இ.பா 80வது பிறந்த நாள் விழா – சில குறிப்புகள்


இக்கூட்டம் நேற்று (ஜூலை 9) மாலை தேவநேயப்பாவாணர் அரங்கில் நடந்தது. இந்த கூட்டத்தின் ஆகக் கூர்மையான கருத்துக்கள் இறுதியாக ஏற்புரை வழங்கிய இ.பாவிடம் இருந்து வந்ததால் அதனை முதலில் சொல்லி விடலாம். இ.பாவின் குறும்பேச்சு ஒரு குத்துச் சண்டை ஹைலைட்ஸை ஒத்திருந்தது. அத்தனை பஞ்ச் வசனங்கள். ஏறத்தாழ இரவு ஒன்பதரைக்கு களைத்து கடுப்பாகி இருந்த பார்வையாளர்களுக்கு அத்தனையும் ரசிக்கும் படியாக இருந்தன.

எனக்கும் 80 வயதாகிறது. பாலசந்தருக்கும் 80 வயதாகிறது. ஆனால் ஊடங்கள் அவரைத் தான் பாராட்டுகின்றன இது தவறு என்று கூறவில்லை. தமிழகத்தில் எழுத்தாளனுக்கு கலாச்சார மதிப்பு அவ்வளவு தான் என்று கூற வந்தேன். பாலசந்தர் பாராட்டப்பட வேண்டியவர் தான். அவரது படைப்புகள் அவ்வளவு தரமானவை அல்ல என்றாலும்.

நான் சொல்ல வந்தது என்ன வென்றால் ஒருவர் மட்டுமே கலைஞர் என்று சொல்லக் கூடாது. எல்லாரும் கலைஞர்கள் தாம். (கூட்டம் இச்சொல்லின் இரட்டைப் பொருளைப் பற்றிக் கொள்ள சிரிப்பலை பரவுகிறது). எழுத்தாளனும் கலைஞனே.

தமிழகத்தில் பொதுவெளி அறிவுஜீவி என்று யாரும் இல்லை. அப்படி ஒரு இடமே இங்கு இல்லை. தமிழகத்தில் ஒரு அருந்ததி ராய் உருவாகி வருவார் என்று நாம் கற்பனை பண்ண முடியுமா?

தமிழக எழுத்தாளர்கள் Authors Guild of India மாதிரி ஒரு சங்கம் ஆரம்பிக்க வேண்டும். ஆனால் AGI மாதிரி கண்டவர்களை எல்லாம் எழுத்தாளன் என்று சேர்க்கக் கூடாது. எழுத்தாளன் பத்திரிகையாளன் ஆகலாம். ஆனால் பத்திரிகையாளன் எழுத்தாளன் ஆக முடியாது. இது போன்ற ஒரு அமைப்பை நடத்துவதற்கு தகுதியானவர் மேடையில் வீற்றிருக்கும் ரவிக்குமார் தான். (அவர் இப்பவே தலைவராக திட்டம் போடுகிறார் என்று மனுஷ்யபுத்திரன் குறுக்கிடுகிறார் )

ஆ.ராமசாமி, மனுஷ்யபுத்திரன் போன்ற இளைஞர்கள் தாம் இந்த அமைப்பு பணிகளை முன்னெடுத்து செல்ல வேண்டும் (அ.ரா இளைஞர் என்ற விசயத்தை பிடித்துக் கொண்ட ம.பு நிகழ்ச்சி முடிந்து வெளியேறும் வரை அ.ராமசாமியை ஓட்டிக் கொண்டே இருந்தார். அ.ரா உணர்ச்சிகளை வெளிப்படுத்தாத முகத்துடன் பேச்சை திருப்பிக் கொண்டே இருந்தார்)

நானும் நண்பர் பிரகதீசும் ஒரு கணக்குப் போட்டு பார்த்ததில் இ.பாவின் வயதுக்கு ம.புவும், அ.ராவும் இளைஞர்கள் என்பது சரியாகவே பட்டது. நானும் நண்பரும் இதே விகிதப்படி குழந்தைகள். கூட்டத்தில் இருந்த ஒரு கைக்குழந்தை இந்த கணக்கு உள்ளெல்லாம் வரவே வராது.

இமையம் இ.பாவின் 53 சிறுகதைகள் நுட்பமாக வாசித்து ஒரு ஆய்வுக் கட்டுரை படித்தார். “அக்கட்டுரையில் தேர்வு வைத்தால் நான் தோற்று விடுவேன் என்றார் இ.பா.

இ.பா ஒருமுறை தமிழ் விரிவுரையாளருக்கான ஒரு நேர்முகத்தேர்வை நடத்தினார். வந்த ஒருவர் தான் நவீன இலக்கியத்தில் நிபுணன் என்கிறார். இ.பா “சரி சந்தோஷம், புதுமைப்பித்தன் பற்றி சொல்லுங்களேன் என்கிறார். அவர் “புதுமைப்பித்தன் எல்லாம் எனக்கு தெரியாதுங்க என்கிறார். “என்னங்க நவீன இலக்கியம் கரைத்து குடித்ததாய் சொல்கிறீர்கள். புதுமைப்பித்தன் தெரியாதா? வேறென்னதான் தெரியும்?அதற்கு அவர் “நான் ஆழ்ந்து தோய்ந்து ஆய்வு செய்துள்ளது தென்பாண்டி சிங்கம் என்ற நவீன இலக்கியத்தில் தான். அதிலிருந்து என்ன வேண்டுமென்றாலும் கேளுங்கள், சொல்கிறேன்

மேலும் ஒரு தமிழாசிரிய பகடி. இ.பாவின் கதை ஆனந்த விகடனில் வெளிவருகிறது. தனது தமிழ் பேராசிரிய நண்பரிடம் காட்டுகிறார். அவர் நச்சினார்க்கினியாருக்கு பிறகு யாரையும் வாசிப்பதில் உவப்பில்லாதவர்.“என்னய்யா நீங்களுமா கதை எழுத ஆரம்பிச்சுட்டீங்க
“ஏன் நானெல்லாம் எழுதக் கூடாதா? என்கிறார் இ.பா.
“என்ன எழுதுகிறீர் ... தூய தமிழா இது ... ஆங்கில வார்த்தைகளை அங்கங்கே கலந்து . ச்சீஎன்று முகம் சுளிக்கிறார்.

இனி பிற பேச்சாளர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

இ.பா பிறந்த நாள் கூட்டத்தில் துவக்க உரை மனுஷ்யபுத்திரனுடையது. அவர் பேசியதை கேட்கவில்லை. தாமதமாக சென்றேன். அடுத்த உரை சி.டி இந்திராவினுடையது. சென்னை பல்கலைக்கழக ஆங்கிலத் துறையின் பேராசிரியரான அவரைப் பார்த்தால் மாணவர்கள் பொதுவாக தலைதெறிக்க ஓடுவார்கள். ஆனால் அனறு மாறாக பார்வையாளர்கள் அவரது அரைமணி உரைக்கு பிறகு திராணியற்று களைத்துப் போய் துவண்டு கிடந்தார்கள். என் பக்கத்தில் ஒரு தாத்தா காலி தண்ணீர்ப் பாட்டிலை விடாமல் உறிஞ்ச முயன்று கொண்டிருந்தார். விடாமல் பேசிக் கொண்டிருந்த ஒரு அழகான பெண்ணும் பக்கத்து வாலிபனும் தான் விதிவிலக்கு. சி.டி. இந்திராவின் பேச்சில் சரிபாதி தன்னை பற்றியே தான். பலவருடங்களுக்கு முன்னர் அவரது கருத்தரங்க கட்டுரையை கிண்டலடித்த ஒரு வெள்ளையரை நினைவு வைத்து திட்டித் தீர்த்தார். அதே போல் பல வருடங்களுக்கு முன் தனிப்பட்ட வகையில் உதவினவர்களை நன்றியுடன் நினைகூர்ந்தார். தனது அப்பாவை பற்றிக் கூட குறிப்பிட்டார். இந்த சுய-யாகத்துக்கு நடுவில் இ.பா.வின் இரு கதைகளை மொழிபெயர்க்கும் பணிக்காக தமிழில் வாசிக்க ஆரம்பித்ததை குறிப்பிட்டார். இ.பாவின் பல எளிய வரிகளை பரங்கித் தமிழில் படித்து நவீன விமர்சன சொல்லாடல்களை யானைக்கு கோமணம் கட்டுவது போல் அவற்றில் திணித்தார். மிக செயற்கையான ஒரு விமர்சனம் அது. உதாரணமாக ஒரு வரி: “அவன் டாய்லட் அறைக்குள் இருந்த போது தன் வீடு எத்தனை பெரியது என்று தோன்றியது. நல்ல வரிதான். ஆனால் இதை படித்து விட்டு திரும்பத் திரும்ப wit and humor என்று கூவினார் சி.டி இந்திரா. இதைவிட wittyயான எத்தனையோ வரிகள் தமிழில் உள்ளன இ.பாவிடம் கூட கிடைக்கும். சி.டி.இவுக்கு தனிப்பட்ட எந்த அவதானிப்புகளும் இல்லை என்பது வெளிப்படை. துரியோதனன் வைக்கோற் போரால் அறையை நிறைத்துக் காட்டியது போல் அவரது கழைக்கூத்து இருசாராருக்கும் அவஸ்தையாகவே இருந்தது. மேடையில் ம.பு நெளிவது பார்த்தது “இதோ முடித்து விடுகிறேன் என்று விட்டு மேலும் பதினைந்து நிமிடம் தமாஷை தொடர்ந்தார். இந்திரா முழுக்க ஆங்கிலத்திலேயே பேசினார். இ.பாவின் கதைப் பகுதிகளை படிக்கும் போதும் மட்டும் குழறியபடி தமிழ் பயன்படுத்தினார். இங்கு நமக்கு ஒரு ஐயம் எழுகிறது. தமிழில் சரளமாக பேசத் தெரியாதவர் தமிழ் சிறுகதைகளை மட்டும் எப்படி ஆங்கிலத்துக்கு மொழியாக்கினார்? அகராதிக்குள் பொந்து தோண்டியா?

இமையம் இ.பாவின் 53 சிறுகதைகளை அலசி படித்த கட்டுரை அருமையானது. அதை அவர் பிரசுரிக்க வேண்டும். இ.பாவின் கதைகளின் மையம் தர்க்கம் தான் என்றார். கடவுளிடம் சரணடைவது, கண்ணீர் விடுவது ஆகிய உணர்ச்சிகர சமரசங்களை அவரது கதைகளில் காண முடியாது. பக்கத்துக்கு பக்கம் புரட்டி தேடிப் பார்த்து இதை உறுதி செய்ததாக இமையம் கூறினார். இ.பா தி.மு.கவை விமர்சிப்பதை வாசகனாக ஏற்றுக் கொள்வதாகவும், தி.மு.க கட்சிக்காரனாக மறுப்பதாகவும் சொன்னார். மனம் பிறழ்ந்தவர்கள், வாழ்க்கையால் கைவிடப்பட்டவர்கள் போன்ற விளிம்பு நிலையாளர்கள் தாம் இ.பாவின் நாயகர்கள். இருந்தாலும் மேலும் கவனித்தால் இவர்களை புறந்தள்ளி இ.பாவின் குரல் வலுத்து ஒலிப்பதை அவரது கதைகளில் கேட்க முடியும். இது புனைகதைக்கு ஆரோக்கியமானதா இல்லையா என்பது முக்கியமான கேள்வி என்று இமையம் முடித்தார். இமையத்துக்கு  அப்படி ஒரு கணீர் குரல். உங்களை எளிதில் தூங்க விடாத குரல்.

எஸ்.ராமகிருஷ்ணன் இ.பாவிடம் தனக்குப் பிடித்த பத்து குணாதசியங்களை சொல்லப் போவதாக ஆரம்பித்தார்; பட்டியலை முடிக்கும் தறுவாயில் அவரது பேச்சு சூடு பிடித்தது. இதுவரை நான் கேட்டுள்ள இலக்கிய உரைகளில் ஆகச்சிறந்ததாக அது இருந்தது. எஸ்.ராவின் முக்கிய கருத்துக்களை கீழே தருகிறேன்.

  1. இன்று இந்தியாவில் எழுத்தாளன் சந்திக்கும் பெரும் சவால் வரலாற்றை எப்படி எதிர்கொள்வது என்பது தான். போர்ஹே சொன்னது போல் வரலாறு தொடர்ந்து ஒவ்வொரு தலைமுறையாலும் புனையப்பட்டு முன்னெடுக்கப் படுகிறது. நீங்கள் வரலாற்றை ஒரு பார்வையில் புனைந்து காட்டினால் ஆயிரம் பேர் புறப்பட்டு வந்து அதை தவறு என்று கண்டிப்பார்கள். இவர்கள் சுயநலத்துக்காகவும், அதிகாரத்துக்காகவும் வரலாற்றை திரிப்பவர்கள். ஆனால் எழுத்தாளன் வரலாற்றில் மறைக்கப்பட்ட குரல்களை உற்றுக் கேட்கிறான். இன்றைய எழுத்தாளனின் தேவையும் கடமையும் வரலாற்றை புனைவு மூலம் மறுகட்டமைப்பு செய்து புதிய குரல்களை வெளியே கேட்க செய்வது தான். 
  2. பிரிவை எண்ணி அழுவதும் அதை கொண்டாடுவதும் தமிழினதத்தின் ஆதார குணம் என்று கூறலாம். சங்க இலக்கியப் பாடல்களில் பிரிவு திரும்பத் திரும்ப பேசப்படுகிறது. பிரிவு பற்றி எழுதாத தமிழ் எழுத்தாளனே இல்லை எனலாம்.
  3. தமிழ் நவீன இலக்கியவாதிகள் “குடும்பம் எனும் கட்டமைப்புக்கு உள்ளே தங்களது புனைவுகளை மீண்டும் மீண்டும் உருவாக்கியவர்கள். தமிழர்கள் உலகம் பூரா வாழ்ந்துள்ளார்கள். ஆனால் தமிழ எல்லையை விட்டு தமிழ் இலக்கிய அனுபவப் பரப்பு வளர இல்லை. இ.பாவின் எழுத்துக்கள் இந்த எல்லையை தாண்டி பேசுகின்றன.
  4. தமிழகத்தில் எழுத்தாளனுக்கும், புத்தகங்களுக்கும் இருக்கும் உதாசீன நிலை (திராவிட கழகங்களால்?) திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. கம்பராமாயணப் பிரதி தீயிலிட்டு கொளுத்தப்படுவதை நம் சமூகம் மௌனமாக வேடிக்கை பார்த்தது. அது சரியா தவறா என்ற விவாதத்துக்குள் நான் செல்ல வில்லை. அப்படி அனுமதிக்கும், இலக்கியவாதியை புறக்கணிக்கும் சமூகத்தை நாம் ஆராய வேண்டும் என்றே கூற வருகிறேன்.

பொதுவாக அனைத்து பேச்சாளர்களும் தமிழ் சமூகம் தீவிர எழுத்தாளர்களை உதாசீனப்படுத்துவதை கண்டித்தும், கண்ணீர் விட்டும், கவலை தெரிவித்தும் பேசினர். ஞானக்கூத்தன் கேரளாவில் எம்.டி வாசுதேவன் கொண்டாடப்படுவதையும், எழுத்தாளர்கள் தேரில் ஊர்வலமாக அழைத்து செல்லப்படுவதையும் சொல்லி தமிழக அவல நிலையுடன் ஒப்பிட்டார். இறுதியாக பேசின ரவிக்குமார் கிட்டத்தட்ட இந்த அவல நிலையை ஆதரித்தார். தமிழக எழுத்தாளர்கள் பொதுப் பிரச்சனைகளில் ஈடுபாடு காட்டாததனாலே மக்கள் அவர்களை உதாசீனிக்கிறார்கள் என்று சொதப்பலான் ஒரு தர்க்கத்தை தெரிவித்தார். அதே தர்க்கப்படி பார்த்தால் தமிழர்கள் மத்தியில் பிரபலமாக உள்ள நமீதாவும், அனுஷ்காவும், விஜய்யும், அஜித்குமாரும் செய்துள்ள சமூக சேவைகள் அல்லது ஈடுபட்டுள்ள பொதுப்பிரச்சனைகள் என்ன? என்ன சேவை செய்ததற்காக குஷ்புவுக்கு கோவில் கட்டி இப்போது கழகக் கண்மணியாக வேறு ஆக்கியுள்ளார்கள். பெரியார் படத்தில் மணியம்மையாக நடித்ததா? ஷேக்ஸ்பியர் தன் வாழ்நாள் முழுக்க ஒரு எளிய ராகவிசுவாசியாகவே வாழ்ந்தார். வீடு கட்டினார். சொத்து சேர்த்தார். எந்த போராட்டங்களிலும் கலந்து கொள்ளவில்லை. அரசுக்கு எதிராக கருத்து தெரிவிக்கவும் இல்லை. ஜேம்ஸ் ஜாய்ஸ்? வைக்கம் பஷீர்? எம்.டி வாசுதேவன் நாயர்? தால்ஸ்தாயும், மார்க்வெஸும் ரவிக்குமார் குறிப்பிடும் public intellectual  பிம்பத்துக்கு அருகில் நின்றாலும் அவர்கள் நிச்சயம் கட்சி பீரங்கிகள் அல்ல. உலகம் முழுக்க எழுத்தாளன் கொண்டாடப் படுவது சமூக சேவைக்காகவோ அரசியல் செயல்பட்டுக்காகவோ மட்டும் அல்ல. அடுத்து, செம்மொழி மாநாட்டுக்கு ஏன் பல தீவிர இலக்கியவாதிகள் அழைக்கப்பட வில்லை என்பதற்கு ரவிக்குமார் மேலும் வேடிக்கையான ஒரு பதிலை அளித்தார். அழைப்பு வராதவர்களுக்கு பழந்தமிழ் இலக்கிய பரிச்சயம் இல்லையாம். அடுத்த முறை மாநாடு நடத்தும் முன்னர் கலைஞர் தீவிர இலக்கியவாதிகளுக்கு செம்மொழி டெஸ்டு வைக்கலாம்! ரவிக்குமாரிடம் நான் கேட்க விரும்பிய கேள்வி: “சங்கச்சித்திரங்களும், கொற்றவையும் எழுதி மரபிலக்கியத்தில் ஊறித் திளைத்த ஒரு எழுத்தாளர் இருக்கிறாரே. உங்கள் செம்மொழி தேர்வில் அவர் எத்தனை மதிப்பெண்ணில் தோற்றார்?

ரவிக்குமார் பேசிக் கொண்டே சென்ற போது எனக்கு சற்றே கண் மயங்கியது. செம்மொழி செம் ம் ம் என்று அதிர்ந்த போது விழித்தால் சாட்சாத் கலைஞரே முன் நின்று உரையாற்றுவது போல் ஒரு தோற்றம். இதற்கே இப்படி என்றால், செம்மொழி அணியில் தீவிர இலக்கியவாதிகள் ஒவ்வொருவராக சரணடைந்தால் என்னவாகும் என்று நினைத்த போது காலடியில் பூமி விலகியது. தானியங்கி பீரங்கிகள் மட்டுமே நிறைந்து நின்று மாறி மாறி சுடும் போர்க்களம் ஒன்று கற்பனையில் விரிந்தது.

Comments

ரசித்து வாசித்தேன். பகிர்விற்கு நன்றி.
Madumitha said…
சுதந்திரபூமி,தந்திரபூமி,மாயமான் வேட்டை,ஹெலிகாப்டர்கள் தரையில்
இறங்கி விட்டன..
தேடித் தேடி படித்த நாட்கள்
ஞாபகத்திற்கு வருகின்றன.
ஆம்.இ.பா சொல்வது வருத்தத்துக்குரிய
உண்மைதான்.
Mohan said…
மிக அருமையான ஒரு விபரனை!
அருமையான பார்வை , சுவாரஸ்யமான எழுத்து
எதையும் விரிவாக எழுதும் நீங்கள் இன்னும் கொஞ்சம் விரித்து எழுதியிருக்கலாம் .
எழுத்தாளர்களை போற்றுவதில்லை, மதிப்பதில்லை மக்கள் என்று அங்கலாய்ப்பது சரி அல்ல.

ரஜினி காந்த் பன்ச் வசனம் சொல்வது போல, மரியாதையும் போற்றுதலும் தானாக வர வேண்டும், கேட்டு பெற கூடாது.

எழுத்தாளர்களின் படைப்பு போற்றும் அளவுக்கு இல்லை என்பதே உண்மை. படைப்பு நன்றாக இருந்தால் தானாக மக்கள் போற்றுதல் நாடி வரும்.

பெரும்பாலான எழுத்தாளர்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் சரி இல்லை இன்று, அதுவும் ஒரு காரணம்.

என் குழந்தையிடம் நீ இந்த எழுத்தனைப் போல வாழ வேண்டும், வளர வேண்டும் என்று கூற ஒரு ரோலேமாடல் கூட இல்லை இன்று.
பெரும்பாலான எழுத்தாளர்களிடம் நம்பகத் தன்மை இல்லை. அடிக்கடி தங்கள் நிலைப்பாட்டை மாற்றி கொள்கின்றனர்.
//////////
விடாமல் பேசிக் கொண்டிருந்த ஒரு அழகான பெண்ணும் பக்கத்து வாலிபனும் தான் விதிவிலக்கு
//////////

அந்த அழகான் பெண் சிவப்பு நிற சுடிதாரும், அந்த வாலிபன் கருப்பு டீ-ஷர்ட்-ம் அணிந்திருந்தவர்களா?
நன்றி சுரேஷ் கண்ணன், மதுமிதா, மோகன், மதி.இண்டியா, மற்றும் ராம்ஜி யாஹூ
ஆம் நளினி சங்கர்; அது நீங்களும் தோழியுமா? :)
ஜடாயு said…
நல்ல பதிவு.

இ.பாவின் அந்த ’கலைஞர் - கலைஞர்கள்’ பஞ்ச் அட்டகாசம்! கூட்ட நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.

