Wednesday, October 14, 2009

கலைக்கல்லூரிக்குள் ஒரு உத்தராபுர சுவர்


சென்னையின் பிரதான (முண்டாசு, தாடி) கல்லூரியில் ஒரு உத்தராபுர மதிற்சுவர் உள்ளது, சற்று வித்தியாசமான வடிவில். நான் இதைக் கண்டு மலைத்தது ஒரு மழை நாளில் விரிவுரையாள நண்பனைக் காண சென்ற போது. முதுகில் கனத்த பையுடன் வகுப்பிலிருந்து வகுப்புக்கு, அங்கிருந்து காண்டீனுக்கு, பிறகு கழிப்பறைக்கு என சங்கிலித் தொடராக தாவிக் கொண்டிருந்தவனை கைப்பற்றி உரையாடிய போது அவன் முதுகுப் பையை குறிப்பிட்டேன். பதில் சொல்லாமல் "ஓ அதுவா" என்று மாடியேறி அழைத்துப் போய் காட்டினான். அவன் சார்ந்த துறையின் அறைக் கதவில் இரண்டு பூட்டுகள் தொங்கின. வெங்கல மற்றும் எவர் சில்வர் பூட்டுகள். "டிப்பார்ட்மெண்டுக்கு ரெண்டு பூட்டு", சுட்டிக் காட்டி நிதானமாக சொன்னான். "சீனியர்ஸ் கிட்ட ரெண்டு சாவியும் இருக்கும். எங்களைப் போல் மானேஜ்மெண்ட் ஸ்டாஃபுக்கு ஒன்றுதான். சிலருக்கு எந்த சாவியும் கிடையாது. சீனியர்ஸ் எப்போது வெளியே போனாலும் அறையை பூட்டிடுவாங்க. மானேஜ்மெண்ட் ஸ்டாஃபும் வேறுவழியின்றி பையை எடுத்துக் கொண்டு கிளம்பீடுவோம். "
"ஏன்?"
"ஒருவேளை சீனியர்ஸ் திரும்ப வந்து திறக்காட்டி எங்க பை பொருட்கள் எல்லாம் உள்ளாரே மாட்டி விடும். போன மாதம் என்னோட சாப்பாட்டு டப்பா உள்ளே மாட்டீடுச்சு. அன்னிக்கு நான் மதியம் சாப்புடல. மறு நாள் காலையில தான் டப்பாவை எடுத்தேன். பருப்புக்கூட்டு ஊசிப் போய் ஒரே கப்பு. டப்பாவை தூக்கிப் ப்டும்படியாக ஆகிவிட்டது. அத்தோட உஷாராயிட்டேன். அதனால் அறை எப்போது டிப்பார்ட்மெண்ட் ரூமிலிருந்து வெளியேறினாலும் பையோடு கிளம்பி விடுவேன்"

பூட்டுத் தொங்கின கதவுக்கு எதிர்ப்புறமாக ஊட்டி ரோஜா இதழடுக்கு போல் கிராப் செய்த பெண் அமர்ந்திருந்தார். எங்களைப் பார்த்து புன்னகைத்தார். கண்கள் கலங்கி சிவப்பேறி தெரிந்தன. மற்றொரு தற்காலிக விரிவுரையாளர். பெயர் பிருந்தா. உள்ளிருந்து ராக் இசை ரிங் டோன் நூற்றாண்டுத் தனிமையில் அலறியது. "உங்க செல்போனா?" குனித்தபடி தலையை ஆட்டினார். நீர்க்குமிழி போல் பளபளக்கும், உடைந்து வழியக் கூடிய கண்கள். அவரது தோள்பை அவ்வறைக்குள். வீட்டுக்குள் அவரது இளங்குழந்தை தூங்குகிறது. வீட்டுச்சாவி தோள்பைக்குள். வகுப்புக்கு சென்றுள்ள சாவியுடைய சீனியர் பேராசிரியர் திரும்ப வந்து திறந்து விடுவார் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார். நாங்கள் அங்கிருந்து கிளம்பிட, பிருந்தா எழுந்து போய் பூட்டுகளை ஒருமுறை இழுத்துப் பார்த்தார்.

இரட்டைப்பூட்டின் பின்னணியை நண்பர் விளக்கினார். ஆரம்பத்தில் ஒரே பூட்டுதான். அனைத்து விரிவுரையாளர், பேராசிரியர், ரீடர்களுக்கும் ஆளுக்கு ஒரு சாவி. ஆளாளுக்கு பூட்டித் திறந்து ஒரு கட்டுப்பாடு இன்றி போய் விட்டது என்று சீனியர் பேராசிரியர்கள் புகார் செய்ய ஆரம்பித்தார்கள். முன்னொரு காலத்தில் முன்னூறு ரூபாய் சம்பளத்தில் இந்த பேராசிரியர்கள் ஜூனியர்களாக இருந்த போது தங்களது சீனியர்களால் ஒடுக்கி ஆளப்படிருக்கிறார்கள். இந்த உண்மைகள் எல்லாம் தெரியாத தற்போதைய மேலாண்மை தற்காலிக விரிவுரையாளர்கள் சீனியர்களுக்கு அடங்காமல் ஆட்டம் போடுகிறார்கள். சீனியர் என்றால் மரியாதை வேண்டாமா? ஆப்பு தயாரானது.

ஒவ்வொரு நிறுவனமும் ஒரு நூதன அதிகார படிநிலையை நிலுவையில் கொண்டிருக்கும். தனியார் நிறுவனங்களில் திறமை,அரசியல் அதிகாரம் பொறுத்து கொலு அடுக்கப்படும். இந்த படிநிலை அமைப்புக்கு அங்கு எந்த சவாலும் இல்லை. ஆனால் கல்லூரிக்குள் இந்த கொலு அமைப்பு ஒரு மைக்ரோஸ்கோப் நுண்ணியிர் காட்சி போல் சஞ்சலம் கொண்டபடி இருக்கும். காரணம் மூப்பு அடிப்படையில் மட்டுமே இது அமைவதே. அரைகிராம் மூளை எடை குறைவானவர்களே பெரிதும் கல்லூரி ஆசிரியர்களாக உள்ளதனால் தனியார் நிறுவனங்களின் தீவிர திறமைப் போட்டி கல்லூரியில் சாத்தியமில்லை. விளைவாக பணி மூப்பு, அபத்தமும் போலியுமான ஆய்வு செய்து பெறும் முனைவர் பட்டங்கள் கொண்டு அந்தஸ்தை காப்பாற்றும் அவஸ்தை கொண்டவர்கள் கல்லூரி வித்வான்கள். இயல்பாகவே, வலுவற்ற இந்த அந்தஸ்து இழுபறி மட்டமான அரசியலுக்கு இட்டுச்செல்லும். கல்லூரிப் பிரதேசத்தில் காணப்படும் முக்கியமான தொற்று வியாதி புறம்பேசுதல். ஓயாமல் வம்பு மெல்லும் ஆசிரியர்களின் வாயிலிருந்து எளிதில் பிறருக்கு தங்கள் உடலின் வாய்ப்புள்ள அனைத்து திறப்புகள் வழியும் இது எளிதில் பரவுவதாக தெரிய வருகிறது. கல்லூரி சூழலில் இந்நோய்க்கான தடுப்பாற்றல் மிகச்சிலரிடம் மட்டுமே உள்ளது. இந்நோய்க்கான முக்கிய காரணமும், அறிகுறியும் படிநிலைக்கான அளவுகோல் பற்றின குழப்பம் மற்றும் நாற்காலியில் பின்புறத்தை தேய்த்தபடி நெளியும் ஒருவித பதற்றம்.

பூட்டுக்கான அதிகாரத்தில் இருந்து ஒடுக்குமுறை ஆரம்பித்தது. ஜூனியர் சீனியர் அனைவரிடமும் சாவிகள் சிதறியிருந்ததால், புதுப் பூட்டு போட முடிவு செய்தனர். இரண்டாவது பூட்டின் சாவி சீனியர் நிரந்தர பேராசிரியர்களுக்கு மட்டும் வழங்கப்படும். நண்பரின் துறைத்தலைவர் (பிரக்ஞை அளவில்) யாருக்கும் தீங்கு நினையாதவர். ஆனால் சீனியர்கள் தந்த நெருக்கடியால் ரெட்டைப் பூட்டு திட்டத்துக்கு சம்மதித்தார். இப்படி ஜூனியர் மேலாண்மை ஆசிரியர்கள் சாவி வடிவில் சீனியர்களின் கைப்பிடிக்குள் வந்தனர்.

இத்தனையையும் என் நண்பர் மூன்றாவது நபருக்கு நடந்தது போல் தர்மாவேசமின்றி சாதாரணமாக சொன்னார். இதுகூட ஒரு கல்லூரி ஆசிரியத்தனமாக இருக்கலாம். சின்னதாக அச்சம் ஏற்பட்டது. அப்போது என்னை ஆசுவாசிப்பது போல் அவன் ஆவேசப்பட்டான். கல்லூரி நூலகத்தில் அவன் ஒடுக்கப்பட்டதை பற்றி பேசியபோது. கல்லூரிக்குள் நூலகம் செயல்பட்ட விசயம் ரொம்ப காலமாக அவனுக்கு தெரியாது. ஒரு நாள் அது நடந்தது. பாடபுத்தகம் தவிர பிற புத்தகங்களை தேடிப்படிக்கும் ‘தலைதிரிந்த’ மாணவன் ஒருவன் “கவுண்டு ஆஃப் மாண்டி கிறிஸ்டோ” நாவலில் கதைத்தலைவன் எட்மண்ட் தாந்தே தீவுச்சிறையில் இருந்து எப்படி தப்புவான் என்று கேட்டு என் நண்பனை நச்சரித்திருக்கிறான். “நீயே படித்து தெரிந்து கொள்ள வேண்டியது தானே” என்றதற்கு அவன் தான் நூலகத்தில் இருந்து எடுத்த நாவலைக் காட்டியிருக்கிறான். பழுப்பேறிய அந்த நூலின் முன் அட்டையும் பின் அட்டையும் நன்றாக இருந்தன. ஆனால் புரட்டிப் பார்த்த போது நாவலின் பிற்பாதியைக் காணவில்லை. நம்ப முடியாமல் நண்பன் இருட்டேறிய அந்த நூலகத்திற்கே சென்று பார்த்தான். திருவல்லிக்கேணி நடைபாதை கடைகளில் பொறுக்கின பழைய நூல்களை தாறுமாறாக அடுக்கியிருந்தார்கள். 100 புத்தகங்கள் கூட தேறாது. நண்பன் தன் கல்லூரியின் நிலைக்கு இரங்கி தன் சேமிப்பில் உள்ள புத்தகங்கள் சிலவற்றை நூலகத்துக்கு நன்கொடை நல்கும் நல்லெண்ணத்தில் நூலகரை நெருங்கினான். முதலில், அங்கத்தினராக நூலக அட்டைக்கான விண்ணப்பத்தை நிரப்பி அளித்துக் காத்திருந்தான். அதை பார்த்து விட்டு புத்தகம் பெற நின்றிருந்த பல மாணவர்கள் முன்னிலையில் நூலகர் அக்கேள்வியை கேட்டார்: "நீங்க மேனேஜ்மெண்ட் ஸ்டாஃபா?"
"ஆமா; அத்ற்கு?"
"உங்களுக்கு நூலக உறுப்பினர் அட்டை தர மாட்டோம்"

நண்பனுக்கு மாணவர் முன்னிலையில் அசிங்கமாகி இருக்க வேண்டும். ஆனால் மானஸ்தனும், அறிவுஜீவியுமான அவன் அதை என்னிடம் குறிப்பிடவில்லை.கல்வி நலம் சார்ந்த கேள்விகளே அவனை அதிகம் சங்கடப்படுத்தியதாக சொன்னான். " ஆசியருக்கு புத்தகம் தராவிட்டால் அவன் படித்து எப்படி மாணவனுக்கு கல்வி புகட்ட முடியும்?". தொடர்ந்தான். "அப்புறம் எனக்கு கீழுள்ள மாணவனுக்கு புத்தகம் வழங்குவீர்கள், எனக்கு தரமாட்டீர்களா? நான் மிகவும் தனிமைப்பட்ட நாள் அது. எனக்கு இங்கு எந்த அடையாளமும் இல்லை". எந்தவொரு பாதிப்பையும் காட்டாது கண்ணாடியை சரியாக்கி தலையை வானம் பார்க்கும் காட்டு விலங்கு போல் மேலும் நிமிர்த்தி கொண்டான். கீழ் உதடு மட்டும் துடித்தது.

தனியார் நிறுவனங்களில் கிழ்நிலை ஊழியர்களின் தலை மேல் தொங்கும் கத்திதான் மேலாண்மையின் அதிகாரத்திற்கான ஆதாரம். இந்த பதற்றம் தான் அவர்களை நேரங்காலமின்றி சுறுசுறுப்பாக இயங்க வைக்கிறது. தொடர்ந்து குறைகளை சுட்டிக்காட்டி வேலை பற்றின நிரந்தரமின்மையை ஏற்படுத்தி தனியார் மேலாண்மை ஊழியர்களை தங்கள் நிறுவனத்தில் இருந்து அந்நியப்படுத்துகிறது. உழைப்பு மட்டுமே அடையாளம்; உழைப்பவனுக்கு அடையாளம் இல்லை. இந்த அடையாளமற்ற மேலோட்ட இருப்பே ஊழியர்களை கட்டுப்படுத்தும் தூண்டில் முள் என தனியார் மேலாண்மை கருதுகிறது. பிரான்ஸ் நாட்டின் அரசுக்கு ஓரளவு பங்குள்ள தனியார் டெலிகாம்ஸ் நிறுவனத்தில் கடந்த 18 மாதங்களில் மட்டும் 23 ஊழியர்கள் அலுவலக வதை காரணமாய் தறகொலை புரிந்துள்ளனர். இந்த மாதம் 12-ஆம் தேதி ஒரு 32 வயது பெண் எட்டாவது மாடி ஜன்னலில் இருந்து குதித்து செத்துள்ளாள். மரணத்துக்கு முன்னான மாதத்தில் அவள் எதிர்கொண்ட ஏகப்பட்ட பணி மாற்றங்கள் தான் தற்கொலைக்கு காரணம். கவனியுங்கள், பிடிக்காத ஒருவரை மேலாண்மை நேரடியாக துன்புறுத்துவதில்லை. எந்தவொரு பொறுப்பிலும் தன்னை அடையாளப்படுத்தி விடாத படி பல்வேறு உபயோகமற்ற பொறுப்புகளுக்கு தொடர்ந்து மாற்றி பந்தாடுவதன் மூலம் கடுமையான மனவியல் வதையை ஊழியர்களுக்கு மேலாண்மையால் அளிக்க முடியும். சீன டெலிகாம் நிறுவனத்தில் இதுவே நடந்தது. சரி, அந்த பெண் பண்ணின பாவம் என்ன? நிறுவனத்தின் மனிதவள துறை அதிகாரி கூறுகிறார்: "அந்த பெண் இந்த வருடம் மட்டும் 63 விடுப்புகள் எடுத்துள்ளார். நாங்கள் வேறென்ன செய்ய முடியும்?". அந்த பெண் குதித்து அடுத்த நாள் அதே காரணங்களால் ஒரு ஆண் ஊழியர் பிற ஊழியர் முன்னிலையில் தன்னைத் தானே குத்திக் கொண்டு தற்கொலை செய்தார். நண்பனின் தனியார் கல்லூரியில், பெரும்பாலான கல்லூரிகளில் போல, நிரந்தர--தற்காலிக ஆசிரியர்கள் என்ற அற்பமான பிளவை ஏற்படுத்தி, தற்காலிக ஆசிரியர்கள் அந்நியப்படுத்தப்படுகிறார்கள். இந்த அந்நியப்படுத்தல் வழி அமைக்கப்படும் அதிகாரப் படிநிலை கொண்டு திரிசங்கு சொர்க்கத்தில் காலாறுகிறார்கள் சில மூத்த பேராசிரியர்கள்.

கான்டீன் ஜன்னல் வழி அழைப்புக் குரல். முன்பு கதவுக்கு எதிரே காத்திருந்த பிருந்தா ஜன்னலுக்கு வெளியில் இப்போது நின்றிருந்தார். மூச்சு வாங்க கேட்டார்: "புரொபசர் மோகன்தாஸை பாத்தீங்களா"
நண்பன் இல்லை என்று தலையாட்டினான்.
"ஷெர்லி மேடம்?"
"வகுப்பில் இருக்கலாம்"
"எல்லாம் இடமும் தேடிப்பார்த்தாச்சு. ஒரு மணிநேரமா அலையுறேன் சார். டிபார்ட்மண்டுக்குள்ளாடி என் பேக், வீட்டு சாவி, வண்டி சாவி எல்லாம் இருக்கே. நான் எங்கே போவேன்?" பிருந்தாவின் நீண்ட கழுத்தில் குரல் வளை ஏறி இறங்கியது. "வீட்டுக்குள்ளாடி என் பாப்பா இப்போது அழுதுகிட்டு இருக்குமே"

நாங்கள் மேலும் ஒரு சுற்று சாவிக்காக திரிந்தோம். அயராமல் காலை எட்ட வைத்து குதித்து நடந்து பிருந்தா எங்களை ஏறத்தாழ ஓட விட்டார். வகுப்புகள், நூலகம் என்று மோகன் தாஸ், ஷெர்லிக்காக துழாவி, பின் ஒரு திடீர் யோசனையில் வாகனங்கள் நிறுத்துமிடத்துக்கு விரைந்தோம். அங்கு கிளம்பும் தருவாயில் இருந்த துறை சீனியரிடம் இருந்து சாவியை தொழுது வாங்கின பிருந்தா திடீரென கடும் சோர்வில் தடுமாறினார். அங்கு நின்றிருந்த காரில் சாய்ந்து சுதாரித்தார். டிபார்ட்மெண்ட் சென்று தன் உடைமைகளை எடுக்க அவர் அவசரம் காட்டாமல் இருந்தது வியப்பளித்தது. வெளிறிப் போன முகத்தை கைக்குட்டையால் நிதானமாக அழுந்தத் துடைத்தார். துடைத்தபடியே எங்களுக்கு நன்றி சொன்னார். நாங்கள் திரும்பி நடந்த போது அவர் அங்கேயே நின்றிருந்தார். சற்று நேரம் கடந்து நான் திரும்பி பார்த்த போது நகராது கைக்குட்டையால் கண்களை மறைத்து நின்றிருந்தார்.

கல்லூரியில் அசுத்தமான, சுத்தமான இரு கழிப்பறைகள் இருந்தன. சுத்தமான கழிப்பறையில் மட்டுமே மறைவிடம் அலம்ப தண்ணீர் கிடைத்தது. நான் வெளியே காத்திருக்க, நண்பன் ஐரோப்பிய மாதிரி கழிப்பறைக்கு சென்றான். தன் முட்டும் மூத்திரத்தை அடக்கும் அவசரத்தில் கதவை தாழிட முயன்று கொண்டிருந்தான். கதவின் கொண்டி விழாமல் மக்கர் பண்ணியது. அப்போது வாளியுடன் ஒருவர் கதவை தொடர்ந்து முட்டினார்: " சார் நீங்க பெர்ம்னென்ட் ஸ்டாஃபா? மேனேஜ்மெண்ட் ஸ்டாஃபா?"
நண்பன் உள்ளிருந்து சொன்னான்: "பெர்மெனண்ட் ஸ்டாஃப்".

No comments: