Friday, August 14, 2009

தொட்டு விலகும் தீவுகள்சுயபுணர்ச்சி தனிமைவாதியின் பிராந்தியம். செழிப்பான கற்பனை, குறியின் ரத்தஓட்டம், விறைப்பு, முன்விந்து ஏற்படுத்தும் வழுவழுப்பு பற்றின தன்னுணர்வு, மென்தசை, நரம்புமையங்களை காயப்படுத்தாத இயக்கக் கட்டுப்பாடு, தனிப்பட்ட மனஓட்டங்கள், உடற்பாங்கு பற்றின நுண்ணுணர்வு உள்ளவர்கள் சுயபுணர்ச்சி மூலம் நேரடி உறவின் உச்சகட்டத்தை, பரவசத்தை ஏறத்தாழ அடைய முடியும். நானிங்கு ஒரு நீடித்த, குற்ற உணர்வற்ற சுயபுணர்ச்சி செய்கையை குறிப்பிடுகிறேன் என்பதை கவனியுங்கள், 2 நிமிட அவசர சுயவதையை அல்ல.

சரி, சுயபுணர்ச்சியை நேரடிப் உடலுறவின் பதிலிடாகக் கொள்ளலாமா? நேரடிப் பாலுறவு அந்தரங்கமான சமூக உறவாடல். திருமணத்துக்குப் பின்னான பாலுறவு இதனாலே தனிமனித பங்கீட்டை வேலை, மதம் போன்ற தினசரி சடங்குகளில் வரவேற்கும் சமூகத்தால் ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. அலுவலக, அயல், நட்பு வட்டாரத் தளங்களில் தொடுபுலன் நெருக்கங்கள் சாத்தியமற்ற சமூகத்தில் ஒருவனால், அறைக்குள் ஆண்/பெண் உடலுடன் புலன்வழி நெருங்க, நுகர, உரையாட முடிகிறது. யோசித்துப் பாருங்கள். பள்ளியில், கல்லூரியில், அலுவலகத்தில், அங்காடியில், அயலில், தெருவில், ஊடகங்களில் உங்களோடு நாள்தோறும் உறவாடும் எத்தனையோ நபர்களின் வியர்வை மணத்தை, உடல் அமைப்பை உங்களால் நினைவுக்கு கொண்டு வர முடிகிறதா? இவர்களோடு உங்கள் பழக்கம் வருடங்கள், மாதங்கள் கடந்ததல்லவா?

எனக்கு உடனடி நினைவுக்கு வரக்கூடியவை அப்பாவின், நண்பன் சபரியின் உடல் மணங்கள். இவர்கள் இருவரிடமும் ஒட்டிக் கொள்ளும் படியான நெருக்கத்துடன் பழகியிருக்கிறேன். என் அறையில் முன்பெல்லாம் நாற்காலிகள் கிடையாது. ஒரு குறுகின மரக்கட்டில் மட்டுமே. சபரி பத்மனாபபுரம் கோட்டை மதிலிருந்து நடந்து வேர்வை கசகசக்க வந்தால், என்னை நெருக்கி அந்த குறுகின கட்டிலில் படுத்துக் கொள்வான். பள்ளியிலும் நாங்கள் அருகருகிலேயே ஒட்டிக் கொண்டு அமர்ந்திருந்தோம். அப்பாவின் வியர்வை நினைவுக்கு அவர் வாரத்துக்கு ஒரு முறைதான் குளிப்பார் என்பது காரணம். பிறகு கல்லூரி விடுதியில் இடப்பற்றாக்குறை காரணமாய் நாங்கள் நாற்காலிகளை வெளியே போட்டு விட்டு, கட்டிலை சுவரோடு கவிழ்த்திருந்தோம். அறையில் 10 பேர் சேர்ந்து அரட்டையடித்து, கூட்டமாய் தூங்கின நாட்களில் அந்த நெருக்கம் தொடர்ந்தது. விடுதிக்குள்ளாக நாங்கள் பெரும்பாலும் ஜட்டியுடன் திரிந்ததும், குளியலறைகளில், நண்பர்கள் மட்டுமான தருணங்களில் குளியலறைகளில் நிர்வாணமாய் நீராடியதும் அடுத்த கட்டங்கள்.

கல்லூரியை விட்டு வெளியேறி, மேன்சனில் குடியேறிய பி.பி.ஓ அடிமை காலத்தில் என் சமூகம் சுருங்கியது. மனிதர்கள் எப்போதும் கண்ணாடி அறைகளில் தங்களை அடைத்து நடந்தார்கள். தோள் மீது கையிட்டு பேசும் கூச்சம் வந்தது. மேன்சனில் நானும், நண்பன் பாண்டியனும் தங்கின குறுகின அறையில் இரு கட்டில்கள். நாங்கள் இரவு 2 மணி வரை எல்லாம் சுவாரஸ்யமாக பேசியிருக்கிறோம். ஆனால் எதிரெதிர் கட்டில்களில், மொட்டை மாடி காகங்கள் போல, இடைவெளி விட்டு நேருக்கு நேர் பார்த்தபடி. நான் அப்போதும் கைவிடாத கல்லூரிப்பருவ ஜட்டிக் கலாச்சாரத்தை அவன் சற்று சங்கடத்தோடு சகித்துக் கொள்வான்.

திருமணமான புதிதில் பால்யத்தில் பயன்படுத்திய கட்டிலை ஊரிலிருந்து வரவழைத்தேன். அதைத் தவிர அமர்வதானால் தரையில் தான். நண்பர்கள் வந்தால் பாய்விரித்து அமர்ந்து உரையாடுவோம். ஒருக்களித்துக் கிடந்து பேச எனக்கு பிடித்திருந்தது. ஒருவேளை உறங்கினால் கூட அவர்கள் புரிந்து கொள்வார்கள். பிறகு எங்களை நாகரீகப்படுத்த உத்தேசப்படுத்த மாமியார் 5 மடக்கு நாற்காலிகளை கொண்டு வந்து இட்டார். இப்போதெல்லாம் விருந்தினர்கள் 5 பேர்கள் வரை அமர வைக்க முடிகிறது என்பதில் எனக்கு பெருமிதம் தான். அதற்கு மேலோ கீழோ வரும்போது காலியான, அல்லது இல்லாத நாற்காலிகள் நிறைய யோசிக்க வைக்கின்றன. வெகு அருகில் நாற்காலிகளை இழுத்து இட்டாலும் என்ன பேசுவதென்று சில நேரங்களில் மறந்து போய் விடுகிறது. தள்ளி மௌனமாய் அமர்வது கொடுமை. பேச்சு பீறிட்டு இருவேறு திசைகளில் திரும்பும்போது என் மனைவியிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கும் நானும், என்னிடம் சொல்லப்பட்டவைகளுக்கு அவளும் பதிலளிப்பாள். அலுவலகத்துக்கு வந்தால் என் தோழிகள் யாவரையும் அவர்கள் பூசும் நறுமண தைலங்கள், ஆடை வண்ணங்கள் படியே நினைவில் அடுக்கி இருக்கிறேன். அத்தர் மணமென்றால் கதவு திறக்கும் போதே திரும்பாமலே சம்மந்தப்பட்டவரை அழைத்து பேச ஆரம்பித்து விடுவேன். ஒரு நாள் தைலம் பூசாமல், மங்கலான நிறங்கொண்ட உடையில் வந்த கிறிஸ்டினாவை என் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. சீனாவிலிருந்து தினசரி அரட்டைக்கு வரும் நண்பி லியானா ஒவ்வொரு வாக்கியத்துக்குப் பின்னும் புன்னகை ஸ்மைலி அனுப்புவாள். அவளை ஒருவித இளித்தவாய்ச்சியாக கற்பனையில் வைத்திருக்கிருக்கிறேன்.

தற்போதைக்கு தொடுபுலன் வழியாய் உறவாட முடிகிற இரு ஜீவன்கள் என் மனைவியும், பூனைக்குட்டியும் தான். உடல் மன பதற்றங்கள், இறுக்கங்கள் தளர்வதற்கு வீட்டுக்குள் புகலிடம் தேடுகிறேன். வெளியுலகில் புலன்வழி நெருக்கங்கள் இன்றி வறண்ட நான் மனைவியுடன், வளர்ப்புப் பிராணியுடன் தோதான உறவை தக்க வைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால் இதுவும் திரு. ரமணன் டீ.வியில் கணிக்கும் காலநிலை போன்றதே. இருவரும் கடித்து பிறாண்டி சீறி தனியே செல்லும் நாட்கள் உண்டு. சிக்னல் கிடைக்காத கைப்பேசி நிலைதான் அப்போது. மௌன இரவுகள் தொடர்ந்து கணினியில் கிரிக்கெட் விளையாடுவதில் கழியும். மறு நாள் ஒரு கணினியிலிருந்து மற்றொரு கணினிக்கு என அலுவலக வாழ்க்கை நகரும்.

திருமணம் ஆகாதவர்கள், உடலுறவு சாத்தியமற்றவர், திருமணத்துக்குப் பின்னுடன் துணையுடன் ஒரே வீட்டுக்குள் விலகியே இருப்போர் நம் நத்தைக்கூடு சமூகத்தில் எட்டிலுள்ள மனிதர்கள் தரும் காட்சி புலன் சமிக்ஞைகளுடன், ஊடக பிம்பங்கள் சப்தங்களோடு மட்டுமே வாழ்கிறார்கள். சமூகத்துடன் தொடர்புறுத்துவதில் இயல்பிலேயே சிரமங்கள் கொண்ட சமூக ஊனர்களுக்கு வெளிப்பாட்டு, பழக்க நெருக்கடிகள் மேலும் அதிகம். இவர்களுக்கு சாத்தியமுள்ள உடல்வழி தொடர்புறுத்தல் முறை சுயபுணர்ச்சி மட்டுமே. காரணம் கனவில் போலவே சுயபுணர்ச்சியிலும் உடலின் கற்பனையின் சமபங்கீடு உள்ளது. உதாரணமாய் பிடித்த துணையுடன் கிளர்ச்சியூட்டும் விதமாய் செயலொன்றை கற்பித்து சொந்த உடலை தீண்டுவது அசைப்பது மூலம் ரத்தப்பாய்ச்சலை, சூட்டை, உணர்வெழுச்சியை, அதிர்வை, நெருக்கத்தை உணர முடியும். இவ்வாறு தனிமையை தள்ளிப் போடுதல் எனும் மனித வாழ்வின் முக்கிய கடமை நாம் தொடர்ந்து ஆற்றலாம். உணரலாம் என்று சொன்னதை கவனியுங்கள். புலன்வழி மானுட நெருக்கம் என்றும் உணர்தல் மட்டுமே. நீங்கள் துளைப்பது குறியோ, பாவையோ, மிருதுவான தலையணையோ நெருக்கம் வசதி, மனஏற்பு பொறுத்து அமைவதே. உதாரணமாய், நீங்கள் விரும்பும் துணையின் வியர்வை வீச்சத்தின் பால் வெறுப்பு ஏற்பட்டால், உங்களால் நெருங்க முடியாது. விருப்பமெற்பட்டால் அதுவே கிளர்ச்சி ஏற்படுத்தும். நேரடி புணர்ச்சி கூட புலனுறுப்புகளின் சமிக்ஞைகளை ஏற்று மனமும், உடலும் ஆடும் நாடகம் தான். சுயபுணர்ச்சி அடுத்தபடியான மேளதாளங்கள் இல்லாத தனியிசை.

எகிப்தியர்கள் சுயபுணர்ச்சியை இறைச்செயலாய் கருதினார்கள். ஆட்டாம் எனும் கடவுள் சுயபுணர்ந்ததில் பீச்சிட்ட விந்தில் பிரபஞ்சம் உருவானதாய் அவர்களிடையே புராண கதை உள்ளது. கிரேக்கர்கள் சுயபுணர்ச்சியை அடக்கின பாலியல் உணர்ச்சிகளின் பாதுகாப்பான வெளிப்பாடாய், களிப்பான செயலாய் நிவீன சிந்தனையோடு ஒத்துப் போகும் விதத்தில் கருதினர். 18ஆம் நூற்றாண்டில் டிஸட் எனும் மருத்துவர் சுயபுணர்ச்சி வாதம், பைத்தியம், தலைவலி, நரம்பியல் நோய்கள் உள்ளிட்ட பலவித நோய்களை ஏற்படுத்தும் எனுமொரு அபத்தமான ஆய்வறிக்கையை சமர்ப்பித்தார். மாபெரும் சிந்தனையாளர்களான காண்ட், வால்டெயர் போன்றோர் இதை ஆதரித்தது இந்த மூடநம்பிக்கைக்கு தூபம் போட்டது. அடுத்த இரண்டு நூற்றாண்டுகள் ஐரோப்பாவில் சுயபுணர்ச்சி கொடும்நோயாக பாவிக்கப்பட்டு அதைத் தடுப்பதற்கான கட்டுப்பாடுகள், கருவிகள், சிகிச்சை முறைகள் ஏற்படுத்தப்பட்டன. ஆண்கள் குறியைத் தொட்டு விடாதபடி கால்சட்டை வடிவமைக்க, பெண்கள் கால்மேல் காலிடுவதை தவிர்க்கும் விதத்திலான தனித்த இருக்கைகளில் அமர்த்தப்பட, பெண்கள் சைக்கிள், குதிரை ஓட்டுவது தடை செய்ய கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. சுயபுணர்வை தடுக்க கன்னிமை அரைக்கச்சை அணிவிக்கப்பட்டது. மின்அதிர்வு சிகிச்சை அளிக்கப்பட்டது. சில நேரம் பாலுறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன. அக்காலகட்டத்தில் பெருவாரியாய் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் குழந்தைகளுக்கு சுன்னத் செய்யப்பட்டதற்கு சுயபுணர்ச்சி தடுப்பும் ஒரு முக்கிய காரணம். சுயபுணர்வை தடுக்க பல் கொடூரமான கருவிகள் பயன்படுத்தப்பட்டன. 1856 முதல் 1932 வரை அமெரிக்க காப்புரிமை அலுவலகம் 32 சுயபுணர்வு தடுப்புக் கருவிகளுக்கு காப்புரிமை அளித்தது. டாக்டர் பிளக் 1831-இல் ஆண்குறியை கட்டுப்படுத்தும் இரும்புக் குழாய் ஒன்றுடன் கூடிய சுயபுணர்வு தடுப்பு உடையை வடிவமைத்து வெற்றிகரமாய் சோதித்தும் பார்த்தார். 1950-இல் பாஸ்டன் விஞ்ஞானிகள் சில கூரிய ஊசிகள் கொண்ட இரும்பு குழாய் கருவியை வடிமைத்தனர். தூங்கும் முன் குறியில் அணிய வேண்டிய இக்கருவி பாலியல் கனவுகள் மற்றும் தூக்கத்தில் விந்து வெளியாவதைத் தடுப்பதற்கு. 1876-இல் காப்புரிமை வழங்கப்பட்ட ஸ்டீபன்சன் ஸ்பெர்மாட்டிட் டஸ் எனும் கருவியிலுள்ள ஒருவித பையில் குறியை நுழைத்து கால்களிடையே கட்டி விடுவார்கள். பொவன் கருவியில் உள்ள கோப்பையில் குறி நுழைக்கப்பட்டு விரைப்பை மயிர்கள் சங்கிலிகளால் அதோடு இறுக்க பிணைக்கப்படும். விரைப்பு ஏற்படுகையில் மயிர்கள் இழுபட்டு கடுமையான வலியை உருவாக்குவதற்கு இந்த ஏற்பாடு. 1893இல் பிராங்கு ஓத் வடிவமைத்து காப்புரிமை பெற்ற கருவி குளிர்நீரும் நெம்புகோற்களும் கொண்டது. கருவியிலுள்ள துளைக்குள் நெம்புகோற்கள் இடையே ஆண்குறி நுழைக்கப்படும். இரவில் கனவின் போது விரைப்பு ஏற்பட்டால் நெம்புகோற்கள் நகர்ந்து குளிர்நீர் வழிந்து வெம்மையான குறியை நனைக்கும்; விரைப்பு தணியும்.

இருபதாம் நூற்றாண்டில் ஆரம்பத்தில் இத்தகைய மூடநம்பிக்கைகள் மெல்ல மறைந்து சுயபுணர்வின் கீழ்வரும் உடல், மன நல பயன்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

சுயபுணர்ச்சியால் விந்து சேமிப்பை புதுப்பிக்கலாம். கருவுறும் வாய்ப்பை இது அதிகரிக்கிறது.
புணர்ச்சியின் போது விந்தை எளிதாய் வெளியேற்ற இது சிறந்த பயிற்சி. வெளியேற்றும் எண்ணிக்கையின் செறிவும் அதிகரிக்கிறது.
சுயபுணர்ச்சி செய்வோருக்கு விரைப்பை புற்று நோய் வரும் வாய்ப்புகள் குறைவு. ரத்தக்கொதிப்பு, மாரடைப்புக்கும் இது நல்ல மருந்து. உடலுறவு நம் சமூகத்தில் அருகி வருவதால் அதற்கு மாற்றாக சொல்கிறேன்.
இனி பெண்களுக்கு. கருவுறுதலுக்கு வனாந்தர வாழ்வு காலத்திலிருந்து தொடரும் ஒரு பரிணாமப் பின்னணி உள்ளது. இயற்கை நம்மை அடிப்படையில் பல்துணை புணர்ச்சியாளர்களாய் உருவாக்கியுள்ளது. மரபணுக்குட்டையில் மாறுபாடு, இதன் காரணமாய் உருவாகும் வலிமையான சந்ததி என பல்துணைப் புணர்ச்சிக்கு பல அனுகூலங்கள் உண்டு. இதன் காரணமாய் இன்று வரை ஒன்றுக்கு மேற்பட்ட புணர்ச்சிகள் நிகழும்போது கருவுறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இதற்கு உடல், மனரீதியான பின்னணிகள் உள்ளன. நேர்ப்புணர்ச்சிக்கு 1 நிமிடத்துக்கு முன்னர் அல்லது 45 நிமிடங்களுக்குப் பின்னர் பெண் சுயபுணர்ச்சி செய்வது முன்நாகரிக பல்துணை உடலுறவுக்கு ஆரோக்கியமான மாற்று. கிளர்ச்சி நிலையில் இருக்கும் பெண்ணுக்குள் செலுத்தப்படும் விந்து மட்டுமே பத்திரமாய் கருமுட்டையை சென்றடையும்.

கருவுறுதலை பெண் மனரீதியாய் தீர்மானிப்பதற்கு ஆய்வாளர்கள் மேலும் பல ஆதாரங்கள் தருகின்றனர். யூத முகாம்களில், போர்ச்சூழல்களில் பெண்கள் கருத்தரிக்கும் சதவீதம் மிகக்குறைவாகவே இருந்துள்ளது. ராவணர்கள் கவனிக்கவும். (இது பற்றிய மேலும் பல புதிய தகவல்களுக்கு பெனிலோப் ஷட்டில் மற்றும் ரெட்குரோவ் எழுதிய "தெ வைஸ் வூண்டு")

இதை நாம் எப்போதும் உணர்ந்திருக்கிறோம்: வெதுவெதுப்பான அரவணைப்பு, ஆதரவான கரம் பற்றுதல் தரும் நம்பிக்கையும், உறுதியும், நெகிழ்ச்சியும் ஆயிரம் வார்த்தைகளுக்கு இல்லை. நம் இருப்பை, உறவின் நிலைப்பை உறுதி செய்ய நாம் எண்ணற்ற குறுந்தகவல்களை பரிமாறுகிறோம். கத்தை கத்தையான இந்த மணிமொழிகளை, உணர்ச்சி கொந்தளிக்கும் சொற்றொடர்களை நேரில் சொல்வதானால் நாம் மயங்கி விழுந்திருப்போம் அல்லது வேடிக்கை எண்ணி சிரித்திருப்போம். தொழிநுட்பத்தால் அந்நியமாகிய நாம், கைப்பேசி, கணினி போத்தான்களை அழுத்தி எதையோ நிரப்ப முயல்கிறோம்; ஒரு ராட்சத பலூனை ஊதி நிரப்பப் பார்க்கிறோம்.

பி.பி.ஓ நிறுவனங்களில் பக்கத்தில் இருப்போரிடம் கூட கணினி மெஸஞ்சர்கள், கைப்பேசி குறுந்தகவல்கள் மூலம் தகவல் பரிமாறுவது தான் வழக்கமாக உள்ளது. நான் இளமையில் மகா மௌனி. ஆனால் இந்த நகரத்துக்கு வந்த பிறகு இப்படி ஒரே நேரத்தில் மூன்று நான்கு பேருடன் பேசுகிறேன்: இடது கையில் கைப்பேசி, வலது கையில் மௌஸ், தலை கணினித் திரைக்குள், ஒரு காது உடன் பணிபுரிவோரை கவனிக்க ஒருபக்கம், மற்றொரு காது பின்னால் வரும் கண்காணிப்பாளர்களை எதிர்பார்த்து. என் பக்கத்து தடுப்பில் அமரும் கயல்விழியுடன் இப்படி பலமணி நேரங்கள் அரட்டை அடித்திருக்கிறேன். எதிர்மொட்டை மாடியில் குளிக்கும் கிழவரை ஜன்னல் வழி சேர்ந்து வேடிக்கை பார்த்திருக்கிறோம். ஆனால் அவருடன் ஒரு நாள் உணவறையில் தடுப்பின்றி சேர்ந்து அமரும் சந்தர்ப்பம் நேர்ந்தது. நான் கூச்சமாக, புதுமையாக உணர்ந்தேன். தொடர்ந்து என்னுள் ஒரு பாலியல் மின்சாரம் பாய்வது விபரீதமாய், வேடிக்கையாய் தோன்றியது. சகஜமாக வெகுநேரம் பிடித்தது.
வன்முறைக்கும் தொடுபுலன் நெருக்கத்துக்கும் இடையே துண்டிக்கப்பட்ட ஒரு தொடர்பு பாலம் உள்ளது. வன்முறையைத் தூண்டும் உணர்வு நிலைகளான மனநெருக்கடி, அழுத்தம், பதற்றம் போன்றவை எப்படி ஏற்படுகின்றன? நம் இருப்புக்கு கேடு விளையும் போது அல்லது அது பற்றிய அச்சம் நேரும்போது. இந்த இருப்புக்கு வரும் பங்கம் ஏன் நேர்கிறது? இதற்கு பதில் சொல்ல மானுட வாழ்வை ஒரு போட்டியாக உருவகம் செய்வோம். மனித இருப்புக்கு வரும் பங்கம் இடம் பிடிக்கும் போட்டியினால் நேர்கிறது. போட்டி பிரச்சனை தருவது ஏன்? நாம் போட்டிக்கான விதிகளை ஒரே நேரத்தில் உருவாக்கவும், உடைக்கவும் தலைப்படுகிறோம். இதனால் போட்டி முடிவுகள் நம்பகத்தன்மை அற்றுப் போகின்றன. போட்டிச் சூழல் ஸ்திரத்தன்மை அற்றதாகிறது. விதிகள் நொறுங்கும் இத்தகைய நெகிழ்வான போட்டி அமைப்புக்குள் வெற்றி தோல்விகள் தற்காலிகமானவை. ஒரு வெற்றியை முட்டுக் கொடுக்க தொடர்ச்சியாய் மற்றொரு வெற்றி வேண்டும். வெற்றியின் இந்த வெறுமையை நேர்கொள்ள முந்தைய வெற்றிகளின் வரலாறு தொகுக்கப்படுகிறது. அரசுகள், மதங்கள், சாதிகளின் வரலாறுகள், திருமண சடங்குகள், தாலி, குங்குமம், கற்பு போன்றவை நாம் தினசரி சந்திக்கும் இந்த வரலாற்றின் உயிர்ப் பக்கங்கள். போட்டியில் மும்முரமாய் முன்னேறுபவர்கள் தொடர்ந்து விதிகளை மீறுகிறார்கள். வலுவற்றவர்கள் இவ்வாறான மீறலை கண்டித்து, புதிய விதிமுறைகளை கட்டி எழுப்பியவாறு இருப்பர். முதல் தரப்பு மனிதர்கள் படிநிலைகளை ஆதரிப்பவர்கள். இரண்டாம் தரப்பினர் படிநிலைக்கு எதிரானவர்கள். ஆனால் இருவருமே போட்டிக்கு உள்ளே தான் இருக்கிறார்கள். இருவரும் இன்றி போட்டி இல்லை. இதையே திருப்பியும் போடலாம்: நீங்கள் தின்று வீசும் கழிவுணவை மற்றொரு மனிதன் தின்பதும் (படிநிலை) அதே நிலைக்கு நீங்களும் நாளை தள்ளப்படுவதற்கான சாத்தியக்கூறும் (சமநிலை) போட்டியை நம்பியே இருக்கின்றன.

படிநிலைவாதிகளுக்கு உதாரணமாய் இன்றைய முதலாளித்துவவாதிகளைக் கொள்ளலாம். சமத்துவவாதிகளுக்கு மக்களாட்சி ஆதரவாளர்களைச் சொல்லலாம். இன்றைய சமூகம் இருதரப்பினரின் இடையேயான சமரசத்தைக் கொண்டு இயங்குகிறது. பெட்ரோல் விலைத் தத்தளிப்பை எடுத்துக் கொள்ளுங்கள். ஜனநாயகத்துக்காய் விட்டுக்கொடுத்து முதலாளித்துவம் சில நேரம் பெட்ரோல் விலையை உயர்த்தாது. உலகசந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் முதலாளித்துவத்தின் அதுவரையிலான நட்டம் கருதி ஜனநாயகம் விலையை குறைக்காமல் விட்டுக் கொடுக்கும். பிறகு விலை குறையும். மீண்டும் மீண்டும் 3 ரூபாய் 5 ரூபாய் என சமரசங்கள் நடைபெறும்.

மூன்றாவது தரப்பு போட்டியின் வெளியே நின்று பேசுவது. கனிமொழியின் "கருவறை வாசனைத்" தொகுதியில் இதுபற்றி ஒரு கவிதை உள்ளது. "செக்ஸை தவிர்ப்பது மிகுந்த சுதந்திரம் தருகிறது" என சமீபமாய் திபெத்திய தலாய் லாமா அறிக்கை விட்டிருப்பது உடலுறவுப் போட்டியிலிருந்து விலகுவது பற்றித்தான்.

சரி இந்த மூன்றாவது தரப்புக்கு தத்துவம், மதம், இலக்கியம் போக பௌதீக உலகில் சாத்தியப்பாடுகள் உண்டா? இதற்கு நாம் போனபோ எனும் குள்ள மனிதக்குரங்குகளின் சமூகத்தை அறிய வேண்டும். இவை விதிமுறைகளை ஏற்படுத்துவது உடைப்பது பற்றியதெல்லாம் எல்லாம் பதறுவதில்லை. தொடுபுலன் உணர்வு எனும் மந்திரம் கொண்டு போட்டிக்கு வெளியே வாழுகின்றன. கூட்டமாய் வாழும் இந்த குரங்குகள் உணவைக் கண்டடைந்தால் நம்மைப் போல் பந்திக்கு முந்துவதில்லை. முதலில் ஆற அமர ஒன்றோடொன்று கலவி செய்யும். இந்த புலனின்ப பகிர்வு போட்டிப் பகையை மழுங்கச் செய்கிறது. பிறகு இவை அமைதியாய் உணவைப் பங்கிட்டுத் தின்னும். இந்த சமூக அமைப்பில் அகிம்சையை நிறுவ யாரும் புலனடக்கி உண்ணாவிரதங்கள் செய்ய வேண்டியதில்லை. புலன்களால் சுதந்திரமாய் நுகர்ந்து போட்டி நெருப்பு அணைக்கப்படுகிறது. போனபோ குரங்குகள் குல்லாவை கழற்றி வைத்து விட்டு சில நேரங்களில் மோதிக் கொள்ளும். சுவாரஸ்யமாய் இந்த மோதல்களும் வெற்றி தோல்விகளில் முடிவதில்லை. மோதல் ஒரு கட்டத்தை எட்டியதும் ஒரு குரங்கு மற்றொன்றின் பாலுறப்பை வருடி கிளர்ச்சி ஏற்படுத்துகிறது. தொடர்ந்து பரஸ்பரம் சுயமைதுனம் செய்ய உதவும். கவனியுங்கள், நம்மிடையே போல் இங்கு கூடலுக்காய் ஊடல் இல்லை. நடப்பியல் பயன்பாடு கருதி, ஊடல் தவிர்க்க கூடல்.

புகுந்த வீடும் செல்லும் மனிதக் கலாச்சாரம் போனபோக்களிடமும் உண்டு. ஆனால் மாமியார்--மருமகள் மோதல் இல்லை. பயணிக்கும் இரு போனபோ குழுக்கள் வனாந்தரத்தில் சந்திக்கும் போது பெண்கள் இடம் மாறிக் கொள்ளும். புதுக்குழுவுக்கு செல்லும் பெண் அங்குள்ள சீனியர் பெண்களுக்கு சுயமைதுனம் செய்து நல்ல பெயர் சம்பாதிக்கும். தொடுபுலன் நெருக்கத்தால் புதிய குழுவின் மகளிர் அதிகார மையத்தோடு இந்த புதுப்பெண் சீக்கிரம் இணைந்து விடும், வரதட்சணை, சிவப்புத் தோல், குடும்ப அந்தஸ்து, செல்வாக்கு ஏதும் தேவைப்படாமல். தொடுபுலன் நெருக்கத்தின் மகிமைகள் என்ன? இரண்டு: உடல் நெருக்கம் ஒரு மரபியல் தேர்வு -- மேடையில் கோப்பை பரிசளிப்பதற்கு சமானம் இது. அடுத்து தொடுகை சுகமானது, அமைதிப்படுத்தத் தக்கது. புலனின்ப உறவுக்குக்காக தேர்வு செய்யப்படுவது ஒரு உயிருக்கு மிக ஆழமான புளகாங்கிதம் தருவது; ஆழ்மனத்திற்கு உச்சபட்ச பெருமை அளிப்பது. மற்றபடியான புறவய சாதனைகள், கைத்தட்டல்கள், பட்டயங்கள், ரத்தினக்கம்பளங்களை பல முன்னீடுகள், நிபந்தனைகள் பொறுத்துதான் அர்த்தப்படுத்த முடியும். இல்லாவிட்டாம்ல் அபத்தமாக அமையும். உதாரணமாய் தவறான் நபர் சரியான இடத்தை அடையும் போது அது பெரும் அங்கதமாக முடிவதைப் பார்க்கிறோம்; உதாரணமாக வைரமுத்து என்றாவது இலக்கிய விழிப்புணர்வு பெற்று தான் வெளியிட்டு பட்டப்பெயர் எல்லாம் பெற்ற குப்பை கவிதை புத்தகங்களை படித்துப் பார்த்தால் சமூகத்தில் தனக்கு அளிக்கப்பட்டுள்ள் அங்கீகாரம், பிரபல்யம், பொருளாதார அந்தஸ்து அகியவற்றை எவ்வளவு வேடிக்கையாகவும் கூச்சமாகவும் உணர்வார். தமிழக அரசியலில் உதாரணம் காட்டுவதானால் கொலுபொம்மை வாரிசு ஜி.கே வாசனைச் சொல்லலாம். புறவய சாதனைகள் மிக அரிதாகவே பொருத்தமாய் அமையும். பெரும்பாலும் நமது தடுக்கி விழுந்த சாதனைகளை நியாயப்படுத்த, நமக்குள் உறுதிப்படுத்த உடை, உறைவிட ஆடம்பரங்கள், பக்கமேள கோஷ்டி, சுவரொட்டிகள், பட்டப்பெயர்கள், சிலைகள், நினைவிடங்கள் தேவையாகின்றன.

போனபோக்களின் கட்டுப்பாடற்ற பாலியல் நெருக்கம் மனிதனுக்கு சாத்தியமில்லை. ஏனெனில் அவனது குடும்ப அமைப்பு முறை வாரிசு தன்னுடையது எனும் ஆண்\பெண்ணின் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் இந்த வாரிசு உறுதிப்படுத்தல் பதற்றம் உடல் நேசத்தை குழந்தைப்பேறாக மட்டுமே காணும் மிகைப்போக்காக மாறி விட்டது. தொடுபுலன் நெருக்கத்தை கூடிய மட்டும் தவிர்ப்பதற்கு இந்த செக்ஸ் பதற்றம் ஒரு முக்கிய காரணம். இதன் விளைவு நேரடி\மறைமுக வன்முறை அணையாத நெருப்பாய் மனித உறவுகளில் நீடிப்பது. இன்றைய பெரும்பாலான தம்பதிகள் வருடத்துக்கு 8 தடவைகள் கூட புணர்வதில்லை. நாம் உடலுறவை அதிகம் பேசும், கனாக்காணும் ஆனால் அரிதாய் செயல்படுத்தும் சமூகம். பிறப்புறுப்பை வெறுத்து அருவா துப்பாக்கிகளில் பெருமிதம் கொள்ளும்படியாய் நாம் பிறப்பிலிருந்து இறப்பை நோக்கி வளர்கிறோம்.

1 comment:

தனி காட்டு ராஜா said...

//உதாரணமாய் தவறான் நபர் சரியான இடத்தை அடையும் போது அது பெரும் அங்கதமாக முடிவதைப் பார்க்கிறோம்; உதாரணமாக வைரமுத்து என்றாவது இலக்கிய விழிப்புணர்வு பெற்று தான் வெளியிட்டு பட்டப்பெயர் எல்லாம் பெற்ற குப்பை கவிதை புத்தகங்களை படித்துப் பார்த்தால் சமூகத்தில் தனக்கு அளிக்கப்பட்டுள்ள் அங்கீகாரம், பிரபல்யம், பொருளாதார அந்தஸ்து அகியவற்றை எவ்வளவு வேடிக்கையாகவும் கூச்சமாகவும் உணர்வார்.//

இந்த மனுஷன் வெக்கமே இல்லாம மேடையில் அரசியல்வாதிகளை புகழ்வது கூட வேடிக்கையான விஷயம் ..........

நல்ல பதிவு .........