கிருஷ்ணா கிருஷ்ணா நாவல் பற்றி இமையம் பேசினாரா? என்ன பேசினார் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

// சங்கச்சித்திரங்களும், கொற்றவையும் எழுதி மரபிலக்கியத்தில் ஊறித் திளைத்த ஒரு எழுத்தாளர் இருக்கிறாரே. உங்கள் செம்மொழி தேர்வில் அவர் எத்தனை மதிப்பெண்ணில் தோற்றார்?”//

நெத்தியடி கேள்வி.
butterfly Surya said…
அபிலாஷ், இரண்டு வாரங்களாக ஊரில் இல்லை. நேரில் செல்ல இயலாத குறையை போக்கி விட்டீர்கள். அருமை.

வாவ்.. ரசித்தேன்.
நன்றி Butterfly சூர்யா
கிருஷ்ணா கிருஷ்ணா பற்றி இமையம் பேசவில்லை ஜடாயு
ஆமாம் அபிலாஷ்... நீங்கள் குறிப்பிட்டிருந்தது எங்களைப் பற்றிதான். நான் என் தோழியிடம் சொல்லிக்கொண்டே இருந்தேன். அபிலாஷ் நிச்சயம் வந்திருப்பார் என. ஆனால் நான் தேடிபார்த்தும் உங்களை கண்டுபிடிக்கமுடியாததில் வருத்தம். நீங்கள் குறிப்பிட்டு இருப்பதைப்போல் என் தோழி விடாமல் பேசிக்கொண்டிருந்ததாக நினைவில் இல்லை. சி.டி. இந்திரா போன்ற ஆகச்சிறந்த அறிவுஜீவிகளின் உரையின் போது இதுபோல் பேசிக்கொண்டிருப்பது எங்கள் இருவரின் வழக்கம். இதெல்லாம் தெரிஞ்திருந்ததால்தான் இலக்கிய கூட்டங்களுக்கு (உயிர்மையின் கூட்டமாக இருந்தாலும்) எப்போதும் என் தோழியை அழைத்துச்செல்வது வழக்கம் :). (என் தோழிக்கு என்னைவிட இலக்கிய வாசிப்பும், ஆர்வமும் அதிகம் என்பதால் எனக்கு அவரை அழைத்துவருவது மிக எளிமையான ஒன்று.)

இந்திரா ஆங்கிலத்தில் பேசிய போது உங்களுக்கு ஏற்பட்ட அதே சந்தேகம் எனக்கும் ஏற்பட்டது. ஆனால் அவ்வப்போது இடையில் வாசித்து காண்பித்த தமிழ் வரிகளின் உச்சரிப்பினை கேட்ட பின்புமா உங்களுக்கு அவருடைய உரை தமிழில் இல்லாதது பற்றிய வருத்தம்:).

இமையத்தின் உரை பற்றி குறிப்பிட்டிருப்பது என்னை ஆச்சர்யபடுத்துகின்றது. இமையம் இ.பாவின் 53 சிறுகதைகளை படித்திருப்பதெல்லாம் சரிதான்.

////////////////////////
இ.பா, தி.மு.கவை விமர்சிப்பதை வாசகனாக ஏற்றுக் கொள்வதாகவும், தி.மு.க கட்சிக்காரனாக மறுப்பதாகவும் சொன்னார்.
////////////////////////

இதெல்லாம் கருணாநிதியிடம் இமையம் கற்றுக்கொண்டிருக்கக்கூடிய typical மழுப்பல் நுட்பங்களாகவே எனக்கு படுகின்றது. இதை இங்கு குறிப்பிடாமல் இருந்திருந்தால் இமையத்தின் மீது ஒரளவாவது மரியாதை இருந்திருக்கக்கூடும். மேலும் உயிர்மை இமையத்தை அழைத்திருந்தது இ.பாவின் படைப்புகளை பற்றிய ஒரு கட்டுரையினை வாசிப்பதற்கா அல்லது உரையாற்றச்சொல்லியா என்பது தெரியவில்லை. அவருடைய குரல் நீங்கள் குறிப்பிட்டதைப்போல் கணீர் குரல் என்றாலும் அவர் கட்டுரையினை வாசித்த விதம் இந்திராவின் பேச்சினை விட எனக்கு சலிப்பூட்டுவதாகவே இருந்தது. இமையத்தின் வாசிப்பில் எது அவரின் சொந்த கூற்று, எது இ.பாவின் படைப்பிலிருந்து எடுத்துக்காட்ட முயன்ற வார்த்தைகள் (இ.பா வின் quotes) என்பது குழப்பான ஒன்றாகவே இருந்தது. ஒரு தமிழ் கட்டுரையினை வாசிப்பது அவ்வளவு கடினமான ஒன்றா? அது ஒரு நுட்பமான கட்டுரை என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் ரவிக்குமாரிடம் தெரிந்த கருணாநிதியின் முகம் ஏன் உங்களுக்கு இமையத்திடம் தெரியவில்லை? அவருக்கு இ.பாவின் கருத்துக்களில் முரண்பாடுகள் இருப்பின் அவரால் எப்படி இ.பாவை கொண்டாடமுடிகிறது. இமையத்தால் கருணாநிதியுடன் இதுபோல் ஏதேனும் ஒரு கருத்தில் தான் முரண்படுவதாக அறிவித்துக்கொள்ள இயலுமா. இது எவைப்பற்றியும் நீங்கள் குறிப்பிடாமல் போகிற போக்கில் இமையம் கட்டுரையினை பாராட்டிச்செல்வது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது. இவை அனைத்தும் என் புரிதல்களின் கோளாறுதானா என்கிற சந்தேகமும் எனக்கு உள்ளது. அவ்வாறெனின் தெளிவுபடுத்தவும் (நேரம் அனுமதிக்கும் பட்சத்தில்)
ஆமாம் அபிலாஷ்... நீங்கள் குறிப்பிட்டிருந்தது எங்களைப் பற்றிதான். நான் என் தோழியிடம் சொல்லிக்கொண்டே இருந்தேன். அபிலாஷ் நிச்சயம் வந்திருப்பார் என. ஆனால் நான் தேடிபார்த்தும் உங்களை கண்டுபிடிக்கமுடியாததில் வருத்தம். நீங்கள் குறிப்பிட்டு இருப்பதைப்போல் என் தோழி விடாமல் பேசிக்கொண்டிருந்ததாக நினைவில் இல்லை. சி.டி. இந்திரா போன்ற ஆகச்சிறந்த அறிவுஜீவிகளின் உரையின் போது இதுபோல் பேசிக்கொண்டிருப்பது எங்கள் இருவரின் வழக்கம். இதெல்லாம் தெரிஞ்திருந்ததால்தான் இலக்கிய கூட்டங்களுக்கு (உயிர்மையின் கூட்டமாக இருந்தாலும்) எப்போதும் என் தோழியை அழைத்துச்செல்வது வழக்கம் :). நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாம்! ( என் தோழிக்கு என்னைவிட இலக்கிய வாசிப்பும், ஆர்வமும் அதிகம் என்பதால் எனக்கு அவரை அழைத்துவருவது மிக எளிமையான ஒன்று.)
இந்திரா ஆங்கிலத்தில் பேசிய போது உங்களுக்கு ஏற்பட்ட அதே சந்தேகம் எனக்கும் ஏற்பட்டது. ஆனால் அவ்வப்போது இடையில் வாசித்து காண்பித்த தமிழ் வரிகளின் உச்சரிப்பினை கேட்ட பின்புமா உங்களுக்கு அவருடைய உரை தமிழில் இல்லாதது பற்றிய வருத்தம்:).
இமையத்தின் உரை பற்றி குறிப்பிட்டிருப்பது என்னை ஆச்சர்யபடுத்துகின்றது. இமையம் இ.பாவின் 53 சிறுகதைகளை படித்திருப்பதெல்லாம் சரிதான்.

////////////////////////
இ.பா, தி.மு.கவை விமர்சிப்பதை வாசகனாக ஏற்றுக் கொள்வதாகவும், தி.மு.க கட்சிக்காரனாக மறுப்பதாகவும் சொன்னார்.
////////////////////////

இதெல்லாம் கருணாநிதியிடம் இமையம் கற்றுக்கொண்டிருக்கக்கூடிய typical மழுப்பல் நுட்பங்களாகவே எனக்கு படுகின்றது. இதை இங்கு குறிப்பிடாமல் இருந்திருந்தால் இமையத்தின் மீது ஒரளவாவது மரியாதை இருந்திருக்கக்கூடும். மேலும் உயிர்மை இமையத்தை அழைத்திருந்தது இ.பாவின் படைப்புகளை பற்றிய ஒரு கட்டுரையினை வாசிப்பதற்கா அல்லது உரையாற்றச்சொல்லியா என்பது தெரியவில்லை. அவருடைய குரல் நீங்கள் குறிப்பிட்டதைப்போல் கணீர் குரல் என்றாலும் அவர் கட்டுரையினை வாசித்த விதம் இந்திராவின் பேச்சினை விட எனக்கு சலிப்பூட்டுவதாகவே இருந்தது. இமையத்தின் வாசிப்பில் எது அவரின் சொந்த கூற்று, எது இ.பாவின் படைப்பிலிருந்து எடுத்துக்காட்ட முயன்ற வார்த்தைகள் (இ.பா வின் quotes) என்பது குழப்பான ஒன்றாகவே இருந்தது. ஒரு தமிழ் கட்டுரையினை வாசிப்பது அவ்வளவு கடினமான ஒன்றா? அது ஒரு நுட்பமான கட்டுரை என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் ரவிக்குமாரிடம் தெரிந்த கருணாநிதியின் முகம் ஏன் உங்களுக்கு இமையத்திடம் தெரியவில்லை? அவருக்கு இ.பாவின் கருத்துக்களில் முரண்பாடுகள் இருப்பின் அவரால் எப்படி இ.பாவை கொண்டாடமுடிகிறது. இமையத்தால் கருணாநிதியுடன் இதுபோல் ஏதேனும் ஒரு கருத்தில் தான் முரண்படுவதாக அறிவித்துக்கொள்ள இயலுமா. இது எவைப்பற்றியும் நீங்கள் குறிப்பிடாமல் போகிற போக்கில் இமையம் கட்டுரையினை பாராட்டிச்செல்வது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது. இவை அனைத்தும் என் புரிதல்களின் கோளாறுதானா என்கிற சந்தேகமும் எனக்கு உள்ளது. அவ்வாறெனின் தெளிவுபடுத்தவும் (நேரம் அனுமதிக்கும் பட்சத்தில்)
////////////////////////
இ.பா, தி.மு.கவை விமர்சிப்பதை வாசகனாக ஏற்றுக் கொள்வதாகவும், தி.மு.க கட்சிக்காரனாக மறுப்பதாகவும் சொன்னார்.
////////////////////////
இதெல்லாம் கருணாநிதியிடம் இமையம் கற்றுக்கொண்டிருக்கக்கூடிய typical மழுப்பல் நுட்பங்களாகவே எனக்கு படுகின்றது. இதை இங்கு குறிப்பிடாமல் இருந்திருந்தால் இமையத்தின் மீது ஒரளவாவது மரியாதை இருந்திருக்கக்கூடும். மேலும் உயிர்மை இமையத்தை அழைத்திருந்தது இ.பாவின் படைப்புகளை பற்றிய ஒரு கட்டுரையினை வாசிப்பதற்கா அல்லது உரையாற்றச்சொல்லியா என்பது தெரியவில்லை. அவருடைய குரல் நீங்கள் குறிப்பிட்டதைப்போல் கணீர் குரல் என்றாலும் அவர் கட்டுரையினை வாசித்த விதம் இந்திராவின் பேச்சினை விட எனக்கு சலிப்பூட்டுவதாகவே இருந்தது. இமையத்தின் வாசிப்பில் எது அவரின் சொந்த கூற்று, எது இ.பாவின் படைப்பிலிருந்து எடுத்துக்காட்ட முயன்ற வார்த்தைகள் (இ.பா வின் quotes) என்பது குழப்பான ஒன்றாகவே இருந்தது. ஒரு தமிழ் கட்டுரையினை வாசிப்பது அவ்வளவு கடினமான ஒன்றா?
இ.பா-80 என்கிற இந்த நிகழ்ச்சியில் பேசிய பெரும்பாலானோர் வருத்தப்பட்டது தமிழ்நாட்டில் எழுத்தாளர்களை மதிப்பதில்லை என்பதற்காகத்தான். எனக்கும் இது மிகுந்த வருத்தமான ஒன்றாகவே இருந்தது. ஆனால் இதை விட வருத்தமானது எழுத்தாளர்களை எழுத்தாளர்களே மதிப்பதில்லை என்பதுதான். இ.பா நிகழ்ச்சியில் மட்டும் அல்ல உயிர்மையின் மற்ற விழாக்களிலும் நான் கவனித்தே வருகின்றேன். சிறப்புவிருந்தினர்களில் சிலர் அவர்களுடைய உரை முடிந்ததும் மேடையிலிருந்து பறந்துவிடுகின்றனர். ‘’ஒரு மாபெரும் எழுத்தாளன் 80 வயது வரை வாழ்வதும், எழுதுவதும், சமகால படைப்புகளை வாசித்தும் வருவது மிகவும் ஆச்சர்யமான ஒன்று’’ என எஸ்.ரா அவரது உரையில் குறிப்பிட்டிருந்தார். உண்மைதான் . ‘’நம் காலகட்டத்தின் மாபெரும் படைப்பாளியை கொண்டாட’’ நடைபெற்றவிழாவில் பேசிய கவிஞர் ஞானக்கூத்தனுக்கு விழாவின் முக்கியமான உரையான இ.பாவின் ஏற்புரையினை கேட்கும் ஆர்வம் எதனால் இல்லை. இவர்கள் இது போன்ற விழாக்களுக்கு வருவது வெறும் உரையாற்றமட்டும்தானா! இவர்களுக்கு மற்றவர்களின் உரையிலிருந்து தெரிந்து கொள்ள எதுவுமே இல்லாமல் போய்விட்டதா! 80-வயதான இ.பாவே மிகுந்த சிரமத்துடன் மேடையில் விழா முடியும்வரை நீண்டநேரம் அமர்ந்திருக்க முடிந்தபோது, விழாவின் இடையிலே மேடையிலிருந்து வெளியேருவர்கள் எப்படி அவன் வாழ்ந்துவரும் சமூகத்திடம் எழுத்தாளனை கொண்டாட வேண்டும் என்கிற நாகரீகத்தினை எதிர்பார்க்க முடியும். (இதேபோல் வெளியேறிய சி.டி.இந்திரா ஆத்துக்குச் செல்ல நாழி ஆயிடுச்சி என்பதால் அவர் விதிவிலக்கு). ஒரு எழுத்தாளனை இன்னொரு எழுத்தாளனே மதிப்பதில்லை என்பதற்கான சமீபத்திய உதாரணமே இந்த சம்பவம். தற்போதுள்ள இலக்கிய சூழலில் இதை ஒரு உதாரணம் கொண்டு விளக்கவேண்டிய அளவிற்கு இது ஒரு புதிரான அம்சமாகவும் நான் கருதவில்லை. இருந்தாலும் இது உயிர்மை விழாவினை பற்றிய கட்டுரை என்பதால் இங்கு பதிவு செய்யவேண்டும் என்கிற எண்ணம்.
அது ஒரு நுட்பமான கட்டுரை என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் ரவிக்குமாரிடம் தெரிந்த கருணாநிதியின் முகம் ஏன் உங்களுக்கு இமையத்திடம் தெரியவில்லை? அவருக்கு இ.பாவின் கருத்துக்களில் முரண்பாடுகள் இருப்பின் அவரால் எப்படி இ.பாவை கொண்டாடமுடிகிறது. இமையத்தால் கருணாநிதியுடன் இதுபோல் ஏதேனும் ஒரு கருத்தில் தான் முரண்படுவதாக அறிவித்துக்கொள்ள இயலுமா. இது எவைப்பற்றியும் நீங்கள் குறிப்பிடாமல் போகிற போக்கில் இமையம் கட்டுரையினை பாராட்டிச்செல்வது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது. இவை அனைத்தும் என் புரிதல்களின் கோளாறுதானா என்கிற சந்தேகமும் எனக்கு உள்ளது. அவ்வாறெனின் தெளிவுபடுத்தவும் (நேரம் அனுமதிக்கும் பட்சத்தில்)
ஒரு எழுத்தாளனை இன்னொரு எழுத்தாளனே மதிப்பதில்லை என்பதற்கான சமீபத்திய உதாரணமே இந்த சம்பவம். தற்போதுள்ள இலக்கிய சூழலில் இதை ஒரு உதாரணம் கொண்டு விளக்கவேண்டிய அளவிற்கு இது ஒரு புதிரான அம்சமாகவும் நான் கருதவில்லை. இருந்தாலும் இது உயிர்மை விழாவினை பற்றிய கட்டுரை என்பதால் இங்கு பதிவு செய்யவேண்டும் என்கிற எண்ணம்.
///////அழைப்பு வராதவர்களுக்கு பழந்தமிழ் இலக்கிய பரிச்சயம் இல்லையாம்.//////
ரவிக்குமாருக்கு நல்ல சென்ஸ் ஆப் ஹுயூமர்.
//////“சங்கச்சித்திரங்களும், கொற்றவையும் எழுதி மரபிலக்கியத்தில் ஊறித் திளைத்த ஒரு எழுத்தாளர் இருக்கிறாரே.//////
குஷ்பு-வை விடவா அவருக்கு மரபிலக்கிய பரிச்சியம் அதிகமாக இருக்கும்:)
உங்களை சந்திக்காமல் போனதில் சற்று ஏமாற்றம். ஒரு நாள் இரவு என்னுடைய அருமை நண்பர் ஜோசப்-யிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவரும் கிறுத்துவக் கல்லூரி மாணவர் என்பதால் அவரிடம் உங்கள் கிறுத்தவக்கல்லூரி விடுதி விழா கட்டுரை பற்றி பேசியபோது உங்களைப் பற்றி பேச்சு எழுந்தது. அப்போது, நீங்கள் அவருக்கு மிகவும் பரிச்சயமானவர், அவரின் வேளச்சேரி அறைக்கு நீங்கள் வந்தது என ஜோசப் எனக்கு பல ஆச்சர்யங்களை அளித்தார். அவரின் அறைக்கு நானும் சில முறை சென்றிருக்கின்றேன். உங்களை நேரில் பார்த்தால் இதுபற்றி பேசலாம் என்றிருந்தேன். ஆனால் இப்போது இந்த பின்னூடத்தின் மூலம் இது நிகழ்ந்துவிட்டது.
ஆமாம் உயிர்மை கூட்டத்தில் நீங்க எங்க உட்கார்ந்து இருந்தீங்க!!!
@ராம்ஜி யாஹீ...

////////என் குழந்தையிடம் நீ இந்த எழுத்தனைப் போல வாழ வேண்டும், வளர வேண்டும் என்று கூற ஒரு ரோலேமாடல் கூட இல்லை இன்று.
பெரும்பாலான எழுத்தாளர்களிடம் நம்பகத் தன்மை இல்லை. அடிக்கடி தங்கள் நிலைப்பாட்டை மாற்றி கொள்கின்றனர்.////////

நிலைப்பாடு மாறாத ஒருவரை தொடர விரும்புவர்கள் ஏதேனும் சற்குருக்களையும், ஆனந்தாக்களையும் நாடலாம். மேலும் குழந்தைகளிடம் சென்று இந்த எழுத்தாளரை போல் வாழவேண்டும், வளர வேண்டும்-னுலாம் சொல்லக்கூடாது. இதெல்லாம் ரொம்ப அராஜகம். புஜ்ஜிமா பாவம் சார்;)


நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாத, அதே நேரத்தில் மக்களாலும் கொண்டாடப்படும் ரஜினி, விஜய், அஜீத், நமீதா... போன்ற ரோல்மாடல்களை குழந்தைகளுக்கு உதாரணம் காட்டி வளர்க்கலாம்.

ரஜினிகாந்தின் (குப்பை)பட வசனத்தோடு ஒப்பிட்டு (ஒரு எழுத்தாளனை அல்ல) ஒட்டு மொத்த எழுத்தாள வர்கத்தையே வசைபாடுவது என்பது நம் தமிழ்நாட்டில் மட்டுமே சாத்தியப்படக்கூடிய ஒன்று.

//////////// பெரும்பாலான எழுத்தாளர்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் சரி இல்லை இன்று, அதுவும் ஒரு காரணம்./////////

இங்கு, ஒருவனுடைய பொதுவாழ்க்கையின் மீதான அக்கரையினைவிட அவனுடைய தனிவாழ்க்கையின் மீதான அக்கரையே அனைவருக்கும் அதிகம்.

ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி விமர்சிப்பதும் கவலைப்படுவதும் ஒரு மோசமான நாகரீகத்தின் அடையாளம் . ஒருவருடைய பொதுவாழ்க்கை வேறு தனிவாழ்க்கை என்பது வேறு. தனிவாழ்க்கையை பற்றி யாரும் கருத்து சொல்லக்கூடாது போன்ற அடிப்படையான நாகரீகங்களை முதலில் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தாலே போதும். அப்புறம்.... முக்கியமா நாமும் கத்துக்கனும் என்பது என் தாழ்மையான கருத்து.
Arun Nadesh said…
அருமையான பகிர்வு. பகடி புகுந்து விளையாடுகிறது.

//நானும் நண்பர் பிரகதீசும் ஒரு கணக்குப் போட்டு பார்த்ததில் இ.பாவின் வயதுக்கு ம.புவும், அ.ராவும் இளைஞர்கள் என்பது சரியாகவே பட்டது. நானும் நண்பரும் இதே விகிதப்படி குழந்தைகள். கூட்டத்தில் இருந்த ஒரு கைக்குழந்தை இந்த கணக்கு உள்ளெல்லாம் வரவே வராது.
//

//ரவிக்குமார் பேசிக் கொண்டே சென்ற போது எனக்கு சற்றே கண் மயங்கியது. செம்மொழி செம் ம் ம் என்று அதிர்ந்த போது விழித்தால் சாட்சாத் கலைஞரே முன் நின்று உரையாற்றுவது போல் ஒரு தோற்றம். இதற்கே இப்படி என்றால், செம்மொழி அணியில் தீவிர இலக்கியவாதிகள் ஒவ்வொருவராக சரணடைந்தால் என்னவாகும் என்று நினைத்த போது காலடியில் பூமி விலகியது. தானியங்கி பீரங்கிகள் மட்டுமே நிறைந்து நின்று மாறி மாறி சுடும் போர்க்களம் ஒன்று கற்பனையில் விரிந்தது//

என்ன ஒரு வில்லத்தனம்.:)