Friday, March 19, 2010

T20 சூத்திரம் என்ன?முதலில் மட்டையாடும் அணிகள் ஐந்து ஓவர்களில் 50 ஓட்டங்களுக்கு மேல் எடுத்து விட்டால் வெற்றிதான் என்றார் சுஜாதா. T20 அப்போது முலை சப்பிக் கொண்டிருந்தது. இப்போது ஐ.பி.எல்லின் மூன்றாம் வருட தள்ளுவண்டி பருவத்தில் நூற்றுக்கணக்கான ஆட்டங்களின் வரலாறு சொல்வது வேறாக உள்ளது. நிதானமான அதிரடிதான் வெற்றிக்கு ஆதாரம்.

சச்சின், சேவாக் உள்ளிட்ட மட்டையாளர்கள் இயல்பான ஆட்டத்தின் மூலமே 10 ஓவர் ரேட்டை தக்க வைக்கிறார்கள். பின்னர் அவர்கள் சற்று பேராசைப்பட்டு வெளியேற அணி சரிகிறது. அரிதாகவே பின் தொடர்பவர்கள் அதே வேகத்தை ஆபத்தின்றி தக்க வைத்து 200-க்கு மேல் அணியை அழைத்து செல்கிறார்கள். கவனமும் உழைப்பும் செலுத்த தயாருள்ள மட்டையாளர்களுக்கு T20-இல் முக்கியமான இடம் உள்ளது இப்போது உறுதியாகி உள்ளது. முதல் ஐ.பி.எல்லில் ஷான் மார்ஷ், ரெண்டாம் வருடத்தில் டிராவிட், தற்போதைய ஐ.பி.எலில் காலிசும் இதை உண்மையாக்கி வருகிறார்கள். இன்றைய (மார்ச் 19) ஆட்டத்தில் சேவாக் மேலும் உன்னிப்பாக உழைக்க விழைந்திருந்தால் எளிதாக அவரது அணி 220 தாண்டியிருக்கும். பஞ்சாபுக்கு எதிரான இன்றைய ஆட்டத்திலும் கில்கிறிஸ்ட் விசயத்தில் இதுவே நடந்துள்ளது. 300 ஸ்டுரைக் ரேட்டில் அவர் ஆடி என்ன பயன்? 168 தாண்ட முடியவில்லையே அணியால்.சுஜாதா அன்று சொன்னதை மேலும் வளர்த்தெடுப்போம். ஒரு நல்ல ஆவேச துவக்கம் அவசியம். 5 ஓவர்களில் 60 என்று வைத்துக் கொள்வோம். பிறகு இந்த துவக்க மட்டையாளர்கள் விக்கெட்டை சீட்டுக்கட்டாய் விசிறக் கூடாது. அடுத்த பத்து ஓவர்களுக்கு அவர்களே நின்றாட முயல வேண்டும். 70-80 ஓட்டங்கள் குறைந்த பட்சம் உத்தேசிக்கலாம். ஒரு சுமாரான ஆடுதளத்தில் கூட ஆபத்தின்றி இதை சாதிக்க முடியும். அடுத்து கடைசி பத்து ஓவர்களில் 50-லிருந்து 80-வரை எடுத்தால் நல்ல ஸ்கோர் உறுதி. இப்படியான செயல்திட்டத்துடன் செல்லும் அணிகளுக்கு 130-140 வகையறா ஸ்கோர்களில் முட்டி நிற்கும் அபாயம் நேராது.

ஆடுதளம் மட்டையாட்டத்துக்கு மட்டும் சாதகமாக உள்ள பட்சத்தில் அதிரடி வீரர்களை உள்ளுணர்வு படியே சரளமாக ஆட அனுமதிக்கலாம். இல்லாத பட்சத்தில் மேற்சொன்ன திட்டமே அடுத்து வரும் வருடங்களில் நாம் பார்ப்பதாக இருக்கும்.

இப்போது ஆடி வரும் மட்டையாளர்கள் செய்யும் முக்கிய தவறு அடுத்து வருபவர்களை நம்பி வேலையை அரைகுறையாக விட்டு வெளியேறுவது. இதற்கு காரணம் 20 ஓவர்கள் தானே என்ற மிகை-நம்பிக்கை. ஒரு அணியின் முன்னணி மட்டையாட்ட வரிசையை குடைசாய வைக்க ஆறு பந்துகள் போதும். சற்று அதிகப்படி என்றால் 12 பந்துகள் என்று வைத்துக் கொள்ளுங்கள். ரெண்டு வீச்சாளர்கள் தொடர்ச்சியாய் ஹேட்ரிக் வீழ்த்தினால்?

2 comments:

A.சிவசங்கர் said...

இங்கேயும் சுஜாதாவா

Madumitha said...

சூத்திரம்
தெரியாமல்
ஆத்திரமாய்
மட்டை
வீசினால்
பாத்திரம்(கோப்பை)
கை நழுவிப்
போகும்.