Sunday, August 16, 2009

நடிகனை உருவாக்க முடியுமா?நடிப்பில் ஒரு பிரதான வகை முறைமை நடிப்பு: கடுமையாய் தயாரித்துக் கொண்டு நடிப்பது. ஹாலிவுட்டில் மார்லன் பிராண்டோ, ராபர்ட் டினிரோ, தமிழில் விக்ரம் உடனடி உதாரணங்கள். அமீர்க்கானின் லகான் பற்றி பேசுகையில் அமிதாப் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார்: "அமீர் பட சம்மந்தமான எல்லாவற்றுக்கும் தயாரித்துக் கொண்டு பக்காவாக செயல்படுவார் ... நடிப்பில் தன் தயாரிப்பு தெரியும் அளவிற்கு". சமீபத்தில் "நான் கடவுள்" படப்பிடிப்பில் பூஜாவுக்கு கண் மங்கலாகும்படி லென்ஸ் அணிவித்து நடிக்க விட்டது இவ்வகைதான். மீரா நாயரின் "மை ஓன் கன்டுரீ" (My Own Country) படம் அப்பிரகாம் வர்கீஸ் எனும் எய்ட்ஸ் மருத்துவரின் வாழ்க்கைக் கதை. இதில் வர்கீஸாக நடித்த நவீன் ஆண்டுருவீஸ் நிஜ வர்கீசோடு சில வாரங்கள் தங்கி அவரது உடல் மொழி, பாவனைகள், மருத்துவமனை, செய்கைகளை கவனித்து பின் நடித்தார்.

சில நடிகர்களுக்கு பெரும் தயாரிப்புகள் தேவைப்படுவதில்லை. ஏற்கனவே மனித இயக்கம் பற்றி ஆழ்மனதில் உள்ள அவதானிப்புகளை ஆகஷன் சொன்னவுடன் மீட்டுக் கொணர்ந்து நடிக்க ஆரம்பித்து விடுவார்கள். உதாரணம் மோகன்லால். "தசரதம்" என்னும் படத்தில் மன அழுத்தம் கொண்ட, திருமணம் தவிர்க்கும் ஊதாரி பாத்திரம் அவருக்கு. படம் பூரா லால் மற்ற கதாபாத்திரங்களின் கண்களை நேரில் சந்திக்காமல் சற்று கீழ் நோக்கியபடி பேசுவார். குறிப்பாய், ஒரு கட்டத்தில் செயற்கை கருத்தரிப்பில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற முயல்வார். கர்ப்பமான வாடகைத் தாயை ஹார்லிக்ஸ் பழம் சகிதம் சந்திக்க செல்வார். அக்காட்சியிலும் அவளது கருப்பையை விலைக்கு வாங்க, அடாவடியாய் ஒப்பந்தம் பேசத் தயங்காதவர் கண்களை தொடர்ந்து சந்திக்க கூசுவார். இது இயக்குனரின் அறிவுறுத்தல் அல்லது தனது சுயதிட்டமிடல் இன்றி படப்பிடிப்பில் லால் உள்ளுணர்வு படி நடித்ததன் விளைவு. "தாளவட்டம்" எனும் படத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பாத்திரத்தில் கண்களை பெரும்பாலும் சிமிட்டாமல் நடித்திருப்பார். இதுவும் இயக்குனர் எழுதி திட்டமிடாமலே நிகழ்ந்தது. இந்தியன் தாத்தாவாக கமல் அடிக்கடி முன்மயிர்க் கற்றையை விரல்களாய் சீர் செய்வது இவ்வகை நடிப்பு தான்

மம்முட்டிக்கு வணிக படங்களில் ஒரு முரட்டு ஆண் பிம்பம் உள்ளது. கொஞ்சம் தொப்பை தெரிய வேட்டியை மடித்து கட்டி, ஒரு கை மீசை முறுக்க நீள்வசனம் பேசியபடியே மறுகையால் வில்லனை குத்துவார் அல்லது கதா நாயகியை கன்னத்தில் அறைவார். ஆனால் பஷீரின் "மதிலுகள்" நாவலை அடூர் கோபால கிருஷ்ணன் எடுத்த அதே பெயர் கொண்ட படத்தில் மம்முட்டி சற்று பெண்மை சாயலுடன் நடித்திருப்பார். படம் திரையிடல் முடிந்த பின்னான இயக்குனர்--பார்வையாளர்கள் சந்திப்பில் நான் அடூரிடம் கேட்டேன்: "மம்முட்டியின் உடல் மொழியில் பெண்மை நளினம் உள்ளதே. இந்த படத்துக்காக அவர் பஷீரை நேரில் சந்தித்து அவதானித்து அதன்படி நடித்துள்ளாரா அல்லது உங்கள் அறிவுறுத்தலின் படியா?"

அடூர்: "அப்படி ஒன்றும் இல்லை. அது மட்டுமல்ல, பஷீர் தன்னை ஒரு கம்பீரமான ஆண்மகனாகவே கருதினார், நீங்கள் பார்த்தது மம்முட்டியின் பஷீர் என்கிற எழுத்தாளன்"

ரொம்ப பிற்பாடு தான் இந்த பதில் எனக்கு விளங்கியது. இந்த கருத்தின் படி, தாளவட்டத்தில் லால் கண் சிமிட்டாதது சரிதானா என்று மனவியலாளர் விஜய் நாகசாமியிடம் கேட்க வேண்டியதில்லை. நடிப்பு யதார்த்தத்தை ஒப்பிப்பதல்ல, அது ஒரு சங்கேத பரிமாற்றம். மம்முட்டி காட்டிய உடல்மொழி பஷீரிரினுடையதிலிருந்து மாறுபட்டிருக்கலாம். மனித மனத்தின் எதிர்மறை மற்றும் நேர்மறைப் பண்புகளை ஒன்றாக அரவணைக்கும் பஷீரின் தாய்மைக் கனிவை இந்த பெண்மை நளினம் கொண்டு வந்து விடுகிறதல்லவா! பஷீரை மம்முட்டி ஒப்பித்திருந்தால் இது நடந்திருக்காது.

இயக்குனர் சி.மகேந்திரன் (உதிரிப்பூக்கள்) தனது "நடிப்பு என்பது" என்ற நூலில் (கனவுப்பட்டறை வெளியீடு) இந்த இரண்டாவது வகை அவதானிப்பு நடிப்பை எளிதாக சற்று விரிவாக அலசுகிறார். தயாரிப்பு நடிப்பு சரித்திர நாயகப் பாத்திரங்களுக்கு மட்டுமே போதும் என்கிறார். மற்றபடியான அன்றாட பாத்திரங்களைப் பொறுத்தமட்டில் ஒரு கலைஞன் தன் ஆழ்மனதின் வழிகாட்டுதல் படியே நடிக்க வேண்டும். அதிகப்படியான திட்டமிடல் பல சமயங்களில் தட்டையான நடிப்பையே தருகிறது என்கிறார் மகேந்திரம். இதற்கு என் தனிப்பட்ட உதாரணங்கள் விக்ரமின் "பிதாமகன்" (சதா படக்கருவி பற்றின பிரக்ஞை என்கிறார் இயக்குனர் ராம்) மற்றும் "அம்பி" பாத்திரங்கள்.

பிரக்ஞை குறிக்கிடல் நடிப்புக்கு பாதகம் ஆவதற்கு ஒரு எளிய உதாரணம் மாறுவேட நடிப்பு. ஒரு எளிய நடிகன் கூட மாறுவேடத்தில் சிறப்பாய் நடித்து விடுவான். காரணம் அவன் மாறுவேடத்துள் தன் பிரக்ஞையை இழந்து மறைந்து கொள்வதே என்கிறார் மகேந்திரன். வேஷம் கலைந்து 'இதோ நான் தான்' என்கிற போது நடிக்கப் போகிறோம் என்கிற பதற்றத்தில் அவன் நடிப்பு மீண்டும் சீர்குலையும்.

ஒரு நல்ல நடிகன் எந்நேரமும் அவனை அறியாது சுற்றிலிமுள்ள மனிதர்களை கவனித்தபடி உள்ளான் என்கிறார் மகேந்திரன். சிறுவயதிலிருந்தான இந்த பிரக்ஞையற்ற அவதானிப்பு காரணமாய் அவனது ஆழ்மன சேகரிப்பில் எண்ணற்ற உடல் சித்திரங்கள் மற்றும் ஒலிக்குறிப்புகள் இருக்கும். படத்தளத்தில் இந்த நுண்ணிய அவதானிப்புகளே அவனுக்கு கைகொடுக்கின்றன. ஒரு மருத்துவனாய் நடிக்க அபிரகாம் வர்க்கீஸின் மருத்துவமனையில் நாட்குறிப்புடன் அலைய வேண்டியதில்லை. ஏற்கனவே வாழ்வில் சந்தித்த பலவித மருத்துவர்களின் (சிடுமூஞ்சி, பால்முகம், அவசரக்காரர், போலி, இளம், கிழம், வாயாடி ....) சித்திரங்கள் ஆழ்மன அடுக்குகளில் சொருகப்பட்டிருக்கும். அவை போதும். அவதானிப்பு நடிப்புக்கு ஒரு உதாரணம் தருகிறார். ஒரு படபுதிற்காக பல்வலி பாத்திரத்தில் நடிக்க நேர்முகம். ஏராளமானோர் வந்து பல்வலி அவஸ்தை பற்றி பக்க நீள வசனம் பேசி செல்கிறார்கள். ஒருவர் மட்டும் சைகை மூலம் தன் அவஸ்தையை மருத்துவரிடம் விளக்குகிறான். பார்த்து நின்ற தயாரிப்பாளர் கடுப்பாகிறார்: "என்னப்பா டைலாக் பேச மாட்டேங்குறியே". நடிக்க வந்தவன் இதற்கு ஆத்திரமாக 'உன் படத்துகு ஒரு கும்பிடு' என்று கை தூக்கி கூப்பி விட்டு கிளம்ப, இயக்குனர் அவனை திரும்ப அழைக்கிறார். தேர்வு செய்கிறார். அவர் அதற்கு இந்த காரணம் சொல்கிறார்: "பல்வலிக்காரர்களிடம் யாராவது விமர்சித்து பேசினால் பொத்துக் கொண்டு கோபம் வரும். இவரிடம் அந்த அவதானிப்பு உள்ளது".

இத்தகைய நடிப்புத் திறமை ஒரு கலைஞனுக்கு இயல்பிலேயே வேண்டும் என்கிறார் மகேந்திரன். ஒரு நடிகனை உருவாக்க முடியாது.

"மை ஓன் கண்டுறீ" ஒளிப்பதிவாளர் டியோன் பீப்புக்கு ஒரு அபூர்வ பழக்கம். எங்கு பயணித்தாலும் தனது படக்கருவியை கார் ஜன்னலருகே வைத்து அல்லது கையில் சுமந்த படி ஓட விடுவார். அவர் பார்த்தது பார்க்காதது அனைத்தும் ஒரு சுதந்திரமான நாட்குறிப்பு போல் அதில் பதியும். பல சமயங்களில அவர் எதிர்பாராத அருமையான காட்சிகளும். இலைதழைகள் சரமாய் தலைக்கு மேல் கடந்து மறையும் ஒரு காட்சிஅத்தகையது. "மை ஓன் கண்டுறீ" படத்தில் மீரா நாயர் அதை திரைக்கதையை ஒருங்கிணைக்கும் ஒரு படிமமாய், மையப் பாத்திரத்தின் மனநிலையின் குறியீடாய் பிற்பாடு பயன்படுத்தினார். ஒரு நடிப்புக் கலைஞனின் மனம் இந்த கண்டபடி ஓடும் படக்கருவி மாதிரிதான். சரியான நேரத்தில் சரியான சுருளை தேர்ந்தெடுத்து பயன்படுத்துவதே நடிப்பின் சூத்திரம். கலைஞன் அல்லாத நடிகனுக்குள் இந்த 24-மணி நேர கருவி இருக்காது. அவன் சொல்லிக் கொடுத்ததை ஒப்பித்து விட்டு போய் விடுவான்.

'பாத்திரமாகவே வாழ்ந்து விடுவது' பற்றி நம்மிடையே ஒரு மயக்கம் உண்டு. உதாரணமாய் "நான் கடவுளில்" நடித்த பின் தனக்குள் ஆன்மீக அமைதி கூடி விட்டதாய், ஏறத்தாழ ஞானம் பிறந்ததாய் ஆர்யா ஒரு பேட்டியில் கூறினார். இது போதாதென்று படப்பிடிப்பு முடித்து அதே அகோரி தாடியுடன் வீட்டுக்குப் போய் அவர் தன் அம்மாவை வேறு பயமுறுத்தியிருக்கிறார். மகேந்திரன் இந்த நடிப்பு மயக்கத்தை விளக்க ஒரு சம்பவம் சொல்கிறார். ஒரு இயக்குனர் கழைக்கூத்தாடி பாத்திரத்தில் நடிக்க நிஜக்கூத்தாடியையே அழைத்து வருகிறார். தளத்தில் ஆக்ஷன் சொல்லியும் அவர் அசையவில்லை. இயக்குனர் வற்புறுத்த கூத்தாடி கயிற்றின் மேல் நின்ற படி சொல்கிறார்: "எல்லோரும் ஒரு தபா ஜோரா கைதட்டுங்க, இல்லாங்காட்டி ஆட மாட்டேன்". நடிப்பு ஒரு பொய் என்று உணர்ந்த பின்னரே நல்ல நடிப்பு வரும் என்கிறார் மகெந்திரன்.

மகேந்திரன் சொல்ல வந்ததை துல்லியமாய் தெளிவாய் எழுதுகிறார். தயக்கமோ சிக்கலோ அற்ற நடை.
மேலும் குறிப்பிட வேண்டியவை மகேந்திரனின் நகைச்சுவை உணர்வும் ('எம்.ஜி.ஆர் ஒரு சிறந்த நடிகன்'; 'அவர் உயர்ந்த மனிதராய் வாழ்ந்தார் நடிக்கவில்லை' இப்படியான திடுக்கிடும் கருத்துக்கள்) மற்றும் அங்கங்கே வரும் விரிகோணத்தில் மகேந்திரனை வீங்கிக் காட்டும் கறுப்பு வெள்ளை மிரட்டல் படங்களின் விகாரம்.
இந்த அருமையான குறும்புத்தகத்தின் இத்துனூண்டு குறைகள்.

No comments: