Wednesday, June 16, 2010

வடக்குமாசி வீதி: பழுக்குகளின் உலகமும் துப்புவாளையும்

தாமரை இதழில் வலைப்பூக்களை அறிமுகப்படுத்தி நான் எழுதி வரும் தொடரில் இம்மாதம் வடக்குமாசி வீதி

 
ஒவ்வொரு ஊரிலும் அதன் பிரதான கலாச்சார மற்றும் உளவியல் அம்சங்களை வெளிப்படுத்தும் நபர்கள் இருப்பார்கள். பிரமுகர்களை சொல்ல வில்லை. இவர்கள் பெரும்பாலும் உதிரிகளே. உலோபிகள், சோம்பேறிகள், வன்முறையாளர்கள், குடிகாரர்கள், திருடர்கள், அடையாள வெளிப்பாட்டிற்காக கலை, விளையாட்டு போன்றவற்றில் ஒரு சில்லறை அளவில் ஈடுபட்டு வருபவர்கள் ... இப்படி. ஒரு வங்கி குமாஸ்தா அல்லது விவசாயியை விட ஊரில் அதிக பிரபலமானவர்களாக இவர்கள் இருப்பர். அதிகமும் வட்டப் பெயர்களால் அறியப்படுவார்கள். காலப்போக்கில் சிலரது நிஜப்பெயர் மறந்து அடையாளப்பெயர் நிலைக்கும். உதாரணமாக எங்களூரில் சிலர் எவரஸ்டு, சோப்பு என்றெல்லாம் அறியப்பட்டார்கள். ஒரு கட்டத்தில் ஊரின் பல்வேறு மித்துகளில் இவர்களின் கதைகளும் கலந்து விடும். இந்த கதைகள் பலநூறு தடவை வெவ்வேறு சந்தர்பங்களில் பேசப்பட்டு தொடர்ந்து வண்ணம் ஏற்றப்படும். இலக்கியத்தில் ஒரு ஊர் புனையப்படும் போது நிஜவரலாற்றை விட இத்தகைய வினோத உதிரி மனிதர்களே முக்கியமான இடம் பெறுவர். ஜேம்ஸ் ஜாய்ஸில் இருந்து குமார செல்வா வரை சொந்த ஊர் மனிதர்களை புனையும் போது இந்த மித்துகளின் புராதன கல்லறையில் இருந்தே தட்டி எழுப்புகிறார்கள். இணையத்தில் கட்டியக்காரன் என்ற புனைப்பெயரில் எழுதும் மதுரைக்காரர் ஒருவரின் வலைப்பூவே வடக்குமாசி வீதி. முகவரி http://sangam.wordpress.com. இது அந்த மதுரைத் தெருவின் வினோத மனிதர்களைப் பற்றிய பதிவுகள், ஊரின் உளவியல் மீதான பகடிகள் ஆகியவற்றை கொண்ட ஒரு வித்தியாசமான இணையதளம். வடக்குமாசி வீதியின் அலாதியான சித்திரங்களே இந்த வலைப்பூவுக்கு தமிழ் இணைய உலகில் ஒரு தனித்துவமான இடம் தருகிறது. கட்டியக்காரன் 2006 ஆகஸ்டில் இருந்து நாலு வருடங்களாக வலைப்பூவை நடத்தி வருகிறார். மாதத்திற்கு சில பதிவுகள் என்று மொத்தம் எழுபது கட்டுரைகள் மற்றும் கவிதைகள் எழுதியுள்ளார். பதிவுலகிற்கு இந்த எண்ணிக்கை குறைவுதான். இணையதளத்தில் தன்னைப் பற்றின விபரங்களை இவர் தெரிவிக்க இல்லை என்றாலும் ஊடகத்தில், குறிப்பாக பத்திரிகையில், இயங்குபவர் என்ற குறிப்பு அவரது அக்கறைகளில் தெரிகிறது. சமூகம், சினிமா, அரசியல் என்று வேறுபட்ட தளங்களில் இயங்கினாலும் கட்டியக்காரனின் பிரதான திறமை மற்றும் இலக்கு அங்கதம் தான். நகைச்சுவையை பொறுத்த மட்டில் நிகழ்த்து கலையில் போன்றே எழுத்துலகிலும் டைமிங் முக்கியமானது. முரண்படும் அல்லது பொருத்தமற்ற தகவல்களை குறுவாக்கியங்களில் இணைப்பது டைமிங்குக்கான ஒரு நல்ல உத்தி. செல்வம் குடித்து விட்டு கலாட்டா செய்வதை ரசிக்க நண்பர்கள் அவருடன் கூட்டம் சேருவார்கள் என்பதை கட்டியக்காரன் எப்படி வாக்கியப்படுத்தி மெல்லிய நகைச்சுவையை ஏற்படுத்துகிறார் பாருங்கள்:

அடிக்கடி அடிதடியில் ஈடுபடுபவர்களுக்கு வடக்கு மாசி வீதியில் ரசிகர்கள் உண்டு. என் நண்பன் செல்வம் அப்படி ஒரு டைப். குடித்துவிட்டால் யாருடனாவது ஏதாவது பேசி வம்பிழுப்பான் என்பதால் அவனுடன் சேர்ந்து குடிக்க கூட்டம் அள்ளும்..

இதைப் போலவே சற்றும் எதிர்பாராத தகவல் ஒன்றை அப்பாவித்தனமாய் சொல்வது மற்றொரு உத்தி. வடக்குமாசி வீதியின் அழுக்கு பேரீச்சம்பழ வண்டிகளை பற்றின பதிவை இப்படி ஆரம்பிக்கிறார்:

மதுரையில் தள்ளுவண்டியில் வைத்து விற்கப்படும் மற்றொரு தின்பண்டம் பேரீச்சம்பழம். ஒரு அகலமான கோபுரம் போல, மிகுந்த பளபளப்புடன் வண்டிகளில் இவை குவித்து வைக்கப்பட்டிருக்கும். இந்தக் கோபுரத்தைப் பார்க்கும் வெளியூர்காரர்கள் (பெரும்பாலும் ஐயப்ப சாமிகள்) இதை வாங்காமல் தப்பிக்கும் வாய்ப்பு மிகக் குறைவு..
பிறகு “எல்லா ஐயப்ப சாமிகளும் ஏமாளிகள் அல்ல என்கிறார். ஏன்? அடுத்த வாக்கியத்திலேயே “சில உஷாரான சாமிகள் பளபளப்பான பேரீச்சம்பழ கோபுரத்திலிருந்து சில பழங்களை உதிர்த்து எடுத்து, சாப்பிட்டுப் பார்த்துவிட்டு, நன்றாக இருக்கிறதென்று தலையாட்டிவிட்டுத்தான் வாங்குவார்கள். பிசுபிசுப்பை தங்கள் அழுக்குத் துண்டில் துடைத்துக்கொள்வார்கள். என்கிறார். கட்டியக்காரனின் நகைச்சுவை தனித்துவமான வாழ்க்கை நோக்கை கொண்டுள்ள உயர்தர நகைச்சுவை அல்ல. பலசமயம் புழக்கத்தில் உள்ள ஜோக்குகள் மற்றும் அங்கத உத்திகளை பயன்படுத்துகிறார். ஆனாலும் இணைய உலகில் அங்கதத்திற்கான மொழிப் பிரயோகத்தில் கட்டியக்காரனுக்கு தனி இடம் உண்டு.

ஊர் அதன் மனிதர்களைப் போன்றே மாறிக் கொண்டே இருப்பது. ஆனால் ஒரு கட்டத்தில் ஊர் நம் மனதின் அடிவாரத்தில் மாற்றமற்று படிந்து போய் ஒரு படிமம் ஆகிறது. அந்த ஊர் உங்களுக்கே ஆன ஊர். ஊர்க்காரர்களுடன் பொது அரட்டையில் பகிர்ந்து கொள்ளலாம் எனினும் அதன் ஒரு முக்கிய பகுதி உங்கள் அவதானிப்புகளாலும், கற்பனையாலும் உருவாகி தனித்துவம் பெற்றது. ஒரே நில மற்றும் கலாச்சார வெளியில், சமூகத்தில் உங்களுடன் வாழ்பவரின் மனப்பதிவுடன் உங்கள் ஊர் பற்றின பதிவு வேறுபடுவதாக இருக்கும்.. மனதின் ஆழத்தில் உள்ள இந்த ஊர்ப்படிமத்துக்கு நிஜ ஊரை விட எழுத்தில் முக்கியத்துவம் அதிகம். கட்டியக்காரன் எண்பதுகளில் ஊரை விட்டு வந்தவர். அவர் சித்திரப்படுத்தும் வடக்குமாசி வீதி இன்று மாறி விட்டதை புகைப்படத்துடன் காட்டும், அவ்வீதியின் வ்ரலாற்றை சுருக்கமாகும் குறிப்பிடும் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதே நேரம் மாற்றமில்லாத ஒரு வடக்குமாசி வீதி தொடர்ந்து அவர் எழுத்துக்களில் பவனி வந்தவாறே உள்ளது. இந்த வீதியின் உளவியல் அதன் மக்களின் வினோத குணாதசியங்களால் உருவாவது என்று சொன்னேன். இவர்களை இப்படி சுருக்கமாக பட்டியலிடலாம்.

  • பானுப்பிரியாவுக்கு பாலியல் கடிதம் எழுதும் அரவிந்தும் அவனது சகோதரனும்

  • தன்னால் பத்தாம் வகுப்பு கணக்கு பாடத்தில் தேற முடியாத போது நண்பன் எம்.ஏ வரை சென்று படிப்பது சாத்தியமே இல்லை என்று நம்பும் குசும்புக்கார ரங்கசாமி

  • வீராவேசத்தையும், கௌரவத்தையும் அவ்வப்போது மட்டும் வெளிப்படுத்தும் முனியாண்டி

  • குடித்து விட்டால் மனிதர்களின் முக-அமைப்பே குழம்பிப் போகும் அசோக்கின் மாமா. ஒருநாள் டாஸ்மாக் சந்திப்பில் செல்வம்னு ஒரு நாயி தம்பி. கிரைண்டர் மெக்கானிக்கா இருக்கு. (அசோக்) எந்நேரம் பார்த்தாலும் அதுகூடவே சுத்தறான் தம்பி. நீங்களே புத்தி சொல்லுங்க என்று அவரிடம் புறமண்டையில் அடித்தது போல் அவமானப்பட்டு, அங்கிருந்து அமைதியாக கிளம்பி வேறொரு ஒய்ன் ஷாப்பில் மேலும் ஒரு எம்.சி ஹாப் வாங்கி அடித்து விட்டு கவிழ்ந்து கொள்ளும் கிரைண்டர் மெக்கானிக் செல்வம். டாஸ்மாக்கில் குடித்து எல்லாரிடமும் வம்புக்கிழுப்பதில் பிரபலமானவன் இந்த செல்வம் என்பது மேலதிக குறிப்பு.

  • புத்தாண்டை ஹேப்பி நியு இயர் என்று மட்டுமே குறிப்பிட வேண்டும் என்பதில் பிடிவாதமாக உள்ளவர் ஒருவர்

  • வடக்குமாசி வீதியில் மாடுகளுக்கு அடுத்தபடியாக எண்ணிக்கையில் அதிகமாக உள்ள பழுக்குகள். 10 முதல் 16 வயதுள்ள, வீட்டுக்கு அடங்காத, சாலையில் செல்பவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் சிறுவர்களே பழுக்குகள். இவர்களுக்கு பிடித்தமான விளையாட்டு: சாலையில் வெற்று பர்ஸை போட்டு விட்டு காத்திருப்பார்கள். அதை நப்பாசையில் யாராது எடுத்து சுற்றும் முற்றும் பார்த்தால் சூழ்ந்து கொண்டு திருடன் என்று பழித்து அவமானப்படுத்துவார்கள். பொதுவாக யார் மோதிக் கொண்டாலும் விலக்கி விடாது பார்வையாளர்களாக சூழ்ந்து கொண்டு சிலாகிக்கும் வடக்குமாசி வீதிக்காரர்கள் இந்த பழுக்கு ஆட்டத்தையும் வெகுவாக ரசிக்கிறார்கள். ஒருமுறை ஒரு பெண் தனது பர்ஸ் தான் என்று அடாவடியாக பழுக்குகளை மிரட்டி பறித்துக் கொண்டு போய் விடுகிறார். மற்றொரு தடவை ஒரு போலீஸ்காரர் இந்த பர்ஸை பொறுக்கிக் கொண்டு கலாய்க்க வரும் பழுக்குகளுக்கு ஒரு அறை விடுகிறார்.

  • செல்லாமல் ஆகி விட்ட ஒன்று மற்றும் ரெண்டு காசுகளுக்கு குழந்தைகளுக்கு மிட்டாய் தரும் நொண்டி கடைக்காரர்

  • எழுத்தாளர், அவரது தந்தை, அவரது முந்தைய தலைமுறையினர் மற்றும் ஊர்க்காரர்களால் “அண்ணா என்று மரியாதையாக அழைக்கப்பட்டு அண்ணா என்றே பெயர் நிலைப்பெற்ற எழுதுபொருள் கடைக்காரர். மூன்றடி உயரமானவர். கூனர். எப்ப்போதும் அழுக்கு கதராடை. இவருக்கு உதவியாய் கழுத்தில் கைக்குட்டை சுற்றிய மைனர். அண்ணா அடித்தட்டு மக்களுக்கான குறைந்த விலைப் பொருட்களையே விற்பார். குழந்தைகளுக்கு கோலிக் குண்டு, பம்பரம், சாட்டை, தீப்பெட்டிப் படம், பட்டம் விற்பார். வடக்குமாசி வீதி மாறி விட்ட பின்னரும் மாறாத அடையாளம் அண்ணாவின் கடை. வடக்குமாசி வீதி நவீனப்பட அண்ணா கடையின் மலிவு விலை வியாபாரத்துக்கான அவசியம் இல்லாமல் போகிறது. கடை நலிகிறது. மைனர் கடையிலிருந்து கழன்று கொள்கிறார். அண்ணா மட்டும் மாறவே இல்லை.

  • எண்பதுகளின் இறுதியில் வந்த பல படங்களில் விஜய்காந்த் ஜாதி, மதத்தால் வேறுபட்ட காதலர்களை கடுமையாக போராடி ஒன்று சேர்த்து வைப்பார். விஜயகாந்தை அடியொற்றி இயங்கும் வடக்கு மாசி காதல் தெய்வங்கள்.

  யாராவது ஒரு பையன், ஒரு பெண்ணைத் திரும்பிப் பார்த்தால் போதும். எங்கிருந்தோ வந்துவிடுவார் ஒரு விஜயகாந்த். விறுவிறுவென அந்தப் பெண்ணின் பூர்வீகம், ஜாதகம் எல்லாவற்றையும் ஒப்பிப்பார். பிறகு, அந்தப் பெண்ணை எந்த இடத்தில் எப்போது பார்க்கலாம் என்பதையெல்லாம் சொல்லிக்கொடுப்பார். அந்த ஒரு தலைக் காதலனுக்குத் தேவைப்படக்கூடிய அத்தனை உதவிகளையும் செய்துகொடுப்பார் விஜயகாந்த். கவலைப் படாதீங்க பாஸ். அது ஒங்களைத்தான் பாக்குது. முடிச்சிடலாம் என்று தினமும் சாயங்காலம் சந்தித்து ஆறுதல் சொல்வார்.. ஆனால் இந்த காதல் உறவு முறிந்து போனால் காதல் தெய்வமும் பட்டாம்பூச்சி போல் விலகி விடுவார். மாஜி காதலனை வழியில் பார்த்தால் கூட விஜயகாந்த வேண்டா வெறுப்பாக புன்னகைத்து கடந்து விடுவார்.  

  • பள்ளியில் வழக்கமாய் தர்மாம்பாள் டீச்சருக்கு டீ வாங்கி வரச் செல்லும் கிருஷ்ணன். ஒருநாள் தம்ளர் மாறி விட டீச்சருக்கு சந்தேகம். அந்த மாறி வந்த டம்ளரின் சொந்தக்காரனுக்கு தோல் வியாதி இன்றும் கிடையாதே? எதிர்பாராமல் கிருஷ்ணன் பொய் சொல்கிறான்: அவன் குஷ்டரோகி மாதிரி இருந்தான்.. ஒரே புண்ணு“ . . டீச்சர் அன்றில் இருந்து வகுப்பு வேளையில் உல்லாசமாய் டீ வாங்கி வர வெளியே செல்லும் கிருஷ்ணனின் வாய்ப்பை பறிக்கிறார். கிருஷ்ணன் ஏன் அப்படி வினோதமாய் நடந்து இழப்பை தேடிக் கொண்டான்? பின்னர் ஒருமுறை பத்தாம் வகுப்பு பரிட்சையை புறக்கணித்து நடிகர் விஜயகாந்தின் திருமணத்தில் கலந்து கொள்கிறான்.

வட்க்குமாசி வீதி வலைப்பூவின் மிகச்சிறந்த பதிவுகளாக இரண்டை சொல்லலாம். வழுக்குமரம் மற்றும் நானே புலியை பார்த்ததில்லை. மனித விசித்திரங்களை கூர்மையாக அங்தம மற்றும் சமநிலையுடன் பேசும் கட்டுரைகள் இவை. “ஜல்லிக்கட்டு போட்டி பற்றி கட்டியக்காரன் வேறொரு ஒரு பதிவிட்டிருக்கிறார். மீடியா மற்றும் பொதுப்புத்தியில் உள்ள ஜல்லிக்கட்டு முன்னெண்ணங்களை கலைப்பதே அதன் உத்தேசம். ஜல்லிக்கட்டு காளைகள் மிக அரிதாகவே துன்புறுத்தப்படுகின்றன. அவை மிகுந்த பரிவு மற்றும் பிரியத்துடம் வருடம் முழுதும் வளர்க்கப்பட்டு போட்டியின் போது சில நிமிடங்களே துரத்திப் பிடிக்கப்படுகின்றன. போட்டியில் வென்றால் கிடைக்கும் வெகுமதி உரிமையாளரின் ஒருநாள் தவிட்டு செலவுக்கே ஆகாது. ஆனாலும் ஒருநாள் வெற்றியின் பெருமிதத்திற்காக வருடம் முழுவதும் சிரமப்பட்டு போட்டிக்காக மாட்டை தயாரிக்கிறார். இந்த பல ஆயிரம் பேர் முன்னிலையிலான பெருமிதத்துக்காக தான் வழுக்குமரம் ஏறும் போட்டியிலும் பழுக்குகள் ஈடுபட்டு ஆவேசமாக போராடி, தில்லுமுல்லுகள் செய்து, ரணமாகின்றனர். இதற்கும் வெகுமதி ஒரு வெள்ளைத் துண்டு, சுவாமிக்கு படைக்கப்பட்ட தேங்காய் பழம், ஒரு ரூபாய் காசு ஆகியவை தான். மனித குலத்தின் அயராத முயற்சிகளில், அதன் சாதனைகளில் எப்போதும் அசட்டுத்தனமும், அங்கீகாரத்துக்கான லட்சிய ஆவேசமும் ஒருங்கே இணைந்திருப்பதை இப்பதிவு நுட்பமாக சித்தரிக்கிறது. நானே புலியை பார்த்ததில்லை இணையத்தில் கிடைக்கும் மிகச்சிறந்த நகைச்சுவை பிரதிகளில் ஒன்று. திருநெல்வேலி முண்டந்துறையில் உள்ள புலிகள் காப்பகம் மத்திய அரசால் புலிகள் வசிக்கும் வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. அங்கு சில விஞ்ஞானிகள் சென்று ஆராய்ந்து புலிகளே இல்லை என்று அறிவிக்க, இதன் பின்னணியை அறிய விரும்பும் கட்டியக்காரனும் நண்பரும் சிரமப்பட்டு வழிதேடி அங்கு செல்கின்றனர். உள்ளே செல்ல அனுமதி மறுக்கும் அதிகாரி ஒருவர் இப்படி சொல்கிறார் புலி இருக்கு. இல்லைனு சொல்லல. கடவுள் இருக்கார்னு சொல்றோம்ல, அது மாதிரிதான். யாராவது கடவுளைப் பார்த்திருக்கமா? ஆனா, அவர் இருக்கார்னு நம்புறோம்ல, அது மாதிரிதான். நாங்களும் இங்கே புலி இருக்குன்னு நம்புறோம். இந்த மேற்குத் தொடர்ச்சி மலை இருக்கே, அது கன்னியாகுமரில ஆரம்பிச்சு, பூனே வரைக்கும் சுமார் பத்து மாநிலங்கள்ள பரந்து விரிஞ்சு கிடக்கு. இதுல எங்கேயாவது புலி இல்லாமையா போகும்... நான் இங்கே பதினஞ்சு வருசமா வேலை பார்க்கிறேன். நானே புலியைப் பார்த்ததில்ல. மதுரையிலயிருந்து வந்த உடனே புலியப் பார்த்துறனுமா?. அரசாங்க அலுவலகங்களும், அவற்றை கட்டுப்படுத்தும் அரசு எந்திரமும் வெளியிடும் தகவல்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் அது ஏற்படுத்தும் தோற்றம் இந்த புலிக் கதை மாதிரி தான்.

கட்டியக்காரனின் கவிதைகள் கொஞ்சம் கலக மொழியும் சமூக அங்கதமும் சேர்த்து பிழியப்பட்டவை. உதாரணமாக கொசு அடிப்பாளரை சொல்லாம். சின்ன வயதில் இருந்தே கொசு அடிக்கும் பழக்கம் உடைய கவிதைசொல்லி நண்பர்களின் ஊக்குவிப்பு மற்றும் மின்சார கொசுமட்டையுடன் ஓய்வு வேளையில் கொசு அடிக்க கிளம்புகிறார். முதல் நாளே ஆயிரம் கொசுக்கள் இரையாகின்றன. போகப் போக இதையே முழுநேர தொழிலாக கொள்ளலாமே என்று மனைவி மற்றும் நண்பர்கள் ஆலோசனை சொல்கிறார்கள். இந்த இடத்தில் இருந்து கொசு அடித்தல் கொசு பற்றி அல்லாமல் ஆகிறது. இலக்கியம், அரசியல், தினசரி அலுவல் என்று எதற்கும் பொருத்தி வாசிக்கிற குறியீடாகிறது கொசு அடிப்பு. கவிதை இப்படி முடிகிறது. “ஆர்டர், “அண்ணா மறுமலர்ச்சி திட்டம்“ பிரயோகங்களை கவனியுங்கள்.

கொசு அடித்தே கொரெல்லோ
கார் வாங்கிவிட்டாராம்
அந்த கொசுவாளர்.
இன்னொருவருக்கு
அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில்
5 கோடிக்கு ஆர்டராம்.
இதோ
இறங்கிவிட்டேன் நானும்.
நாம் அடிக்கும் கொசுவுக்கு
1 கோடி கிடைத்தால்
போதாது?
இந்த வலைப்பூவின் பலவீனமான பகுதி சினிமா விமர்சனம் தான். கற்றது தமிழ் ராமை இரண்டு பதிவுகளில் சூசகமாய் திட்டுகிறார். இந்த தனிப்பட்ட வெறுப்பு போதாதென்று எஸ்.ராமகிருஷ்ணன் பற்றி கடுமையான காழ்ப்புணர்வுடன் ஜெயமோகன அவரது தளத்தில் எழுதியுள்ள கேலிக் கட்டுரையை சிலாகித்து அதற்கு வேறு இணைப்பு வேறு தந்துள்ளார். கட்டியக்காரனின் நுண்ணுணர்வை கேள்விக்கு உள்ளாக்கும் கட்டுரைகள் இவை. இந்த இடையூறுகளை கடந்து சுவாரஸ்யத்துடன் இந்த வலைப்பூவை நம்மால் படிக்க முடியும். துப்புவாளை என்றொரு மீன்வகை உண்டு; மெல்லிசான அதன் முட்களை லாவகமாய் துப்பி துப்பி உண்பதைப் போன்று எனலாம்.
 


2 comments:

ராம்ஜி_யாஹூ said...

வடக்கு மாசி வீதி , மேல மாசி வீதி சந்திப்பில் அண்ணன் வைகோ முழங்குகிறார் என்பதே என் நினைவிற்கு உடனே வருகிறது

Madumitha said...

சரிங்க.உடனே படிக்கிறேன்.