Sunday, August 16, 2009

இந்தியா எப்படி 'ஏறக்குறைய' வல்லரசு ஆனது?


ஸ்லம் டாக் மில்லியனர் படத்தின் ஆரம்பத்தில் மேற்கண்ட கேள்வியை சற்று மாற்றிக் கேட்கிறார்கள்:

ஜமால் எப்படி மில்லியனர் ஆனான்?
இதற்கும் மேல்வரும் 4 தேர்வு வாய்ப்புகள் தாம்.

ஜமால் மும்பை கால்சென்டரில் தேனீர் வினியோகிக்கும் இளைஞன். அவனுக்கு ஒரு இளம்பருவக் காதலி. அவள் தற்போது ஒரு மாபியா தாதாவின் பிடியில். 'யார் அடுத்த மில்லியனர்' எனும் வினாடி வினா ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவளை எப்படி மீட்கிறான் என்பது அடுத்து வரும் கதை. ஜமால் சேரியில் வளர்ந்தவன் என்பதால் இந்தியாவின் சேறு சகதி குப்பை என மேலோட்டமாக சாம்பிராணி காட்டுகிறார்கள். மேற்சொன்ன கேள்விக்கான பதிலை கடைசிக் காட்சியில் தருகிறார்கள். (ஈ) எழுதப்பட்டது. வரலாற்றின் குழப்படி அல்லது விதி. இந்த பதில் இந்தியாவுக்கும் ஜமாலுக்குமாக தரப்பட்டது.

சமீப உலக வரலாற்றில் அதிரடியாய் வளர்ந்து விட்ட இந்திய மத்திய வர்க்கத்தின் குறியீடுதான் ஜமால். 3 காரணங்கள். சேரிப் பின்னணிக்கும் ஜமாலின் ஆங்கில அறிவு, பவிசு மற்றும் தோற்றப் பொலிவுக்கும் தொடர்பில்லை. தனது தேனீர் வினியோக பணிச் சட்டகத்தை மீறி அவன் ஒரு ம.வ. இளைஞனாகவே உலவுகிறான். சேரியிலிருந்து மேல்தட்டு நோக்கிய ஜமாலின் அதிவிரைவுப் பயணம் உலக மயமாக்கலின் போதான இந்திய ம.வர்க்கத்தின் பயணமே. ஜமால் போட்டிக்கான பதில்களை தனது நூதன அனுபவங்கள், கவனம் மற்றும் அதிர்ஷ்டம் கொண்டு தான் சரியாக அளிக்கிறான். கதையில் மட்டுமே சாத்தியமாகும் இந்த ஜீபூம்பா குறியீட்டுத்தனத்துக்காகவே திணிக்கப்பட்டது. வழக்கமாய் ரியாலிட்டி வினாடி வினாக்களில் முன்கூட்டி வாசித்து தயாரித்து தான் போட்டியாளர்கள் பெரும்பாலான கேள்விகளை எதிர்கொள்வது. எங்கள் ஊரில் சில்லறைத் திருட்டுகள் செய்து அல்லது கடைத் திண்ணையில் சொறிந்து கொண்டு அமர்ந்திருந்து விட்டு திடீரென வெளிநாட்டில், நகரங்களில் வேலை கிடைத்து சிறகு முளைத்த பல இளைஞர்களை எனக்கு நேரடியாய் பழக்கமுண்டு. இதுதான் (ஈ) விதி.
கடைசியாய் படத்தின் இறுதி முடிவு காட்சிகளை முடிச்சுப் போடும் வினா படத்தின் ஈடுபாடு இந்தியாவின் குப்பையும் நிழல் உலகமும் அல்ல என்பதை சுட்டுகிறது. (இந்தியர்களின் வளர்ச்சிக்குக் காரணம் உலகமயமாக்கல் என்னும் அதிர்ஷ்டம் மற்றும் சமயோசித அறிவு மட்டுமே என்னும் ஒரு குறுகலான பார்வையும் இந்த கேள்வி--பதிலின் பின்னணியில் உள்ளது.)

மூன்றாம் உலக நாடுகளை விசித்திரமானவையாய் வகைப்படுத்துவது ஒரு காலனிய மனோபாவம். படத்தின் பல காட்சிகள் இந்த நோக்கத்திற்காகவே. குறிப்பாய் ஜமால் மலத்தில் புரண்டு எழுந்து அமிதாப் பச்சனிடம் ஓடி சென்று கையெழுத்து பெறும் பிரபல காட்சி. பிரபலங்கள் மீதான அபரித மோகம் அனைத்து சமூகங்களுக்கும் பொது. அதைப் போன்றே ஒரு சமூகத்துக்கு மற்றதன் குழுச்செயல்பாடு சற்று விபரீதமாக, வேடிக்கையாக தெரியும். வெள்ளைக்கார பெண்கள் பிரபலங்களிடம் சென்று மாரில் கையெழுத்து பெறுவது கண்டு இந்தியாவின் நரைதலைகள் 'ச்சே' சொல்வதில்லையா?

இந்த காலனீய வகைமாதிரித் தன்மைகள் கொண்டு இயக்குனர் பாயல் இந்திய இளைஞன் பற்றிய ஒரு தட்டையான பிம்பத்தை உருவாக்குகிறார். அவன் மேதை அல்ல, சமயோசித அறிவு கொண்ட தந்திரசாலி; எல்லாவித வசை, அடிகளைத் தாங்கி முன்னேறுவான்; கோபத்தை விழுங்கி விட்டு முட்டாள் வியப்புடன் புன்னகைப்பான். காவலரிடம் அடி வாங்கும் போது அவன் உணர்ச்சியற்றுத் தொங்குவது, காதலி கடத்தப்பட்ட பின் தாதாவின் வீட்டு கண்ணாடி ஜன்னலை அறைந்தபடி அவன் தனியே கத்துவது போன்ற காட்சிபூர்வ வெளிப்பாடுகள் இந்த காலனிய முன்முடிவுகளை வெற்றிகரமாய் சித்தரிப்பவை. மற்றொரு காட்சி.

கால்சென்டர் ஆபரேட்டர் ஒருவன் டீ.வி பார்க்கும் பொருட்டு (?) ஜமாலை அவன் இருக்கையில் அமர்த்தி விட்டு போகிறான். அப்போது வெளிநாட்டில் இருந்து ஒரு வெள்ளைக்காரி அழைக்கிறாள். ஆரம்பத்தில் தடுமாறும் ஜமால் பிறகு சுதாரித்து அவளிடம் பேசுகிறான். அந்த பெண்ணுக்கு சந்தேகம். கேட்கிறாள்: " நீ எந்த நாட்டிலிருந்து பதில் சொல்லுகிறாய்?"
" நீங்கள் இருக்கும் தெருமுனையில் இருந்து தான் பேசுகிறேன் மேடம்"
"முகவரி சொல்"
ஜமால் கணினியில் உள்ள தகவல் வங்கி மற்றும் சுவரில் மாட்டப்பட்ட வரைபடம் ஆகியன பார்த்து இடஅமைப்பை விளக்கி அவளை சமாதானம் செய்கிறான்.

நீங்கள் இந்திய பி.பி.ஓக்களில் செய்யும் வேலையை ஒரு டீக்காரர் கூட செய்யலாம் என்கிறது இக்காட்சி. டீக்காரருக்கு ஆங்கில அறிவு எப்படி வந்தது என்ற கேள்வி ஒருபுறம் இருக்கட்டும். அதைவிட முக்கியமாய் பாயலிடம் நாம் மற்றொரு கேள்வி கேட்க வேண்டும்.

தேனீர்ப் பையனின் புத்திசாலித்தனம் மட்டுமே கொண்ட இந்தியர்களிடம் உங்கள் வங்கிக் கணக்கு, காப்பு நிதி விவரங்கள், மருத்துவக் குறிப்புகள், கல்வி மற்றும் வேலை விவரப் பட்டியல்கள், மென்பொருள் எழுதும், அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகளை திருத்தும் வேலைகளை எப்படி ஒப்படைக்கிறீர்கள்?

இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் இளைஞர்களுக்கு மேற்படிப்புகளில், கடுமையான உழைப்பில் ஆர்வம் குறைந்து விட்டது. எட்டு மணி நேரம் தாண்டி ஒரு நொடி கூட அலுவலகத்தில் பொறுக்க மாட்டார்கள். நாம் வேலை நாட்களில் 12 மணி நேரம் போக பண்டிகை நாட்கள், ஞாயிற்றுக் கிழமை கூட சலிக்காமல் உழைப்போம். வெள்ளைக்காரர்களின் சோம்பேறித்தனத்துக்கு ஒரு உதாரணம் தருகிறேன். என் மின்பதிப்பு நிறுவனத்தில் எல்லா புதன் கிழமையும் இங்கிலாந்தின் ராயல் சொஸைட்டி பதிப்பாளர்களிடம் வீடியோ கான்பரன்ஸ் முறைப்படி இங்கிருந்தபடியே உரையாடி ஆங்கில இலக்கண சந்தேகங்களை கேட்போம். கேள்விகளை முன்கூட்டியே மின்னஞ்சலில் அனுப்பி விடுவோம். ஆனால் சிரமமான கேள்விகளை முன்கூட்டியே ஆராய்ச்சி செய்யாமல் மேலோட்டமாய் பேசி சமாளிப்பார்கள். அல்லது அடுத்த சந்திப்பில் பதிலளிக்கிறோம் என்று நழுவி விடுவார்கள். அந்த பதில் எப்போதுமே வராது. அரைமணி நேரம் கூட இணையத்தில் ஆராய தயாராகாதவர்கள். வடிகட்டி, குளோரின் போட்ட சோம்பேறிகள்.

வேலைப்பற்றாக்குறை, விலைவாசி உயர்வு பற்றி வெள்ளைக்காரர்கள் சமீப காலமாய் கவலைப்படுகிறார்கள். தங்கள் நாட்டின் வேலைகள் இந்திய இளைஞர்களுக்கு போவதற்கு காரணம் சொந்த சமூகத்தின் ஒட்டுமொத்த சோம்பல், இலக்கற்ற கால வீணடிப்பு மற்றும் கல்வி போதாமை என்பதை ஏற்கும் மன நிலை அங்குள்ள பாமரகளுக்கு இல்லை. அத்தகையவர்களுக்கு காலனிய மனோபாவம் ஒட்டின ஒரு எளிய காரணம் தேவைப்படுகிறது. அதை பாலிவுட்டின் வித்தியாச மசாலா கலந்து தந்ததனால் தான் இப்படம் மேற்கில் பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளது.

பி.பி.ஓ வளர்ச்சியால் பணம் கொழித்தவர்கள் சிலரே. பெரும்பாலானோர் பி.பி.ஓவில் சம்பாதிப்பது மாதம் 6000--20000. வீட்டு வாடகை, வங்கிக் கடன், சாப்பாடுச் செலவு போக இந்த இளைஞர்களுக்கு மிஞ்சுவது பழுதான உடலும், மனமும். கிறித்துமசுக்கு ஒருமாத விடுப்பில் செல்லும் பரங்கிக்கு இது புரியாது.

இந்திய பி.பி.ஓக்களின் வளர்ச்சி மற்றும் நிலைப்புக்கு காரணமான இந்த இரவு பகலான உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பை இப்படம் திரித்து சித்தரிக்கிறது. ஒரு காட்சியில் கால்சென்டர் பணியாளர்கள் வேலையை உதாசீனித்து கூட்டமாய் டீ.வி பார்க்கிறார்கள். மற்றொரு கால்சென்டர் காட்சியில் பயிலும் ஆரம்ப நிலை பணியாளர்களிடம் பயிற்சியாளர் சொலிகிறார்: "உன்னை விட ஒரு தேனீர்ப் பையனுக்கு விசய ஞானம் அதிகம்"

நமது மேல்தட்டு ஆங்கில ஊடகங்களின் விமர்சகர்கள் (அரிந்தம் சௌத்ரி உட்பட) படத்தின் வறுமை, குற்றம், பிச்சைக்காரர்கள் போன்ற வெளிப்புற மினுமினுப்புகளை மட்டுமே கண்டு சாடியுள்ளனர். ஜோசியக்காரனின் கிளிக்கும் இவர்களுக்கும் வேறுபாடில்லை. இவர்களின் டை, கோட்டை பிடுங்கி, சமீப இலங்கைத் தமிழர் படுகொலைக்கான முழு அடைப்பால் கடுப்பாகி "இந்தியாவுல பொழைக்கிறதை விட்டுட்டு ஏன் சிலோனுக்கு ஓடிப் போனானுங்க" என்று கேட்கும், மார்முடி பனியனுக்கு வெளியே பிதுங்கித் தெரியும் ஜாபர்கான் பேட்டை பெட்டிக் கடை மாமாக்களுக்கு மாட்டி விடலாம்.

No comments: