இந்திய அணி அறிவிப்பு: ஸ்ரீகாந்தின் மேலும் சில சொதப்பல்கள்ஆஸி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. திராவிட், யூசுப், ஆர்.பி சிங், கார்த்திக், அபிஷேக் நாயர் நீக்கம், யுவ்ராஜ், சேவாக் திரும்பல், வேக வீச்சாளர் சுதீப் தியாகி தேர்வு ஆகியன முழுக்க எதிர்பார்த்தபடிதான் உள்ளன. பயிற்சியாளர்கள் ரோபின் மற்றும் பிரசாத் ஆகியோரை நீக்கினது ஒரு சிறு அதிர்ச்சிதான். நீக்கலும் தேர்வும் பொதுமக்கள் மற்றும் மீடியாவை விட எதிரணியினரை கலங்கடிக்கும் படியாக இருக்க வேண்டும். இந்த விதத்தில் தான் ஸ்ரீகாந்த தலைமையிலான தேர்வுக்குழு தோற்றுப் போயுள்ளது.

ஒரே அணியை மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்க தேர்வாளர்கள் எதற்கு?

“கடந்த இரு ஆண்டுகளாக இந்த தேர்வுக்குழு ஒரே அணியைத் தான் திரும்பத் திரும்ப சிறு மாற்றங்களுடன் தேர்கிறார்கள். தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளில் புது வீரர்கள் வந்துள்ளது போல் இந்தியாவில் எந்த புதுமுகத்தை இவர்கள் அறிமுகப்படுத்தி உள்ளார்கள்?” என்று சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் போது ரவி சாஸ்திரி தேர்வாளர்களின் தயக்கத்தையும், சமயோசிதமின்மையையும் கடுமையாக விமர்சித்தார். ஸ்ரீகாந்த் தலைமை ஏற்ற போது அவருக்கு பெரிய தலைவலி ஒன்றுமில்லை. அதை அவர் விரும்புபவரும் அல்ல. தேர்வாளர்களுக்கு ஊதியம் தரப்படும் என்று இ.கி.க.வா அறிவித்த உடன் புளியம் கொம்புக்காக விலா சொறிந்து காத்திருந்த ஸ்ரீகாந்த திடீரெனப் அப்பதவியை பெற்றார். முன்னர் பல பேஜாரான முடிவுகளை, தேர்வுகளை செய்து தோனி தலைமையிலான ஒரு வெற்றிகரமான அணியை அமைத்து விட்டு வெங்குசார்க்கர் குழு கிளம்பி போன பின் சீக்கா செய்ய வேண்டியிருந்தது எல்லாம் டேபிளைத் துடைத்து “தோசை, பூரி மசாலா ...” என்று ஒப்பிப்பது தான். ஏற்கனவே வலுவான மட்டையாட்டத் துறையின் இண்டு இடுக்குகளில் விஜய், பத்ரி போன்றோரைத் திணித்தது, முழுமையான ஃபார்முக்கு திரும்பாத பாலாஜியை தேர்வு செய்தது போன்ற கால விரயங்கள் மட்டுமே அவரது இதுவரையிலான சாதனைகள். இப்போது அணியில் உள்ள இளம் நட்சத்திரங்கள் வெங்குசார்க்கர் மற்றும் அவரது முந்தைய தேர்வுக்குழுவினரின் கண்டுபிடிப்புகள்.தாம் இதே வீரர்கள் வைத்து ஜம்மென்று தேர்வாளராக காலத்தை ஓட்டி விடலாம் என்று நினைத்தார். புதிய வீரர்களை தேர்வு செய்யாத அவரது தயக்கத்துக்கு இது ஒரு காரணம். “வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அவ்வப்போது ஓய்வு கொடுத்து புது வீரர்களை அறிமுகப்படுத்தி இருந்தால் இந்தியாவின் பந்து வீச்சு இப்படி வீழ்ந்திருக்காது” என்றார் ரவி சாஸ்திரி. தரமான புதுமுகங்கள் இல்லை என்பது சப்பைக்கட்டு. புதிய திறமைகளை தேடி கண்டுபிடிக்கும் அமைப்போ அத்தகைய தீவிரமோ நம்மிடம் இல்லை என்பதே உண்மை. ராஜஸ்தான் ரோயல் அணியின் உதவிப் பயிற்சியாளர் ஸ்னேப் எனும் வெள்ளையர் தன் தனிப்பட்ட முயற்சி மற்றும் அவதானிப்பு கொண்டு கம்ரான்கான் எனும் அருமையான வேகவீச்சாளரை ஐ.பி.எல்லின் போது அறிமுகப்படுத்தினார். அவரது அதிர்ச்சி அம்சம், புதுமையான வீச்சு முறை மற்றும் அதிரடி வேகம் சில முக்கியமான ஆட்டங்களை ராஜஸ்தான் ராயல்சுக்கு வென்று தந்தது. கங்குலியை வீழ்த்தி கொல்கொத்தாவை அவர் தோற்கடித்த ஓவர் குறிப்பிடத்தக்கது. வீச்சு முறை அங்கீகரிக்கப்படாமல் கம்ரான் தற்போது இருட்டில் இருந்தாலும், இவரைப் போன்று எத்தனை ரத்தினங்களை நமது தூங்குமூஞ்சி தேர்வாளர்களும், உளுத்துப் போன அமைப்பும் கோட்டை விட்டுள்ளது? பல பருவங்கள் சிறப்பாக செயல்பட்டும் நெஹ்ரா, ஓஜ்ஹா போன்ற திறமையாளர்கள் ஐ.பி.எல்லில் ஆடின பின்னரே கவனிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது நமது கிரிக்கெட் அமைப்பின் மீது முக்கியமான கேள்விக்குறியை எழுப்பி உள்ளது.

சேலஞ்சர் தொடரை புறக்கணித்த நட்சத்திரங்கள்

வழமையாக தேசியத் தீர்வுக்கான போட்டித்தொடராக கருதப்படும் சேலஞ்சர் தொடரை புறக்கணித்து விட்டு இம்முறை பல முக்கியமான காம்பிர், ஓஜ்ஹா, ஆர்.பி சிங் உள்ளிட்ட இளம் வீரர்கள் சாம்பியன்ஸ் லீக் ஆட சென்றனர். சர்வதேச நட்சத்திரங்களுடன் இளம் வீரர்களை ஆட வைப்பதே இரானி மற்றும் சேலஞ்சர் கோப்பைகளில் நோக்கம். இந்த நோக்கம் சமீபமாய் கார்ப்பரேட்டுகளின் வணிக ஆவேசத்தில் தோற்கடிப்பட்டுள்ளது. இ.கி.க.வா. நிர்வாகிகள் எத்தனை பலவீனப்பட்டு போயுள்ளார்கள் என்றால், உடைந்து போன மூக்கைப் பற்றி புகார் சொல்ல கூட திராணி இல்லை. தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சுதீப் தியாகி சமீப செலஞ்சர் தொடரில் ஒன்றும் பட்டையை கிளப்பவில்லை. இறுதிப்போட்டியில் நுமான் ஓஜ்ஹா போன்றோரை அவுட் செய்தது அல்ல, சேவாக், சச்சின் ஜோடிக்கு வீசுவதே அவரது பரீட்சையாக இருந்திருக்க வேண்டும். சேலஞ்சர் கோப்பைத் தொடரில் இப்படியான அடிபொடிகள் மட்டுமே புளூ, கிரீன் போன்ற அணிகளுக்காக தங்களை ஒத்த குட்டி பூதங்களுடன் மோதியதால் இறுதி ஆட்டத்தில் இலக்கு வெறும் 80 ஓட்டங்களாக இருந்தது.

ஸ்ரீகாந்த குறுக்குசந்து

இருந்தாலும் இடதுகை வேகவீச்சாளர் தியாகியின் தேர்வு மகிழ்வளிக்கிறது. ஆஸ்திரேலிய நேதன் பிராக்கனை போல் வலது கையாளர்களுக்கு ரவுண்ட் தெ விக்கெட் வந்து இவர் உள்வரும் பந்துகள் வீசி ஏற்படுத்தும் நூதனமான கோணம் முறை ஒருநாள் ஆட்டத்திற்கு உகந்ததாக இருக்கும். இரானி மற்றும் சேலஞ்சர் தொடர்களில் தியாகியை தொடர்ந்து கவனித்தேன். அவரால் தொடர்ச்சியாக கட்டுப்பாடுடன் வீச முடியவில்லை. தியாகி மிகத் திறமையானவர் தான். ஆனால் அவர் இப்போது சர்வதேச தரத்துக்கு தயாரில்லை. பந்து வீச்சை வலுப்படுத்த ஏதாவது நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்ற நெருக்கடிக்கு தேர்வாளர்கள் கண்ட குறுக்குவழி தான் தியாகி; கடந்த இரு தொடர்களில் மட்டையாளர்களை வேகப்பந்து வீச்சிலிருந்து காப்பாற்ற எப்படி திராவிட் குறுக்குவழியாக இருந்தாரோ அப்படி இப்படியான குறுக்குவழி சமாளிப்புக்கு பெயர் போன சீக்காவின் பெயரை திருவல்லிக்கேணியின் குறுக்குசந்துகளில் ஒன்றிற்கு சூட்ட வேண்டும் என்று கலைஞர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

தவற விட்ட கேரம் பந்துரவிச்சந்திரன் அஷ்வினுக்கு இந்த ஆஸி தொடரில் வாய்ப்பு அளித்திருக்க வேண்டும். அவர் தமிழர் என்பதால் அல்ல. அவர் புதிதாக தன் வீச்சில் சேர்த்துள்ள கேரம் பந்துக்காக. இலங்கையின் அஜந்தா மெண்டிசினுடையது போன்றே அஷ்வினின் கேரம் பந்தும் லெக்-மிடில் குச்சி லைனில் விழுந்து எகிறுகிறது. அஷ்வினின் உள்ளூர் சாதனைகள் ஒன்றும் பிரமாதமில்லை தான். 20 ஆட்டங்களில் 80 விக்கெட்டுகள். பந்து வீச்சு சராசரி 27.46. ஓரளவு மட்டையாடுவார். ஒரு சதம் அடித்திருக்கிறார். சராசரி 31.68. உயரமான அஷ்வின் இந்த வருட சேலஞ்சர் ஆட்டங்களில் தனது துல்லியமான பந்து வீச்சால் தோனி உட்பட அனைத்து மட்டையாளர்களையும் திணறடித்தார். ஹர்பஜன் அளவுக்கு சுழல், லூப், ஃபிளைட் போன்ற செவ்வியல் அம்சங்கள் அஷ்வினுக்கு இல்லை. இந்த காரணத்தினாலே அவர் பஜ்ஜிக்கு சிறந்த ஜோடியாக இருப்பார். ஒரு முனையில் அஷ்வின் ஓட்டங்களை வறள வைத்தால், சர்தாரால் மறு முனைவில் தாக்க முடியும். இருவரும் முற்றிலும் மாறான வீச்சு முறை மற்றும் அணுகுமுறை கொண்டவர்கள் என்பதால் மட்டையாளர்கள் ஒரே போன்றதாக பழகி விடும்படி இந்த ஜோடி அமையாது. இன்று வலுவான பந்து வீச்சு கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா, இலங்கை, பாக்கிஸ்தான் போன்ற அணிகள் சுழல் ஜோடிகளை முக்கிய ஆயுதமாக கொண்டுள்ளன. பாக்கிஸ்தானின் அஃப்ரிடியையும் அவ்வாறே கருதுவோமானால், இந்த ஜோடிகள் முழுநேர சுழலர்கள் தாம். மெண்டிஸைப் போன்றே அஷ்வினால் அவரை முதன்முறை சந்திக்கும் ஆஸி மட்டையாளர்களை தனது புதிர் காரம் பந்தால் கதிகலங்கடிக்க முடியும். இந்த ஒரு சின்ன ஆச்சரியத்தை ஆவது நாம் வருகை தரும் ஆஸி அணிக்கு அளித்திருக்கலாம். இறுதியாக கழற்றி விடப்பட்ட ஆன்மாக்கள் பற்றி சில வார்த்தைகள்.

எரப்பள்ளி ப்ரசன்னாவும், மஞ்சுரேக்கரும் சொல்வது போல், தாமதமாக என்றாலும் டிராவிட்டின் வெளியேற்றம் அவசியமே. ஒன்றாம் வகுப்பு சிறிசுகள் முட்டை வாங்கினதற்கு அங்கு ஐந்தாம் வகுப்பு பையனை அமர வைக்க முடியாது. ஆர்.பி சிங் தன் ஃபார்மை மீட்டு, எதிரணி மட்டையாளரை பார்த்து பளிச்சென்று மார்க்கமாய் பல்தெரிய சிரிப்பதை நிறுத்த வேண்டும். அணியில் இடம் பெற்றதும் செயற்கைப் பல் பொருத்திய யூசுப் ஒன்றை செய்ய விட்டு விட்டார். அவர் தன் தடுப்பாட்டத்தை மெருகேற்ற வேண்டும் அல்லது மென்மையாக பந்தை தட்டி / உதிர்த்து விட்டு ஓடும் தந்திரத்தை பழக வேண்டும். இதே போன்ற பலவீனத்திலிருந்து முன்பு ஆஸ்திரேலிய ஆண்டுரூ சைமண்ட்ஸ் மீண்டு வந்து டெஸ்டு அணியிலும் இடம் பிடித்த வரலாறு யூசுப்பை உசுப்பேற்ற வேண்டும்.

இத்தனைக்கு பிறகும் நாம் ஆஸி தொடரை ஒருவேளை வென்று விட்டால் ... நான் என் கூற்றுகளை திரும்பப் பெற போவதில்லை.

Comments