Saturday, December 12, 2009

கல்லூரி ஆசிரியர்களுக்கு அதிக பணி: எதிர்வினையும் பதிலும்

கல்லூரி ஆசிரியர்களுக்கு ஊதியத்துக்கு ஏற்ப அதிக பணி தர வேண்டும் என்ற என் பரிந்துரையை கண்டித்து ஐந்து வருடங்களுக்கு மேலாக விரிவுரையாளராக பணி புரிந்து வரும் சாமுவல் ஜான்சன் எதிர்வினை எழுதியுள்ளார்.

ஜான்சனின் ஆங்கில எதிர்வினையின் தேர்ந்தெடுத்த் பகுதிகளின் மொழியாக்கம்:

வணக்கம் அபிலாஷ்,

இன்று ஒரு அரசு கால்நடை மருத்துவரை சந்திக்க நேர்ந்தது; அவளுக்கு ஒரு வருடத்துக்கு முன் வேலை கிடைத்தது; வேலை பிடித்துள்ளது என்றும், காலை எட்டில் இருந்து பன்னிரண்டு வரை வெறும் நாலு மணி நேரங்களே வேலை செய்வதாய் அவள் பெருமையுடன் அறிவித்தாள். அவள் ஊதியம் கல்லூரி ஆசிரியர்களின் ஊதியத்துக்கு சமமானதே. அவர்களுடைய பல உதவித் தொகைகளும் சேர்த்தால் மொத்த சம்பளம் கல்லூரி ஆசிரியர்களின் உடையதை விட பத்தாயிரம் அதிகம். சில வாரங்களுக்கு முன் ... இளங்கலை பட்டம் முடித்த ஒரு வேளாண்மை அதிகாரியை சந்தித்தேன். அவரது ஊதியம் ஏறத்தாழ கல்லூரி ஆசியர்களின் உடையதைப் போன்றதே. ஆனால் பகட்டாய் ஆடையுடுத்தி ஆசனம் அலங்கரிப்பதன்றி வேறு வேலை இல்லை. அரிதாகவே மண் சோதனைக்கு வரும்; அவள் தன் உதவியாளர்களை பணித்து வேலை வாங்கி, தரவுகளை அனுப்பி விடுவாள்.காவல் மற்றும் மின்வாரியத் துறைகளில் வேலை செய்பவர்களுக்கு கண்ட நேரங்களில் அலையும் தொல்லை இருக்கும்; பணிச்சுமை மற்றபடி அனைத்து அரசுத் துறைகளிலும் இப்படித்தான். தனியார் நிறுவனங்களிலும் படிநிலையில் உயர்ந்திட நிலைமை இதுவே. தொழிலாளர்கள் மட்டுமே குறைந்த ஊதியத்துக்கு போராடுவது; அதிகாரிகளின் வாழ்வு வேறு. மும்பையில் ஒரு முன்னணி நிறுவன அலுவலகத்தில் என் தம்பியை காண சென்றேன். அங்கு ஊழியர்கள் சதா அரட்டை அடித்தபடி இருந்தனர். அவர்களின் ஊதியம் அறிய எனக்கு அதிர்ச்சியாகியது: மாதம் ஒன்றரை லட்சம். சிலர் மாதம் மூன்று லட்சத்துக்கு மேல் வாங்கினர். தொழிலாளர்களின் பால் அவர்கள் இரக்கம் கொள்ளாமல் இருப்பதற்கே அவர்களுக்கு காசு தரப்படுகிறது. கடிவாளத்தில் இருந்து கீழே பார்த்தபடி இவர்கள் கல்வியறிவற்ற உழைப்பாளிகளிடம் கொடூரமான முறைகளில் வேலை வாங்க திட்டமிடுகிறார்கள் ... மென்பொருள் துறையில் பணிசெய்யும் என் பள்ளி நண்பர்கள் அங்கு அவர்களுக்கு வெளியில் அறியப்படுவது போன்ற வேலை ஒன்றும் இல்லை என்கிறார்கள். பெரும்பாலும் அலுவலகத்துக்கு தாமதமாக சென்று வெறுமனே அரட்டையடிக்கிறார்கள். புராஜக்ட் முடிக்கும் கடைசி நாள் நெருங்கும் போது மாதத்தில் ஒரு வாரம் மட்டுமே இரவு பகல் உழைப்பு. இவர்கள் எல்லாம் சமூகத்தட்டின் உச்சத்தில் உள்ளவர்கள் ... உழைப்பாளர்களுக்கு வேலை நரகமே.

கல்லுரி ஆசிரியர்களை உயர்வர்க்கம் என்று கருதலாமா?

கருத்துக்களை முதலாளிகள் தேர்ந்து முன்னிறுத்த, ஆசிரியர்கள் செயலாக்குகிறார்கள். கால்சென்டர்கள் மற்றும் பி.பி.ஓக்கள் நம் நாட்டுக்கு வருவதற்கு முன் யு.ஜி.சி இ.எல்.டி கருத்தரங்குகளுக்கு பணம் செலவிடுவதில் ஆர்வம் கொண்டிருந்தது; இப்போது அது பழங்குடி இலக்கியம் மற்றும் சூழலியல் சார்ந்த கருத்தரங்குகள் நடத்த ஆர்வம் காட்டுகிறது. தனது அடித்தளத்தை பழங்குடிகளின் இருப்பிடம் மீது விரிவுபடுத்த முத்லாளித்துவம் கண் வைக்கும் தளங்கள் இவையே. ஆக, முதலாளித்துவ திட்டப் பட்டியலுடன் ஒரு கல்லூரி ஆசிரியருக்கு நிறையவே தொடர்புண்டு.

இளைய மனங்கள் ஆசிரியர்களாலே செதுக்கப்படுதால், இந்தியா ஒரு வல்லரசு, இந்தியா ஒளிவிடுகிறது என்றெல்லாம் சொல்லித் தர அவர்களுக்கு அதிக பணம் தரப்பட வேண்டியதாகிறது. மாணவர்களுக்கு வலியும் துயரமும் சொல்லிதரல் ஆகாது; ஏனெனில் கல்வி உற்சாகமான ஊழியர்களை உருவாக்க வேண்டுமே.

சமீபமாக மிகச்சிலரே கல்லூரி ஆசிரியப் பணிக்கு வர விரும்புகிறார்கள். சிறந்த மாணவர்கள் வேறு துறைக்கு போய் விடுகிறார்கள். இதனால் கல்லூரி ஆசிரியர்களுக்கு அதிக ஊதியம் வழங்குவது ஒரு கட்டாயம் ஆகி விட்டது.

கல்வி வளாகத்துள் நடைபெறும் பெரும்பாலான பாலியல் வன்முறைக்கு ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் குறைந்த ஊதியமே காரணம். ஒழுக்கம் பணக்கார மத்திய வர்க்கங்களுடன் தொடர்புடையது; நன்றாக ஊதியம் நல்குவது அற நெறிகளை தொடர்ந்து பேச மற்றும் ஒழுக்கத்தை தக்க வைக்க அவசியம்.

பள்ளி ஆசிரியர்களுக்கு தொடக்க ஊதியமாக 20,000 வழங்கப்பட கல்லூரி ஆசிரியர்களுக்கு தொடக்க ஊதியமாக தரப்படும் 28,000 மிகச்சற்றே அதிகம். நான் ஆரம்பத்தில் கூறின துறைகளுக்கு ஒப்பாகவே நமது கல்வித்துறைக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. இதை அதிகம் என்று நாம் கூற முடியாது.

ஆனாலும், எப்படியோ ஆசிரியப் பணிக்கு அதிக ஊதியம் தரப்படுவதாக முன்வைக்கப்படுகிறது ... பணிச்சுமையை அதிகரிக்க நீங்கள் வைக்கும் பரிந்துரை ச்ற்று அபத்தமாக உள்ளது; ஏனெனில் மனிதர்கள் ஊழியர்களோ எந்திரங்களோ அல்லர். அறிவியல் வளர மனிதன் ஒப்பிடுகையில் அதிக ஓய்வு பெற வேண்டும். 10 வருடங்களுக்கு முன்னர் ஒரு மனிதன் 8 மணிநெரம் உழைக்க வெண்டும் எனில், அறிவியல் பெற்றுள்ள வளர்ச்சியை கணக்கில் கொள்கையில் அவன் இப்போது 4 மணிநேரங்களே உழைக்க வேண்டும். ஆக எல்லோருக்கும் உழைப்பில் இருந்து இந்த விடுதலை கிடைக்க வில்லை. ஒரு பணக்கார நாடு தன் குடிகளுக்கு அவர்கள் குடும்பத்துடன் கழிக்க மற்றும் கேளிக்கைகளில் ஈடுபட மேலும் அதிக ஓய்வு நேரம் அளிக்க வேண்டும்.இனி என் பதில்:

அன்புள்ள ஜான்சனுக்கு

உங்கள் தர்க்கங்கள் இந்த விவாதத்தின் மற்றொரு பக்கத்தை காட்டுகின்றன. குறிப்பாய் ஒரு சிவப்பு கண்ணோட்டத்தில் சில அவதானிப்புகளையும் உங்கள் அனுபவம் சார்ந்து பிறவும் சொல்லி உள்ளீர்கள். நாம் வாழ்வது ஒரு சூட்சுமமான முதலாளித்துவ சமூகத்தில் என்று நம்புகிறேன். முதலாளித்துவ கரத்தை தொட்டுக் காட்டியுள்ளது முக்கியமானதே.

முதலாளித்துவ தேவைகள் மட்டுமே சமூக இயக்கத்தை தீர்மானிப்பதில்லை. சமூக-முதலாளித்துவ சமரசப் புள்ளி ஒன்றுள்ளது. அங்கிருந்தே நான் பேசுகிறேன்.

சமூகத்தின் பொருள் மற்றும் ஆற்றல் வளம் எப்படி யாரால் வீணடிக்கப்படாலும் தவறே. அரசு மற்றும் தனியார் துறைகளில் உலகம் பூரா இது நடைபெறக் கூடும். தொடர்ந்த கண்டனமும் அறிவார்ந்த விவாதமும் இந்த வீணடிப்பை நோக்கின எதிர்குரல். இதோ நீங்களும் நானும் பேசிக் கொள்வது தொடர்ந்து சிலரை சிந்திக்க பேச எழுத வைக்க செய்து ஒரு சிந்தனை சங்கிலியின் கண்ணியாகும். ஒரு முக்கிய வரலாற்று பொறுப்பு இது.

ஒட்டுமொத்தமாக அனைத்து துறைகளின் செயல்பாட்டையும் அலசுவது சிரமம் என்பதாலே கல்லூரி ஆசிரியர்களை எடுத்துக் கொண்டிருக்கிறேன். தனிப்பட்ட காழ்ப்போ சமூகத்தின் பொதுப்புத்தியில் இணைவதோ நோக்கமல்ல.


நாம் இன்னமும் பணக்கார நாடல்ல. ஒருபுறம் வீங்கின ஏழை நாடு. இங்கு, அதிக ஊதியம் போன்றே மக்கள் ஆற்றல் வீணடிப்பு குறித்தும் கவலை கொள்ள வேண்டியதாகிறது. 5 மணி நேர வேலை, கேளிக்கை மற்றும் ஓய்வு ஆகியவை இந்தியாவில் இன்றும் சொகுசு தான். மேலும் சொல்வதானால், அதிக ஊதியத்தை விட ஆற்றல் வீணடிப்பே பெரும் அநியாயம் என்று நம்புகிறேன். சமூக படிநிலையை தக்க வைக்க உச்சபடி நிலைக்காரர்களுக்கு அதிக ஊதியம் வசதிகள் தரப்படுகிறது என்ற கருத்தை முதலில் பேராசிரியர் செரியன் சொல்லித் தான் அறிந்தேன். அது உண்மையே. ஒருவித அவசியமும் கூட. இயற்கையில் நாய், குரங்கு போன்ற விலங்கு சமூகங்களில் தலைமையிடத்துக்கு முன்னுரிமை அளிக்கும் அந்தஸ்து சமாச்சாரம் உள்ளது. ஆனால் கல்லூரி ஆசிரியர்களோ நீங்கள் குறிப்பிட்ட விலங்கியல் மருத்துவர்களோ மேலாண்மை வகுப்பல்ல.கல்லூரி ஆசிரியர்களின் வேலை போதுமானதல்ல என்ற கருத்து ஏற்கனவே உள்ளது. அதனாலே அவர்கள் ஆய்வுக் கட்டுரைகளை தொடர்ந்து சமர்ப்பிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஆய்வரங்க தமாஷில் இவை மிகையான பாசாங்காக முடிந்து விடுகிறது. பெரும்பாலும் யாருக்கும் சொந்த அவதானிப்பு என்ற ஒன்று இக்கட்டுரைகளில் இருப்பதில்லை அல்லது உரைகளை நிகழ்த்த கருத்தரங்குகளில் நேரம் வாய்ப்பதில்லை. இதை விட செயலூக்கத்துடன் ஆசிரியர்களின் ஆற்றலை அவர்களது திறமை பொறுத்து செலுத்த வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு. சுமைதூக்கிகளாக்க வேண்டாம். இது குறித்தே விரிவாக என் கட்டுரையில் எழுத விரும்புகிறேன். அதிக சம்பளத்தை பறிப்பது பற்றியல்ல. ஒரு அறிவார்ந்த தளத்தில் சமரசமின்றி கல்லூரி ஆசிரியர்களை எப்படி வேலை வாங்கலாம் என்று நினைக்கிறீர்கள்? இது குறித்து கட்டாயம் எழுதுங்கள்.

நீங்கள் சொல்வது போன்றே கல்லூரி ஆசிரியர்கள் ஒழுக்க வழிகாட்டிகளாக இருக்க எதிர்பார்க்கப்படுகிறார்கள். மத்திய, கீழ்மத்திய நபர்கள் கூட ஜோதியில் கலந்த பின் குறைவான ஊதியம் வழங்கப்பட்டாலும் சட்டமுறைகளுக்கு கட்டுப்பட்டவர்களாக, ஒழுக்கவாதிகளாக இருப்பதையே என் அனுபவத்தில் காண்கிறேன். முதலாளித்துவத்துடன் அல்லது பொதுப்புத்தியுடன் முரண்படுவர்களுக்கு வேறொரு பின்னணி இருக்கக் கூடும். சுருக்கமாக சொல்வதானால், அம்பியாக இருப்பதற்கு பொருளாதார வெகுமதி மட்டும் காரணமல்ல. குனிந்து போவது ஒரு மரபியல் கூறு, அது குழந்தைகளிடத்து கூட காணப்படுவது என்று சமீப ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. பொருளாதார பலன் மட்டுமேயல்ல என்பதை கவனியுங்கள். முற்றிலும் இல்லை என்று சொல்லவில்லை.

மூன்று மாதங்களுக்கு முன் ஒரு வேலை நாளின் போது கல்லூரி வேலைக்கான நேர்முகத்துக்கு போயிருந்தேன். நூற்றுக்கு மேல் வந்திருந்தனர். இத்தனைக்கும் பிரபலமற்ற கல்லூரி. ஆழ்வார்பேட்டையில் ஒரு குட்டி அறையை மட்டுமே வாடகைக்கு எடுத்திருந்தார்கள். கூட்டம் வாசல் வரை தவம் கிடந்தது. பலரிடமும் விசாரித்ததில் சம்பளம் குறைவென்றாலும் வேலை எளிது, சச்சரவற்றது, அதனாலே வந்துள்ளதாய் தெரிவித்தார்கள். ஒருவர் 3500 ரூபாய்க்கு 5 வருடங்களாய் கல்லூரி நூலகராய் பணி செய்திருக்கிறார். சற்று அதிகமாக இங்கு கிடைத்தாலே போதும் என்பதே அவரது எதிர்பார்ப்பு. நான் எனது முந்தைய தனியார் நிறுவனத்தில் copyediting பணிக்காக ஒரு மாதம் ஹிந்துவில் விளம்பரம் கொடுத்து, கன்சல்டன்சிக்கு காசு கொடுத்து தேடியதில் 25 பேருக்கு மேல் வரவில்லை. அவர்களில் பலரும் பத்தாயிரம் ரூபாய் ஊதியத்தையே நிராகரிக்கிறார்கள். இதற்கு நான் மேற்சொன்ன பணி அதிகம் அறியப்படாத ஒன்று என்பது மட்டுமே காரணமல்ல. சொகுசுப் பணிக்காக ஒரு பெரும் கும்பலே காத்துக் கிடக்கிறது.

ஊதியத்தை அதிகப்படுத்துவதால் திறமையானவர்களை கல்லூரிக்குள் ஈர்க்க முடியுமா? இதற்கான பதில் எதிர்கால வரலாற்றிடமே உள்ளது. இது ஒரு கலாச்சாரம் சம்மந்தப்பட்ட விசயமுமே. ஆழமான நுண்-அறிவு விவாதம் நிகழ்த்தும், அறிவுத்துறைகளை போற்றும் சமூகத்தில் சிறந்த ஆசிரியர்கள் இயல்பாகவே தோன்றுவார்கள். கலாச்சார வறட்சி உள்ள பட்சத்தில் ஊதிய உயர்வு உதவாது. யு.ஜி.சி தேர்வு முறை இதை மேலும் அபத்தமாக்கிறது. ஒரு தகவல் வங்கி எப்படி ஒரு கூட்டத்தை தன் நாவன்மையால் கட்டிப் போட முடியும் என்று எதிர்பார்க்கிறார்கள். இதற்கு ஒரு இயல்பான திறன் தேவையுள்ளது. யு.ஜி.சியில் தேர்வாகும் ஒரு திக்குவாயனின்\ உம்மணாமூஞ்சியின் \ ஸ்காட் கிறித்துவ கல்லூரியில் உள்ள ஒரு பேராசிரியர் போன்ற பதற்ற நோய் கொண்டவரின் (கட்டுப்பாடிழந்து ஒரு வகுப்பில் “குண்ண” என்றார்) நிலை என்ன? ராணுவம், காவல்துறை போன்ற துறைகளில் சேர உடற்தகுதி அவசியமாக உள்ளது போல் ஆசிரியத் துறைக்கு பொதுமக்கள் மற்றும் அறிவுஜீவிகள் பார்வையாளராக பங்கேற்கும் (அறிவார்ந்த தளத்தில்) பேச்சுத் திறன் போட்டி வைத்தால் என்ன?

வாசிப்பு, ஆய்வு மற்றும் எழுத்தை தேடலாக கொண்டவர்கள் கல்லூரி பணியில் இருந்தாலும் சமூகத்துக்கு உபரியான பங்களிப்பை செய்கிறார்கள். ஆனால் அத்தகையோர் மிகச்சிறுபான்மையே. பெரும்பாலானோர் ஊதாரித்தனமாய் கழிக்கிறார்கள் அல்லது தனிப்பட்ட நலனுக்காக வியாபாரம் செய்கிறார்கள். இது குறித்து ராஜேஸ் எனும் நண்பர் விரிவாகவே எழுதியிருக்கிறார் (அக்கடிதத்தை அடுத்து பிரசுரிக்கிறேன்). இந்த பங்களிப்பே என் அக்கறை. இது போதுமான உழைப்பை கோராத பிற பணிகளில் உள்ளவர்களுக்கும் பொருந்தும் என்றாலும், அவர்களை விமர்சிக்க மற்றும் மாற்றுவழி பரிந்துரைக்க எனக்கு போதிய அறிவு இல்லை. எனது சிறு வட்டத்துக்குள் இருந்து எட்டவே முயல்கிறேன்.

No comments: