Tuesday, June 1, 2010

கலையார்வம் கொண்டவர்கள் மந்தபுத்திக்காரர்கள்

இந்த மாத அகநாழிகை இதழில் வெளிவந்துள்ள எனது கட்டுரை


மலையாள எழுத்தாளர் அக்பர் கக்கட்டில் ஒரு ஓணச் சிறப்பிதழுக்கு பெயரளவில் மட்டும்
நாம் பெரும்பான்மையோர் அறிந்துள்ள அடூர் கோபால கிருஷ்ணனை பேட்டி கண்டு பிற்பாடு அந்த பேட்டியை விரிவு செய்து நூலாக வெளியிட்டுள்ளார். அதை "குமரி மாவட்டத்தின் கடற்கரை நகரான குளச்சலில் பிறந்த" மு. யூசுப் மொழிபெயர்ப்பு செய்ததற்கு ஒரு காரணம் உண்டு: "என் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு சுயதேவைகள் சார்ந்து உருவாக்கப்படும் சில கருத்தியல் போக்குகள் இடம் தரவில்லை. இதன் மாற்றுவடிவமாக ... அடூர் கோபாலகிருஷ்ணனைப் பற்றி அக்பர் கக்கட்டில் எழுதிய இந்நூலை தமிழில் மொழிபெயர்த்துள்ளேன்"

இந்த சொற்றொடர்களை திரும்பத் திரும்ப படித்தேன். புரியவில்லை. யூசுப்பை இவ்வாறு பூடகமாக எழுதும்படி அச்சுறுத்தும் பயங்கரவாத சக்திகளை கடுமையாக கண்டிக்கிறேன்.

சரளமான நெருடலற்ற மொழியாக்கம். ஆனால் சொற்றடரியல் (syntax) விசயத்தில் கவனம் தேவை. யூசுப்பின் அறிமுகக் கட்டுரைக்குப் பின் அக்பரின் மேலும் 4 கட்டுரைகள்: பேட்டியின் பூர்வீக வரலாறு, அடூர் பற்றிய சில நினைவுகள், வாழ்க்கை, கலை, எத்தனை குழந்தை, பேரக்குழந்தை, முகவரி என சிறுவரலாறு மற்றும் அடூரின் திரைப்படங்கள் பற்றிய விமர்சன அறிமுகங்கள். இதோடு அடூரின் படங்கள், திரைக்கதைகள், அவர் எழுதிய நூல்கள், அவரைப் பற்றிய நூல்களின் பட்டியல். பிற்சேர்க்கையாக மம்முட்டி, எம்.ஏ பேபி போன்ற பிரபலங்கள் கேட்கும் கேள்விகளுக்கு அடூரின் பதில்கள் மற்றும் அடூரின் மகள் அஸ்வதி அவரைப் பற்றி எழுதியுள்ள கட்டுரை.

அக்பர் "கண்டறிந்தவை" எனும் கட்டுரையில் சிக்மண்டு பிராயிடின் இட்--ஈகோ--சூப்பர் ஈகோ சித்தாந்தப்படி அடூரின் படைப்பாக்கத்தை திட்டவட்டமாக வரையறுக்கப் பார்க்கிறார். இது ஒரு எல்லைக்கு மேல் செல்லுபடியாகாத சூத்திரம். ஏனெனில் ஒரு கலைப்படைப்பின் நோக்கங்கள் எண்ணற்றவை. கலையின் நோகத்தை புறவயப்படுத்துவது என் மனைவி என்னிடம் அடிக்கடி கேட்கும் ஒரு கேள்வியைப் போன்று அபாயகரமானது: "என்னை ஏன் திருமணம் செய்தாய்?"

நூலில் வரும் அடூருடனான நீண்ட உரையாடலில் கேள்விகளுக்கு அவர் குறும்புத்தனமான, கூர்மையான அவதானிப்புகள் கொண்ட பதில்கள் தருகிறார்:

ஒருவன் கலைஞன் ஆவது இயல்பான தன் பேதைத்தனத்தை மறைத்து சமூகத்தில் தன்னை புத்திசாலியாக நிறுவ.

அடூர் பால்யத்தில் பார்த்த படங்களில் நினைவிலிருப்பவை புரியாத, அபத்தமான, நம்ப முடியாத காட்சிகளே. சாந்தாராமின் "ஜனக் ஜனக் பாயல் பாஜே" எனும் படத்தில் மரணத் தறுவாயில் உள்ள கதாநாயகி நாயகனின் பாடலுக்கு திடீரென எழுந்து நடனமாடுகிறாள். "பாலன்" எனும் மலையாளத்தின் முதல் பேசும்படத்தில் குண்டு பாய்ந்த ஒரு சிறுவன் அசையாது அமர்ந்திருக்கிறான்.

