Thursday, February 4, 2010

கல்லூரி, சர்க்கஸ் சிங்கம் மற்றும் மிசோரம்

மனிதர்கள் தொடர்ந்து நம்மைச் சுற்றி பலரும் ஏகப்பட்ட விநோதமான அசட்டுத்தங்களை சில்லறைத்தனங்களை வெளிப்படுத்தியவாறு உள்ளனர். கவனிக்க போதுமான வாய்ப்புகள் நமக்கு வாய்ப்பதில்லை அல்லது மனதை நாம் இவற்றுக்காக திறந்து வைப்பதில்லை. அல்லது ... மிக எளிதாக ... நீங்கள் ஒரு கல்லூரிக்குள் இல்லை.

ஒவ்வொரு கல்லூரிக்கும் ஒரு கலாச்சார சூழல் இருக்கும். அதையும் மீறி பொதுவாக கல்லூரி ஆசிரியர்களிடம் நிறைய அசட்டுத்தனங்கள் அபரிதமான போக்கிரித்தனம் வெளிப்படும். நண்பர்களே, நீங்கள் நடைமுறையில் வேறெங்கும் காண முடியாத மனித போக்குகள் இவை.

இங்கு நான் சொல்லப் போகும் கதைகள் என் அனுபவம் மற்றும் நண்பர்களின் தகவல்களில் இருந்து உருவானவை. வாரமலர் கிசுகிசு போல் இவற்றின் மூலத்தை தேடாமல் மனிதர்களை மற்றும் கவனிக்க வேண்டுகிறேன். இல்லாவிட்டால் என்னை ராடடித்து, விட்டால், சாகடித்தே விடுவார்கள்.என் நண்பனின் கல்லூரியில் நிரந்தர×தற்காலிக ஆசிரியர்கள் இடையில் உள்ள வர்க்க போதம் காரணமான ஒடுக்குமுறைகள் குறித்து முன்னொரு தடவை எழுதியிருக்கிறேன். அதன் தொடர்ச்சியாக இந்த சம்பவத்தை படிக்கலாம்.

என் நண்பன் கல்லூரி காண்டீனில் தனியாக அமர்ந்து உலர்ந்து போன இட்லிகளை பிய்க்க முயன்று கொண்டிருக்கிறான். அப்போது அவன் துறையின் மூத்த பேராசிரியர் வருகிறார். நண்பன் காந்தியைப் போல் மனிதர்களின் நற்பண்புகளில் நம்பிக்கை உள்ளவன். அவமதித்தவர்களுக்கு கூட அடுத்த முறை தூக்கலாக மரியாதை தரும் போன தலைமுறை எச்சம். பேராசிரியருக்காக பரபரப்பாக பக்கத்து நாற்காலியை தயார் செய்து சிறுவெட்கத்துடன் நமஸ்கரிக்கிறான். அவர் டீக்கடை வாசலில் கறக்கப்படும் எருமையை தள்ளி நின்று கவனிக்கிறவரின் பாவனையுடன் தாண்டிச் சென்று பக்கத்து மேஜையில் உட்காருகிறார். நண்பன் அந்த காலி நாற்காலியை ஏமாற்றத்துடன் பார்க்கிறான். மூளைக்குள் பல்ப் எரிகிறது. அப்போது அடுத்த சோதனை வருகிறது. இது எளிதுதான் என்று முதலில் படுகிறது. ஒரு இளைய தற்காலிக ஆசிரியர். நண்பர் ஆசுவாசமாகிறார். நம் வர்க்கம் தானே. கால்வாசிப் புன்னகையுடன் அவரை நோக்கி வரும் வர்க்கத்தோழரை பார்க்கிறார். சின்னத் தலையாட்டலுடன் வணக்கம் சொல்கிறார். ஆனால் அந்த தற்காலிக ஆசிரியர் நிரந்தர பேராசிரியருடன் வர்க்கம் போதம் கடந்த சமூக ரீதியான நெருக்கம் கொண்டவர். அதிகார வர்க்கத்துடன் உராசும் அடிமை வர்க்கமும் அப்பண்புகளை பெற்று விடுமே! அவரும் நண்பரின் வணக்கத்தை கவனிக்காமல் கடந்து பேராசிரியர் பக்கத்தில் அமர்கிறார். பல்ப் உடைந்து விடுகிறது.இதை மற்றொரு துறையில் அமர்ந்து நண்பர் என்னிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போது குறுக்கிட்டேன்: “அட அசடே இது உலக இயல்பாயிற்றே. அதிகாரத் தீண்டாமை எந்த இடத்தில் இல்லை சொல். நான் வேலை பார்த்துள்ள அதிநவீன தனியார் நிறுவனங்களில் மேலாளரை பேர் சொல்லி அழைக்கும் கலாச்சாரம் உண்டு. ஆனால் அங்கும் கூட மேலாளர்கள் வர்க்க வித்தியாசத்தை கீழ்நிலை ஊழியருக்கு சூட்சுமமாக உணர்த்தியபடிதான் இருப்பார்கள். கல்லூரிகள் நவீனப்பட்டு சமகாலத்துக்கு இன்னும் வரவில்லை. அதனால் ஜமீந்தார் பாணியில் ஆண்டான் – அடிமை முறை வெளிப்படையாக அநாகரிகமாக உள்ளது. கஞ்சித்தண்ணிக்கும் வெஜிடபிள் சுப்புக்கும் உள்ள வேறுபாடு தான் இது. விடப்பா”. அப்போது நண்பன் சுடுசோற்றை முழுங்க முடியாமல் தவிப்பது போல் ஒரு பாவனை செய்தான். என்னடா என்று துணுக்குற்ற வேளையில் பா.ராகவன் ஸ்டைலில் ’அது நடந்தது’.

அதே நிரந்தர பேராசிரியர் நுழைந்து எதிர் நாற்காலியில் அமர்ந்தார். தனது துறை துப்புரவு அப்போது செய்யப்படுவதாகவும் அதனால் இங்கு வந்துள்ளதாகவும் முகம் சுளித்தபடி சொன்னார். நாங்கள் இறுக்கமாக கல்யாணப் பெண் போல் அமர்ந்திருந்தோம். சற்று நேரம் எங்களை விசித்திரமாக நோக்கினார். பிறகு என் நண்பனை பார்த்து அதிகார பாவனை தொற்ற கை நீட்டி சொன்னார்: “அறை சுத்தமாகி விட்டதா என்று போய் பார்த்து விட்டு வருவாயா”. என்ன விந்தை என்றால் அவர் சொன்ன துறை அறை எட்டிப் பார்க்கும் தூரத்தில் பக்கத்திலே உள்ளது. நண்பரை திரும்ப வந்து ”சார் ரூம் ரெடி” என்றுவுடன் நன்றி கூட கூறாமல் தான் அது வரை படித்துக் கொண்டிருந்த புனித நூலை சிரத்தையாக மூடி விட்டு எழுந்து கிளம்பினார்.

போய் சில நொடிகள் மௌனித்து விட்டு நண்பன் கனைத்தான்: “ நன்றி கூறுவது நாசூக்காக நடந்து கொள்வது எல்லாம் மேல்தட்டு பாவனைகள். இவரைப் போன்ற வெளிப்படையான அதிகார வர்கத்தினர் ஆபத்து குறைவானவர்கள்”. சரிதான், சர்க்கஸுக்கு உள்ளேயும் வெளியிலும் சிங்கம் ஒன்றுதான். தமாஷ் மட்டும் தான் வித்தியாசம்.

இதெல்லாம் ஜீரணம் ஆவதற்கு என்றே ஒரு தமிழ்ப்பேராசிரியர் ஒரு கதை சொன்னார். அவர் ஒரு ஆய்வரங்குக்கு சென்றிருக்கிறார். மதியம் அரங்கம் முடிந்ததும் அசல் உத்தேசமான பங்கேற்பு சான்றிதழுக்காக கூட்டத்தோடு கூட்டமாக காத்திருக்கிறார். நெடுநேரமாகியும் பேச்சு மூச்சில்லை. மாலை வரை பங்கேற்பாளர்கள் காத்திருக்க வேண்டும் என்று உதவியாளர் ஒருவர் வந்து சொல்கிறார். என்ன காரணம்? சான்றிதழில் கையொப்பம் இட வேண்டிய பல்கலைக் கழக துணைவேந்தர் (கலைஞரின் பல வலதுகரங்களில் ஒருவர்) மதியம் மூன்று மணிநேரம் தூங்கும் வழக்கமாம். அவர் எழுந்து களைப்பு நீங்கிய பின்னரே ஒப்பமிட்டு சான்றிதழ் வழங்குவார். நான் பரபரப்பாகி கேட்டேன் “அப்புறம் என்னாச்சு. எதிர்ப்பு காட்டினீர்களா? ஆவேசத்தில் முற்றுகை, உண்ணாநிலைப் போராட்டம், கோஷம், கைகலப்பு ஏதாவது ... ?”

“ச்சே... நாங்கள் இரவு வரை கூட காத்திருக்க தயாராக இருந்தோம். கல்லூரி ஆசிரியர்னா சும்மாவா!” கல்லூரிச்சூழல் பரிச்சயம் பலவித கீழ்மைகளை தாங்குவதற்கான ஒரு தடுப்பூசி.வாஸந்தி அம்ருதா இதழில் மிசோரம் குறித்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் ஒரு காட்சி. வாஸந்தியின் வீட்டிற்கு ஒரு உள்ளூர் மிசோரம்காரர் வந்து சோபாவில் சாவகாசமாக கனவான் பாவனையில் அமர்ந்திருக்கிறார். வாஸந்தி தன் உதவியாளரிடம் வந்தவர் யாரென்று விசாரிக்கிறார். “கழிப்பறை சுத்தம் செய்ய வந்துள்ளார். நீங்கள் உள்ளே இருந்ததால் காத்திருக்கிறார்”. வாஸந்திக்கு அதிர்ச்சி. உதவியாளர் விளக்குகிறார்: “மிசோரம் மக்களுக்கு படிநிலை போதம் கிடையாது. முதலமைச்சர் முன்னிலையிலும் சமமாக உட்காருவார்கள்”. இந்த கட்டுரைதான் என்னை இதை எழுதத் தூண்டியது.

4 comments:

kailash,hyderabad said...

கடைசி பாரா சூப்பர். முதுகெலும்புள்ள mizoram மக்களுக்கு ஒரு சலாம்.

மயில்ராவணன் said...

மிசோராம்ல பிறந்திருக்கலாம். நல்ல விசயங்களை அழகாக எழுதுகிறீர்கள்.

K.R.அதியமான் said...

//ஒவ்வொரு கல்லூரிக்கும் ஒரு கலாச்சார சூழல் இருக்கும். //

ஆம். இந்திய சூழலில் இன்னும் நாம் நிலப்பிரத்துவ மதிப்பீடுகளில் இருந்து முற்றாக விடுபடாதா நிலை என்பதால் இங்கு இப்படி உள்ளது. ஆனால் மேலை நாடுகளில் முக்கியமாக கனடா, மே.அய்ரோப்பா பல்கலைகழக கல்லூரிகளில் நிலை எப்படி என்று ஒப்பிடவும். அங்கு ‘நிரந்தர’ வேலை என்று யாருக்கும் இல்லை. ஒழுங்காக வேலை பார்க்காவிட்டால் யாருக்கு வேண்டுமானாலும் வேலை போகும் அபாயம் உண்டு.

K.R.அதியமான் said...

பன்னாட்டு நிறுவனங்கள் வந்த பின் தான் தனது பாஸை பெயர் சொல்லி அழைக்கும் கலாச்சரெமெல்லாம் இங்கு முதலில் உருவானது. அதற்க்கு முன்பு. அதாவது 80கள் வரை இதெல்லாம் இங்கு சாத்தியபடவில்லை.

அரசு நிறுவனங்களில், அமைப்புகளில் தான் உட்சபட்ச நிலப்பிரவுத்துவ மதிப்பீடுகள், கூழை கும்பிடுகள், குழு மனப்பான்மை, etc, etc.