Wednesday, May 19, 2010

ஈழத்தமிழரின் அலிபாபா குகை: kuralweb.com

இணையதளங்கள் குறித்து தாமரை இதழில் நான் எழுதி வரும் தொடரில் இந்த மாதம் kuralweb.com
தமிழீழ போராட்டம் மற்றும் அதன் அழிவு குறித்த வரலாற்று, அரசியல், சமூக பதிவுகள் இணையத்தில் ஏராளம். இவ்விசயங்களை பேச Yarl.com, globaltamilnews.com, inioru.com, nerudal.com, kuralweb.com போன்று தனிப்பட்ட இணையதளங்களும், இணையபத்திரிகைகளும் தீவிரமாக, தொடர்ச்சியாக இயங்குகின்றன. ஈழப்போருக்கு புலம் பெயர் தமிழர்கள் பொருள் மற்றும் தார்மீக உதவிகளை வெளியில் இருந்து நல்கி ஆதாரமாக விளங்கியது ஒருபுறம் இருக்க இணையத்தில் அவர்கள் எழுப்பி வரும் கருத்தியல் அலசல் மற்றும் தகவல் பரிமாற்றத்துக்கான வெளி இணையதமிழுக்கு பெரும் கொடை எனலாம். இணையத்தில் தீவிர தமிழ் எழுத்தாளர்களையும் சில உதிரிகளையும் தவிர பெரும்பாலானவர்கள் நடத்தும் இணையதளங்கள் கேளிக்கை மற்றும் செய்திப்பகிர்வை மட்டுமே நோக்கமாய் கொண்டவை. இணையம் இந்திய தமிழர்களுக்கு ஒரு சமையல்கூடம் மட்டுமே. வாழும் சமூகம் குறித்த தீவிரமான அக்கறை கொண்ட எழுத்துக்கள் அதிகமாய் ஈழத்தமிழர்களின் இணையபக்கங்களிலேயே கிடைக்கின்றன. இணையத்தை அவர்கள் ஒரு ஆய்வுக்கூடமாக பாவிக்கின்றனர். அதற்கான தேவை உள்ளது. ஈழசமூகம் இன்று ஒரு முட்டுசந்தில் நிற்கிறது. முள்ளிவாய்க்கால் இன-அழிப்புக்கு பின் அதன் பொருளாதார, சமூக, உளவியல் அடித்தளங்கள் வேகமாய் தகர்ந்து வருகின்றன. எல்லா திசைகளிலும் அது ஒரு கேள்வியை சந்தித்து வருகிறது. தன்னை மீள்பரிசீலனை செய்வதற்கான பெரும் தேவை ஈழமக்களுக்கு இன்று உள்ளது. இலவச டீ.வி, இட்லி, வடையுடன் முடிந்து போகின்றவை அல்ல அவர்களின் நெருக்கடிகள்.

ஈழப்பிரச்சினையை பேசும் கட்டுரைகள் இரு புள்ளிகளில் நிற்கின்றன. உணர்ச்சிவசப்பட்டு ஒரு அரசியல் நிலைப்பாடெடுத்து உரையாடுபவை; தீவிரமான ஆய்வு மொழியில் பரிசீலிப்பவை. முதல் வகை கட்டுரைகள் உடனடி சமூக, கலாச்சார தீர்மானங்களை அலசி முன்வைக்கவும், அறம் குறித்த பிரக்ஞையை தக்க வைக்கவும் முக்கியமானவை. இரண்டாவது வகை அறிவியக்க கட்டுரைகள் நிதானமான ஆழமான வழிமுறையை மேற்கொள்கின்றன. ஒரு கொந்தளிக்கும் சூழலில் இவை வறட்சியாய் தெரிந்தாலும் எதிர்கால சமூகத்தின் வளர்ச்சிக்கும் மீளுருவாக்கத்திற்கும் இவை பெரும் பங்களிக்கக் கூடியவை. இவ்விருவகை கட்டுரைகளும் இன்று எதிர்கொண்டு பதிலளிக்க முயலும் முக்கிய கேள்வி புலிகளின் வீழ்ச்சி பற்றியதே. புலிகளின் தவறுகள், சர்வதேச மற்றும் சிங்கள சதிகள், புலிகளின் மறுவரவு, புலம்பெயர் ஈழ அரசு என பல்வேறு தரப்புகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் இத்தகைய அணுகுமுறைகள் ஒரு musical chair விளையாட்டு மட்டுமே என்பது எளிதில் புலனாகி விடுகிறது. மெழுகுமாளிகைகள் போல் தீக்கிரையாவதற்கே எழுதப்படுபவை இவை. ஒரு சமூகம் துப்பாக்கி ரவைகளால் மட்டும் தீர்மானிக்கப்படுவது அல்ல. பண்பாடு, வாழ்வியல், பொருளாதாரம், நிர்வாகம், உளவியல் என எத்தனையோ கூறுகள் சமூகத்தை நகர்த்துகின்றன. ஈழப்பிரச்சினையின் இந்த பன்மைத்தன்மையை புறவயமாக விவாதிக்கும் பல நுட்பமான தெளிவான கட்டுரைகளை குரல்வெப் இணையதளத்தில் (kuralweb.com) படிக்கலாம். தீயணைப்பு கூக்குரல் எழுத்துக்களில் மறைந்து போகும் பல்வேறு சிக்கல்களை இக்கட்டுரைகள் தயக்கமின்றி அலசுகின்றன. மேலும் புலி மற்றும் மாவோயிச ஆதரவு எதிர்ப்பில் இருந்து முழுமையான வன்முறை நிராகரிப்பு வரை பல்வேறு பட்ட தரப்புகளை சார்பு நிலையற்று இந்த இணையதளம் வெளியிடுகிறது. ஏற்கனவே பிற தளங்களில் வெளியான கட்டுரைகளின் மறுபிரசுரிப்புகளும் உண்டு.குரல்வெப்பில் உள்ள குறிப்பிடத்தக்க இடுகைகளில் எட்வேட் ரமாநந்தன் (வியன்னா பல்கலைக்கழகம்), பரணி கிருஸ்ணரஜனி (பாரிஸ் பல்கலைக்கழகம்), யாழினி ரவிச்சந்திரன் (ஆக்போர்டு பல்கலைக்கழகம்), சித்ரலேகா துஸ்யந்தன் (வியன்னா பல்கலைக்கழகம்), பிரியதர்சினி சற்குணவடிவேல்(பர்சிலோனா பல்கலைக்கழகம்) ஆகியோரின் நேர்காணலும் ஒன்று. ”முள்ளிவாய்க்காலில் வைத்து நாம் இராணுவ – அரசியல் ரீதியாக மட்டும் தோற்கடிக்கப்படவில்லை. எமது நிலம், இனம், மொழி சார்ந்து சமூக, பண்பாட்டு, உளவியல், பொருளாதார, வாழ்வியல் ஆதாரங்கள் எல்லாம் அழித்தொழிக்கப்பட்டது.” என்று இவர்கள் தெரிவிக்கிறார்கள். கடந்த 25 ஆண்டுகளாக புலிகளை அங்கீகரித்தவர்களும் ஆதரிக்காதவர்களும் புலிகள் நடத்திய ஒரு அரசாங்கத்தின் பிரஜைகளே. இப்போது அழிந்திருப்பவை வெறும் புலிகள் மட்டுமல்ல, அவர்கள் நடத்தி வந்த அரசாஙக்த்தின் நிதி, நீதி, நிர்வாகம், பொருளாதாரம், காவல்துறை, ராணுவம், மற்றும் அனைத்து அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கட்டமைப்புகளும் தான். புலிகளின் அழிவுக்கு பின் அவர்களின் பிரஜைகள் இயல்பாகவே அனாதைகளாகி விடுகின்றனர். புலிகளை வெறுத்தாலும், நேசித்தாலும் உண்மை இதுவே. இவர்கள் இலங்கையில் தற்போது மிருகங்களாக நடத்தப்படுகின்றனர்; எதிர்காலத்தில் இரண்டாம் பிரஜைகளாக இருப்பர். எட்வெட், யாழியினி உள்ளிட்டோர் சமகால இலங்கைக்கும் புலம்பெயர் நாட்டு ஈழப்பிரஜைகளுக்கும் பொருளாதார பரிவர்த்தனைகள் துண்டித்து போயிருப்பதை குறிப்பிடுகின்றனர். முன்போல் புலத்தில் உள்ள ஈழர்கள் தொடர்ந்து தங்கள் சோதரர்களுக்கு பொருளுதவி வழங்கிக் கொண்டிருக்கவும் முடியாது. சமூகக் கட்டுமானங்கள் இல்லாத அனாதைப் பிரஜைகளுக்கு சம்பாதிக்கவோ, சம்பாதித்ததை புழக்கத்தில் விடவோ முடியாது. இந்த நிலைக்கு இல்ங்கை அரசு புலிகளின் சொத்து வேட்டை என்ற பெயரில் ஈழ மக்கள் செல்வத்தை பறிமுதல் செய்வதும், புலத்தில் இருந்து புலிகளுக்கு வழங்கப்பட்ட பணத்தை ஒருசாரார் பதுக்கி வைத்திருப்பதும் முக்கிய காரணங்கள். இப்படி அனாதை பிரஜைகள் நேரிடும் இன்னல்கள் ஏராளம். அவர்களுக்கு தேவை அரசியல் போராட்டம் மட்டுமே என கருதுவது அபத்தம். புலி எதிர்ப்போ பிரபாகர வழிபாடோ இந்த மக்களை முன்னேற்றிடாது என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள்..
ஈழத்தை விடவும் வெளியில் தான் அதிக தமிழர்கள் உள்ளதாகவும் அதனால் தமிழ் ஈழம் கோருவது தவறு என்கின்ற சிங்களத் தரப்பின் வாதத்தை விமர்சிக்கும் ரீட்டாவின் ”தேசியம் எண்ணிக்கை அல்ல அது ஒரு பண்புநிலை” கட்டுரை காஷ்மீருக்கும், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கும் பொருந்துவதே. தேசியம் என்பது பொருண்மை நிலை மட்டுமே அல்ல அது ஒரு உளவியல், பண்பாட்டு வடிவமும் கூடவே என்று பேசும் ரீட்டா புலம்பெயர் தமிழர்கள் தொடர்ந்து தமிழ் தேசிய உணர்வுடன் ஈழத்துக்கான பங்களிப்பை செய்து வந்துள்ளதை குறிப்பிடுகிறார். ”இந்திய எதிர்ப்பு அரசியலும் ஈழத்தமிழர் போராட்டமும்” கட்டுரையில் பிரம்மா ஒரு வரலாற்றுப் பார்வையில் இந்திய எதிர்ப்பு அரசியலை விளக்குகிறார். இந்திய அரசியல் மாற்றங்கள் ஈழத்தில் நிகழ்த்திய விளைவுகளை அவர் பேசாமல் புலிகளுக்கும் இந்தியாவுக்குமான அரசியல் பகையின் பின்புலத்தை தொட்டுக் காட்டுவதோடு நின்று விடுவது இக்கட்டுரையின் ஒரு முக்கிய குறை. இந்தியாவுடன் இனிமேல் பகைபாராட்டாமல் சமயோசிதமாக ஈழம் நடந்து கொள்ள வேண்டும் என்கிறார் ஆசிரியர். மேல்மட்டத்தில் இவ்வாறு மல்லாந்து நீச்சலடித்தாலும் பிரம்மா குறிப்பிடும் பிரச்சனை மீதான அக்கறை எதிர்கால ஈழத்திற்கு அவசியமே. நிலவனின் “ஈழத்தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்? எங்கிருந்து தொடங்க வேண்டும்?” என்ற கட்டுரையில் ஒரு கூர்மையான வாதம் வருகிறது. பிரபாகரன் ஒரு வரலாற்று விளைவு மட்டுமல்ல, அவர் ஈழப் பண்பாட்டின், உளவியலின் பகுதியுமே என்கிறார் நிலவன். ஒரு மிகச்சிறிய குழு ஒரு பெரும் அரசை எதிர்த்து 25 வருடங்களாக போராடி நின்றதன் பின்னுள்ள வீரமும், மூர்க்கமும், அர்ப்பணிப்பு உணர்வும் ஒரு தனித்துவமான் சமூகக் கூறு தான். அது ஒவ்வொரு ஈழத்தமிழனுக்கு உள்ளும் உறைந்துள்ள ஆதி கூறு. இதற்கு பிரபாகரன் எனும் பெரும் ஆளுமை வடிகால் கொடுத்தது என்கிறார் நிலவன். விமர்சகரும், புனைவெழுத்தாளருமான தமிழவன் “தமிழுணர்வின் வரைபடம்” (உயிர்மை வெளியீடு) என்ற நூலில் ஈழப்போர் சூழலை சங்க காலகட்டத்தோடு ஒப்பிட்டு பேசுவது இங்கு நினைவு கூரத்தக்கது. தமிழ் எழுத்தாளர்களில் ஆரியச்சலவை செய்யப்பட்ட சில அங்கிள்கள் ஈழப்போரை ஒரு தீவிரவாத செயலாக சித்தரித்தனர். நாம் கலாச்சார வரலாற்று ரீதியாக ஈழத்திலுள்ள தமிழர்களை நீளந்தாண்டி இன்று வேறிடத்திற்கு வந்திருந்தாலும் நம்முள் உள்ள ஆதிப் பண்பு நிலையின் மற்றொரு வெளிப்பாடு தான் பிரபாகரன் எனபதை உணரும் நுண்ணுணர்வும். நிதானமும் அவர்களுக்கு இல்லாமல் ஆகி விட்டது. பிரபாகரன் உயிரோடிருக்க வாய்ப்பில்லை என்பதற்கான காரணங்களை அடுக்கும் நிலவன் ஈழத்திற்கு இன்றைய தேவை கலை, கலாச்சார, அறிவியக்க தளங்களில் ஈழ சமூகத்தை கராறான ஒரு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்கிறார்.ஈழ விடுதலைப் போரில் பெண்புலிகளின் பங்கு என்ன? அவர்களுக்கு புலி இயக்கத்துள் போதுமான அங்கீகாரம் கிடைத்ததா? இப்போது பிடிபட்ட பின் அவர்களுக்கு எத்தகைய பாதுகாப்பு உள்ளது? இக்கேள்விகளை பரிசீலிக்கும் றஞ்சி ஒரு பெருமூச்சையே பதிலாக அளிக்கிறார். “இரத்த சுவடுகளும் நிர்வாண கோலங்களும்” கட்டுரையில் அவர் பிரபாகரனால் பெண்புலிகள் மொட்டை அடிக்கப்பட்டு தப்பிச் செல்ல இயலாதபடி அலங்கோலமாக்கப்பட்டதை குறிப்பிட்டு புலிகளும் சிங்களவர்களும் பெண்களை ஒடுக்கி வந்துள்ளதாக சொல்கிறார். 1992-இல் போஸ்னியாவில் செர்பிய அரசாங்க திட்டமிடலின் படி இராணுவத்தால் 20,000-க்கும் மேற்பட்ட போஸ்னிய பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள். 1990-இல் போர் நடைபெற்ற போது குவைத்தில் 5000-க்கு மேற்பட்ட பெண்களுக்கும், ருவாண்டாவில் ஐந்து லட்சம் பெண்களுக்கும் இதுவே நடந்தது. இன்று இலங்கையிலும் அரசு கட்டுப்பாட்டின் கீழ் எத்தனையோ ஈழப்பெண்கள் விபச்சார கூடங்களில் பாலியல் ஒடுக்குமுறை உள்ளாக்கப் படுகிறார்கள். வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்புலிகள் சாட்சியமாக எஞ்சக் கூடாதென்பதால் அவர்கள் கொல்லப்படுவதாகவும் அவர் தெரிவிக்கிறார். இது பாலியல் அத்துமீறல் மட்டுமல்ல, ஒரு இனத்தின் உயிரியல் தூய்மையை களங்கப்படுத்தி அவமானிக்கும் செயலும், அதன் சுய-அபிமானத்தை, உளவியலை சிதைக்கும் திட்டமிட்ட நடவடிக்கையுமே என்று சுட்டுகிறார் றஞ்சி.பாராரட்சணத்தின் ”அனாமோவின் கண்ணீர் ...” கட்டுரையில் வரும் சரத் பொன்சேகா குறித்த சித்திரம் காத்திரமானது; இனதுவேசமும், வன்மமும் இணைந்து ஒரு மனிதன் வளர்த்தெடுக்கப் பட்டதை, வரலாற்றில் தடுக்கிட்ட ஒரு தடுமாற்றத்தில் அவன் பாதாள உலகத்திற்கு காணாமல் போன விதியின் முரண்களை சுட்டுகிறது.
இவ்வளவு அருமையான கட்டுரைகள் கொண்டுள்ள குரல்வெப் டாட்காம் ஒரு செய்தித் தளமும் கூட. ஆனால் இத்தளம் முறையாக வடிவமைக்கப்பட இல்லை. முகப்பில் இணையதளம் மற்றும் அதன் நோக்கம் குறித்த அறிமுகம் இல்லை. கட்டுரைகள் பக்கம் முகப்பில் இல்லை. அவற்றை காண முகப்பில் உள்ள கட்டுரை ஒன்றை சொடுக்கி அதன் தொடுப்பு வழியாக செல்ல வேண்டி உள்ளது. பக்கங்கள் மிக மெத்தனமாகவே கிரீச்சிட்டபடி திறக்கின்றன. அதன் அனைத்து அர்த்தங்களிலும் kuralweb.com ஒரு அலிபாபா குகைதான்.

2 comments:

தமிழ்நதி said...

குறள்வெப்.காம் வாசித்ததில்லை. தகவலுக்கு நன்றி. அதுவென்றும் இதுவென்றும் எதுவென்றும் அலைக்கழிந்து திரிவதே இன்றைய ஈழமக்களின் நிலை. ஒன்றும் அறியாதிருப்பது எவ்வளவு நல்லது அபிலாஷ்... துயரப்பட வேண்டியதில்லையல்லவா?

ஆர்.அபிலாஷ் said...

மக்களால் இந்த ஊழியை கடக்க முடியுமா?