Friday, August 6, 2010

மூன்றாவது டெஸ்டில் இந்தியா வெற்றி பெறுமா?இதற்கு சுருக்கமாக என் ஊகத்தை சொல்லி விடுகிறேன். வெற்றி வாய்ப்பு வால் நுனி அளவு தான். 257 இலக்கை விரட்டி ஐம்பது சொச்சத்துக்கு மூன்று விக்கெட்டுகளை இந்தியா இழந்துள்ளதை கருதி தோல்வியின் திசையை நான் சுட்டவில்லை. காரணங்கள் வேறு.


முதலில், தற்போது களத்திலுள்ள சச்சினையும் சேர்த்து மூத்த வீரர்கள் நல்ல ஆட்டநிலையில் இல்லை. சச்சின் இரண்டாவது டெஸ்டில் அடித்த இரட்டை சதமும் அவருக்கு உரித்தான பாணியில் அமையவில்லை. கடந்த ஐ.பி.எல்லில் நாம் கண்ட சச்சினின் தன்னம்பிக்கை இலங்கையில் இல்லை. காயத்துக்கு பிறகு திரும்புவது காரணமாக இருக்கலாம். இந்த ஆட்டத்துக்கு முன்னரும் சச்சின் காயத்துடனே இருந்தார். முழுக்க குணமாகி விட்டதாக நான் நம்ப இல்லை. அடுத்து வரும் முத்தரப்பு தொடரில் அவர் இல்லாதது இந்த காயத்துக்கான ஓய்வுக்காகவே என்று அனுமானிக்கிறேன். இந்த டெஸ்டில் மட்டையாடும் போது சச்சினின் உடலசைவுகளில் ஒரு இறுக்கம் காணப்படுகிறது. வழமையான ஒழுக்கு அவரது மட்டை வீச்சில் இல்லை. இதற்கு காரணம் காயமாக இருக்கலாம். தோனிக்கும் விரல் காயம் உள்ளது. ஆக முழு உடற்தகுதியில் இல்லாத பாதி சச்சின் மற்றும் தோனியால் நாளைய ஆட்டத்தை வென்று தர முடியுமா? லக்‌ஷ்மண் மற்றும் ரெய்னாவால் எவ்வளவு ஓட்டங்கள் பங்களிக்க முடியும்?

அடுத்து, ரெய்னாவை தவிர அதிரடி வீரர் யாரும் நம் அணியில் இனி இல்லை. இதனால் ரெய்னா அற்புதமாக ஆடி அரை சதமடிக்காத பட்சத்தில் இலங்கையால் ஓட்டங்களை வறள வைத்து இந்தியாவை நெரிக்க முடியும். இலங்கை சுழலர்களை நெருக்கடிக்கு உள்ளாக்க சேவாகோ, கம்பீரோ, யுவ்ராஜோ இல்லை என்பது ஒரு எதிர்மறை அம்சமாக நாளை இருக்கும்.

தோல்வி எதிர்பார்ப்பு இருந்தாலும் நாளைய ஆட்டம் சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும். காரணம் முரளிதரன் இல்லை என்பதும், மலிங்காவால் நீண்ட காலம் வீச முடியாது என்பதும். இலங்கையின் குறைபாடுகள் இவை. இலக்கும் குறுகியது என்பதால் ஒரு எதிர்பார்ப்பு இருதரப்பினரிடமும் இருக்கும். இந்தியா சமீபத்தில் ஆடிய டெஸ்டுகளில் சிறந்தவற்றில் இவ்வாட்டத்துக்கு நிச்சயம் ஓரிடம் இருக்கும்.

கடைசியாக, இத்தொடரை இந்தியா ஒருவேளை இழந்தாலும் காயங்களால் பலவீனமாக்கப்பட்ட நிலையில் அது கடுமையாக தன் நிலைப்புக்காக போராடியது என்பதை நிச்சயம் கருத்தில் கொள்ள வேண்டும். சேவாகையும் லக்‌ஷ்மணையும் தவிர அணியின் மூத்த வீரர்களில் அனைவரும் காயத்தினால் விலகிக் கொண்டனர் அல்லது காயத்தை பொறுத்துக் கொண்டு உள்வலியுடன் ஆடினர். இது கிட்டத்தட்ட இந்திய ஏ அணிதான். அதனால் தான் இத்தொடரின் முடிவை பொருட்படுத்த தேவை இல்லை என்று நினைக்கிறேன். முரண்களின் உச்சமாக நாம் வென்று விட்டால் மன உறுதியின் மேன்மைக்கான விழைவின் மிகச் சிறந்த உதாரணமாக அது இருக்கும்.

2 comments:

Rajasurian said...

119/4 பாப்போம் என்ன நடக்குதுன்னு. தொடர்ச்சியான விளையாட்டுக்களால் வீரர்களின் உடல்தகுதி குறைவது பற்றி விமர்சகர்கள் என்ன சொன்னாலும் தேர்வாலர்களோ வீரர்களோ கண்டுகொள்வதாக இல்லை.

மிதுன் பேட்டிங் பற்றி எதுவும் சொல்லவில்லையே :)

காலப் பறவை said...

Sri Lanka 425 & 267
India 436 & 258/5 (68.3 ov)
India won by 5 wickets
:)