Fakeiplplayer.com: அணி அரசியலும் அங்கதமும்கிரிக்கெட்டின் அசலான வதந்தியை ஆன்மீக மற்றும் சினிமா வதந்திகளிடம் இருந்து பிரிப்பது அடிப்படையில் பெண்கள் தாம். உதாரணமாக கிரெக் சேப்பல் கங்குலி குறித்து அனுப்பிய மின்னஞ்சல் அறிக்கை அல்லது தேர்வுக் கூட்டம் ஒன்றில் தோனி ராஜினாமா செய்வதாக மிரட்டியதாக தேர்வாளர் ஒருவரால் கசியவிடப்பட்ட தகவல் போன்று நக்மா/லக்‌ஷ்மி ரோய் சமாச்சாரங்கள் ருசிகரமாய் இல்லை. கிரிக்கெட் கிசுகிசுக்களின் பிறப்பிடம் நிருபரின் கற்பனை அல்ல. அரசியல் ஆதாயம் அல்லது பழிவாங்கலுக்காக, அணி அல்லது வாரியத்தின் உள்நபர் ஒருவர் அல்லது ஒரு ஆட்டக்காரர் ரகசிய தகவல்களை இவ்வாறு மூன்றாம் கரம் கொண்டு எழுத வைப்பார்கள். இத்தகைய மூன்றாம் “கர” எழுத்து ஒன்று 2009 தென்னாப்பிரிக்க ஐ.பி.எல்லின் போது பிரபலமானது. இது ஒரே ஒரு follower-ஐ கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ஒரு இணையப்பதிவு: fakeiplplayer.blogspot.com. பின்னர் இது ஒரு இணையதளமாக மாற்றப்பட்டது. fakeiplplayer.com எந்த அளவுக்கு பிரபலமானது என்றால் ஏப்ரல் 26 2009 அன்று ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் பேர் ஆளுக்கு 15 நிமிடங்கள் இந்த வலைப்பதிவை படித்தார்கள். அதாவது மொத்தமாக அன்று மட்டும் 37,000 மணி நேரங்கள் இந்த வலைப்பதிவு வாசிக்கப்பட்டது. இத்தளம் சர்வதேச அந்தஸ்து பெற்றது. Gaurdian மற்றும் Times பத்திரிகைகள் இந்த வலைப்பதிவு குறித்து எழுதின. ஆஸ்திரேலியா, பாக்கிஸ்தான், நியுசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க ஊடகங்களும் பேசின. டி.வியில் இதிலுள்ள சுவாரஸ்யமான தகவல்கள் போலி பரபரப்புடன் விவாதிக்கப்பட்டன. இத்தனைக்கும் இந்த வலைப்பதிவு வெளியிட்ட வதந்திகள் மற்றும் உள்தகவல்கள் ஐ.பி.எல் அணிகளில் கடைக்கோடியில் இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் குறித்தவை.இந்திய அணிக்கு கிரெக் சாப்பல் போல் கொல்கத்தா அணிக்கு புச்சன்னன் இறக்குமதி செய்யப்பட்ட காலகட்டத்திலே fakeiplpalyer.blogspot.com ஆரம்பிக்கப்பட்டது. புச்சன்னன் அணி மேலாண்மை மற்றும் திட்டமிடலில் சித்தாந்த ரீதியிலான ஈடுபாடு கொண்டவர். ஆஸ்திரேலியாவின் பயிற்சியாளராக இவர் மிகச்சிறந்த சாதனைப் பட்டியலைக் கொண்டிருந்தாலும் நடைமுறைக்கு பயன்படாத ஒரு கோணங்கி பேராசிரியரின் சித்திரத்தையே புச்சன்னனை குறித்து அவரது அணி வீரர்கள் எழுப்பி உள்ளார்கள். ஆஸ்திரேலிய வெற்றிகளில் புச்சன்னனுக்கு எந்த பங்கும் இல்லை என்று வார்னே விமர்சித்துள்ளார். சுருக்கமாக அவர் நல்ல நிர்வாகி அல்ல. பெங்களூர் ராயல் செலஞ்சர்ஸின் பயிற்சியாளர் ரேய் ஜென்னிங்ஸைப் போன்று புச்சன்னன் கங்குலியை பதவி இறக்கி தனக்கு அனுசரித்து போகும் வெள்ளையர் ஒருவரை தலைவராக விரும்பினார். அதற்கு ஒரு-அணிக்கு-பல-தலைவர் திட்டங்கள் போல் பல அசட்டு சித்தாந்தங்களை முன்வைத்தார். முதல் ஆண்டு ஐ.பி.எல்லில் கொல்கொத்தா படுதோல்வி அடைந்தது. கிரிக்கெட் பரிச்சயமற்ற ஷாருக் இரண்டாம் ஐ.பி.எல்லில் சில தவறான மாற்றங்கள் செய்தார். புச்சன்னன் மீது அதிகபட்ச நம்பிக்கை வைத்து சாட்டையையும், விளாசுவதற்கு தன் கையையும் அவர் கையில் ஒப்படைத்தார். விளைவாக கங்குலி நீக்கப்பட்டார். நியுசிலாந்தின் மெக்கல்லம் அணித்தலைவரானார்; வங்காளிகள் கொதித்தனர். அணிக்குள் சலசலப்பு ஏற்பட்டது. தன் பீயை வாரி தானே இறைத்து விளையாடும் குழந்தை போல் புச்சன்னன் கொல்கத்தா அணியை நாசம் செய்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸை பற்ற வைத்து ஒரு மீடியா தீபாவளி ஆரம்பமாகியது. இந்த சூழலில் அறிமுகமான fakeiplpalyer.blogspot.com-இன் பதிவர் தன்னை கொல்கத்தா அணியின் ஆட்டக்காரர்களில் ஒருவனாக அறிமுகப்படுத்திக் கொண்டார். உள்விவகாரங்கள், பயிற்சியாளர், அணித்தலைவர் மற்றும் உரிமையாளர்கள் மீதான நக்கல் விமர்சனங்கள் மற்றும் வரப்போகும் ஆட்டத்தில் ஆடப்போகும் XI வரிசை குறித்த நம்பத்தகுந்த விவரங்களை வெளியிட்டார். உதாரணமாக, கங்குலி மூன்றாவதாக இறங்கி நிதானமாக ஆடுவார் என்று போலி-ஐ.பி.எல்காரர் சொன்னது உண்மையானது. அதைப் போன்றே இப்பதிவில் குறிப்பிடப்பட்ட புச்சனனுக்கும் அகார்க்கருக்குமான கசப்பான சம்பாஷணை பின்னர் அகார்க்கர் தான் இனவெறி காரணமாய் பயிற்சியாளரால் அவமதிக்கப்பட்டதாக கிளப்பிய அவதூறால் ஊர்ஜிதமானது. இத்தகைய தகவல்கள் பெரும் ஈர்ப்பை உருவாக்கின. Cricinfo.com இப்பதிவு குறித்து குறிப்பிட, நித்யானந்தா-சன் டீவி போல் fakeiplpalyer.blogspot.com பற்றிக் கொண்டது. ஒரு கட்டத்தில் லட்சக்கணக்கான வாசகர்கள் படிக்கும் தளமாக மாறிப் போனது.

இத்தளத்தின் ஆரம்ப கால ஈர்ப்புக்கு மனிதனின் ஒட்டுக்கேட்கும் சுவாரஸ்யம் மற்றும் எழுத்தாளரின் ரகசிய, அந்தரங்க தொனி காரணமாக இருந்தது உண்மை தான். ஆனால் வெறும் கிசுகிசு பக்கங்களாக அல்லாமல் நுட்பமான சித்தரிப்புகள் மற்றும் அடாவடியான புல்டோசர் அங்கதமும் தளத்தின் புகழை தக்க வைக்க உதவியது. இதன் எழுத்தாளர் தன் அடையாளத்தை மறைத்துக் கொண்டுள்ளார். பதிவுகளில் தன்னை ஒரு ஆட்டக்காரர் என்று அடையாளப்படுத்தி பேசினாலும், பின்னர் மீடியாவுக்கு அளித்த பேட்டியில் தான் ஒரு எழுத்தாளன் மட்டுமே என்பதை உறுதிப்படுத்தி உள்ளார். மேலும் அதற்கான ஆதாரம் அவரது எழுத்து நடையிலே உள்ளது. தடுமாற்றமற்ற சிக்கலற்ற சொற்றொடர்கள். மேனாட்டு கலாச்சார வழக்காறுகள் மற்றும் இலக்கிய பரிச்சயம் இவரது அங்கதத்தில் மிளிரும் அம்சங்கள். அடுத்து ஒரு உள்நபருக்கான சார்பு நிலை இன்றி சச்சின், கங்குலியில் இருந்து புச்சன்னன் வரை பாரபட்சமின்றி கேலி செய்கிறார். இந்த பாரபட்சமற்ற தன்மை தனது ரகசிய தகவலாளியை காட்டிக் கொடுக்காமல் இருப்பதற்கான ஒரு உத்தி என்றும் கூறலாம். கடைசியாக ஒரு தொழில்முறை ஆட்டக்காரருக்கான பிரத்யேக நிபுணத்துவம் இப்பதிவுகளில் காணப்பட இல்லை. ஒரு எழுத்தாளர் சு.ரா பிராமண சுடுகாட்டில் எரிக்கப்படுவார் என்று வீட்டில் இருந்தபடி ஊகித்தது போல் இந்த தளத்தில் எழுதப்படுபவை வெற்றுக் கற்பனை அல்ல. கொல்கத்தா அணிக்குள் புழங்கும் ஒரு நபரால் மட்டுமே அறிந்திருக்கக் கூடிய நுண் தகவல்கள் பல இந்த வலைப்பதிவுகளில் காணப்படுகின்றன.
உதாரணமாக இந்த குற்றச்சாட்டு. கொல்கத்தா அணிக்கு புச்சன்னன் வழங்கும் திட்டங்கள் அணியினருக்கு தமது பாத்திரம் என்ன என்பது குறித்த குழப்படிகளை எற்படுத்துகின்றன. இவ்வணியில் ஆடியுள்ள ஆகாஷ் சோப்ரா தனது Beyond the Blues என்ற நூலில் இதேவிதமான புகாரை எழுப்புகிறார். ஐ.பி.எல் ஆட்டங்களில் கவனமாக ஆடி விக்கெட்டுகளை காப்பாற்றும் படி அவருக்கு அறிவுரை வழங்கப்படுகிறது. பின்னர் நன்றாக ஆடி வரும் போது அடித்தாடும் படி முரணான கட்டளை வருகிறது. சோப்ரா விளாச முயன்று வெளியேறினால், சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்ததற்காக அவர் அடுத்த ஆட்டங்களில் விலக்கப்படுகிறார்.

இணையம் அதன் அசலான வடிவில் ஒரு மாறுவேட நடனம் போன்றது. அடையாள மறைப்பு அல்லது திரிபு இணையத்தின் பெரும் அனுகூலம் மட்டும் அல்ல பெரும் சுவாரஸ்ய ஊக்கிகளில் ஒன்று. தமிழில் சாரு நிவேதிதா இந்த உத்தியை மிக வெற்றிகரமாக கையாள்பவர். தமது நண்பர்களை போலிப் பெயர்களில் குறிப்பிட்டு அவர் உருவாக்கும் மனித சித்திரங்கள் ஒரு கட்டத்தில் தங்களுக்கான தனித்துவமான குணாதிசயங்களை ஏற்படுத்திக் கொள்கின்றன. உதாரணமாக அலெக்ஸ். போலி ஐ.பி.எல் ஆட்டக்காரரும் இந்த பெயர் மறைப்பு உத்தி தரும் சுதந்திரத்தை பயன்படுத்தி நுண்மையான சித்திரங்களை உருவாக்கி உள்ளார். புகழ் விரும்பியும், அதற்காக சுயசர்ச்சைகளை ஏற்படுத்துபவருமான ஷாருக்கானுக்கு இவர் வழங்கி உள்ள பெயர் டில்டோ. டில்டோ பெண்கள் சுய இன்பத்துக்காக குறிக்குள் திணிக்கும் ஒரு மின்கருவி. புச்சன்னனுக்கு buccaneer. அதாவது கொள்ளையன். சேஷ்டைகளுக்கு பெயர் போன ஸ்ரீசாந்துக்கு ஆப்பம் சுத்தியா. ஆகாஷ் சோப்ரா ஷேக்ஸ்பியர். கங்குலி லார்டு. மேலும் இணைய எழுத்தின் சில வழமையான வெற்றிகர அம்சங்களை இவரிடம் காண முடிகிறது. துன்புறுத்தாத நகைச்சுவை, அபாரமான பகடி, நேரடியான வர்ணனை மற்றும் சுருக்கமான வடிவம். சிறந்த பகடி சவுரவ் கங்குலியை பற்றியது தான்.
கங்குலி தனது தலைமை பண்புக்காக பெருமளவு பாராட்டப்பட்டவர். ஒரு குறிப்பிட்ட ஐ.பி.எல் ஆட்டம் ஒன்றில் கங்குலி தலைமை தாங்குகிறார். அப்போது அவர் அணியினரை ஊக்கப்படுத்தும் விதம் உரை ஒன்றை நிகழ்த்துகிறார். அதைக் குறித்து சொல்லும் பதிவாளர் கங்குலியின் தன்னம்பிக்கையை வஞ்சப்புகழ்ச்சி செய்கிறார். அவரால் வேகமாக ஓடவோ, சுறுசுறுப்பாக களத்தடுப்பு செய்யவோ, எல்லைக் கோட்டில் இருந்து வலுவாக பந்தை வீசவோ முடியாது. ஆனால் இவை அத்தனையையும் மிகச்சிறப்பாக செய்யும் படி அணி வீரர்களை தயக்கமின்றி வற்புறுத்துவார். இதுவே கங்குலியின் சிறந்த தலைமைப் பண்பு. தலைவர் தனது திறமைக்கு அப்பாலான ஒன்றை தொண்டர்களை செய்ய கூச்சமின்றி ஆணையிடுவதே ஒரு நிலப்பிரபுத்துவ மனநிலை தானே. இந்த நிலப்பிரபுத்துவ திறன் கங்குலியின் ரத்தத்தில் ஊறி விட்ட ஒன்று என்கிறார் பதிவாளர். மனிதர்களை ஆள்வதற்கு ஒரு அசட்டு தன்னம்பிக்கை வேண்டும். மிக எளிமையான மனக்கட்டமைப்பு கொண்டவர்கள் நம் மண்ணில் எளிதாக தலைவர்கள் ஆவது இதனால் தான்.

இந்த மாயாவிப் பதிவாளர் தற்போது ஒரு புத்தகம் எழுதி வருகிறார். தனது புத்தகத்தை விட கூர்மையாக மற்றும் வெளிப்படையாக கிரிக்கெட்டின் உள்-அரசியலை பேசுவதாக அது இருக்கும் என்று அறிவித்துள்ளார். நூலில் தலைப்பு: The Gamechangers.

Comments