ஆலன் ஸ்பென்ஸ்: படைப்பு வாழ்வும், பிறவும்

ஆலன் ஸ்பென்ஸ் ஸ்காட்லாந்துக்காரர். கவிதை, சிறுகதை, நாவல், நாடகம் மூலம் உலகளவில் கவனம் பெற்று வருகிறார். முதல் கவிதைத் தொகுப்பு ப்பொளப் ( நீருள் விழும் ஓசை) 1970-இல் வெளியானது. அதற்குப் பின் இரு முக்கிய ஹைக்கூ தொகுப்புகள்: இதயத்தின் பருவங்கள் மற்றும் தெளிந்த வெளிச்சம். இவரது சமீபத்திய நாவலான பரிசுத்த நிலத்தில் ஹைக்கூ மற்றும் தாங்கா கவிதைகள் இடம்பெறுகின்றன.

இவர் ஸ்காட்லாந்திய கலைக்குழு நூல் விருதை மும்முறை பெற்றுள்ளார். 1995-இல் எஸ்.ஏ.சி அவ்வருட ஸ்காட்லாந்திய எழுத்தாளராய் தேர்ந்தெடுக்கப்பட்டார். கிளன்பிடிக் ஸ்காட்லாந்தின் உயிர்நாடி (படைப்பிலக்கியம்) விருதை 2006-ஆம் ஆண்டு பெற்றார். 

ஆலன் ஸ்பென்சின் எழுத்து தினசரி ஈடுபாடுகளிடையே இருத்தலின் புதிருக்குள் தோன்றும் சிறு வெளிச்சத் தெறிப்புகளை பின் தொடர்வது. உலகம் மனத்தின் பிரதிபலிப்பு என்றார் இம்மானுவல் காண்ட். இதயத்தின் பருவங்கள் தொகுப்பு வசந்தம், இலையுதிர்காலம், பனிக்காலம், கோடை எனும் இயற்கை பருவ படிமங்களில் மனத்தின் சுவடுகளை பின்தொடர்கிறது. வாழ்வின் முரண்கள், மாற்றச் சுழற்சியில் சாஸ்வதம் கண்டறிதல், நுட்பத்தின் எளிமை என இவர் எழுத்து தொடர்ந்து பயணிக்கிறது. 

சிந்தனாபூர்வ தியான முறை தரும் பார்வை தன் படைப்பை விரிவடையச் செய்வதாய் சொல்லும் இவர் ஸ்ரீ சின்மய் தியான மையத்தை ஈடின்பர்கில் நடத்தி வருகிறார். அபெர்தீன் பல்கலையின் படைப்பிலக்கிய பேராசிரியராய் பணி. அங்கு நிகழ்த்தப்படும் வருடாந்தர வார்த்தை விழாவின் கலை இயக்குனர்.

Comments