Wednesday, October 14, 2009

ஹெமிங்வேயும் உயிரோசையும்

காக்னிடிவ் பொயடிக்ஸ் காக்னிடிவ் மனவியல் மற்றும் மொழியியலின் கருத்தாக்கங்களைப் பயன்படுத்தி பிரதியை நுணுக்கமாக ஆராயும் ஒரு விமர்சன முறை. ஒரு இலக்கியப் படைப்பில் தோன்றும் பாத்திரங்களை மைய உருவம், பின்புலம் என அடையாளம் கண்டு அணுகுவது இவ்விமர்சனத்தின் ஒரு குறிப்பிட்ட உத்தி. பொதுவாக முப்பரிமாணத்தில் நாம் பார்க்கும் ஒவ்வொரு பொருளுக்கும் பினபுலம் உண்டு. பின்புலம் இன்றி எதையும் நம்மால் தெளிவாகக் காண இயலாது. இந்தப் பத்தியின் எழுத்துக்களைப் பார்க்கக் கணினித் திரையின் வெள்ளைப் பின்புலம் அவசியம். பின்புலத்துக்கும் மையப்பொருளுக்குமான முரண்பாடு நீங்கள் அவற்றைப் பார்த்தறிய ரொம்ப அவசியம். உதாரணமாய், ‘உயிரே ...’ பாடலில் மனிஷா கொய்ராலா குலுங்கக் குலுங்க ஓடி வருவது புலப்பட கோட்டை மதில்கள் மற்றும் மணல் தரை நிலைத்துத் தெரிய வேண்டும். அதாவது அசைவு × நிலைப்பு என்ற முரண் எதிரிடைகள். மனிஷாவுடன் கோட்டை மதிலும் தரையும் குலுங்கினால் உங்களுக்கு கிறுகிறுவென்று இருக்கும். இவ்வாறு மைய உரு × பின்புலம் என்ற அடிப்படையில் பார்க்கும்படி மனித மனம் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒரு இலக்கியப் படைப்பைப் படித்துப் புரிவதற்கும் இந்தப் பிரித்துப் புரியும் காட்சிபூர்வ அணுகுமுறையை நாம் இயல்பாகவே பயன்படுத்துகிறோம். இலக்கியமற்ற எளிய படைப்புகளில் இந்த முரண் எதிரிடைகள் துருத்தியபடி தெரியும். எடுத்துக்காட்டாக, சல்மாவின் ‘மூன்றாம் ஜாமங்களின் கதை’ (ஆண் × பெண்; நல்லவன் × கெட்டவன்). சிக்கலும் நுட்பமும் கூடிய படைப்புகளில் மைய உருவம் × பின்புலம் எதிரிடைகள் இருட்டில் கயிற்றரவு போல எளிதில் புலப்படாவண்ணம் அமைக்கப்பட்டிருக்கும். முதல் சில வாசிப்புகளில் படைப்பு நமக்குப் புரிபடவில்லை என்றால் காக்னிடிவ் பொயடியோக்ஸ் உத்திப்படி பிரக்ஞைபூர்வமாய் மைய உருவ × பின்புலத்தை அடையாளம் காணலாம். படைப்பின் ஒவ்வொரு கட்டத்திலும் எந்தப் பாத்திரம் பிரதானப்படுத்தப்படுகிறது எது பின்புலமாகிறது என்று கவனிப்பதே இந்தவாசிப்பின் தந்திரம். இதன் மூலம் நம் வாசிப்பு தெளிவு பெறும்.

நாடக மேடையில் சில நேரம் நடிகர் மீது பாய்ச்சப்படும் ஒளிவட்டம் போல எழுத்தாளன் ஒரு பாத்திரத்தை பலவிதங்களில் முன்னிலைப்படுத்தலாம். பொதுவாக கதையாடலில் அதிக இடம் பிடிக்கும் பாத்திரம் மைய உருவமாகும். சில சிறந்த சிறுகதைகளில் அமைதியான, அதிகம் பேசப்படாத ஒரு பாத்திரத்தை இறுதியில் ஒரு எதிர்பாராத செயல் அல்லது வசனம் மூலம் ஆசிரியர் பிரதானப்படுத்துவார். பின்புலத்திலிருந்து மைய உருவமாக மாற்றுவார். இப்படி எதிர்பாராது ஒரு பாத்திரம் தன் புதிய பரிமாணம் ஒன்றை வெளிப்படுத்தும் போது நமக்கு படைப்பிலிருந்து ஒரு புரிதல் அல்லது தரிசனம் கிடைக்கும். கு.அழகிரிசாமியின் ‘அன்பளிப்பு’ மற்றும் காதரீன் மேன்ஸ்ஃபீல்டின் ‘The Doll's House’ இவ்வாறான படைப்புகள். இரண்டுமே குழந்தை மனவியல் பற்றியவை. எர்னெஸ்டு ஹெமிங்வே தனது ‘ஒரு சுத்தமான நன்கு வெளிச்சமுள்ள அறை’ எனும் சிறுகதையின் பிற்பகுதியில் மையப்பாத்திரத்தைப் பற்றி நேரடியாகக் குறிப்பிடாமலே மிகத்திறமையாக அதன் மீது நம் கவனத்தைத் திருப்புவார். நாம் தொடர்ந்து இக்கதையைப் பற்றி விரிவாகப் பேசலாம்.

ஹெமிங்வேயின் கதை ஒரு பாரில் நடக்கிறது. ‘நடக்கிறது’ என்பது சற்று அதிகப்படிதான்; சம்பவங்களின் வளர்ச்சி என்று ஒன்றுமில்லை. ஒரு வயதான, மனைவி இறந்து போன, பணக்கார செவிட்டுத் தாத்தா வழக்கம் போல் பாருக்கு வந்து தண்ணி அடிக்கிறார். அவர் குடிகாரர் அல்ல. கப்பென்று கண்ணை மூடி ஊற்றிக் கொண்டு நக்காமல், மர நிழல் படர்ந்த ரம்மியமான இடத்தில் தனியாக அமர்ந்து நிதானமாக சுருதி ஏற்றுகிறார். அவர் போதை அதிகமானால் பணம் தரமாட்டார் என்பதால் அவரை அந்த பாரின் இரு பணியாளர்கள் கவனித்து வருகிறார்கள்: முதியவர் மற்றும் இளையவன். நள்ளிரவு நெருங்க முதியவர் கிளம்பும் அறிகுறி இல்லை. போதை ஏறிக் கொண்டு போகிறது. இளைய பணியாளன் அவரைக் கிளப்பி விட முனைகிறான். மூத்த பணியாளன் "இல்லை பாவம் இருந்து விட்டுப் போகட்டுமே" என்று பரிந்து பேசுகிறான். பிறகு ஒருவழியாக தாத்தாவை அனுப்பி வைக்கிறார்கள். ஷட்டரை இழுத்து விட்டு இருவரும் கிளம்புகிறார்கள்.மூத்த பணியாளன் தனியன். அவனுக்கு தன் அறைக்குப் போக விருப்பம் இல்லை. கதையின் பிற்பகுதி முழுக்க இந்த மூத்த பணியாளனின் தனிமொழியால் ஆனது.

எனது முதுகலை வகுப்பொன்றில் பேராசிரியர் நிர்மல் செல்வமணி (அய்க்கோ பொயடிக்ஸ் எனும் விமர்சனப் பள்ளியை ஏற்படுத்தியவர்) இந்தக் கதையை எங்கள் எல்லோருக்கும் படிக்கத் தந்தார். இக்கதையின நாயகன் யார் என்று கேட்டார். அனைவரும் மேற்சொன்ன மூன்று பாத்திரங்களில் ஒன்றைச் சொன்னோம். நிர்மல் மறுத்தார். திரும்பப் படிக்கச் சொன்னார். பிறகு கதை நிகழும் பார் தான் தலைமைப் பாத்திரம் என்றார். கதையின் தலைப்பை நாங்கள் அப்போது கவனித்திருக்கவில்லை. கதாசிரியர்கள் தலைப்பை ஒரு திசைகாட்டியாகவே பெரும்பாலும் வைத்திருப்பார்கள்.

சில வருடங்களுக்குப் பின்னர் படித்த போது எனக்கு இக்கதையின் வேறுபல நுட்பங்கள் புலனாகின. கதையில் வெளிச்சம், தெளிவு, அர்த்தம் × இருட்டு, குழப்பம், இன்மை (அர்த்தமின்மை) ஆகிய முரண் கூறுகள் செயல்படுகின்றன. இந்தக் கூறுகள்தான் பாரை மையப் பாத்திரமாகக் கட்டமைக்கின்றன. கதையின் இயக்கமே முரண் நிலைகளை நம்பி உள்ளது. ஹெமிங்வே ‘இன்மை’ என்ற சொல்லை வைத்து விளையாடுகிறார். தாத்தா ஒரு முறை தற்கொலைக்கு முயன்றதாக மூத்த பணியாளன் இளையவனிடம் சொல்கிறான். தாத்தாவுக்கு மனைவி இல்லை, வயசாகி விட்டது, தனிமை என பலகாரணங்கள் பட்டாலும் மூத்த பணியாளன் அதற்கு வேறு பதில் அளிக்கிறான். அந்த உரையாடலைப் பாருங்கள்:

"போன வாரம் அவர் தற்கொலை செய்யப் பார்த்தார்", ஒரு பணியாளன் சொன்னான்.

"ஏன்?"

"அவர் எல்லா நம்பிக்கையையும் இழந்து நொறுங்கிப் போய்விட்டார்"

"எதைப் பற்றி?"

"ஒன்றும் இல்லை"

"ஒன்றும் இல்லை என்று உனகெப்பிடி தெரியும்"

"அவரிடம் ஏகத்துக்குப் பணம் இருக்கு"

தற்கொலைக்கு காரணமாக முதிய பணியாளன் கருதுவது நம்பிக்கை இழப்பு. எதன்பாலான நம்பிக்கையை இழந்தார்? வாழ்வின் பொருள் பற்றி. வாழ்வில் ‘ஒன்றும் இல்லை’ என்பதே அவரது பிரச்சினை. ‘ஒன்றும் இல்லை’ என்பதை முதலில் இளையவன் லௌகீகமாய்ப் புரிந்து கொண்டிருக்க வேண்டும். அதனால் அடுத்து ஒரு முரண்தகவலை முதிய பணியாளன் அளிக்கிறான். அவர் ஒரு பெரும்பணக்காரர். பணத்தால் நிரப்ப முடியாத ஒரு மாபெரும் வெற்றிடத்தை அவர் வாழ்வில் கண்டுகொண்டிருக்க வேண்டும். இளைய பணியாளன் ஒரு மிகையான நேர்மறை பாவத்துடன் வாழ்பவன். அவன் இந்த பதில் கேட்டு வாயடைத்துப் போகிறான். இந்த இரண்டு பணியாளர்களுக்குமான கருத்து மோதல் ஒன்று பிற்பாடு வருகிறது. மூத்த பணியாளன் இளையவனிடம் அவன் இரவில் சீக்கிரமே வீட்டுக்குப் போனால் அவன் மனைவியின் கள்ளக்காதலனைச் சந்திக்கும் சங்கடம் நேரும் என்று குத்திப் பேசுகிறான். இதைப் படியுங்கள்:

" சரி நீ? வழக்கமான நேரத்துக்கு முந்தி வீட்டுக்குப் போக உனக்கு பயம் இல்லையா?"

"என்னை கேவலப்படுத்துகிறாயா?"

"இல்லை, சும்மா ஒரு ஜோக்குக்குச் சொன்னேன்"

"இல்லை", என்றான் அவசரத்திலிருந்த பணியாளன். உலோக ஷட்டர்களை இழுத்து மூடி விட்டு எழுந்தவாறே, "எனக்கு நம்பிக்கை இருக்கு. நிரம்பவே இருக்கு"

"உனக்கென்ன, இளமை, நம்பிக்கை, வேலை எல்லாம் இருக்கு", முதிய மேஜைப் பணியாளன் சொன்னான்,

"உனக்குத்தான் எல்லாம் இருக்கே"

"உனக்கு என்னதான் இல்லை என்கிறாய்?"

"வேலையைத் தவிர எல்லாம் இருக்கு"

"என்னிடம் உள்ளதெல்லாம் உனக்கும் இருக்கிறது இல்லையா"

"இல்லை. எனக்கு எப்போதுமே நம்பிக்கை இருந்ததில்லை. வயதும் ஏறிவிட்டது"

"சரிதான் விடு. உளறாமல் கடையைப் பூட்டு"
வாழ்க்கை அர்த்தம், இலக்கு இருப்பதான பாவனையில் நகர்கிறது. வாழ்க்கை எனும் பேரியக்கத்தை நாம் புலன்களின் குறுகிய அறிதல் வழி புரிந்து கொள்கிறோம். ஆனால் இந்த உண்மை புரிந்தாலும் தன்னை அசடு என்று நம்பியபடி ஒருவன் வாழ முடியாது. உதாரணமாக இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து எழுத என்னைப் பற்றியும் உங்களைப் பற்றியுமான பெரும் கற்பிதங்கள் ஏற்படுத்திக் கொள்கிறேன். சமீபத்தில் புது நண்பர் ஒருவரை சந்தித்துப் பேசினேன். அவர் என் வாசகரும் கூட. உரையாடல் முடிவில் சொன்னார்: "நான் வாசிக்கும்போது உங்களைப் பற்றி வேறு மாதிரி நினைத்திருந்தேன்". நான் சொன்னேன்: "நானும் உங்களைப் பற்றி வேறு மாதிரி நினைத்திருந்தேன்". இப்படியான கற்பிதங்களுடன் உற்சாகமாக வாழ்பவர் அந்த இளைய பணியாளர். கற்பிதங்கள் புகைமூட்டமான ஒரு நம்பிக்கையைத் தருகின்றன. ஆனால் மரணமும், வேறுபல இழப்புகளும், அறம் போன்ற மதிப்பீடுகளின் வீழ்ச்சியும் ஒரு கட்டத்தில் வாழ்வு விளக்க முடியாத சிடுக்குகள் நிரம்பியதோ என்று தோன்ற வைக்கும். இந்த அவநம்பிக்கையைத் தாண்டிச் செல்ல வேண்டும். இதற்கு மனிதனுக்குத் தேவையான கருவிகள் தர்க்கம், தர்க்கத்திற்கு அப்பாலான நம்பிக்கைகள், கற்பனைவின் விரிவு. மதம், கலை, இலக்கியம், இயக்கங்கள், கோட்பாடுகள் ஆகியன இதற்கான பாதைகள். இவை எவையுமே அவநம்பிக்கையை போதிப்பதில்லை. அதே நேரம் எளிதான நம்பிக்கையைக் காட்டி ஏமாற்றுவதும் இல்லை. வாழ்வில் பல்வேறு இன்மைகளைக் கண்டுகொள்பவர்கள் தாம் தங்களது இன்மையை நிரப்புவதற்காக இந்தப் பாதைகளில் ஒன்றைத் தேர்கின்றனர்.

இருளும் ஒளியும் மேற்கத்திய படைப்புலகில் வலுவான குறியீடுகள். அவர்களது நாடுகளில் சூரிய ஒளி அருகிய பருவ நிலை வெளிச்சத்துக்கு ஒரு அபரிமிதமான குறியீட்டு முக்கியத்துவத்தை அளிக்கிறது. ஹெமிங்வே தனது இந்தக் கதையில் நன்கு வெளிச்சமூட்டப்பட்ட அறை எனும் போது அது புரிதலை அல்லது தெளிவை நோக்கிய பாதை என்னும் குறியீட்டுப் பொருள் கொள்கிறது. வெளிச்சம் மட்டும் அல்ல, ஒரு நல்ல பார் சுத்தமாகவும் இருக்க வேண்டும் என்கிறான் மூத்த பணியாளன். சுத்தம் என்பதற்கு தர்க்க ஒழுங்கு என்பதான பொருள் உள்ளது. இன்மையை உணரும் தாத்தா மற்றும் மூத்த பணியாளனுக்கு இந்த சுத்தம் தரும் குழப்பமற்ற நிலை மிகுந்த ஆசுவாசம் தருவது. உதாரணமாக, பார் உள்ள அந்தத் தெரு பகலில் தூசு மண்டியிருக்கும். இரவில் பனி விழுவதால் தூசு அடங்கி விடும் என்கிறார் ஹெமிங்வே. மேலும், இரவில் பார் அமைதியாக இருக்கும். அந்த அமைதியை செவிடான தாத்தா மட்டுமே உணர்ந்தார் என்கிறார். செவிடருக்கு கேட்கும் அந்த அசாதாரண அமைதி என்ன? செவிடருக்கு இருக்கும் ஆனால் செவிப்புலன் உள்ளவருக்கு இல்லாத அமைதியைப் போன்றே கதையில் தொடர்ந்து வேறு பல முரண்களைக் கவனிக்கலாம். மிகை நம்பிக்கையாளர்கள் இல்லாத பொருள் இருப்பதாக எண்ணிச் செய்யும் செயல்களின் அபத்தங்கள் இக்கதையின் முக்கியமான சுவாரஸ்யம். உதாரணமாய், வெறுமையைப் பொறுக்க முடியாமல் தாத்தா தூக்கு மாட்டிக் கொள்கிறார். அவரை கயிறு அறுத்து மருமகள் காப்பாற்றுகிறார். அவர் ஏன் அப்படிச் செய்தார் என்று இளைய பணியாளன் கேட்கிறான். மூத்தவன் சொல்கிறான்: "அவரது ஆன்மாவுக்கு பயந்து". அவரது ஆன்மாவுக்கு பயந்துஇன்மைக்கு பயந்து சாகும் தாத்தாவின் மரணத்துக்குப் பின்னான இருப்பையே மருமகள் பெரிதும் அஞ்சுகிறாள்.

அடுத்து தாத்தா செவிடு என்பதால் அவரிடம் பேசும் போது இளைய பணியாளன் வேற்று மொழிக்காரர்கள், பைத்தியங்களிடம் உரையாடும் போது செய்வது போல் முழுமையற்ற வாக்கியங்களைப் பயன்படுத்துகிறான்:

"நீ போன வாரமே தற்கொலை செஞ்சு மண்டையப் போட்டிருக்கணும்", அவன் அந்தச் செவிட்டு மனிதரிடம் சொன்னான். முதியவர் தன் விரலால் சுட்டிக்காட்டிச் சொன்னார்,

"இன்னும் கொஞ்சம்"

"முடிஞ்சு போச்சு", முட்டாள்கள் குடிகாரர்களிடமோ, வெளிநாட்டவரிடமோ பேசுகையில் முழு வாக்கிய அமைப்பைத் தவிர்த்துப் பேசும் பாணியில் அவன் சொன்னான், "இதுக்கு மேலே இன்னிக்கு ராத்திரி கெடையாது. மூடியாச்சு".

"இன்னொண்ணு" என்றார் முதியவர்.

"இல்ல. முடிஞ்சு போச்சு".

மேஜைப் பணியாளன் மேஜை ஓரத்தை ஒரு துண்டால் வழித்து தலையை ஆட்டினான்.

முதியவர் எழுந்து நின்று, ஏந்துத் தட்டுகளை எண்ணி, ஜேப்பிலிருந்து தோல் பையை எடுத்து மதுவுக்குப் பணம் செலுத்தி விட்டு, டிப்சாக அரை பெசட்டா விட்டுச் சென்றார்.

கதையின் மிக அருமையான இடம் இது. காது கேட்காதவரிடம் நாம் பேசுவதே அபத்தம்; இதில் முழுமையற்ற வாக்கியங்கள் வேறு!

தாத்தா கிளம்பிவிட்ட பின் மூத்த பணியாளன் மேலும் சொல்கிறான்:

வெளிச்சம் முக்கியம்தான், ஆனா அதோட அந்த இடம் சுத்தமாகவும், ரம்மியமாகவும் இருக்கணும். நிச்சயமாக பாட்டு வேண்டாம். இந்த நேரங்கெட்ட வேளையில பிராந்திக் கடைகள் தான் தொறந்திருக்கும் என்பதால் அங்கேயே நின்று கண்ணியமாகக் குடிக்க முடியாது. அவனுக்கு எதைப் பார்த்து பயம்?

அது பயமோ, நடுக்கமோ ஒன்றும் இல்லை. அவனுக்கு நன்றாகவே தெரிந்திருந்த சூன்யம்தான் அது. அது இது மட்டும் தான்; வெளிச்சம் மட்டும்தான் அதற்கு வேண்டும்; அதோடு கொஞ்சம் சுத்தமும் ஒழுங்கும்.சிலர் அதிலேயே வாழ்ந்தும் ஒருகாலும் உணர்ந்ததில்லை. ஆனால் அது சூனியம், அதோட பிறகு சூனியம், அதோட சூனியம், அதோட பிறகு சூனியம் என்று அவனுக்குத் தெரியும்."

பார் மற்றும் பிராந்திக் கடைகள் பற்றி கணிசமாக விவாதித்தாலும், கதையின் முதற்பாதி வரை குவிமையம் இரு பணியாளர்கள் மற்றும் தாத்தாவின் இரு வேறான அணுகுறைகளின் மீதுதான் உள்ளது. இம்மூவருமே மையப் பாத்திரங்கள். பார் பின்புலமாக உள்ளது. வகுப்பில் நாங்கள் இதை மட்டும் கவனித்தோம். கதையின் பிற்பகுதியில் பார் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. வெறுமை அல்லது சூனியம் பற்றின வெவ்வேறு பகடிகள் வருகின்றன. ஆனால் சூனியம் பற்றின குறிப்புகள் அதன் முரண் இருப்பான அர்த்தம் பற்றி நம்மை சிந்திக்க வைக்கிறது. பார் மறைமுகமான விவாதப்பொருள் ஆகிறது. மெல்ல மெல்ல மைய உருவமாக அது மாறுகிறது. அதில் குடிப்பவர்களும், இருப்பவர்களும் பின்புலம் ஆகின்றனர். ஜடப்பொருளான பார் தனக்கான ஆளுமை கொண்டு உயிர்க்கிறது. இந்த மைய உருவ--பின்புல கூடுதாவல் தான் கதையின் தரிசனத்திற்கான சாவி.


மேலும் புரிய ‘உயிரோசையை’ அந்த பாராகக் கற்பிக்கலாம். அதை நாடி வந்து வெவ்வேறு அறிவுத்தளங்களில் பயணிக்கும் ஒவ்வொருவரும் இணையத்தில் எத்தனையோ குப்பைகளைப் புறக்கணித்து விட்டுத்தான் வருகிறார்கள். "நன்கு வெளிச்சமுள்ள சுத்தமான இடமாக" உயிரோசை இருப்பதே உங்களது இந்த நாட்டத்தின் காரணம். மிகச்சிக்கலான எண்ண ஓட்டங்களை, புதிர்களை முன்வைக்கும் இலக்கியப் படைப்புகளுக்கும் வெளிச்சமும் சுத்தமும் அவசியம். மிகக்கடினமான படைப்புகள் கூட எளிய விதிகளின் படி இயங்குபவை தான். ஏனென்றால் அவை நம்மை ஒளியை நோக்கி, தெளிவினை நோக்கிக் கொண்டு செல்லவே எத்தனிக்கின்றன.

No comments: