முத்தமும் கொலையும் தீர்மானமாகும் கணம் எது?

ஊரில் என் வீட்டுப் பின் சந்தில் குள்ளமாய் முன்வழுக்கை காதுவரை சிரிப்புடன் ஒரு ஆர்மோனிய வித்துவான் இருந்தார். பால்யத்தில் ஒரு நாள் நான் அவர் மகனைக் சந்திக்க வீட்டுக்கு சென்ற போது அவருக்கும் மனைவிக்கும் வாக்குவாதம். மனைவி இவரை விட ஒரு அடி அதிக உயரம். அவள் விடாமல் கரித்துக் கொட்ட இவர் கவனித்ததாகவே காட்டிக் கொள்ளவில்லை. கால் பெருவிரலை நிமிண்டிக் கொண்டிருந்தவர் சட்டென்று பக்கத்துத் திண்டில் தாவி ஏறினார். சுழன்றபடி ஒரு அறை விட்டார். அதிர்ச்சியில் சில நிமிடங்கள் யாரும் பேசவில்லை. திண்டில் ஏறி அடிப்பதை அவர் அத்தனை நேரமாய் திட்டமிட்டுக் கொண்டு அமைதி காத்தாரா என்பதை நேரில் கேட்க எனக்கு அப்போது தைரியம் வரவில்லை.

(தொழில்முறை தாக்குதல்கள் தவிர்த்து) நமக்கு கண்மண் தெரியாமல் கோபம் வந்திட கணவன்\மனைவி, நண்பர்கள்\தெரிந்தவர்களை கன்னத்தில் அறைகிறோம்; பூசல் மூள தோள், நெஞ்சில் குத்திக் கொள்கிறோம். லேசாய் தாக்கினாலே கடுமையாய் வலிதரக்கூடிய, செயலிழக்கக் கூடிய கண், விரைப்பை போன்ற போன்ற பகுதிகளை நோக்கி ஏன் கைகால் முதலில் நீள்வதில்லை. "தெரியாம அடிச்சுட்டேம்பா" என்று மன்னிப்பு கேட்கும் நாம் நிஜமாகவே திட்டமிடுவதில்லையா? தெரியாமல் அடிக்கும் நாம் ஏன் இத்தனை பாதுகாப்பாய் தாக்குகிறோம்?

சற்று சைவமாக ஒரு உதாரணம்: "தோ பார்!" என்று சொடக்கு போடும் சில மில்லி நொடிகள் முன்னாடி அச்செயலை தீர்மானிக்கிறோமா? ஆம் என்கின்றன எலெக்டுரோஎன்செபெலோகிராபி முறைப்படி செய்யட்ட சில ஆய்வுகள். நமது அகத்தூண்டுதல்-அற்ற உடனடி நடவடிக்கைகளின் போது மூளையின் தசை இயக்க நடவடிக்கையில் படிப்படியான எழுச்சி காணப்படுகிறது. இதை தயார் நிலைத் திறன் என்கிறார்கள் (readiness potential). திட்டமிட்ட அசைவுகளின் போது கூட 2 அல்லது 3 நொடிகளுக்கு முன்னரே நமது மூளை தயாராகி விடுகிறது. அதாவது ஒரு குட்டி ஒத்திகை நிகழ்கிறது. இத்தகவல் இலக்கியம் போன்ற நுண்கலைகளில் பிரக்ஞை இழப்பு பற்றின மனப்பாங்கு சற்று மிகை என்கிறது. இதன்படி படைப்பு மொழிக்கு படைப்பாளி ஓரளவுக்கு பொறுப்பாக வேண்டும்.

முன்கூட்டிய தயாராதலை எப்படி நிரூபிப்பது?

லவோ மற்றும் பலர் ஒரு மீது ஒரு fMRI ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வுப் பங்கேற்பாளர்கள் ஒரு கடிகார முள்ளின் அசைவை கவனித்தபடி விரல் சொடுக்க வேண்டும். சொடுக்கும் முன் அச்செயலை செய்யப் போகும் உந்துதல் ஏற்பட்ட நேரத்தை குறிக்க வேண்டும். இந்த உந்துதல் ஏற்பட்ட வேளையில் பங்கேற்பாளர்களின் மூளையின் டார்சல் பிரீபிரண்டல் கார்டெக்ஸ் மற்றும் இண்டுரா பிரைட்டல் சல்க்கஸ் ஆகிய பகுதிகளில் நடவடிக்கைகள் அதிகமானதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். நாம் ஒரு செயலுக்கு தயாராவதற்கு மற்றும் திட்டமிடுவதற்கு பயன்படும் பகுதிகள் இவை.

சரி, செயலுக்கு முன்னாடியே மூளை ஏன் தயாராகிறது?
நாம் ஒவ்வொரு நொடியும் புலன்வழி நுகரும் செய்திகளை புரியும்படியாய் ஒருங்கமைக்க ஒரு மாதிரி தேவைப்படுகிறது. கிட்டத்தட்ட சி.பி.ஐ வெளியிடும் கணினி ஓவியம் போன்று. மேலும் நுணுக்கமாய் சொல்வதானால், நமக்குள் இருக்கும் புலன்சார் நரம்பணுக்கள் மீது டெண்ட்றைட்டுகள் எனும் வால்கள் உண்டு, அக்டோபஸ் பாணியில். இவை மில்லி நொடி பொழுதில் பில்லியன் தொடர்பற்ற புலன் தகவல்களை வாங்கி ஒன்றோடொன்று சமச்சீராய் பகிர்ந்து ஒரு சித்திரத்தை ஏற்படுத்த அல்லது 'உண்மையை' நமக்குத்தர வேண்டும். ஒவ்வொரு முறை உருவாகும் சித்திரமும் ஒரு மாதிரியாக நரம்பணுக்குள் அடுக்கப்படுகிறது. இத்தகைய எண்ணற்ற "உள்மாதிரிகளை" உருவாக்கும் எந்திரம் தான் நமது மூளை என்கிறார் டேன் ரைடர் எனும் ஆய்வாளர்.

இந்த உள்மாதிரிகளின் விசித்திரம் சம்மந்தமில்லாத, சில சமயம் குறைந்த பட்ச தகவல்களை வைத்து இவை ஒப்பேற்றும் குணமே. இவை நிலையான மாதிரிகள் அல்ல, இயங்காற்றல் மிக்கவை என்கிறார் ரைடர். அதாவது நம் மூளை ஒரு பொருளைப் பற்றின நகல் எடுத்து அடுத்த முறை அப்பொருளை எதிர்கொள்கையில் அப்படியே ஒப்பிப்பதில்லை. கருகரு தாடி மீசை கொண்ட உங்கள் திராவிட கழக நண்பர் ஒரு நாள் பழனிக்கு மொட்டை போட்டு சந்தனம் விபூதி அப்பியபடி வந்து நின்றால் " நீ யாரய்யா தெரியாது" என்று விலகாமல் "அட எழவே நீயா? " என்று சற்று வியப்புடன் அடையாளம் காண்பீர்கள். எப்படி? உங்கள் மூளை உங்கள் நண்பரின் தோற்றம் பற்றின குறைந்த பட்ச தகவல்கள் கொண்டு மிச்ச அடையாளங்களை யூகித்து சரியாய் சொல்கிறது. இந்த யூக அடிப்படையை ஒரு எளிய உதாரணம் கொண்டு மேலும் விளக்கலாம். உங்கள் வீட்டுக் குளியலறை ஷவரின் திருகு கைப்பிடியை ஒரு கோணத்தில் வலப்புறம் திருப்பினால் ஒரு குறிப்பிட்ட டிகிரி சூட்டில் நீர் சொரியும். இடது பக்கமும் அவ்வாறே ஒரு குறிப்பிட திருகலில் குளிர் நீர் ஒரு குறிப்பிட்ட டிகிரி குளிர்மையுடன் வரும். இப்போது ஒரு கற்பனை: உங்களுக்கு நரம்பியல் பாதிப்பால் நீரைத் தொட்டு வெப்பமோ குளிர்மையோ அறிய முடியாது. ஆனால் உங்களிடம் ஒரு மாதிரிப்படிவம் உள்ளது. உங்கள் ஷவர் அமைப்பின் ஒவ்வொரு ஆதாரக் கூறையும் பிரதிநித்துவப்படுத்தும்படி சற்று குழப்பமாய் அந்த மாதிரியின் மாறுபடும் மதிப்புகள் அமைந்திருக்கும். உங்களுக்கு கணக்குப் போட வரும் என்றால் எந்த கோணத்திலான திருகலுக்கு எந்த தட்பவெட்பத்தில் நீர் சொரிகிறது என்பதை கணித்து சுட்டுக் கொள்ளாமல் அல்லது உறைந்து போகாதபடி பாடியபடி வெதுவெதுப்பாய் குளிக்கலாம்.

மேற்சொன்ன தட்பவெட்ப கணக்குக் குளியல் போன்றே படுசிக்கலாகவே நரம்பணுக்கள் புலன் சமிக்ஞைகளை பரிசீலிக்கின்றன. ஆனாலும் அதன் பலன்கள் ஆபத்பாந்தவனாக, படுதமாஷாக, அபத்தமாக அமைகின்றன. உதாரணமாக சாலையைக் கடக்கும் போது எதிரே படுவேகத்தில் கார் வருகிறது; அது எந்த தூர வித்தியாசத்தில் எந்த அளவு விசையுடன் வருகிறது, ஹாரன் அடிக்கிறதா, ஓட்டுனருக்கு பிரேக் போட்டு உங்களை காப்பாற்றும் உத்தேசம் உள்ளதா போன்றவற்றை குறைந்தபட்ச தகவல்களைக் கொண்டு சரியாக யூகித்து அதற்கேற்றபடி வேகத்தை அதிகரித்து பத்திரமாய் சாலையைக் கடக்கிறோம். முன்னெப்போதும் பெரும் விசையுடன் எதிர்வரும் பொருளை சந்தித்திராதவர்களால் (உதாரணமாய், ஒரு வயது குழந்தை) மேற்சொன்ன சூழலை சமாளிக்க முடியாது. காரணம் அவர்கள் மூளைக்குள் அந்த சூழலுக்கான உள்மாதிரி இல்லை என்பதே. எதிர்காலத்துக்குள் சில நொடிகள் முன் தாவிக் குதிக்கும் நம் மூளை ஒரு மாந்திரிகக் கண்ணாடி.

சிறந்த நகைச்சுவைக்கு பொருத்தமின்மையும், அதன் காரணமான மெல்லிய அதிர்ச்சியும் ஆதாரமானவை. இந்த பொருத்தமில்லாத உணர்வும் அதிரிச்சியும் நம் புலன்சார் நரம்பணுவின் டெண்டுரைட் வால்கள் ஒரே நேரத்தில் அல்லது தொடர் வரிசையில் வரும் சமச்சீரற்ற தகவல்களை அர்த்தப்படுத்த திணறுவதால் ஏற்படுவது. உதாரணமாய் "திருமலை" படத்தில் விஜய்யுடன் பைக்கில் நேர்காணலுக்கு அவசரமாய் செல்லும் விவேக் போலீசாரால் மாற்றுப் பாதைகளில் திருப்பி அனுப்பப் பட்டு நாம் சற்றும் எதிர்பார்க்காதபடி திருப்பதிக்கே வந்து சேர்ந்திட ஒரு பக்தர் "கோவிந்தா கோவி...ந்தா" என்றபடி லட்டு தந்து ஆசீர்வதிக்கும் காட்சி. இரட்டை வசனங்களின் நகைச்சுவை வெற்றியும் இந்த கண நேர தகவல் குழப்பத்தினாலே. விவேக் "மைனர் குஞ்சை சுட்டுட்டேன்" எனும் போது "எந்த குஞ்சை" என்று நேரும் மில்லி நொடி குழப்பமே யோசிக்காமல் சிரிக்க வைக்கிறது. ரொம்ப யோசிக்க நேரம் கொடுத்தால் அது நல்ல நகைச்சுவை அல்ல. ஏனென்றால் நரம்பணுவின் டெண்ட்றைட் வால்கள் உடனடி சுதாரித்து விடும். இதனாலே நகைச்சுவைக்கு டைமிங் அவசியமாகிறது.

இதே காரணத்தினாலே குறுகின கால அவகாசத்தில் முடியக் கூடிய வடிவங்களான சிறுகதை, கவிதை போன்றவற்றுக்கு எதிர்பாராத திருப்பம் உத்தியாக உள்ளது. (பெரிய நாவலுக்கு திருப்பங்கள் அவசியமல்ல.)

தி.நகர் பேருந்து நிலையத்துக்கு எதிர்பக்கமுள்ள வரிசையான கடைகளில் ஒன்றின் பெயர்ப் பலகையில் பழைய இந்தியா டுடே பத்திரிகை விளம்பரம். அதில் நமது திராவிட இயக்கத் தலைவர்கள் ஜெயலலிதா, கருணாநிதி படங்கள். இருவரின் நெற்றியிலும் பெரிய சந்தனப் பட்டைகள். தலைவர்கள் ஆத்திகர்கள் ஆகிவிட்டதாய் ஏதாவது பரபரப்பு செய்தியோ என்று முதலில் பட்டது. நம்பிக்கை வராமல் நுட்பமாய் அந்த பலகையை கவனித்தேன். ஏதோ பண்டிகைக்கு சந்தனம் அடித்ததில் இரு தலைவர்கள் நெற்றியிலும் கச்சிதமாய் பூசியிருருக்கிறார்கள். ஆனாலும் அந்த ஆரம்ப நொடிகள் தந்த அபத்தத்தின் அதிர்ச்சியை விளக்க முடியாது. காரணம், ஒரு டெண்ட்ரைட்டுக்கு கருணாநிதி முகத்தின் காட்சி புலன் தகவல் செல்ல, அடுத்த டெண்ட்ரைட்டுக்கு கிடைப்பதோ பட்டை. இரண்டையும் பகிர்ந்து கொள்ள முடியாது அவை திணறினதே மேற்சொன்ன அரசியல் அபத்தம். (ஏனோ துண்டின் மஞ்சள் நிறம் நமக்கு சகஜமாகி விட்டது).

நமது மூளை தன்னிடம் உள்ள முன்மாதிரிகளின் பின்னணியில் பல்வேறு நரம்பியல் சமிக்ஞைகளைக் கொண்டு வலுவான ஆனால் எதிர்பாராத அனுபவங்களை நமக்குத் தருகின்றது. நாம் தினசரி சந்திக்கும் வாழ்வை கூர்ந்து கவனிக்கையில் எதிர்படும் புதுமை மற்றும் தவிர்க்க முடியாத வழமைக்கும் இதுவே காரணம். ஒரு பொருளோ நபரோ முழுக்க புதுசாகவோ (விளங்காது) அல்லது அச்சிட்டது போல் மாறுபாடற்றோ (நம்ப மாட்டோம் ) இருக்க முடியாது. "ஏய் வாடா" என்று மிரட்டலான தொனியில், கரகரப்பான குரலில் உங்கள் நண்பர் அழைப்பது பாசம் என்று உங்களுக்குள் மாதிரி உருவான பின், அதே நபர் "வாங்க" என்றால் அதன் பொருள் கோபம் என்று உங்களுக்குப் படும். ஓவியம், எழுத்து, சிற்பம் என அனைத்துக் கலைகளும் மாதிரிகளை செய்யும் நரம்பணுக்கள் போண்றவையே.

இலக்கியத்தில் புதிய மொழியை, கருத்துத் தளத்தை, படிம, குறியீடுகளை உருவாக்கும் முனைப்பு உள்ளது. ஒரு முன்னோடியை போலி செய்வதை ஏளனமாகவே பார்க்கிறோம். அனைத்துக் கலைகளிலும் புதுமைக்கு மவுசு ஜாஸ்தி. இந்த புதுமை கூட மந்திரவாதி தொப்பிக்குள்ளிருந்து முயல் தூக்குவது போல் ஏறத்தாழ வித்தைதான். உதாரணமாய் ஒரு சிறந்த கதையாளன் முன்னோடியின் கதையை (அதாவது மாதிரியை) புலப்படாத வண்ணம் திரும்ப எழுதும் வித்தை தெரிந்தவன் தான். ஒரு மாதிரியின் பள்ளங்களை சமூக மொழியின் கூறுகள் நிரப்ப, அது புது மாதிரியாகி மேலும் பல மாதிரிகளை உற்பத்தி செய்யும் எந்திரமாகிறது.

வன்முறை ஒரு ஆதி சமூகக் கூறு. பேவுல்பு, மெக்பத் போன்ற ஆங்கில செவ்விலக்கியங்கள் வன்முறையை தனிமனித அதிகார வெறியின் உந்துதலாய், தீமைக்கும் நன்மைக்குமான மனித மனதின் ஊசலாட்டமாய் விளக்குகின்றன. இரு கதைகளிலும் தனிமனித துரோகம் ஒரு முக்கிய தீமை. இன்று தனிமனித நோக்கம் மட்டுமே வன்முறை லட்சியமல்ல. அதன் வேர்கள் கண்காணாத, வரையிட முடியாத வெளிகளில் உறிஞ்சி விரைகின்றன. உதாரணம் தீவிரவாதம் மற்றும் சமகாலப் போர்கள். மும்பையிலும், இலங்கையிலும் குழந்தைகளும், அப்பாவிகளும் பலியானதற்கு அரசியல், பொருளாதார, சமூகவியல் காரணங்களே முக்கியமானவை. பல கோடி மக்களின் உள்ளங்கள் இந்த கூட்டுக் கொலைகளில் இதனால் இணைகின்றன. ஷேக்ஸ்பியரில் மெக்பத்தின் கத்தி அவரை வழி நடத்திட, "முன்கூறப்பட்ட கொலையின் வரலாறு" நாவலில் அதே கொலைக்கத்தி பல்வேறு பட்ட கைகள் வழி பயணமாகிறது. கொலைக்கு தனிமனிதன்றி சமூகமே காரணமாகிறது. கத்தியை கைமாற்றி விட்டதே மார்க்வெஸின் வெற்றி மற்றும் புதுமை. தஸ்தாவஸ்கியின் ரஸ்கோல்னிக்கோவும் ("குற்றமும் தண்டனையும்"), அரவிந்த் அடிகாவின் முன்னாவும் ("வெள்ளைப் புலி") ஒரே எந்திரம் தோற்றுவித்த இரு மாதிரிகள் தான். சமூகம் தரும் பல்வேறு தகவல்களை கெலிடோஸ்கோப்பு போல் சேர்த்து உலுக்கியதில் ரஸ்கோல்னிக்கோவுக்கு இருந்த லட்சியவாத எண்ணங்கள் முன்னாவுக்கு இல்லாமல் போனது. சமூகத்துக்காக ரஸ்கோல் பணயத்துக்கு கடன் தரும் பெண்ணைக் கொலை செய்ய, பொருளாதார உயர்வுக்காக, அதிகார வெற்றிக்காக மட்டுமே முன்னா தன் முதலாளியைக் கொல்லுகிறான். பின் நவீன வேளையில் அறத்தோடு நம் யுகத்தில் மனசாட்சியும் காலாவதி ஆகிட அதிகாரம் மட்டும் நிஜமாகிறது. அதனால் முன்னாவுக்கு குற்ற உணர்வுகள் இல்லை. ரஸ்கோலின் அதே மாதிரியில் தோன்றியும் அவனுக்கு பாவமன்னிப்பு பெற, புத்துயிர்க்க அவசியம் இல்லை. இதே தொனியில் ஒரு தமிழ்க்கவிதை:

" நீரடியில் கிடக்கிறது
கொலை வாள்

இன்று ரத்த ஆறுகள்
எதுவும் ஓடவில்லை
எனினும் ஆற்று நீரில் கரிக்கிறது ரத்த ருசி

இடையறாத
நதியின் கருணை
கழுவி முடிக்கட்டுமென்று
நீரடியில் கிடக்கிறது
கொலை வாள் "
(" நீராலானது ": மனுஷ்யபுத்திரன்)

ஆறாவது வரியின் "ரத்த ருசி" ஒவ்வொரு காங்கிரஸ் ஆதரவாளனின் நாவிலும் ருசிக்கும் இலங்கைத் தமிழ் அப்பாவியின் ரத்தம் தானே? இறுதியில் நாம் காண்பது இந்த கொலை வாள் யுகத்திலும் கலைஞனை உயிர்த்திட வைக்கும் கருணை மீதான நம்பிக்கை.

இதனிலிருந்து இயல்பாக இந்த கேள்வி தோன்ற வேண்டும். ஏன் ஆற்று நீரில் ஆர்.டி.எக்ஸ் மூட்டை என்று எழுதக் கூடாது? ஏன் மரம், கடல், சிறகு, ரயில் நிலையம், மழை போன்ற சில வார்த்தைகள் கவிதையில் திரும்பத் திரும்ப வருகின்றன?

"இதோடு
காகிதங்களை மூடுகிறேன்
பேனாவை ... கதவுகளை, இமைகளை
எல்லாவற்றையும் மூடி விடுகிறேன்"

இன்றைய முன்னணி எழுத்தாளர்கள் கணினியில் தட்டி, மின்னஞ்சலில் அனுப்பி, சில மணி நேரங்களில் இணையதளங்களில் பிரசுரிக்கும் சூழல் இருந்தும் "காகிதம்", "பேனா" போன்ற வார்த்தைகளின் அதிர்வுகளை முன்னவை தருவதில்லை. "மின்னஞ்சலை மூடுகிறேன் ... இமைகளை எல்லாவற்றையும் மூடி விடுகிறேன்" என்றால் அதே பொருளாழம் ஏற்படுவதில்லை. முந்தைய மாதிரியை சற்றே தகவமைத்து புதுமாதிரியை உருவாக்கி அதன் படி மட்டுமே புரிதல் நேர்கிறது. முன்மாதிரியை புதியதால் ஒரேயடியாய் இடம் மாற்றி அல்ல. "காகிதம்" மற்றொரு பொருள் கொண்டு புது மாதிரி ஆகி வாழுமே அல்லாமல் அழியாது.

வித்துவான் எறி நின்று அடித்தது, நீங்கள் விரல் சொடுக்கினது, மானுட தரிசனம், படைப்பாக்கங்களின் அர்த்தங்கள், அனைத்தும் நடப்பதற்கு சில கணங்கள் முன்பே மூளை நரம்பணுவினுள் மின்னியல் தெறிப்புகளில் மாதிரிகளால் ஒப்பிடப்பட்டு ஒத்திகையாகின்றன. அதன்படி ஏற்படுகின்றன\உருவாகின்றன. கொலைக் வாளின் பயணம் தொடர்கிறது.

Comments