அடூர் பால்யத்தில் பிற சிறுவர்களுடன் சேர்ந்து போட்ட விளையாட்டு நாடகங்களில் குடும்பத்து பெரியவர்கள் பார்வையாளர்களாய் பங்கெடுக்கின்றனர். அப்போது தான் ஒரு கலைஞனின் பொறுப்பு, அந்தஸ்து, சுதந்திரம் ஆகியன உணர்ந்ததாய் அடூர் சொல்கிறார்.

காந்திகிராம பல்கலைகழகத்தில் அடூர் ஒரு காந்தியவாதியாய் தங்கியிருந்த போது நேருவின் அறைக்குள் ஒளிந்து பார்த்தார். தொப்பி அணியாத வழுக்கைத் தலையுடன் நேரூ சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தார். அடூர் குழம்பிவிட்டார்.

மனஉணர்வுகளின் நாடகத்தன்மை பற்றி ஒரு கதை வருகிறது. ஒரு சத்திரத்தின் கீழ் அறையில் தூக்கம் வராமல் புரளும் ஒரு மனிதன். மேல்மாடி அறையில் இரவில் தாமதமாய் வரும் ஒரு யாத்ரீகன் தன் காலணி ஒன்றை உருவி எறிகிறான். கீழே உள்ள மனிதனுக்கு இது மிகச் சத்தமாய் கேட்கிறது. அடுத்த காலணி விழும் சத்தத்தை பதற்றத்துடன் எதிர்பார்க்கிறான். சத்தம் வரவில்லை. அவன் பதற்றம் அதிகரிக்கிறது.

அதே மூச்சில் முகுந்த் நாகராஜனின் இந்த கவிதையையும் படித்து விடுங்கள்:

அறிவிக்கப்பட்ட மின்வெட்டு

தோசை மாவை அரைத்து முடித்தாயிற்று
மோட்டார் போட்டு தண்ணீரை
மேலே ஏற்றியாகி விட்டது.
எட்டு மணிக்குள் பாதுகாப்பான இடம் தேடி
உட்கார்ந்தாகி விட்டது.
எட்டு ஆயிற்று
மின்வெட்டு ஆகவில்லை.
8.01 ஆயிற்று.
8.02 ஆயிற்று.
பதற்றம் நீடிக்கிறது.
ஒரு திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்காக அடூரும், ஜான் அபிரகாமும் இத்தாலி போகிறார்கள். அங்கே செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தை கண்ணுறும் ஜான் உள்ளார்ந்த மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறார்: "இங்கே நிற்கும் போது கிறிஸ்தவனுக்கு ஒரு அகங்காரம் தோன்றும்"
இந்த சுயபகடிக்கு தோதாக அடூரும் தொடர்கிறார்: "ஆமேன்"

ஜான் ஏன் குடிகாரர் ஆனார்?
ஜானுக்கு திரைப்பட இயக்கத்துக்கான பொறுமை, கட்டுப்பாடு, தன்னிம்பிக்கை இல்லை. படப்பிடிப்பின் போது ஏற்படும் இந்த நெருக்கடியை தவிர்க்க ஜான் குடிப்பழக்கத்தை கடைபிடித்ததாக அடூர் கருதுகிறார். ஆனால் மதுப்பழக்கம் ஒரு நோய் என அறிவியல் ஆய்வுகள் நிரூபித்துள்ளன. உடல் இருவிதங்களில் தன் தேவையை நமக்கு தெரிவிக்கும். பசியுணர்வு எனும் தகவல் கிடைத்தவுடன் மனம் உணவு பற்றி பரிசீலிக்க ஆரம்பிகிறது. உணவு பொறுப்பு அப்போது மனதிடம் உள்ளது. போதைப்பழக்கம் உடையோரின் நரம்பு மண்டலத்தில் சிறுமாற்றம் நேர்கிறது. போதை மருந்து அல்லது மது வேண்டும் எனும் தகவல் மனதின் பரிசீலனைக்காக உடலால் நேரடியாய் அனுப்பப்படுவதில்லை. மனதை புறக்கணித்து விட்டு உடலே நேரடியாய் "தா" என்று கட்டளையிடுகிறது. தீர்மானிக்கும் உரிமை ஒருவனிடமிருந்து பறிக்கப்படுகிறது. இப்பழக்கம் முற்றினவர்கள் அனைவரும் நரம்பியல் நோயாளிகள் தான். மொடக்குடிக்கு மனநெருக்கடி போன்ற காரணங்கள் பாவ்லா மட்டுமே. அடூரின் ஊகம் தவறானது. ஜான் ஏன் குடித்தார் என்றால் அவருக்கு ஆரம்பத்தில் குடிக்கப் பிடித்திருந்தது; பிற்பாடு குடித்தே ஆகவேண்டியிருந்தது.

அடூரின் மகள் அஸ்வதி ஷெரிங் தோர்ஜே எனும் இமாச்சல பிரதேசக்காரரை மணந்துள்ளார். பேரக்குழந்தைக்கு பௌத்தப் பெயர்: தாஷி நோர்பு. இதைப் பற்றி அடூர் சொல்கிறார்:
"பிள்ளைகள் பிற மதத்தை சேர்ந்தவர்களை திருமணம் செய்ய நினைத்தால் பெற்றோர் எதிர்ப்பார்கள். இதெல்லாம் தவறு ... பிள்ளைகளின் வாழ்க்கைதான் முக்கியம்."

நம் நினைவு இயக்கத்தை அடூர் மூன்று நிலைகளாய் வகைப்படுத்துகிறார்.
(அ) அனுபவச் சூழல்
(ஆ) அதை மனதுக்குள் திரும்ப நிகழ்த்திப் பார்க்கும் ஞாபகச் சூழல்
(இ) கற்பனை கலந்து மறு உற்பத்தி செய்து பார்க்கும் சூழல்

இந்த இறுதியானதே படைப்பின் சூட்சுமம் என்கிறார்.

குழந்தைகளுக்கு சுதந்திரம் மற்றும் மரியாதை தந்து வளர்க்க வேண்டும் என்ற திட்டவட்டமான கருத்து அடூருக்கு உள்ளது. அதை நடைமுறையிலும் செயல்படுத்தி இருக்கிறார். அவரது மகள் அஸ்வதி எழுதியுள்ள கட்டுரையில் இதைச் சொல்கிறார். வீட்டின் பொருளாதார நிலை மகளுக்கு புலப்பட வேண்டும் என்று மின்சார கட்டணம் செலுத்த, கடைக்கு சாமான் வாங்க அஸ்வினியை அனுப்புவாராம்.
இது சிக்கலான தொழில்நுட்ப விவரங்கள், தத்துவ உதிர்ப்புகள் தவிர்த்த எளிமையான ஆனால் ஆழமான நூல். சுஜாதா பரிந்துரைப்பது போல் அன்றாட வேலைகளின் இடைவெளியில் கூட விரைவில் படித்து விடலாம். அடூரின் பால்யகால நினைவுகள், நாடக, திரைப்பட வாழ்வு, அவரது படங்கள் உருவானதன் வரலாறு, நண்பர்கள் பற்றின அனுபவங்கள் மற்றும் அவதானிப்புகள், தனது படங்கள், இந்திய வணிகப்படங்கள் பற்றின அடூரின் கருத்துக்கள், இளைய தலைமுறை படைப்பாளிகளின் நிலை, பார்வையாளனுக்கும் திரைப்படத்துக்குமான உறவு என ஒரு எளிய பார்வையாளன் அடூர் பற்றி தெரிந்து கொள்ள விரும்பும் பெரும்பாலான தகவல்களை இந்நூல் கொண்டுள்ளது. தனித்தனி தலைப்புகளோடு உட்பிரிவுகளாய் பேட்டியை பிரித்துள்ள அக்பரின் சாமர்த்தியம் பாராட்டத்தக்கது.

இந்நூலின் முகப்பு அட்டை அடூர் வாழ்வை பகடி செய்வதாய் நினைக்கிறேன். இரு புகைப்படங்கள் ஒன்றின் கீழ் மற்றொன்றாய்: (1) அடூரிடம் ஆட்டோகிராப் வாங்க பலர் மொய்க்கும் டாப் ஆங்கிள் ஷாட். (2) அடூர் படப்பிடிப்பில் வேலை செய்யும் கறுப்பு-வெள்ளை படம். இந்த அமைப்பு தருவது அடூர் பற்றின மிகையான போலிச் சித்திரத்தை. தொடர்ந்து நம் சமூகத்தால் தனிமைப்படுத்தப்படும் கலைஞர் அடூர். 2008-இல் "மதிலுகள்" படம் சத்யம் திரையரங்கில் காட்டப்பட்டது. தொடர்ந்த உரையாடலில் பார்வையாளரின் கேள்விகளுக்கு பதிலளித்த அடூர் சொன்னார்: "என் அறையில் இந்த படத்தின் (மதிலுகள்) படச்சுருள் பெட்டிக்குள் அழுகும் நெடி எப்போதும் அடிக்கும்". அன்றைய படம் முதல் 15 நிமிடங்கள் சிதைந்த வெள்ளை வடிவங்களாக ஓடியது. மறுபடி புதுப்பிரிண்ட் போடும் வசதியின்மையையே இப்படி விளக்கினார்.

புத்தகத்தில் எனக்கு ஒரே குறை: அடூரின் கேச அமைப்பு பற்றி கேட்டிருக்கலாம். எம்.ஜி.ஆரின் குல்லா, கலைஞரின் கண்ணாடி ஆகியவற்றை புரிந்து கொள்ள பயன்பட்டிருக்கும்.

முக்கியமான புத்தகம், கண்டிப்பாய் படிக்க வேண்டும், இல்லாவிட்டால் சாமி கண்ணைக் குத்தும் என்றெல்லாம் அச்சுறுத்த மாட்டேன். ஆர்வமுள்ள வாசகர்கள் தவற விட மாட்டார்கள்.


அடூர் கோபால கிருஷ்ணன்: இடம் பொருள் கலை
எழுத்து: அக்பர் கக்கட்டில் (மலையாளம்)
தமிழாக்கம்: குளச்சல் மு. யூசுப்
வெளியீடு: காலச்சுவடு
பக்கங்கள்: 125
விலை: ரூ 80

7 comments:

Madumitha said...

அறிமுகத்திற்கு நன்றி.

நளினி சங்கர் said...

சிக்மண்டு பிராயிடின் இட்--ஈகோ--சூப்பர் ஈகோ சித்தாந்தப்படி அடூரின் படைப்பாக்கத்தை திட்டவட்டமாக வரையறுக்கும் அக்பரின் முயற்சியினை, உங்கள் மனைவியின் "என்னை ஏன் திருமணம் செய்தாய்?" என்ற கேள்வியுடன் ஒப்பிடுவது,

மனஉணர்வுகளின் நாடகத்தன்மை பற்றி வரும் கதையில் அடுத்த காலணி விழும் சத்தத்தை பதற்றத்துடன் எதிர்பார்த்துக்கொண்டிருப்பதை முகுந்த் நாகராஜனின் கவிதையுடன் ஒப்பிடுவது,

சுஜாதா பரிந்துரைப்பது போல் அன்றாட வேலைகளின் இடைவெளியில் கூட விரைவில் படித்து விடலாம் என இப்புத்தகத்தைப் பற்றிய எளிமையான விமர்சனம்,

நூலின் முகப்பு அட்டைப்படம் பற்றிய உங்கள் பார்வையை நியாயப்படுத்தும் சத்யம் திரையரங்க அனுபவத்தைக் குறிப்பிடுவது

இவையாவும் இந்த கட்டுரையில் என்னைக் கவர்ந்தவைகள் அபிலாஷ்.

ஒரு நல்ல கட்டுரை எழுதுவது என்பது அவ்வளவு எளிமையானது அல்ல என்பதையும், அந்த இலக்கிலிருந்து எவ்வளவு தொலைவில் நான் உள்ளேன் என்பதையும் மேற்குறிப்பிட்டுள்ள உங்கள் எழுத்தின் தனித்தன்மைகள் நிருபிக்கின்றன.
உங்கள் எழுத்தின் ரசிகன் நான்.

நளினி சங்கர் said...

உங்களை எனக்கு அறிமுகப்படுத்திய உயிர்மைக்கு நன்றி. நிறைய எழுத வாழ்த்துக்கள்

ஆர்.அபிலாஷ் said...

நன்றி மதுமிதா மற்றும் நளினி சங்கர்!

நளினி சங்கர் said...

பனிமுலையில் 'அவனுடைய 43-வது பிறந்தநாளுக்குப் பிறகு...' இடம்பெற்றுள்ளதில் மகிழ்ச்சி. 'அவனது நாற்பத்தி மூன்றாவது பிறந்தநாளுக்குப் பிறகு' என தலைப்பை மாற்றி இருப்பதற்கு ஏதேனும் காரணம் உண்டா? ஏற்கனவே இருந்த தலைப்பில் ஏதேனும் தவறுகள் உள்ளனவா? தெரிந்துகொள்ளும் ஆர்வத்துடனே கேட்கின்றேன்?

ஆர்.அபிலாஷ் said...

வேறெதனாலும் இல்லை சங்கர். என் நண்பர்கள் transliterator modeஇல் வைப்பதனாலோ ஏனோ எண் அடித்தால் சரியாக display ஆகவில்லை. அவசரத்தில் அதனால் வார்த்தையாக்கி விட்டேன். பிற்பாடு அதுவே நன்றாக இருந்ததாக பட்டது. “நாற்பத்தி மூன்றாவது” என்பதை உச்சரிப்பதற்கான கால அவகாச நீட்டிப்பு, பொதுவாக அவ்வார்த்தைக்கு உள்ள தொனி தோதாக பட்டது.

நளினி சங்கர் said...

உங்கள் இணைத்தளத்தில் (பனிமுலையில்) வாய்ப்பளித்தமைக்கும் தங்கள் விளக்கத்திற்கும் நன்றி அபிலாஷ்.