Wednesday, July 28, 2010

மின்புத்தகங்கள்: திருட்டு, இலவசம் மற்றும் வியாபார உத்தி



ஈபுக் ரீடர் என்பது புத்தகங்களை மின்திரையில் படிப்பதற்கான ஒரு கருவி. கிட்டத்தட்ட ஒரு புத்தக அளவுக்கு திரை இருக்கும். நீங்கள் சாய்த்து திருப்புவதற்கு ஏற்றவாறு திரையும் தகவமைத்துக் கொள்ளும். PDF, Word போன்ற வழமையான கோப்பு வடிவங்களையும் திறந்து கொள்ளலாம் என்றாலும் ஈபுக் ரீடரின் தயாரிப்பு நிறுவனங்களே விற்கும் மின்புத்தகங்கள் தனித்துவமான கோப்பு வடிவை கொண்டவை. உதாரணமாக அமேசான் எனும் புத்தக விற்பனை நிறுவனம் வெளியிட்டுள்ள கிண்டில் எனும் மின்வாசிப்பு கருவிக்காக அறுபதினாயிரத்துக்கு மேற்பட்ட மின்புத்தகங்களை அந்நிறுவனம் பிரசுரித்துள்ளது. ஆனால் இப்புத்தகங்களை பிற நிறுவன மின்வாசிப்பு கருவிகளில் படிக்க முடியாது. அதற்கு கிண்டிலுக்கான மென்பொருளொன்றை பதிவிறக்கி இணைத்துக் கொள்ள வேண்டும். பொதுவாக தொழில்நுட்பம் தகவல் மற்றும் காட்சி ஊடகங்களை அணுகுவதையும் பயன்பாட்டையும் மிகவும் எளிதாக்கி வரும் நேரத்தில், புத்தகவாசிப்பு மற்றும் வாங்கலை அது மேலும் சிரமமானதாகவும், சிக்கலானதாகவும் மாற்றி வருகிறது.
 நீங்கள் விரும்புகிற பாடல் அல்லது படத்தை நினைத்த நேரத்தில் சில நொடிகளில் இருந்து நிமிடங்களுக்குள் பதிவிறக்கி அல்லது streaming வடிவில் கேட்டு பார்த்திட முடியும். மரபான முறையில் திரையரங்குக்கு செல்வதில் அல்லது டி.வி.டி வாங்கி பயன்படுத்துவதில் இருந்து இலவசமாய் பதிவிறக்குவது அதை பிறருடன் பகிர்வது வரை தொழில்நுட்பம் வேறு கலாச்சார வடிவங்களை நுகர்வதை எளிதாக்கியது போல் புத்தகங்களுக்கு நிகழவில்லை. தொழில்நுட்பம் புத்தகபதிப்பை மட்டுமே லகுவாக்கியது. ஆனால் விலைகளில் ஒன்றும் மாற்றமில்லை. முக்கியமான புத்தகங்களை வாங்க நீங்கள் இன்றும் ஆயிரங்களில் செலவழிக்க வேண்டும். அடுத்து, கணினிப் பயன்பாடு மனிதனுக்கு பொருளாதார மற்றும் கலாச்சார தளங்களில் ஓராயிரம் கதவுகளை திறந்து வைத்து அவனை விடுதலைப்படுத்தி உள்ள நிலையில் வாசிப்புக்கு ஒவ்வாத ஒன்றாக இருக்கும் முரண்பாடு நிலவுகிறது. புத்தொளி யுகத்தில் கேக்ஸ்டனின் பதிப்பு எந்திர கண்டுபிடிப்பால் ராட்சத வளர்ச்சி அடைந்து மக்களின் அறிவு மற்றும் கலாச்சார வெளியை ஆக்கிரமித்த புத்தகங்கள் நவீன யுகத்தில் வாசலில் மேலும் பரிணமிக்காமல் துவண்டு நின்று விட்டன.




நவீன காலத்துக்கு ஏற்றபடி புத்தகங்களை பரிணமிக்க வைக்கும் முயற்சியாகத் தான் அமேசான் நிறுவனம் கிண்டிலை 2007-இல் அறிமுகப்படுத்தியது. அமேசான் நிறுவனம் தான் இதுவரை மில்லியன் கணக்கில் கிண்டில்களை விற்றுள்ளதாக கூறியுள்ளது. குறிப்பாக, கடந்த கிறித்துமஸின் போது அமேசானில் இருந்து அதிகம் வாங்கப்பட்ட பரிசுப்பொருள் கிண்டில் தானாம். ஆனால் சரியான எண்ணிக்கையை சொல்ல அமேசான மறுத்து விட்டது. அடுத்து, தற்போது கெட்டி அட்டை புத்தகங்களை விட மின்புத்தகங்கள் அதிகம் விற்பனை ஆவதாக மற்றொரு பரபரப்பை அமேசான் உருவாக்கி உள்ளது. அதாவது 100 பதிப்பு புத்தகங்களுக்கு 180 மின்புத்தகங்கள் விற்பனை ஆகிறதாம். கடந்த ஆறுமாதங்களில் மட்டும் கிண்டில் விற்பனை மும்மடங்கு ஆகியுள்ளதாம். இணைய விமர்சகர்களுக்கு இந்த தகவல்களிடத்து சற்று அவநம்பிக்கை இருந்தாலும் புத்தக உலகில் கிண்டிலின் இடத்தை மறுப்பதற்கு இல்லை. அமேசானோடு போட்டியிட்டு சந்தையை பிடிக்க Sony, eGriver, Slex ereader, nook, iPapyrus 6, Pocketbook, Cool-er, Cybook என்று ஏராளமான நிறுவனங்கள் மின்வாசிப்பு கருவிகளை வெளியிட்டு வருகின்றன. இவற்றில் கிண்டில், சோனி, நூக் ஆகியவை முன்னிலையில் உள்ளன. Infi Beam என்ற இந்திய நிறுவனம் Pi என்றொரு மின்புத்தக கருவியை வெளியிட்டுள்ளது. இருப்பதிலே விலை மலினம் Pi தான் – 9999. இக்கருவியில் இந்திய மொழி நூல்கள் படிக்க முடியும். ஆனால் கிண்டிலில் உள்ளது போல் பதிவிறக்க, தட்டச்சு செய்ய வசதி இல்லை.

கிண்டில் போன்ற அயல்நாட்டு வாசிப்பு கருவிகள் இந்தியாவில் இன்னும் பிரபலமாக இல்லை. இதற்கு விலை ஒரு பிரதான காரணம். ஆப்பிள் நிறுவனம் ஐபேட்டை அறிமுகப்படுத்தியதும் கிண்டில்.விலையை அமேசான் 189 டாலராக குறைத்தது. உடனே நூக் விலையை Barnes and Noble 199 டாலராக குறைத்தது. ஐபேடில் மின்புத்தகம் வாசிக்கும் வசதி அமேசான மின்புத்தகங்களின் சமீப விற்பனை உயர்வுக்கு மறைமுகமாக உதவியது. இது அமெரிக்கர்களுக்கு தான் அதிகம் பயன்பட்டது. இந்தியாவில் கிண்டில் வாங்க 189 டாலரோடு கிட்டத்தட்ட 5000 ரூபாய் நாம் உபரியாக வரி செலுத்த வேண்டும். மின்புத்தக கருவிகளில் உள்ள முக்கியமான வசதி சில நொடிகளில் Wifi மூலம் நீங்கள் புதிய நூல்களை (பணம் செலுத்தி) தரவிறக்கி படிக்கலாம் என்பது. அதோடு பதிப்பு நூல்களில் இருந்து சற்று விலை குறைவாகவும் மின் நூல்கள் இருக்கும். ஆனால் மின்புத்தக கருவியில் இருந்து நேரடியாக தரவிறக்குவதற்கான Wifi தொடர்புநிலை இந்தியாவில் சீராக இல்லை என்று பயனர்கள் கருதுகிறார்கள். இத்தனை செலவு செய்து சிரமப்படுவதற்கு புத்தகமாகவே வாங்கி விடலாம் அல்லவா?



மின்புத்தகங்களைப் பற்றி உலகமே அல்லோகலப்பட்டுக் கொண்டிருக்கும் போது இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில், எந்த சலனமும் இல்லை. இத்தனைக்கும் உலகம் எங்கும் இருந்து இணையம் வழி தமிழில் வாசிக்கும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காக லட்சக்கணக்கான பக்கங்கள் இலவசமாக எழுதப்பட்டு பதிவேற்றப்படுகின்றன. இணையப்பதிவர்கள் மரபான பத்திரிகைகளுக்குள் நுழைகிறார்கள். இலக்கிய கூட்டங்களில் கலந்து கொள்கிறார்கள். கடந்த ஆண்டு பிரசுரிக்கப்பட்ட முக்கியமான புத்தகங்களில் பல இணையத்தில் வாசிக்க எழுதப்பட்டவை. தமிழ் இணையத்தால் புதிய வாசகர்கள் அறிமுகமாகி புத்தக விற்பனை அதிகமாகி உள்ளது. ஆனால் பதிப்பாளர்களுக்கு தங்கள் நூல்களின் மின்பிரதிகளை வெளியிடுவதில் பெரும் தயக்கம் உள்ளது. இதற்கு கிண்டில் போன்ற மின்வாசிப்பு கருவிகள் இங்கு சந்தையில் கிடைக்காததும், அதனை ஒட்டிய மின்புத்தக தரவிறக்க வியாபாரம் இல்லாமையும் ஒரு காரணம். Piracy எனப்படும் புத்தக திருட்டு பிரசுரம் மீதான அச்சம் அதைவிட முக்கியமான காரணம். இங்கு நாம் பைரஸி எனப்படும் திருட்டை குறித்து மேலும் சிந்திக்க வேண்டும். ஆழமாக ஆராய்கையில் இங்கு நம் பதிப்பாளர்கள் ஒரு சிறந்த வணிக மாடலை கோட்டை விடுகிறார்களோ என்ற ஐயம் ஏற்படுகிறது.



ஐம்பது பைசா மிட்டாய் மற்றும் முப்பது ரூபாய் டி.வி.டியில் இருந்து ஆயிரக்கணக்கான விலை உள்ள கைக்கடிகாரம் வரை சந்தையில் இன்று மலிந்து கிடக்கும் போலிப் பொருட்களுக்கும் திருட்டு பதிப்பு நூல்களுக்கும் முக்கிய வித்தியாசம் உண்டு. திருட்டு பதிப்பால் பதிப்பாளர்களுக்கு நட்டம் ஏற்படுவதாக கூறப்பட்டாலும், இத்தகைய புத்தகங்களின் நுகர்வோர் அசல் நூல்களை எப்படியும் வாங்கப் போவதில்லை என்பது மற்றொரு தரப்பு. இந்தியாவின் ஒரே கலாச்சார ஊடகமாக நிகழும் சினிமாவுக்கு இதை நிச்சயம் பொருத்த முடியாது. திருட்டு டி.வி.டிகள் சினிமா தொழிலை நிச்சயம் அழிக்கின்றன. ஆனால் வில் டியூரண்டின் The Story of Philosophy ஐ நடைபாதை கடையில் ஐம்பது ரூபாய்க்கு வாங்கும் வாசகன் ஐநூறு செலவழித்து அதை வாங்கும் வாய்ப்பு குறைவே. வசதியற்றவர்களுக்கு புத்தகங்களை ஜனநாயகப்படுத்தும் ஒரு வாய்ப்பாக இந்த திருட்டு சந்தை புத்தகங்களை காணலாம். கோடீஸ்வரர்களான பல சர்வதேச எழுத்தாளர்களுக்கும் இந்த திருட்டுப் பதிப்பால் பெரும் பாதிப்பில்லை எனலாம். பாடல் மற்றும் படங்கள் இணையத்தில் திருட்டு விற்பனையாவதில்லை; அவை திருட்டு பிரதியெடுக்கப்பட்டு இலவசமாக பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. திருட்டு புத்தகங்களுக்கு சொல்லப்பட்ட தர்க்கம் ஓரளவுக்கு இந்த பாடல்/பட பிரதியெடுப்பு மற்றும் இலவச பகிர்தலுக்கும் பொருந்தும். இருட்டில் துழாவி எடுப்போர் பகலில் அப்பொருளை வாங்கப் போவதில்லை. மேலும் இணையத்தில் அனைத்தும் இலவசம் என்ற மதிப்பீடு நிலவுவதால் காப்புரிமை மீறல் கிட்டத்தட்ட தவிர்க்க முடியாததாகவே இருக்கிறது. உங்கள் கணிணியில் நீங்கள் தட்டச்சும் சிறு சொல் அல்லது தகவல் கூட இன்று பாதுகாப்பாக இருப்பதில்லை. உலகின் ஏதாவது ஒரு மூலையில் இருந்து ஒருவர் அதை உங்களுக்கு தெரியாமல் கவர்ந்து கொண்டிருப்பார். ஆரம்பத்தில் ஐரோப்பிய இசை நிறுவனங்கள் காப்புரிமை விசயத்தில் மிகக் கராறாக இருந்து பார்த்தன. மீறி டி.வி.டியிலிருந்து பாடல் கோப்புகளை பிரதியெடுத்து இணையத்தில் பகிர்பவர்கள் மீது வழக்கு தொடுத்தது. ஆனால் இந்நடவடிக்கை பலநூறு ஓட்டைகள் கொண்ட பிரம்மாண்ட தண்ணீர்த் தொட்டி ஒன்றை அடைக்க முயல்வது போல. விரைவிலேயே இது வீண் என்றுணர்ந்த சில நிறுவனங்கள் இணையத்தில் பாடல்களை சட்டபூர்வமாக பதிவிறக்கும் வசதியை கொண்டு வந்தன. Itunes நிறுவனம் கோடிக்கணக்கான பாடல்களை அறிமுக வருடத்திலேயே விற்றது. டி.வி.டிகளாக விற்பதை விட இது சுலபமும் லாபகரமுமானது என்ற பல நிறுவனங்கள் புரிந்து கொண்டன. இங்கு ஆய்வாளர்கள் இரண்டு முடிவுகளுக்கு வருகிறார்கள். இன்றைய நுகர்வோனுக்கு பொருள் எளிதில் உடனே கிடைக்கும் படியாக அமைய வேண்டும். விலையும் நியாயமாக இருக்க வேண்டும். எந்த குற்றவுணர்வும் இன்றி நியாயமான விலையில் வாங்கவே நுகர்வோன் விரும்புகிறான். உலகம் தொடர்ந்து அபௌதிகமாக விர்ச்சுவலாக மாறி வரும் சூழலில் சந்தை இணையத்துக்குள் வரவேண்டிய, விற்பனைப் பொருள் இணைய வடிவம் பெற வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. விலை அநியாயமானது என்று நுகர்வோருக்கு எண்ணம் ஏற்படுகையில் அது பைரஸிக்கு வழி வகுக்கிறது. Torrents, Limewire போன்ற கோப்பு-பகிரும் மென்பொருள் மற்றும் இணையதளங்கள் வழியாக மக்கள் ஒரு பொருளை பிரதியெடுத்து பகிர்வதற்கு அநியாய விலை தூண்டும் தார்மீகக் கோபமும் ஒரு முக்கிய காரணம். டியூக் பல்கலைக்கழகம் செய்துள்ள ஒரு ஆய்வில் ஒரு பாடலின் விலையை 0.63 டாலராக குறைத்தால் திருட்டு பிரதியெடுப்பு 50% குறையும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

விலையை அடுத்து நுகர்வோனை எரிச்சல் படுத்துவது மரபான வாங்குதல் முறையில் உள்ள கால தாமதம். உதாரணமாக, சாரு நிவேதிதா, எஸ்.ரா அல்லது ஜெயமோகனின் நூல் வெளியிடப்பட மறுநொடியில் அதனை வாங்கிப் பார்க்க வேண்டும் என்று ஐஸ்லாந்து அல்லது லிபேரியாவில் வசிக்கும் ஒரு தமிழ் வாசகன் விரும்பினால் தமிழ் சூழலில் அது சாத்தியப்படுமா? காலச்சுவடு சில மின்நூல்களை வெளியிட்டுள்ளது. அசோகமித்திரன் போன்ற எழுத்தாளர்களின் சில நூல்களும் மின்வடிவில் கிடைக்கின்றன. சங்கப்பலகை இணையதளத்தில் இவற்றை வாங்கலாம். ஆனால் தமிழில் இதுவரையிலான பட்டியல் மிகவும் குறுகியது. மற்றபடி பெரும்பாலான முக்கிய நூல்களுக்கு இணையதளத்தில் ஆர்டர் கொடுத்து ஒரு வாரமோ ரெண்டு வாரமோ அதற்கு மேலோ காத்திருக்க வேண்டும். ஒரு ஆய்வாளனுக்கு அவசரமாக அ.கா பெருமாளின் நாட்டாரியல் புத்தகமோ ஷாஜியின் இசை நூலோ உடனடியாக தேவைப்படுகிறதென்றால் முடியுமா? மேற்கில் இது அத்தனையும் சாத்தியம். காத்திருக்கும் அவகாசம் இன்மை இன்றைய தலைமுறையின் ஒரு ஆதாரப் பண்பாகவே மாறி விட்ட நிலையில் மரபான பதிப்பு நூல்கள் ஒரு அர்த்தத்தில் காலாவதி ஆகி விட்டன.

சில பதிப்பகங்கள் பௌதிக நூல்களின் விற்பனையை ஊக்குவிக்க அவற்றின் மின்பிரதிகளை வெளியிடுவதை தாமதப்படுத்துகின்றன. இந்த உத்தி வாசகர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது; எரிச்சலை தூண்டுகிறது. பயணத்தின் போது ஒரு புதுநூலை மின்வாசிப்பு கருவியில் படிக்க விரும்பும் வாசகரை இந்த கட்டாய தாமதம் திருட்டு மின்புத்தகத்தை நோக்கி செலுத்துகிறது. எம்மி விருது பெற்ற எழுத்தாளரும், நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் பத்தியாளருமான ரேண்டி கோஹன் என்பவர் ஸ்டீபன் கிங்கின் சமீபத்திய நாவலான் “Under the Dome” இன் கெட்டி அட்டை நூலை வாங்கிய பின்னர் அவசியம் கருதி அதன் திருட்டு மின்பிரதியை தரவிறக்கி பயணத்தின் போது தான் படித்த்தாக கூறுகிறார். ஜெ.கெ ரௌலிங் தனது ஹாரி போட்டர் நாவல்களை மின்புத்தகங்களாக வெளியிடுவதில்லை என்று முடிவு செய்தார். இது புத்தக விற்பனையை அதிகப்படுத்தும் என்று அவர் நம்பினார். ஆனால் அவரது நாவல்கள் வெளியான சில நாட்களிலே வாசகர்கள் மெனக்கட்டு ஸ்கேன் செய்தும், தட்டச்சு செய்தும் மின்புத்தகங்களை இணையத்தில் உலவ விட்டார்கள். தங்களுக்கு பிரியமான எழுத்தாளருக்கு எதிராக வாசகர்கள் இப்படி செயல்பட்டதற்கு மூன்று காரணங்கள் சொல்லலாம். ஒன்று பழி வாங்க. அடுத்து, மின்வாசிப்பு கருவிகளில் எடுத்துச் சென்று படிக்கும் சுயவசதிக்காக. அடுத்து நண்பர்களுடன் பகிர்தல் மூலம் தங்கள் வலை தொடர்பை விரிவாக்க. மின்பதிப்பை வெளியிட்டிருந்தால் திருட்டுத்தனமாக இணையத்தில் பெருகிய கோடிக்கணக்கான பிரதிகளுக்கு பதில் அசலான மின்நூல்களை வாசகர்கள் வாங்கி படித்திருப்பார்கள். திருட்டுப்பதிப்புகளின் எண்ணிக்கையில் பாதியாவது மின்பதிப்பாக அவர் விற்றிருக்கலாம்.



இது ஒரு சுவாரஸ்யமான விவாதம். சாரு நிவேதிதா சமீபமாக ஒரு கட்டுரையில் தன் புத்தகங்களின் விற்பனை குறைந்ததற்கு வலைப்பக்கத்தில் அவர் எழுத்துக்கள் இலவசமாக கிடைப்பதே காரணம் என்று நொந்து கொண்டார். ஆனால் 66 மொழிகளில் நூறு மில்லியன் புத்தகங்களுக்கு மேல் விற்றுள்ள ”ரசவாதி” புகழ் போல் கொயில்ஹோ தன் புத்தங்களின் திருட்டுப் பிரதிகளை தானே ஒருங்கிணைத்து வெளியிட்டார். இதை அவர் மிகவும் சாமர்த்தியமாக செய்தார். Torrents போன்ற கோப்பு பகிர்வு தளங்களுக்கு சென்று தன் புத்தகங்களின் திருட்டு மின்பிரதிகளை திரட்டினார். Pirate Coelho என்று ஒரு வலைப்பூ ஆரம்பித்து இந்நூல்களின் தொடுப்புகளை வெளியிட்டார். பிறகு தனது சொந்த இணையதளத்தில் ”இப்படி ஒரு திருட்டுப்பிரதி வலைப்பூவை தான் காணக் கிடைத்து அதிர்ச்சி அடைந்ததாக” அப்பாவித்தனமாக அறிவித்தார். இதன் மூலமாக எண்ணற்றோர் Pirate Coelhoவுக்கு சென்றனர். ஆனால் இந்நிகழ்வால் கொயுல்ஹோவின் பதிப்பு நூல்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது. இலவசப் பிரதிகள் மக்களை மேலும் புத்தகங்கள் வாங்கத் தூண்டுவதாக கொயில்ஹோ கருதுகிறார். Baen எனும் பதிப்பகம் தனது பல எழுத்தாளர்களின் ஆரம்ப நாவல்களில் சிலவற்றை முழுமையாக இணையதளத்தில் (http://www.baen.com/library/) இலவசமாக வெளியிடுகிறது. இப்புத்தகங்களை தரவுறக்கி படிக்கும் வாசகர்கள் கவரப்பட்டு பதிப்பு நூல்களையும் வாங்கி விடுவதால், விற்பனை அதிகமாகி உள்ளதாய் இணையதளத்தின் நூலகர் எரிக் பிளிண்ட் கூறுகிறார். மேலும் வரலாற்றில் என்றுமே இலவச புத்தக வினியோகம் விற்பனையை தொலைநோக்கில் எதிர்மறையாய் பாதித்ததில்லை என்று கூறுகிறார். இது உண்மையில் ஒரு வளமான வாசக தளத்தை உருவாக்க பயன்படும் சிறந்த உத்தி என்கிறார் எரிக்.



தமிழ்ச்சூழலில் அதிகம் திருட்டுப்பிரதியாக்கப்பட்ட எழுத்தாளர் சுஜாதா தான். அழியாச்சுடர்கள் இணையதளத்தில் (http://azhiyasudargal.blogspot.com) தமிழ் தீவிர இலக்கியர்களின் சில முக்கிய படைப்புகள் இலவச வாசிப்புக்கு கிடைக்கின்றன. இணையத்தில் எஸ்.ரா, ஜெ.மோ, சாரு போன்ற எழுத்தாளர்கள் இதுவரை பெற்றுள்ள கவனம் மற்றும் உருவாக்கி உள்ள வாசகத் தளத்தை கருத்திற் கொள்கையில் பரவலான மின்நூல் வெளியீடு நேர்மறையான பலன்களைத் தான் தரும் என்று கணிக்க முடிகிறது. எதிர்காலத்தில் மின்வாசிப்புக் கருவிகள் தமிழில் ஒருவேளை பரவலாகாத பட்சத்திலும் வேறுபல வாசல்கள் திறந்த படி தான் இருக்கும். ஸாம்ஸங்கின் சமீப ஸ்மார்ட்ச் போன்கள் மின்வாசிப்பு கருவி இணைக்கப்பட்டே வருகின்றன. எதிர்காலத்தில் மைக்ரோமேக்ஸ் நுண்பேசி போன்று குறைந்த விலைகளில் இத்தகைய ஸ்மார்ட் போன்கள் பெரிய திரை மற்றும் மின்வாசிப்பு கருவியுடன் வரலாம். இந்த சாத்தியங்கள் எட்டும் தூரத்தில் உள்ள பட்சத்தில் தமிழில் நூல் பிரசுரத்தை வலுப்படுத்த மேலும் அதிக மக்களிடம் கொண்டு செல்ல மின்நூல்கள் பயன்படக் கூடும். ரெண்டாம் பதிப்பு வராத எத்தனையோ முக்கிய நூல்கள் தமிழில் உள்ளன. இவற்றின் இற்றுப்போன பழைய பிரதிகளை தேடி காலம் வீணடிக்காமல் இருக்கவும், எதிர்காலத்துக்கு பாதுகாத்து வைக்கவும் வாசகர்கள் இவற்றுக்கு மின்பிரதிகள் உருவாக்குவது தான் ஒரே வழி. அரிய புத்தகங்களின் பௌதிக பிரதிகளை நாம் பிறருக்கு தர தயங்குவது சகஜம். ஆனால் மின்புத்தகங்களை யாருக்கும் தயக்கமின்றி வழங்கலாம். வாசிப்புச் சூழலை இது மேலும் ஆரோக்கியமாக மாற்றலாம். காப்புரிமை பற்றி கவலைப்படாமல் அற்புதமான நூல்களைக் கொடுத்து தொடர்ந்து மையநீரோட்டத்தால் புறக்கணிக்கப்பட்ட/படுகிற எழுத்தாளர்கள் பலர். இவர்கள் போல் கொயில்ஹோ வழியில் ரகசியமாக pirate வ்லைப்பக்கங்கள் அமைத்துப் பார்க்கலாம். தங்கள் மீது தொடர்ச்சியான கவனத்தை ஏற்படுத்தலாம். சேமிப்புப் பழக்கத்திற்காக புத்தகம் பொறுக்கும் எல்லைக்கு வெளியில் உள்ளோரையும் மையத்துக்கு இழுக்க பைரஸி பயன்படலாம். திருட்டு மின்பிரதி நிபுணரும் அமெரிக்க மென்பொருளாளருமான The Real Caterpillar என்பவரின் சுவாரஸ்யமான பேட்டி Themillions.com என்ற இணையதளத்தில் உள்ளது. இணைப்பு: http://www.themillions.com/2010/01/confessions-of-a-book-pirate.html. யாரேனும் மொழியாக்கி இதனை வெளியிடலாம்



பின்குறிப்பு: உயிர்மை பதிப்பகம் வெளியிட்ட போ.கருணாகரமூர்த்தியின் “பெர்லின் இரவுகள்” புத்தகத்தின் மின்பிரதி http://www.noolaham.org/ வலைதளத்தில் இலவசமாக கிடைக்கிறது..இப்புத்தகத்தை தரவிறக்கப் போகிறவர்கள் எத்தனை பேர் உயிர்மையில் இருந்து வாங்கப் போகிறார்கள்?

3 comments:

Madumitha said...

மின் புத்தகங்களைப் பற்றி
படிக்கும் போதே
சந்தோஷமாயிருக்கு.
எங்களது மாதிரி நடுவாந்திர
ஊர்ல நீங்கள் சொன்ன
ஜெயமோகன்,சாரு,எஸ்.ரா..
புத்தகங்கள் கூடக்
கிடைப்பதில்லை.
மின் புத்தகங்கள்
படிப்பவர்களுக்கு ஒரு
வரப் பிரசாதம்.
காத்திருப்போம்.

Rettaival's said...

அபிலாஷ்!

நாம் இன்னும் ஒரு முழு நாவலை மின் வடிவில் படிப்பதற்கு பழக்கப்படவில்லை என்றே தோன்றுகிறது. ஒரு வாரப் பத்திரிக்கை வாசிப்பதைப் போல இணையத்தில் வாசிக்கலாமே தவிர, பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களையும் மின் வடிவில் படித்தால் கண்கள் வறண்டு விடும். தினசரிகள் கூட இணைய வடிவில் கிடைன்றன.ஆனால் உள்ளூரில் எத்தனை பேர் கணினி வசதி இருந்தும் செய்தித்தாள் வாங்கிக்கொண்டிருக்கிறோம்.

எவ்வாறு நாம் ஒரு முறை தொலைக்காட்சி வாங்க செலவு செய்துவிட்டு பிறகு கேபிள் இணைப்புக்கு மாதாமாதம் செலவழிக்கிறோமோ அவ்வாறு ஈ புக் ரீடரையும் வாங்குமாறு செய்து புத்தகங்களை சப்ஸ்க்ரைப் செய்யும் வசதி வரச் செய்தால் மின் புத்தகத் திருட்டை சமாளிக்க ஓரளவு வாய்ப்புள்ளது.கட்டண சானல்களோடு இலவச சானல்களும் வருவது போல, புதிய புத்தகங்களுடன் வாரப் பத்திரிக்கைகள்,பழைய புத்தகங்கள் என இணைத்து இணையத்தில் வெளியிட்டால் எழுத்தாளரும் பயனடைய வாய்ப்புண்டு.

எல்லாவற்றுக்கும் மேலாக ரீடர் User Friendly ஆக இருந்தாலே அனைத்தும் சாத்தியம். அதற்கு சீனர்கள் போல் யாருக்கும் கவலைப்படாமல் இந்திய தயாரிப்புகளை மார்கெட்டிங் செய்ய கம்பெனிகளும் ஒப்பந்தம் செய்ய எழுத்தாளர்களும் முன் வர வேண்டும்.

எனக்கென்னவோ 2020 ல் வரப்போகும் பிரச்சினையை பற்றி நீங்கள் எழுதுவதாக தோன்றுகிறது.
ஐபேட்(Ipad)போல் ஐபெட்(Iped) வந்துவிட்டது தெரியுமா?

Rettaival's said...

:_