Wednesday, October 14, 2009

"யாரது பேசுவது?"

இன்றிரவு நிலவின் கீழ் நூலில் என் முன்னுரை


இந்த ஹைக்கூக்கள் மொழியாக்கத்தின் ஆதியில் ஸ்காட்லாந்துக் கவிஞர் ஆலன் ஸ்பென்ஸ் மட்டுமே இருந்தார். பிறகு 2003-ஆண்டின் ஓர் பனி இரவும்; சில்வண்டுகள் நிலவொளி சூழ்ந்த கல்லூரி விடுதியின் இடுங்கின அறையும். கட்டுப்பாடின்றி, காலம் போவது அறியாமல், வரிசை கிரமமற்று பின்னெப்போதும் வாய்க்காத மனஒருமையுடன் ... ஸ்பென்ஸின் "இதயத்தின் பருவங்கள்" தொகுப்பிலிருந்து எனக்குப் பிடித்த 40 கவிதைகளை தமிழில் எழுதினேன். விடிகாலைதான் நிறுத்தினேன். கண் எரிந்தது. உடல் சூடு தலையில் ஆவியாகியது. ஒருக்களித்த கதவைத் திறந்து வெளிவந்தேன். வராந்தா. தரையில் தேங்கின பௌர்ணமி வெளிச்சம். கால்வைக்க கூசியது. திண்டு ஓரம் ஒரு தவிட்டு நிறக் குருவி வந்தமர்ந்து எதிரில் தோட்டத்தை கவனித்தது. என் நிழல் நீட்சி குருவி மீது கவிழ்ந்தது. குருவி அதை பொருட்படுத்தவில்லை. என் பிளாக்கில் உள்ள பூட்டியிருந்த அறைகள் சிலவற்றில் மட்டும் வியாதிஸ்தன் போல் ரேடியோ கசிந்தது. அலாரங்கள் சிணுங்கி ஓய்ந்தன. தோட்ட நடுவில் இருந்த சிறு குளக்கரையில் சென்று அமர்ந்து கால்களை ஊறப்போட்டேன். எனக்குள்ளிருந்து மற்றொரு மனம் இறங்கிக் கரைந்தது. பிறகு தலை கிறுகிறுத்தது. ஒரு சில ஹைக்கூ கவிதைகளை தமிழில் படிக்கும் விருப்பத்தில் ஆரம்பித்து ஒரு பிசாசால் இரவெல்லாம் வழி நடத்தப்பட்டிருக்கிறேன்.


அப்போது எனக்கு எழுத்தாளத் திட்டங்கள், பிரசுர நோக்கம் இல்லை. இளவெயில் மூஞ்சியில் அடிக்க தூங்கும் போது இரவை வீணடித்தக் கோபம். புத்தகத்தை கட்டில் கீழே வீசினேன்: "அங்கேயே கிட". அன்று மாலையே பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்தில் அப்புத்தகத்தை அப்பாடா என்று திருப்பி கொடுத்தேன். தமிழாக்கத்தை மீண்டும் படித்த போது அதே பிரியத்தை உணர்ந்தேன். போர்ஹேஸ் என்று கெலியாய் அழைக்கப்பட்ட நண்பர் ஆறுமுகம் சில கவிதைகளை படித்து சிலாகித்தார். இந்த புத்தகத்தின் சிறந்த மொழியாக்கப் பகுதிகளில் பல அன்றிரவு எழுதியவை. ஆனாலும் எழுத்து வாதை வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்தேன்.


நீங்கள் புழுவிடம் பேசியதுண்டா? 2006-ஆம் ஆண்டு. நெருக்கமான ஒருவர் என்னிடம் அப்படி பெசினார், ஒரு சுடுசொல்லை கூட உதிர்க்காமல், சிறிதளவு வெறுப்பு காட்டாமல். மூச்சுமுட்டல் தாங்காமல் குறும்பேசியில் ஒவ்வொரு தொடர்பு எண்களாக புரட்டினேன். என் குருநாதர் ஜெயமோகன் லைனில் வந்தார். உணர்ச்சி மேலிட்டதில் முதல் 20 நிமிடம் என்னால் பேச முடியவில்லை. கட்டுப்படுத்த முயன்றதில் அதிகம் அழுதேன். "என்ன ஆச்சு அபிலாஷ்?" திரும்பத் திரும்பக் கேட்டபடி இருந்தார். வள்ளியாற்றங்க் கரை தாண்டி தக்கலையில் அலுவலகம் நோக்கி நடந்து சென்று கொண்டிருக்க வேண்டும். "ஏதும் கவலைப்படாதீங்க சென்னையில எனக்கு நண்பர்கள் இருக்காங்க ... எதுன்னாலும் பார்த்துக்கலாம்!". அலுவலகம் சென்றதும் லேண்ட் லைனில் திரும்ப அழைத்தார். ஒரு மணி நேரம் பேசினோம். "என்னை யாரும் மதிப்பதில்லை. பீத்துண்டம் போல் நடத்துகிறார்கள்". உடனுக்குடன் அவமானப்படுவது ஒருவித தோல் வியாதி என்று அப்போது தெரியாது. ஜெயன் ஆதரவு வார்த்தைகள் தரவில்லை. மாறாக என்னை பழித்தார். "கடந்த நாலு வருடங்களில் என்ன எழுதினாய்? இந்நேரம் இலக்கிய தளத்தில் உன்னை நிறுவிக் கொண்டிருக்க வேண்டும். வீணடித்து விட்டாய். உனது இளமையில் காசையும், காமத்தையும் மட்டும் துரத்தினால் நாற்பது வயதுக்கு மேல் கடுமையான வெறுமை, இழப்புணர்வு மேலிடும். எழுத்தில் உன்னிப்பாக ஈடுபட்டால் லௌகீக வாழ்வின் அவமானங்களை பொருட்படுத்த மாட்டாய் "

" உம் "
பிறகு அவர் என்னை மனுஷ்யபுத்திரனுடன் ஒப்பிட்டது பிடிக்கவில்லை. ஒரு உடல் ரிதியான காரணம் இருந்ததாய் பட்டது. "உன் வயதில் மனுஷ்ய்புத்திரன் இலக்கியத்தில் ஒரு புயலாக நுழைந்து விட்டிருந்தார். இன்று தீபாவளி, பொங்கலுக்கு பேட்டி கொடுக்கும் அளவு வளர்ந்திருக்கிறார்". குரல் குழைந்தது. "இன்னொன்று சொல்கிறேன், ரகசியமாக வைத்துக் கொள் ..."

" உம் "

"மனுஷ்யபுத்திரன் ஒரு பயங்கர பிளேபாயாக வாழ்கிறார்"


கடைசியாய் சொன்னது பிடித்திருந்தது. எனக்கு ரகசியங்களை போற்றத் தெரியாதென்பது அப்போது தெரியாது.


" ஓ ..."


சப்புக்கொட்டினேன்: எப்படியாவது இலக்கிய உலகில் நுழைய வேண்டும். படைப்பு பழக்கம் விட்டுப் போயிருந்தது. எதை எழுத? ஆனால் அந்நொடியிலிருந்து எனக்குள் எதுவோ புகுந்தது. அவசியமற்ற எண்ணங்கள், கனவுகள், பரிதவிப்பு. புத்தக விழா வந்தது. அங்கு ஸ்டால்களை விலகலோடு மேய்ந்த போது, வயிற்றுக்குள்ளிருந்து தீ விரல் நுனிகளில் கனன்றது. சுஜாதாவின் ஒரு சிறுகதையில் மென்பொருள் இளைஞன் அடிக்கடி அலுவலக கழிப்பறைக்கு சென்று ஆடை கழற்றி வைத்துக் கொண்டு, கீழ் நிலை ஊழியப் பெண் முன் போய் கம்பீரமாய் நின்று "என் பென்சில் எங்கே ?" என்று கத்துவான். மௌனமாய் புத்தகங்களைக் கடந்து சஞ்சரித்தபடி நான் அன்று கேட்டேன் "என் புத்தகம் எங்கே?".


பூனை மயிர்கள் போல் ஸ்பென்சின் மொழியாக்கக் கவிதைகள் என்னுடனே இருந்தன. "இதயத்தின் பருவங்கள்" கூட பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்தில் எளிதாக கிடைத்தது. முதல் மொழியாக்கத்தில் விடுபட்ட கவிதைகளில் எளிதானவற்றை இரண்டு வாரங்களில் முடித்தேன். பல கவிதைகளுடன் மாதங்களாய் போராடினேன். அப்போது இரண்டு தவறுகள் செய்தேன். வாசிப்பு பரபரப்பில் ஏதாவது ஒரு வார்த்தையை தமிழாக்க தவறி விடுவேன். பிறகு படிக்கும் போதே புலனாகும். கவித்துப பாதிப்பை மறுஆக்கம் செய்யும் மிகை-ஈடுபாட்டில் மூலக் கவிதையின் கண், மூக்கை சற்றே மாற்றி ஒட்டி விடுவேன். நுட்பமாய் கவனித்தால் இத்தொகுப்பில் கூட ஸ்பென்சின் கவிதைகளில் அப்போதைய அறுவை சிகிச்சை சிதைவுகளை காண முடியும். தற்போது இக்கவிதைகளை திருத்தினால் ஆரம்ப மொழியாக்கத்தின் ஆதார குணமொன்று காணாமல் போவதாய் பட்டதால் அப்படியே விட்டு விட்டேன். பின்னாளில் குறைந்த பட்ச சுதந்திரத்துடன் வார்த்தைக்கு வார்த்தை மொழியாக்குவதே ஆரோக்கியம் என்று புரிந்தது. ஆனால் அன்றைய மொழியாக்க உத்வேகத்திற்கு இப்போதுள்ள நிதானம் ஈடல்ல. அன்று ஸ்பென்சின் வரிகள் கார்ப்பரேட் உலகின் எந்திர இறுக்கத்திலிருந்து என்னை தளர்த்தின; நகரத்தின் உக்கிரத் தனிமையில் தோள் அணைத்தது. மொழியாக்க உவகையில் அரையடி அதிக உயரத்தில் நடப்பேன். என் காதலி காயத்ரி கேட்டாள்: "ஏன் இப்போதெல்லாம் பேச்சு நடுவே மௌனமாக சிரிக்கிறாய்?"

"எழுதுகிறேன் அல்லவா!"

"இதுதான் என்றால் நீ இனிமேல் எழுத வேண்டாம்"


எனக்கு பந்தயம் என்றால் பாதி ஓட்டம் தான். மொத்தத் தொகுப்பையும் பூர்த்தி செய்ய காயத்ரியின் ஊக்கம் காரணம். பிறகு கவிதைகளை வரிசையாக அடுக்கி, திருத்தங்கள் செய்ததும் அவள்தான். அடுத்த புத்தக விழாவில் என் குருநாதரின் ஆதர்ச பதிப்பாளரிடம் சென்று மொழியாக்க கவிதைகளை பிரசுரிக்கக் கேட்டேன். "கவிதைகள் விற்காது, மேலும் நண்பர்களுடையது தவிர நான் வேறு கவிதைகள் பிரசுரிப்பதில்லை" என்றார். அத்தோடு நிறுத்தியிருக்கலாம். "தம்பி என்னை இனிமே பார்க்க வராதீங்க"

"ஏன்?"

"நீங்க தொடர்ந்து வந்தால் எனக்கு உங்கள் ஊனம் மீது இரக்கம் தோன்றி பிரசுரிக்கும் கட்டாயம் நேரும்; அதனால் தான்!". கொஞ்ச காலத்துக்கு எனக்கு எழுத்து, பதிப்பு, புத்தகங்கள் என்றாலே பீதியாகியது. நிச்சயமாய், இதற்கு வெளியுலகின் அவமானமே பரவாயில்லை. நீங்கள் பிணத்துடன் பேசியதுண்டா? ...

உயிர்மையில் எனது கவிதை ஒன்று வெளியானது. ஒரு மாலை ஸ்பென்சின் மொழியாக்கத் தொகுப்பை மனுஷ்யபுத்திரனிடம் காமித்தேன். புரட்டியபடி உதிரியாக படித்தார்.

"ஜென் தோட்டம்

என்னையும்

சேர்த்து"

கண்மூடித் திறந்தார்: "ரொம்ப அருமையான கவிதை ... இக்கவிதைகள் தமிழுக்கு அவசியம் தேவை, நிச்சயம் பிரசுரிப்போம்". அன்றிரவு நான் தூங்கவில்லை. அந்த பதில் போதுமனதாக இருந்தது. ".. என்னையும் சேர்த்து"


அடுத்த வருடம் "உயிரோசை" நிகழ்ந்த போது அதனோடு எனக்கு தொடர்பு கண்ணியானது "இதயத்தின் பருவங்கள்" தான். தொடர்ச்சியாக நவீன ஹைகூ தொடராக நூற்றுகணக்கான கவிதைகள் இன்றுவரை வெளியானதற்கு மனுஷ்யபுத்திரனின் திட்டமும், ஊக்கமும் தான் காரணம். சினிமா, அரசியல் கட்டுரைகள், புனைவுகள் அளவிற்கு தமிழில் கவிதைக்கு வாசகர்கள் இல்லை. பதிப்புத்தொழிலில் தங்க வாத்துக்களுக்குத்தான் முதலிடம் என்றும் இருக்கும். ஆனாலும் கவிதையை வறட்சியிலிருந்து காப்பாற்ற பதிப்பாளர்களிடம் இலக்கியப்பரப்பை விரிவுபடுத்தும் லட்சியவாதமும், பொறுப்புணர்வும் இருப்பது ஆரோக்கியமானது. ஆலன் ஸ்பென்ஸின் ஜென் வழியான அனுபவ உறைதல், ஜாக் கெரவக், ஆலன் கின்ஸ்பெர்க்கின் ஹைக்கூக்களின் எதிர்கவிதை சரடு, சாண்டிகோவின் துறவு நிலை பதிவுகள், பிற உதிரிக் கவிஞர்களின் பல்வேறுபட்ட தினசரி வாழ்வு சார் தருணங்கள் என இக்கவிதைகள் இதுவரை உயிரோசையின் இணைய உலகினோடு பகிர்ந்துள்ள அனுபவங்கள் முற்றிலும் புதியவை, அலாதியானவை. தமிழின் நூல் வாசகர்கள் இக்கவிதைகளுடன் நிகழ்த்த உள்ள உரையாடல், அதிலிருந்து தொடரும் தேடல் பயணம் மிக முக்கியமாக இருக்கப் போகிறது.


மொழியாக்கம் கடந்த ஒன்பது மாதங்களாய் உயிரோசையில் தொடர்ந்து வாராவாரம் எழுதும் வாய்ப்பை எனக்கு பெற்றுத் தந்தது. தூங்கா வாதையுடன் சமரசமும், நட்பும் தொடர்கிறது. பிரசுரம் மீதான வெளிநபரின் புகார்களும், இயலாமைக் கவலைகளும் இப்போது எனக்கு இல்லை. எழுத்து மேலும் பலவித ரசவாதங்ககளை என் மீது நிகழ்த்துகிறது:


தோல் ரொம்பவும் கெட்டியாகி விட்டது. "யாரது பேசுவது? கேட்கவில்லை"

No comments: