Sunday, August 16, 2009

எழுத்தாளன் என்ற மகான்: சில கற்பனைகள், வேண்டுகோள்கள்

பல வருடங்களுக்கு முன் காதலன் என்றொரு படம் வந்தது. காதலை ஒரு கடமையாக கருதி ஒரு மனதோடு செயல்பட்டால் கவர்னர் பொண்ணையும் கவரலாம் என்பது மையக் கருத்து. பாலகுமாரன் இதை ஒரு பக்தி நிலைக்கே எடுத்து போயிருந்தார். காதலர்கள் ஓடி வந்து கட்டிப் பிடிக்கும் முன் நிதானிக்க, தப்பு நேராமல் இருக்க (?) பத்து வரை எண்ணுவார்கள், அதாவது சூடம் சாம்பிராணி டிங்டிங்டிங் ...

நிதானத்தை இங்கு கவனிக்கவும். ஒருவரை ஒருவர் வாரிக் கொள்வது, புறம் பேசுவது, விமர்சிப்பது போன்ற பல 'பது, வதுகள்' எங்கள் அலுவகத்தில் நடக்கும், உடனே மறந்து அடுத்து ஆரம்பிப்போம். ஆனால் இதையே எழுத்தில் செய்வதை தீவிரவாத செயலாக எடுத்துக் கொள்கிறோம். சகஜ வாழ்வில் உங்கள் மனைவி, மேலாளர், சகபயணிகள் உங்கள் 'டேய் முட்டாள்' என்று வெளிப்படையாகவோ அல்லாமலோ அழைப்பதில்லையா? நகரப் போக்குவரத்தோடு அதையும் சகஜமாக எடுத்துக் கொள்ளும் நாம் எழுத்து ஊடகத்தை 'விபத்து நடக்கும் பகுதி, கவனமாக செல்லவும்' என்று அணுகுவது ஏன்? 'மதில்கள்' நாவலில் பஷீர் அரசாங்கத்தை விமர்சித்து எழுதி, ராஜதுரோக குற்றம் சுமத்தப்பட்டு ஜெயிலுக்குப் போகிறார். அங்கு ஒரு போலீஸ்காரர் இக்குற்றத்தை அறிந்து 'ஸ்ரீபத்மனாபா' என்று கடவுளை விளிப்பார். நம் எழுத்துலகம் ஒரு சுவாமி சன்னிதி ஆகிவிட்டது.

ஆ.மார்க்ஸைத் தவிர பெரும்பாலானோர் எழுத்தில் கற்பிக்கப்பட்ட அதிநிதானம், படுகவனம் உள்ளது. மேலும் கையில் குச்சி, கொட்டை மேல் கோமணத்தோடு காசு, குடும்பம், நடைமுறை சிக்கல்கள் பற்றி கவலைப்படாத ஞானப்பழங்களாக இவர்கள் பற்றின பிம்பம் இருக்கிறது. பெட்ரோல் விலை உயர்ந்தால், வெங்காயம் கிலோ ஐநூறு என்றாலும் ஈயாடாது (சுஜாதா ஒரு விதிவிலக்கு). ஆனால் சு.ரா வுக்கு நரைத்த தாடி, பிரமிள் படிமத்தில் ஓட்டை என்றால் தமுதிமுவென பாய்ந்து வருவார்கள். டால்ஸ்டாய் கவலைப்பட்டாரா என்று கேட்காதீர்கள் -- உங்கள் மனைவி கவலைப்படும் போது நீங்களும் யோசிக்க வேண்டும். இந்த சூழலில் செல்லமுத்து குப்புசாமி (அவர் என் உறவினர் அல்ல) போன்ற தரையில் கால்பாவிய மனிதர்களின் வருகை எனக்கு தெம்பூட்டுகிறது.

மேற்கூறிய பிம்பம் கற்பனாவாத காலகட்டத்தில் எழுத்தாளனை தீர்க்கதரிசி, சமூகத்தின் மனசாட்சி, சிந்தனை மையம் போன்று கருதி அவர்களுக்கு என்று நாற்காலி ஒன்றை போட்டுக் கொடுத்ததன் நீட்சிதான். ஆனால் நாம் இப்போது இந்த நாற்காலியை சற்று நகர்த்தி மூலையில் போட வேண்டும். இன்றைய எழுத்தாளனுக்கு உட்கார நேரமில்லை.

தொழில் நுட்ப வளர்ச்சி யோசிக்க, உணர்ச்சி வசப்பட தயாராக உள்ள அனைவருக்கும் எழுத, அரட்டையடிக்க, கட்டிப்புரள இடம் அமைத்துத் தந்துள்ளது. என் மனைவி இரண்டு கட்டுரைகளே எழுதியுள்ளார். அவளது முதல் கட்டுரையை 635 பேர் ஒரே நாளில் படித்துள்ளனர். 52 பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இரண்டாவது 'Faith Healer' என்ற ஆங்கில நாடகம் பற்றிய வலைப்பூ. இதில் நடித்த கார்த்திக் ஸ்ரீனிவாசன் என்ற திறமை மிக்க நடிகர் பற்றி நான் இரண்டு பத்திரிகைகளில் எழுதியிருக்கிறேன் (புதிய காற்று, உயிரோசை). ஆனால் கார்த்திக் என் மனைவியின் வலைப்பூவை தேடிப் பிடித்து நன்றி கூறியிருக்கிறார். 'எழுத்து' காலகட்டத்திலிருந்து நாம் எவ்வளவு தூரம் நகர்ந்து வந்திருக்கிறோம் பாருங்கள். ஒரு எழுத்தாளன் கவனிக்கப்பட ஒரு பத்தி கூட போதுமாகிறது. பிரசுரத்துக்காக மாதக்கணக்கில் காத்திருப்பதோ, பிரசுரமானதை அடுத்தவர்கள் படிக்கிறார்களா என்று ரகசியமாய் கவனிப்பதோ அல்லது வாசகனைத் தேடி டிபன் பாக்ஸ், குடை சகிதம் பிரயாணங்கள் செய்வதோ ஈஸ்டுமேன் கலர் சமாச்சாரமே. எல்லாம் ஒரு மவுஸ் சொடுக்கில் ஆரம்பித்து முடிகிறது.

குறும்பேசியின் குறுந்தகவலை பயன்படுத்தி நான் என் சில கவிதை வரிகளை உலவ விட்டிருக்கிறேன். வேறு பலரும் செய்கிறார்கள். கூடவே நல்ல ஜோக்குகள், அரசியல் கருத்துகள், குட்டிக்கதைகள். இன்பா சுப்பிரமணியம் திருமாவின் உண்ணாவிரதம், இலங்கைத்தமிழர் படுகொலைச் சூழலில் கிரிக்கெட் போன்ற பல கருத்துக்களை குறுந்தகவல்களை மூலம் சொல்லியியது என்னை யோசிக்க, விவாதிக்க பிறகு உயிரோசையில் கட்டுரை எழுத வைத்துள்ளது. நூலக அலமாரியிலிருந்து தூசு தட்டி எடுத்த புத்தகம் படித்து, அல்லது தினத்தந்தி, தினகரன் பார்த்து எதிர்வினை செய்த காலத்திலிருந்து நாம் செய்துள்ள பயணத்தை, கருத்துக்கள் உற்பத்தியாகி மறுஅவதரிக்கும் வேகத்தை கவனியுங்கள்.

இதனால் பலதரப்பட்ட ஈடுபாடுகள், மனநிலைகள், அவதானிப்புகளை நாம் கவனிக்க முடியும். இலக்கியம், தத்துவம், டிஷ்யும் டிஷ்யும் விட்டு வெளிவராமல் தேங்கி விட்ட நம் தமிழ்உரை நடைக்கு இந்த இணைய பிரளயம் ரொம்ப அவசியம். உதாரணமாய் விந்து வங்கி ஒன்றில் விற்று வெளிவந்தவன் தன் மனநிலை பற்றி ஒரு வலைப்பூ எழுதினால் எவ்வளவு சுவாரசியம், புதுமை. அக்குளில் ரெக்சின் பையோடு பேருந்தேறும் ஒரு அண்ணாச்சியிடம் நாம் இதை எதிர்பார்க்க முடியாது. அவர்கள் 'இந்த வருசம் ஊர்த்திருவிழாவுக்கு போக முடியுமா' என்று தான் திரும்பத் திரும்ப யோசிப்பார்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. போதும்.

இன்றைய இணைய எழுத்தின் பொதுவான தரம் பற்றின கவலை வீண். நிறுவப்பட்ட எழுத்தாளர்களின் நிழலிருந்து தானாக நடைபழகி தடுமாறி வெளியேறியபடி ஒரு புதிய தலைமுறை நிச்சயம் உருவாகும். பூனை வளர்ப்பதிலிருந்து சுலபமாய் கொலை செய்வது வரை அவர்கள் பேசலாம்.

குறுந்தகவலில் தமிழ் எழுத்துரு பரவலாக ஆகி விட்டால், பொதுஅரட்டை போன்ற அம்சங்கள் forward மெசேஜுகளுக்கு பயன்படுத்துவது போன்ற தொழில் நுட்ப வசதிகள் ஏற்பட்டால், அந்த புரட்சி படைப்புலகை திருப்பிப் போடலாம். கணக்கில்லாத குறும்பேசி பத்திரிகைகள் தோன்றி மறையும். இவற்றில் எவ்வளவு கனமான விசயங்களையும் நகைச்சுவை கலந்தால் அலச முடியும். ஸ்டாலினை முதல்வர் ஆக்கலாமா என்று திட்டமிட முடியும். எதிர்காலத்தில் மனுஷ்யபுத்திரன் குறும்பேசிக்குள் பத்திரிகை, நூல் பிரசுரம், வெளியீடு என்று திட்டமிட்டு 'பத்து வருஷத்துக்கு முன்னாடியே எனக்கு அப்படியொரு கனவு இருந்தது' என்பார்.

சைக்கிள்கள் மத்தியில் மெர்செடிஸ் பென்ஸ் போல் குண்டு நூல்களும் வரும். பந்தாவாக பொய்ங் பொய்ங் கொஞ்சம் புகை எல்லாம் இருக்கும்.

எழுத்தாளனுக்கு சம்பளம்? உள்வரும் அழைப்புக்கு வெர்ஜின் மொபைல் நமக்கு காசு தருவது போல் forward குறுந்தகவல்கள் பற்றி சில நிறுவனங்கள் யோசிக்கலாம். உள்வரும் கருத்து ஒன்றுக்கு 20 பைசா என்று. இதில் விளம்பரமும் செய்யலாம்.

அவன் பாதுகாப்புக்கு குண்டாந்தடி ஏந்திய தொண்டர் படை? அவன் உயிர் அவ்வளவு முக்கியமில்லை.

தவளை வாழ்நாளில் ஒரு கோடி முட்டையிடும், அதில் சில பத்துகள் தான் நிலைக்கும்.

இந்த நிலைப்பில் இருந்துதான் அடுத்த எழுத்தாளனின் நாற்காலி ஏற்பாடாகும். நடைமுறை நெரிசலில் கோடியில் பலர் விலகி விடுவார்கள். நடைமுறை தள்ளுமுள்ளுகளிடையே எழுத்துப்பித்து தலைக்கேறிய காரணத்தால் தொடர்ந்து எழுதும் ஒருவனாக இருப்பான் இந்த ஏகன்.

அவன் ஒரு கோவணப் பண்டாரமாக இருக்க வேண்டாம் என்று நாம் எதிர்பார்ப்போம். மாறாக மரக்கொம்பிலிருந்து, அணில் குஞ்சுகள் மத்தியிலுருந்து அவன் இறங்கி வரட்டும். தாறுமாறாக விரைந்து மோதவரும் மாநகரப் பேருந்துகள், கார்களிடமிருந்து அதிர்ஷ்டத்தில் தப்பிப்பவனாய், அறிவியலின் குறுக்கும் நெடுக்குமான பாய்ச்சல்களை பல திசைகளிலாய் பின் தொடர்பவனாய், குழம்பிப் போன மக்கள் கூட்டங்களின் விசித்திரங்களை முணுமுணுக்காமல் கவனிப்பவனாய் அவன் இருக்கட்டும். முக்கியமாய் தன் அந்தரங்க அசிங்கங்கள், மேன்மைகளை நெருக்கமான நண்பனிடம் வசை, கெஞ்சல், அழுகை சிலசமயம் கவனம் மற்றும் நிதானம் என வெளிப்படுத்துவது போலவே வாசகனிடமும் அவன் பேச வேண்டும். அவன் சொல்வது சரியாகவும், தவறாகவும், முட்டாள்தனமாகவும் இருக்கும். 'எஸ் மை ஆனர்' என்று சமூகம் அவனிடம் எந்த தீர்ப்பையும் எதிர்பார்க்க வேண்டாம்.

வரலாறு எழுதும் புத்திஜீவிகள் அவனை தவிர்த்து விடுங்கள். சிறந்த பத்து பட்டியல் போடும் கணக்கு மாஸ்டர்கள் அப்படி ஒருத்தன் இல்லவே இல்லை என்று சத்தியம் செய்யுங்கள். விடுங்கள். அவன் இப்போது திரைப்படம் எடுத்துக் கொண்டிருக்கலாம். ஓவியம் தீட்டலாம், நடிக்கலாம், சூப்பர் சிங்கரில் பாடலாம், அடுத்த பிரபுதேவா நான் தான் என்று குதிக்கலாம், ஒரு பெண்ணை நோட்டம் விடலாம் அல்லது இனிமேல் தொடப்போவதில்லை என சபதம் எடுத்து குப்பைத் தொட்டியில் பேனாவை வீசலாம்.

இது போல் பிரஸ்தாபிக்க ஏராளம் உள்ளது. ஆனால் கரப்பான் பூச்சி பிடிக்கிறேன் என்று அடுக்களைக்கு சென்ற என் பூனை கடமை வழுவி அங்கேயே தூங்கி விட்டது. அதைப் போய் உசுப்ப வேண்டும். இதை இன்னொரு நாள் பேசலாம்.

No comments: