அடுத்த வாரிசு: அனிருத்தா ஸ்ரீகாந்த
பிள்ளைகளின் நலத்துக்காக தாய்தந்தையர் பதினாறு அடி பாய்வது பாராட்டத்தக்கதுதான். இப்படியாக உள்ளூர் போட்டிகளில் 25 சராசரியில் 660 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்தாலும் தற்போது நடந்து முடிந்த சேலஞ்சர் தொடர் போட்டிகளில் கிரீன் அணிக்கு தேர்வு செய்யப்பட்ட இந்திய கிரிக்கெட் தேர்வு வாரியத் தலைவரின் மகன் ஸ்ரீகாந்த் அனிருத்தா ஒரே எவ்வு எவ்வி பதினேழாவது படியில் நிற்கிறார். 2007 சேலஞ்சர் தொடரின் போதும் இவர் தேர்வு செய்யப்பட்டு மொத்தம் 13 ஓட்டங்கள் எடுத்தார். சுயநலத்தை கூச்சமின்றி வெளிப்படுத்த நிறைய மனத்தெம்பு வேண்டும். அப்பாக்களுக்கு இது இயல்பாகவே ஏற்படுகிறது. ஸ்ரீகாந்துக்கு சொல்லவே வேண்டாம்.ரோஹன் கவாஸ்கர் விசயத்தில் சன்னி மீது அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனாலும் ரோஹனுக்கு போதுமான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்றே கருதுகிறேன்;கவாஸ்கர் சீக்கா அளவுக்கு அதிரடிக்காரர் அல்ல. போன ஐ.பி.எல்லின் போது அசரூதீன் தனது பையன் அஷாதுதீனை கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியில் போஷிக்கும் படி கங்குலிடம் ஒப்படைத்தார்.இத்தனைக்கும் அஷாதுதீன் சில 2 நாள் லீக் டிவிஷன் போட்டிகளில் மட்டுமே ஆடியிருந்தார். அவருடன் தேர்வு முகாமில் இருந்த மிச்ச 40 ஆட்டக்காரர்களில் பலர் தத்தம் மாநில ரஞ்சி அணிகளில் சாதித்து உள்ளங்கை காய்த்தவர்கள். ஆனால் புச்சன்னன் புயலில் கங்குலியோடு அஷாதுதீனும் அவரும் காணாமல் போனார்.நான் சென்னை கிறித்துவக் கல்லூரியில் படிக்கும் போது பயிற்சியாளர் மாணவர்களுக்கான வலைப்பயிற்சியின் போது தனது ஸ்கூல் செல்லும் மகனுக்கு சிறப்புப் பயிற்சி அளித்தார். 16-வயதுக்கு கீழான கிரிக்கெட் போட்டி ஒன்றின் போது அவரது மகனுக்காக மட்டும், கல்லூரி விதிகளை மீறி, சில மாலை வேளைகளில் சிறப்பு வலைப்பயிற்சி ஒன்றை அவர் ஒருங்கிணைத்து தீவிர பயிற்சி அளித்தார். இதில் பந்து வசி வழக்கமான பந்து வீச்சாளர்கள் தளர்ந்ததால், ஓட்டபந்தய வீரர்களைக் கூட வீச பயன்படுத்தினார். இந்த அ.து.பி கல்லூரி அணியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஏனென்றால் அணியின் ஆட்டக்காரகளுக்கே தினசரி பயிற்சி வாய்ப்பு கிடையாது. ஆனால் மரணத்துக்கு அடுத்த படியாய் கிரிக்கெட் தான் பெரும் சமத்துவ ஆயுதம்: பொம்மை வாரிசுககள் கிரிக்கெட்டில் நிலைப்பதில்லை. அனிருத்தா நிலைப்பாரா?

அனிருத்தா பார்க்க இன்சமாமின் குட்டித் தம்பி போல் தொ¢கிறார். அசட்டையான உடல் மொழி, ஜெயசூர்யாவைப் போல மேனரிசம், ரெண்டு வாரப் பட்டினியையும் தாங்கும் தேகம், முண்டைக் கண், கெவின் பீட்டர்சன் பாணியில் ஸ்கங்க் ஹேர்கலர், அதற்குக் கீழ் சுறுசுறுப்பான மூளை. மட்டையாட்டத்தில் தரம் என்றால் பந்து எங்கே விழப்போகிறது என்பதை சில நொடிகளுக்கு முன் கணித்து தயாராகி விடுவது தான். சிலருக்கு இதோடு அபாரமான மட்டை வேகமும் அமைந்து விடுகிறது. உதாரணம், சேவாக், தில்ஷான். இந்தியாவின் உள்ளூர் வீரர்களில் ரோஹித் ஷர்மா, விராத் கோலி, சன்னி சோஹல், காடிவாலி ஆகியோரை சொல்லலாம். இத்தகைய பிரத்யேகமானவர்களின் பட்டியலில் அனிருத்தா இல்லை. அவரது பண்புத்தரம் வேறு.

இந்த தொடரில் ரெய்னாவின் கிரீன் அணி ஐந்து விக்கெட்டுகள் இழந்து சொதப்பிக் கொண்டிருந்த போது களமிறங்கியவர் சற்றும் பதற்றம் காட்டாமல் நேர்மறையாக ஆடினார். அலுங்காமல் ஓடினார். பந்துகளை எளிதாக கணித்து, மதிநுட்பத்துடன் காலியிடங்களுக்கு அடித்தார். இப்படி நிலைமையை சுலபமாக கணித்து அலட்டாமல் ஆடுவது அவரது முக்கியமான இயல்பு. அப்புறம் அவரது ஷாட்களில் உள்ள மூர்க்கமும், சம்பிராதயமற்ற பாணியும். இரண்டாவது போட்டியில் தோனியின் புளூ அணிக்கு எதிராக ஆரம்ப வீரராக களமிறங்கின அனிருத்தா குறைந்த பந்துகளில் அரைசதமடித்தார். அபிஷேக், மாலிக் ஆகியோரின் மிதவேகப் பந்துகளை லாங் ஆஃபுக்கும், நேராகவும் அவர் அடித்த வேகத்தில் ஒரு முறை ஹர்பஜனின் பக்கமாகவே அவர் அசையும் முன்னே பந்து அதிவேகத்தில் கடந்தது. கோட்டை விட்ட பஜ்ஜி பந்து தனக்கு தெரியவே இல்லை என்று சைகை செய்தார். கடுமையாகவும், மூர்க்கமாகவும் அடிக்கப்படும் ஷாட்கள் உளவியல் ரீதியான பாதிப்பை எதிரணியினரிடம் ஏற்படுத்துவதை கவனித்திருக்கிறேன். இரண்டு முறை தொடர்ச்சியாக அபிஷேக்கை அவர் லேட் கட் செய்த போது பார்த்த எதிரணி தலைவர் தோனி முகத்தில் தெரிந்த கவலைக் களை அனிருத்தாவை பொறுத்தமட்டில் உற்சாகமான அறிகுறி. சம்பிரதாயமற்ற மட்டையாளர்களுக்கு பந்து வீசுவதும், களம் அமைப்பதும் சிரமமானது. பந்து வீச்சாளனின் ரிதமை எளிதில் குலைக்க இவர்களால் முடியும். இத்தகையோர் அணிக்கு ஒருவர் தேவை. அனிருத்தாவுடன் ஒப்பிடுகையில் தற்போதைய இந்திய அணி அதிரடியாளர் யூசுஃப் பதான் ஒற்றை பரிமாண மட்டையாளர். சூழமைவுக்கு ஏற்றபடி ஆட்டத்தை தகவமைக்கவோ, ஒற்றை ஓட்டங்கள் எடுக்கவோ அவர் இன்னும் முதிரவில்லை. இவ்வகையில் தென்னாப்பிரிக்காவின் பவுச்சர், இங்கிலாந்தின் காலிங்வுட் ஆகியோரின் பள்ளியை சேர்ந்தவர் அனிருத்தா. அணியில் 1, 3, 5, 7 என்று எந்த இடத்திலும் ஆட முடிகிற மிதப்பு ஆட்டக்காரர் இவர். அனிருத்தாவின் மட்டையாட்டத்தின் மூர்க்கம் பாக்கிஸ்தான் பாணி.

மாநில ஆட்டங்களில் நிறைய ஓட்டங்கள் சேர்த்து ஒரு நல்ல பருவம் அமைந்தால் அப்பாவின் பதவிக் காலம் முடியும் முன் அனிருத்தா நிச்சயம் இந்திய அணியில் நுழைந்து விடுவார். மேலே குறிப்பிட்ட பிரத்யேகமான பாணிக்காகவே அவருக்கு வாய்ப்பளிப்பதிலும் தவறில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ்சிலும் அவருக்கு ஒளிமய எதிர்காலம் உண்டு. என் கதை வேறு. எந்த கட்டத்திலும் என் அப்பா என்னை பாராட்டினதோ ஊக்குவித்ததோ இல்லை. கல்லூரி சேர்க்கையின் போது குடிபோதையில் என் பேராசிரியரை கெட்டவார்த்தையில் திட்டினதும் அல்லாமல், வளர்ந்த பையனுக்கு நானெதற்கு கண்ட சேர்க்கைப் படிவங்களில் எல்லாம் கையொப்பம் இடவேண்டும் என்று உளறியபடி விசிறி எறிந்தார். என் எழுத்தின் மோசமான விமர்சகர். "தயவு செஞ்சு எழுதாதே!" என்றார். இதற்கு நேர் எதிர் கோடியில் இருக்கும் சீக்கா நல்லவர் தான். அதனால் ஒரு மாற்றாக அவரை புகழ்ந்து சில வார்த்தைகளை இங்கு சொல்லலாம் என்று ஆரம்பிக்கிறேன் ...

ஆனாலும் எங்கோ நெருடுகிறது.

Comments

Anonymous said…
நல்லா எழுதுறீங்க. ஆரம்பத்திலிருந்து முடிவு வரை எக்ஸ்பிரஸ் வேகம்.
மிக்க நன்றி. உங்கள் வார்த்தைகள் உற்சாகம் அளிக்கின்றன.