Saturday, February 27, 2010

கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 13


நகரமேயற்ற நிலையமொன்றில் ரயில் நின்றது. சற்று நேரம் கழித்து மகோண்டா என்று வாயில் கதவில் பெயர் பொறிக்கப்பட்ட, அவ்வழியே உள்ள ஒரே வாழைப்பழத் தோட்டத்தை அது கடந்து போனது. தாத்தாவுடன் சென்ற முதற்பயணங்களின் போதே இப்பெயர் என் கவனத்தை ஈர்த்திருந்தது.
இதன் கவித்துவ ஆழ்கிளர்ச்சியை வயது முதிர்ந்த பின்னரே கண்டறிந்தேன். அப்பெயரை யாரும் சொல்லிக் கேட்டதில்லை. யாரிடமும் அதன் பொருளை நானாகவும் கேட்டதில்லை. அது செயிபாவை போல் தோற்றமளிக்கும்மொரு வெப்பமண்டல மரம். அதன் நுண்துகள்களுடைய கனங்குறைந்த கட்டை வள்ளம், சமையற்கருவிகள் செதுக்க பயன்படும் என்று கலைக்களஞ்சியம் ஒன்றில் படித்த போது, ஏற்கனவே எனது மூன்று புத்தகங்களில் ஒரு கற்பனை நகரின் பெயராக அதை பயன்படுத்தியிருந்தேன். பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியத்தில் பின்னர் தான்கனியாவிலுள்ள நாடோடி மக்களின் பெயர் அதுவென்று கண்டுபிடித்தேன். இப்பெயரின் முலம் அதுதான் என்று கண்டுபிடித்தேன். அதை ஒருபோதும் உறுதி செய்யவில்லை. அம்மரத்தை ஒருபோதும் பார்க்கவில்லை; நான் அதைப்பற்றி பல நேரங்களில் வாழைத்தோட்ட பகுதியில் விசாரித்த போதும் யாருக்கும் அதைப் பற்றி தெரிந்திருக்கவில்லை. ஒருவேளை அது இல்லாமலே இருந்திருக்கலாம்.

பதினோரு மணிக்கு ரயில் மகோண்டாவை கடந்து போகும்; பிறகு பத்து நிமிடங்கள் அரகடகாவில் நிற்கும். அம்மாவோடு நான் வீட்டை விற்க சென்ற நாளில் ரயில் ஒன்றரை மணி நேரம் தாமதம் ஆனது. அது வேகம் கொள்ள ஆரம்பித்த போது நான் கழிப்பறையில் இருந்தேன்; உடைந்த ஜன்னல் வழி வறண்ட சுட்டுப்பொசுக்கும் காற்று வீசியது. அதோடு பழைய தொடர்வண்டிகளின் கூச்சலும். இயக்குப்பொறியின் பீதியான விசிலும் கலந்து வந்தது. இதயம் தடதடவென நெஞ்சில் அடித்தது. சில்லிடச் செய்யும் குமட்டல் வயிற்றை உறைய வைத்தது. நில நடுக்கத்தின் போது தோன்றும் பீதியில் நான் வெளியே ஓடினேன். அம்மா பெரும் நிதானத்துடன் இருக்கையில் அமர்ந்து தான் கடந்து போகும் இடங்களை, அவை மீட்டெடுக்க முடியாத வாழ்க்கைத் தெறிப்புகள் என்பது போல, பாராயணம் செய்து கொண்டிருந்தாள்.

"அதோ அந்த நிலத்தைத் தான் தங்கம் கிடைக்கும் என்று கதை கட்டி என் அப்பாவுக்கு விற்றார்கள்"அட்வெண்டிஸ்டுகளின் வீடு, கூடவே பூந்தோட்டம் மற்றும் ஆங்கிலத்தில் "சூரியன் அனைவருக்காகவும் காய்கிறான்” என்னும் கதவில் தொங்கும் பெயர்ப்பலகை சகிதம் ஒரு எரிகல்லைப் போல் கடந்தது.

" நீ ஆங்கிலத்தில் கற்ற முதல் விசயம் அதுதான் " அம்மா சொன்னாள்.

"முதல் விசயமல்ல" நான் சொன்னேன் "ஒரே ஒரு விசயம்".சிமிணு பாலம் கடந்து போனது. ஆங்கிலேயர்கள் ஆற்றை தோட்டத்தை நோக்கி திருப்பி விட்ட நாட்களில் இருந்தே சேறு கலந்த நீர் கொண்ட பாசன வடிகாலும் கடந்தது.

"விபச்சாரிகள் வாழும் இடம்; இங்கே தான் மெழுகுவர்த்திக்கு பதில் பண நோட்டுகளை எரித்து ஆண்கள் ராவெல்லாம் கும்பியாம் ஆடி இரவைக் கழிப்பார்கள்", அவள் சொன்னாள்.

1 comment:

Tech Shankar said...

தங்கள் பதிவுக்கு நன்றிகள்..

East Or West Sachin is the Best. It was an amazing performance by Sachin. Congrats to Sachin Dear Little Master.

Have a look at here too..

Sachin Tendulkar's Rare Photos, Sachin's Kids pictures, Videos