சு.ராவின் காற்று: வெளியேறலின் தவிப்புகாற்று கதவை தட்டும்
முட்டும்
தாழிட்டதில்லை.

ஒருக்களித்த கதவுகள் மீது
ஆங்காரம் கொள்ளும்
திற அல்லது மூடு
எனக் கத்தும்.

எனினும் தூசு போர்த்தும்
நெடுகிலும் பரப்பும்.

எனது பெயர்
உக்கிரப்பெருவழுதி
எனக் கூறிச் செல்லும்.

சருகு உதிர்க்கும்
எனினும் தளிர் ஒடிக்கும்.

மூட ஜென்மம்.

எனினும் குருவிகளை முத்தமிடும்
அதிர்ஷ்டம் கொண்டது.


இருபதாம் நூற்றாண்டு எழுத்தில் மனிதன் எதிலாவது சிக்குண்டு வெளியேற முடியாமல் தவிக்கிறான்: சமூக, அரசியல், தத்துவார்த்த தளங்களில் இந்த வெளிவருதலுக்கான தவிப்பு சு.ராவின் கவிதைகளிலும் காணலாம். அவரது ”ஜன்னல்” சிறுகதை நினைவிருக்கலாம். இந்த சிறைபட்ட மனிதன் உள்ளே இருக்க காற்று வெளியே உலாவுகிறது. இக்கவிதை ஷெல்லியின் Ode to Westwind-ஐ நினைவுபடுத்துகிறது. அந்த ரொமாண்டிக் கவிதையில் காற்று எனும் மகாசக்தி அழிவுக்கும் பிறப்புக்கும் ஆதாரமாக காட்டப்படும். சு.ரா இங்கு மேலும் யதார்த்தமாக பேசுகிறார். சு.ராவின் நவீன காற்றால் ஆங்காரம் கொள்ள, ஜன்னலை முட்டி திற என்று கத்த மட்டுமே முடியும். எங்கும் தூசு பரத்தி தன் ’அடையாளம்’ நிறுவுகிறது. “உக்கிரப்பெருவழுதி” என்பது பெயரில் மட்டுமே.“சருகு” உதிர்க்கும் என்பதிலுள்ள மெல்லிய கேலியை கவனியுங்கள். “தளிர்” ஒடிக்கும் எனும் போது கவிதை மெல்ல தடம் மாறுகிறது. ஒரு சமூக\அரசியல் அரசியல் தளம் உருவாகி வருகிறது. ஜெயமோகன் சொல்வது போல் சு.ரா வார்த்தைகளை சுண்டி சுண்டி தொனி மாற்றுவதில் நிபுணர். கவிதையை இங்கேயே கூட முடித்திருக்கலாம். “குருவிகளை முத்தமிடும் அதிர்ஷ்டம் கொண்டது” கூட அழகான வரிதான். இங்கு ஒன்றை குறிப்பிட வேண்டும். “அதிர்ஷ்டம்” எனும் சொல் இவ்வரியை ஒரு அறிக்கை கூற்றாக்கி விடுகிறது. ஒரு நுண்மையான வாழ்வுக் கூறை பேசும் கவிதையில் சற்று கனமான சொல் இது. பொதுவாக சு.ராவின் மென்மையான கவிதைகளில் ‘கத்துவது’ ‘சீறுவது’ போன்ற உச்சபட்ச வினைச்சொற்கள் வலுக்கட்டாயமாக விழுகின்றன. இது ஒரு பிரச்சனையா அல்லது அவரது நடையின் ஒரு ஆபத்தற்ற கூறா?

Comments