நிலவை வாங்கிய MRF நிறுவனம்தீபாவளி வாணவேடிக்கையின் போது வெடி கொளுத்த மத்தாப்பு பயன்படுவது போல் ஆகி விட்டது ஐ.பி.எல்லில் கிரிக்கெட்டின் அந்தஸ்து. மூன்று பந்துகளிடையே விளம்பரம், ராட்சத திரையில் விளம்பரம் ... பந்தை பிடித்தால், விட்டால், அடித்தால், வெளியேறினால், விழுந்தால் என ஒவ்வொன்றுக்கும் ஒரு விளம்பரதாரரின் பெயரிட்டு சூடம் காட்டுவது ... இப்படி இந்த சந்தைப்படுத்தல் ஜூரம் இப்போது நூறு டிகிரி தாண்டி நடுங்குகிற நிலை வந்து விட்டது. பெங்களூருவில் நடந்த ஆட்டத்தில் கிங் பிஷர் விளம்பரத்துக்கான ராட்சத பலூன் அரங்குக்கு மேலே வாலில்லாத கங்காரு போல் தொங்க வர்ணனையாளர்கள் கிரிக்கெட்டை விட்டு அதனை நிமிடத்துக்கு ஒருமுறை குறிப்பிட்டு பேசிக்கொண்டிருந்தார்கள். இன்றைய சென்னை - ராஜஸ்தான் ஆட்டத்தில் எம்.ஆர்.எப் ராட்சத பலூன் மிதக்க MRF நாமவளி. “எம்.ஆர்.எப் இந்தியாவிலேயே அதிகப்படியான பைக் டயர்களை உற்பத்தி செய்கிறார்கள்” என்று திரும்பத் திரும்ப சொன்னவர்கள் சங்கடம் தோன்றியதாலோ என்னமோ “டென்னிஸ் லில்லி எம்.ஆர்.எப் பேஸ் பவுண்டேசனில் 20 வருடங்களுக்கு மேலாக பணி செய்கிறார்” என்று சேர்த்துக் கொண்டனர். டேனி மோரிசன் “டென்னிஸ் லில்லி ஒருவேளை இந்த பலூனில் இருப்பாரோ” என்று அடக்கமாய் நக்கல் செய்தார்.அவர் பேசி முடித்து மைக் அடுத்த வர்ணனையாளருக்கு போனது. உடனே மீண்டும் எம்.ஆர்.எப் ராட்சத பலூன் மிதக்கும் காட்சிகள் அடுத்தடுத்து வந்தன. எம்.ஆர்.எப் குறித்து உடனே புகழ வேண்டிய கட்டாயம் இவருக்கும். “இதோ எம்.ஆர்.எப் பலூன்” என்றார். அவர் தொடருமுன் முன் எதிர்பாராமல் ஒளிப்பதிவாளர் கோணத்தை மாற்றி நிலவைக் காட்டினார். உடனே வர்ணனையாளர் கடமை வழுவாது தொடர்ந்தார்: “இதோ எம்.ஆர்.எப் நிலா;விரைவில் நிலவிலும் எம்.ஆர்.எப் சென்று விடும் ...”

Comments

Madumitha said…
இடுக்கண் வருங்கால் நகுக.