப்பும் இருக்காது என்பதை உறுதியாக சொல்ல முடியும்.

அடுத்து வரும் ஆட்டங்களில் ஆல்ரவுண்டர் இடத்தில் அஷ்வின், சதீஷ், இர்பான் பதான் போன்றோரை முயன்று பார்க்க வேண்டும். உலகக் கோப்பைக்கு பிறகு கொதிப்பாக இதையெல்லாம அலசுவதோ நிதானமாக பரிட்சார்த்த முயற்சிகள் செய்வதோ சுயபகடியாக மட்டுமே இருக்கும்.

2 comments:

S.ரமேஷ். said...

அன்பிற்கினிய நண்பரே..,

/ /....இந்திய அணி சொதப்பும் போதெல்லாம் இந்திய மனநிலை அதற்கான காரணத்தை தவறான இடத்தில் தேடும்.,வங்கதேசத்தில் நாம் மோசமாக ஆடிய போது தினேஷ் கார்த்திக் விமர்சிக்கப்பட்டார்.../ /

தமிழகத்தின் ஸ்ரீராம்,ரமேஷ், மற்றும் விஜய் பரத்வாஜ் போன்றவர்களை விட்டுவிட்டீர்களே.

/ /... அடுத்து வரும் ஆட்டங்களில் ஆல்ரவுண்டர் இடத்தில் அஷ்வின், சதீஷ், இர்பான் பதான் போன்றோரை முயன்று பார்க்க வேண்டும்.../ /

இவர்களோடு பிரவீன்குமார்,மிதுன் போன்றவர்களையும் பரிசீலிக்கலாம்.

நன்றி..

மரங்களோடு மனிதம் வளர்ப்போம்..
ச.ரமேஷ்.

ஆர்.அபிலாஷ் said...

ஆம் ரமேஷ். ஆனால் பிரவீன் இன்னும் நிறைய உழைக்க வேண்டும். ஆனால் மிதுனின் தொழில்நுட்பம் நிச்சயம் உறுதியானது. அவரால் திண்ணமாக ஆட முடியும்.