Friday, May 21, 2010

இளையராஜா நல்லவரா கெட்டவரா?
சில மாதங்களுக்கு முன் நண்பர்களால் ஆரம்பிக்கப்பட்ட பனிமுலை இணையதளத்தில் மண்ணுண்ணி என்ற பெயரில் சில வேடிக்கை/அரசியல் கட்டுரைகள் எழுதினேன். அதிலொன்றை இங்கே மறுபிரசுரிக்கிறேன்.

சில மாதங்களுக்கு முன் உயிர்மையில் ஷாஜி இளையராஜா குறித்து எழுதின “ நீங்க நல்லவரா கெட்டவரா” கட்டுரை தெ ஹிந்துவுக்கு பிறகு உயிர்மை படிக்கிற மத்தியதர மாமாக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்பட்டது. சிலர் இக்கட்டுரையை எழுதியது சாரு என்று நினைத்து அவரை அடிக்க தேடியதாக தகவல் அடிபட்டது. ஆனால் இளையராஜா ரசிகர்களின் மனதை நோகடித்த ஷாஜி புத்தக விழாவின் போது உயிர்மை அரங்கின் வாசலில் பிளாஸ்டிக் நாற்காலியில் ஓஷோ தண்ணி அடித்தது போன்ற பாவனையுடன் அமர்ந்திருந்தார். இளையராஜா அடியாள் படை “அந்த மலையாளத்தான பார்த்தா சொல்லி வை” என்று ஷாஜியின் காலரைப் பிடித்து உலுக்கி சொல்லிப் போனதாக மிகைப்படுத்த விரும்பாவிட்டாலும் அக்கட்டுரையால் அவர் பரபரப்புக்குரிய நபர் ஆனார் என்பது உண்மை. திண்ணையில் முன்பு இளையராஜாவின் பின்னணி இசையை சாடி கட்டுரை எழுதின ஜெயமோகன் இம்முறை ராஜாவுக்காக பரிந்து ஆதரித்து எழுதினார். ஷாஜி இதற்கு நுண்பேசியில் அளித்த பதிலை ஜெ.மோ தன் தளத்தில் பிரசுரித்து அதற்கு மறுமொழியும் எழுதினார். இரண்டையும் அவர் ஷாஜியிடம் பேசியபடியே இட-வல கைகளால் ஒரே நேரத்தில் எழுதியதாக செய்தி உலவுகிறது. தனக்கு தொடர்ந்து பல மிரட்டல் மற்றும் கண்டனக் கடிதங்கள் வந்ததாக ஷாஜியே சற்று வருத்தமும் மகிழ்ச்சியும் கலந்து தெரிவித்தார்.


ஒரு மலையாளக் கவிஞரை இளையராஜா விமர்சித்ததனாலே தாயகப் பற்றால் ஷாஜி ராஜாவை திரும்பத் தாக்கினதாக அஜயன் பாலா கடிந்து கொண்டார். இக்கட்டுரையை மனுஷ்யபுத்திரன் பிரசுரித்தது அவரது நிஜப் பெயர் ஹமீது என்பதாலே என்று காவி விசுவாசிகள் வேறு கொதித்தார்கள். விளைவாக மனுஷ் “ நானே ராஜாவின் பெரிய விசிறி. இது முழுக்க ஷாஜியின் கருத்து மட்டுமே” என்று அடுத்த உயிர்மை இதழில் சாட்சிமொழி எழுத நெர்ந்தது.

இந்த சர்ச்சைக்கு காரணமான ஷாஜியின் கட்டுரை சாராம்சம் என்ன? இளையராஜா கெட்டவர். அதனால் அவர் இசைவாழ்க்கையில் பெரும் வீழ்ச்சியை சந்திக்க நேர்ந்தது என்பதே அது. ஏப்ரல் 2010 இதழில் உயிர்மை இவ்விசயத்தில் ஒரு U-திருப்பம் எடுத்தது. ஒன்றுக்கு ரெண்டாக ஷாஜியும் சாருவும் ஏ.ஆர்.ரகுமானை தாக்கினார்கள். ஷாஜி இம்முறை என்ன சொன்னார்?

ஏ.ஆரின் பின்னணி இசை பலவீனமானதாம். அடுத்து ஸ்லம் டாக் மில்லனருக்கு கொடுத்த விருது தவறாம். அப்பட பாடல்கள் மிக சாதாரணமானவை. சரிதான், இதற்கு முன் ஏ.ஆரை பாராட்டி இதே உயிர்மையில் கட்டுரை எழுதியுள்ள ஷாஜி இப்போது ஏன் திடீரென அவர் பின்னணி இசை நன்றாக இல்லை என்கிறார். ஸ்லம்டாக் இசை ஏமாற்றமளிப்பது ஏன் இத்தனை தாமதமாக நினைவு வருகிறது அவருக்கு? ஸ்லம்டாக் பாடல்கள் பிரமாதம் என்று யாருமே சொல்லவில்லையே? அவ்விருது இதுவரையிலான ஏ.ஆரின் சாதனைகளுக்கான அடையாள விருது மட்டுமே. இதுவரையில் பல ஜாம்பவான்களுக்கும் அவர்களின் சிறந்த படைப்புகளுக்கு ஆஸ்கார் கிடைத்ததில்லையே! இதையெல்லாம் ஷாஜி சொல்ல வேறொரு பின்னணி உள்ளதாம்.அதையும் அவரே சொல்கிறார். அவரை விண்ணைத் தாண்டி வருவாயா பாடல்கள் பற்றி பேச ஒரு தொலைக்காட்சியில் அழைத்தார்களாம். ஷாஜிக்கு வி.தா.வ இசை பிடிகாததால் அவர் செல்லவில்லையாம். அதற்கான காரணங்களை உயிர்மையில் எழுதுகிறாராம். நண்பர்களே இப்போது நரிகள் எல்லாம் கனவில் தின்று ஏப்பம் விட்ட படியே “ஒரே புளிப்பு” என்கின்றன. ஷாஜி கட்டுரை முடிவில் வி.தா.வ பாடல்கள் குறித்து சுருக்கமாக தொழிநுட்ப விமர்சனம் ஒன்று வைக்கிறார். சபா முன்வரிசையில் மடியில் தட்டி ரசிக்கும் தாத்தாக்கள் நடுவே புகுந்து மண்டையில் தட்டு வாங்கியது போல் உள்ளது அதைப் படித்தால்.

அரிஸ்டாட்டிலின் தர்க்க சூத்திரம் ஒன்று உண்டு. அதாவது ஒரு தேங்காய் விலை 10 என்றால் ரெண்டு தேங்காய் 20 ரூபாய். இப்போது ஒரு மாங்காய் விலையும் 10 என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு தேங்காயும் மாங்காயும் சேர்த்து வாங்கினால் 20 ஆகிறது. இதே தர்க்கப்படி

ராஜா = கெட்டவர்
அதனால்
ராஜா இசை = கெட்ட இசை

இதே போல் ஏ.ஆர் ரஹ்மானி பின்னணி இசை = கெட்ட இசை
அப்படி என்றால்
ஏர்.ஆர்.ரஹ்மான் = ?

1 comment:

Madumitha said...

நீங்க என்ன பாஸ் சொல்றீங்க?