Saturday, May 15, 2010

குலசேகரனின் “திரும்பிச் செல்லும் வழி”
திரும்பிச் செல்லும் வழி மே மாத காலச்சுவடில் வெளிவந்துள்ள குலசேகரனின் சிறுகதை. திரும்பிச் செல்லவோ முன்னகரவோ முடியாது காலத்தில் மாட்டிக் கொண்ட ஒரு முதியவரின் அவஸ்தையை பேசுகிறது. இக்கதைக்கு இரு சிறப்பம்சங்கள். ஒன்று அசாதாரண லாவகத்துடன் மனிதனின் உளவியல் தேக்கத்தை பேசியபடி இக்கதை முதுமையின் தனிமை, சிரமங்கள், தன்னிரக்கம், பாலியல் நெருக்கடி, பயம் என பல பரிமாணங்களை திறந்து விட்டபடியே செல்கிறது. அடுத்து இத்தனை செறிவான கதையின் அடுக்குகளை உருவாக்குவதற்கான எந்த பிரயாசையையும் கதைசொல்லி காட்டுவதில்லை. இங்கே தான் மொழிநடையின் சுருக்கமும், கூர்மையும் விசேசமாகிறது.

உதாரணமாக கதையின் ஆரம்பத்தில் கிராமத்தில் இருந்து புலம்பெயர்ந்து புறநகர்ப் பகுதியில் ஒரு குறுகின அறையில் குடும்பத்துடன் வாழும் முதியவர் சுந்தரேசன் காலையில் விழித்தெழுவதை சொல்லும் இந்த வாக்கியம்

பக்கத்துத் தெருவிலிருந்தோ வேறெங்கிருந்தோ சேவல் சத்தம் கேட்டதும் நீண்ட இரவு முடிந்துவிட்டதென்று சுந்தரேசன் கண்களைத் திறந்தார் ... பிறந்து வளர்ந்த ஊரில் தனக்குச் சொந்தமான பழைய ஓட்டு வீட்டுக்குள் மரக்கட்டிலின் மேல் மல்லாந்து படுத்திருப்பதைப் போல் அவருக்குத் தோன்றியது.

முதியவரின் வெளி அவரது கடந்த காலத்துடன் பிணைக்கப்பட்டு விட்டது.

சேவல்கள் கூவுவதும் காகங்கள் கூவுவதும் வேறு கேட்க், அதனோடு வாகனங்கள் கடந்து செல்லும் இரைச்சலும் கலந்து அவரை மேலும் குழப்புகிறது. நிஜமாகவே கிராமத்தில் தான் இருக்கிறோமா என்று நினைத்துக் கொள்கிறார். பிறகு இல்லை அவை நகரத்து பறவைகள் என்று படுகிறது. முழித்ததும் கிழவருக்கு வரும் முதல் எண்ணமும் சுவாரஸ்யமானது.

மருமகள் பத்மாவதி எழுந்து வெளியே வர இன்னும் நீண்ட நேரமாகும். அவளையும் மகனையும்கூட அந்தப் பழைய வீட்டுக்கு அழைத்துச் சென்று விடியற்காலையின் சத்தங்களைக் கேட்கவைக்க வேண்டும் என்று சுந்தரேசன் நினைத்துக்கொண்டார்.

கிழவர் இன்னமும் தந்தையின் பீடத்திலேயே தங்கி இருக்கிறார். குடும்பமும் உலகமும் அவரை முதியோர் பூங்காவில் அமர்த்தி வைக்க அவர் இன்னமும் தந்தை நாற்காலியில் இருந்தபடி அதன் சுதந்திரங்களை கையாண்டபடி வழிநடத்த (விடியற்காலையை கவனிக்க)விரும்புகிறார். அடுத்து நாம் இதற்கு முந்தின வாக்கியத்தை கவனிக்க வேண்டும்.

நேரெதிரிலிருந்த அறை சலனமில்லாமல் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தது

கிழவருக்கு முன்னே மகனின் பள்ளியறை. அவருக்கு மருகள் மீது பாலியல் ஈடுபாடு. அதனால் விழித்ததுமே கவனம் அவர்களின் அறை மீது செல்கிறது. அவ்வறையின் நிசப்தம் அவரது கற்பனைகளை கிளர்த்தி இருக்கலாம்; தொந்தரவு செய்திருக்கலாம். அவர்களை எழுப்ப மனம் தவிக்கிறது.

கதைப்பக்கத்தின் மையக் கட்டத்தில் பத்திரிகை ஆசிரியரால் இந்த வாக்கியம் பிரதானப்படுத்தப்பட்டிருக்கிறது. மருமகள் பத்மாவதி மாமனாரின் அழுக்கு ஆடைகளை படுக்கையில் இருந்து திரட்டும் போது அவளது மார்புகள் அவர் மீது அழுந்துகின்றன

அவளுடைய ஒரு மார்பு கோழிக்குஞ்சைப் போல் அவர்மேல் தவழ்ந்து சென்றது.

இச்சொற்றொடரால் ஈர்க்கப்பட்டு இதை ஒரு பாலியல் கதையாக வாசிக்க கணிசமான் வாச்கர்கள் முயன்றிருக்கலாம். ஆசிரியரின் நோக்கமும் அதுவா என்பது தெரியவில்லை. இருந்தாலும் தவறில்லை. ஆனால் கிழவரின் பாலியல் சஞ்சலம் இக்கதையின் நோக்கம் அல்ல. அவருக்கு ஏற்கனவே அவரது நண்பரின் மனைவியின் பால் ஈடுபாடு இருந்திருக்கிறது. மருகள் விசயமும் தெரிந்து போக மனைவி அவர் மீது வன்மமாக இருக்கிறாள். கிழவர் இதனால் தனிமைப்படுகிறார். பாலியல் அத்துமீறல் மேலதிக ஆசையால் மட்டும் விளைவதில்லை. அது பாதுகாப்பின்மையின் பிராந்தியம். கிழவர் தொடர்ந்து தான் இழந்து விட்ட இளமையை, அதன் அதிகாரத்தை மீட்டெடுக்க முயல்கிறார். மருமகளை உடலளவில் அடைவது என்பதை விட அவ்வெண்ணம் தரும் உளவியல் திருப்தி அவருக்கு முக்கியம். காலையில் குளியலறையில் பல்துலக்கும் போது அங்கு கதவில் தொங்கும் மருகளின் வெதுவெதுப்பு மாறாத ஆடைகளை அந்தரங்கமாக தொட்டுப் பார்க்கும் இடம் வருகிறது. அவ்வாடைகளின் மிருதுத்தன்மையை சிலாகிக்கிறார். கவித்துவமான இடம் இது.

மருந்து வாங்குவதற்காக மகனிடம் தன் காசோலையில் கையொப்பம் இட்டுத் தரும் போது கிழவருக்கு ஒரு அசட்டுப் பெருமை ஏற்படுகிறது. அவரால் இன்னும் கையெழுத்தைத் தெளிவாகவும் வேகமாகவும் போட முடிகிறது. பிறகு வெற்றுக் காசோலையில் கையெழுத்திட்டதால், வங்கி கணக்கு புத்தகத்தை மகனிடம் தந்து விட்டதால் அச்சமும் ஏற்படுகிறது. மகன் காசையெல்லாம் காலி செய்து விட்டால்? சுந்தரேசனின் பாலியல் வாழ்வு மட்டும் அல்ல பொருண்மை வாழ்வும் பலவீனமாக நொறுங்கிப் போய்விடுவதாகவே உள்ளது. அவருக்கு எதிலும் பிடிப்பு கிடைக்காத பதற்றம் உள்ளது.

இக்கதையை முதியவர்களின் நிலையற்ற ஓட்டம் பற்றின விசாரணையாகவும் புரிந்து கொள்ளலாம். கதை நிகழ்வதற்கு முன் சுந்தரேசன் ஒருமுறை வீட்டை விட்டு கோபித்துக் கொண்டு வெளியேறி மயங்கி விழுந்திருக்கிறார். இக்கதை நடக்கும் போது மருகளை அவர் கட்டியணைக்க முயல வீட்டுக்குள் ஒரு விரோதச் சூழல் உருவாகிறது. இதை எதிர்பார்த்து அவர் இரண்டாவது தடவையாக வெளியேறி விட தயாராகிறார். தட்டுத் தடுமாறி பேருந்து நிலையம் செல்பவருக்கு எந்த வண்டி பிடிக்க வேண்டும் என்று புரியவில்லை. எதுவும் நினைவில் இல்லை. அவரது குழப்பத்துடன் கதை முடிகிறது. ஒரு தனிப்பட்ட நினைவை குறிப்பிடுகிறேன். என் தாத்தாவுக்கு எட்டு குழந்தைகள். முதுமையின் தள்ளாட்டத்தில் கடும் கோபக்காரராக மாறி இருந்தார். ஒவ்வொரு மாதமும் ஒரு பிள்ளையிடம் கோபித்துக் கொண்டு வெளியேறி மற்றொரு பிள்ளை வீட்டுக்கு செல்வார். இவரிடம் அவரை பற்றி புகார் சொல்வார். சபிப்பார். பிறகு சில வாரங்களில் இங்கும் பிடிக்காமல் போக அடுத்த குழந்தை வீடு. ஒரு சுழற்சி முடிந்ததும் முதலில் பிணங்கின மகன் வீட்டுக்கே திரும்பி கடைசி மகன் பற்றி புகார் சொல்லி அடைக்கலாம் தேடுவார். இத்தனைக்கும் அவர் பொருளாதார ரீதியாக சுயசார்பு கொண்டிருந்தவர். இளமையில் நாங்கள் பேரப்பிள்ளைகள் இதனை ஒரு வேடிக்கையாகவும் புதிராகவும் கருதி கேலி செய்வோம். ஒரு இரவில் ரத்தக்கொதிப்பு மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக முழுங்கி தற்கொலை செய்து கொண்டார். தாத்தாவின் வெளியேற்றம் வீடுகளில் இருந்தல்ல அவரிடம் இருந்து தான் என்று இப்போது புரிகிறது.

திரும்பிச் செல்லும் வழியில் மிகை உணர்வுகள் இன்றி முதுமை பேசப்பட்டிருப்பதும் பாராட்டத்தக்கது. கதைக்கு சந்தோஷ் வரைந்துள்ள ஓவியங்கள் நுண்வாசிப்புக்கு தூண்டும்படியானவை. உதாரணமாக இந்த ஓவியம்.கீழே வலது கோடியில் உள்ள எலிப்பொறி சற்றே வெளிப்படையாக துருத்தும் உருவகம் தான் என்றாலும் அது கதையின் ஆழங்களுக்கு பயணிக்க ஒரு திசைகாட்டியாக உதவுகிறது. சுந்தரேசனின் அந்த எலிப்பொறி அவரது மனமே.

குலசேகரனின் இக்கதையை படிக்க இங்கே சொடுக்குங்கள்.

No comments: