ஒளியைக் கேட்பவர்கள்


ஒருமுறை திருவல்லிக்கேணியின் எண்ண்ற்ற நெரிசல் குறுக்கு சந்துகளில் ஒன்றில் மாடு கிளறிக் கொண்டிருந்த ரொம்பி வழிந்த குப்பைத் தொட்டி ஒன்றை எனது எளிய புகைப்படக் கருவியில் கிளிக்கிய போது ஒரு வழிபோக்கர் ரொம்ப ஆர்வமாய் சொன்னார்: "நல்லா எடுங்க சார், பேப்பர்ல போடுங்க". அது ஓனிக்ஸ் விலகி சென்னையே சில தினங்கள் நாறிக்கிடந்த காலம். உயர்தர எஸ்.எல்.ஆர் புகைப்பட கருவி கொண்டு ரொம்ப தீவிரமாக ஒளித்தருணங்கள் தேடித் திரிபவர்களிடமும் "நீங்க பத்திரிகையா?" என்பது வழக்கமாக கேட்கப்படும் தாடை-சொறிக் கேள்வி. நம்மவர்களின் புகைப்பட கலை பற்றின விழிப்புணர்வு இப்படியாக பத்திரிகை, கல்யாண படங்களோடு நிற்கிறது. டி.ஜி.ட்டல் புரட்சியில் புகைப்படம் எடுத்தல் பரவலான ஒரு பொழுதுபோக்காக, எளிய கலை ஈடுபாடாக, தீவிரத் தேடலாக இன்று மாறியுள்ளது.

எளிய செல்போன் புகைப்படம் போலன்றி, ஒளி அலகுகளை நுட்பமாக கட்டுப்படுத்துவதன் மூலம் பல கலை சாத்தியங்களை அடைய தேவைப்படும் தொழில் முறை எஸ்.எல்.ஆர் புகைப்படக்கருவியின் விலை கையை கடிக்கும். பலதர லென்ஸ், மோனோபோட் அல்லது டிரைபோட் போன்ற கருவிகள் சேர்த்து புகைப்பட தேடலுக்கான மொத்த செலவு லட்சங்களில் நிற்பதால் ஆர்வலர்கள் உயர்மத்திய வசதியாவது கொண்டிருத்தல் நல்லது. இந்த தலைமுறை மென்பொருள் இளைஞர்கள் பத்து இருபதாயிரம் என்று செலவழித்து ஆம்பிஷன்ஸ் ஃபார் ஃபொட்டோகிரஃபி போன்ற அருமையான புகைப்பட பயிற்சி நிலையங்களில் ஒழுங்குமுறையாக பயிலவும் தயங்குவதில்லை. டிஜிட்டல் புரட்சி மற்றும் இணைய வாய்ப்பு புகைப்பட அணுகுமுறையை திருப்பிப் போட்டு விட்டது. தற்போது பிலிம் வீணாகுமோ என்கிற கவலை இல்லை. ஆயிரக்கணக்கில் கிளிக்கி, உடனே முடிவை திரையில் பார்த்து, தேர்ந்து, அதை பிரசுரித்து ஆர்வலர்கள், நிபுணர்கள், நண்பர்களுடன் ஃப்ளிக்கர் போன்ற தளங்களில் உடனுக்குடன் அவற்றை பகிர, அலச, சுமாரான ஷாட்களை மென்பொருள் பயபடுத்தி மெருகேற்றவும் இன்று முடியும்.

ஆம்பிஷன்ஸ் போன்ற பயிற்சி நிலையங்களில் வாரயிறுதி அறிமுக வகுப்புகளில் படிக்கும் சில கலைஞர்களின் படைப்புகளுடன் ஃப்ளிக்கர் இணையதளம் மூலம் பரிச்சயம் ஏற்பட்டது. அரை நொடியில் முடிந்து போனாலும் அந்த கிளிக்கிற்கு பின்னால் ஆபாரமான தயாரிப்பும், கவனிப்புத் திறனும், கருவியின் இயக்கம் பற்றின தொழிற் நுட்ப ஆளுமையும் தேவைப்படுகிறது. அதாவது நம் முன் ஒரு அருமையான பட வாய்ப்பு தோன்றினாலும், பதறாமல் படம் பிடிக்க தொழில் நுட்ப பரிச்சயம் அவசியம். உதாரணமாக, படமெடுக்கும் போது எந்த ஷட்டர் ஸ்பீடை, அப்பெர்சரை தேர்வு செய்ய என்று குழம்பினால், தருணம் தவறி விடும். எழுத்திற்கு தேவைப்படும் மொழி ஆளுமை போல. அப்புறம் புகைப்பட உணர்வு, அதாவது புகைப்படத்திற்கான வாய்ப்புகளை கவனித்து உணரும் திறன், அவசியம். ஆம்பிஷன்சின் நிறுவனரான பிரபல புகைப்படலாளர் (நடிகர் அஜித்தின் புகைப்பட ஆசான்) கெ. எல். ராஜா பொன்சிங் இதை "ஒளியின் ஓசையை உற்றுக் கேட்கும் திறன்" என்கிறார். அதாவது புகைப்பட சாத்தியத்தை ஆழ்மன ரீதியாக உணர்தல். மேற்சொன்னவர்களின் பட்ங்களில் என்னை மிகவும் கவர்ந்தது ஒரு கதை அல்லது கவிதையை போன்று தொடர்ந்து பார்வையாளனுடன் உரையாடல் நிகழ்த்தும் இப்படங்களின் தன்மை. எதார்த்தத்தை பதிவு செய்வதோடு நில்லாமல், நகைமுரண், வாழ்க்கை பார்வை பற்றின நுட்பமாக பதிவு, தனிமையின் மவுனம் என பல தளங்களை இந்த் ஆரம்ப நிலை புகைப்படலாளர்களின் படைப்புகள் பயணிக்க முடிந்துள்ளன. உதாரணமாய் கீழவரும் படங்களைப் பாருங்கள்; இவற்றை எடுத்துள்ளது காயத்ரி எனும் ஆம்பிஷ்ன்ஸ் மாணவி :


Add caption

இங்கு இரு நபர்கள் தெரிகிறார்கள். ஒரு இளம் புகைப்படக்கலைஞர். வாயைப் பொத்தின நிலையில் அவரை கவனிக்கும் குட்டிச்சுவர்வாசி. கோயிலில் வழிமறித்துக் கிடக்கும் நந்தியை நடுவில் கொண்டு, இரு முரண் நிலைகளை (சும்மா கவனித்தலும், செயல்படலும்) பதிவு செய்ததே இப்படத்திற்கு மெல்லிய கேலியையும், ஆழத்தையும் கொடுக்கிறது. கருப்பு வெள்ளையில் உள்ளதும் உணர்வுகளின், பாத்திரங்களின் மனநிலையின் பால் நம் கவனத்தை செலுத்துகிறது. இது போன்ற சித்திரங்களில் வண்ணங்கள் கவனத்தை கலைக்கும்

இதனை அடுத்து வரும் படத்துடன் ஒப்பிடுங்கள்:


கோவில்களில் திண்டுகளில் ஆதரவின்றி அம்ர்ந்திருந்து பக்தர்கள் பொங்கல் வாங்க்கித் தந்தால் உண்டு விட்டு வெறிப்பதைத் தொடரும் ஒரு முதியவர்.முந்தின படத்தில் நந்தி புத்திசாலித்தனமாக ப்ஃபோர்கிரவுண்டு (அதாவது முன்வைப்பது) செய்யப்பட்டது போல் இப்படத்தில் ஒரு பாதி தூண் மறைக்க முதியவர் மறுபாதியில் தெரிகிறார். இதுவே அவரது தனிமையின் ஆழத்தை, கடந்த காலத்தின் இருண்மையை உணர்த்துகிறது. இப்படத்தின் குறை இடதுபுறம் அரைகுறையாய் தெரியும் மற்றொரு நபர்தான். இந்த இடையூறு நம் கவனத்தை கலைக்கிறது. இதனை மென்பொருளால் குறாப்பிங் எனும் முறையில் அகற்றலாம். அல்லது புகைப்படத்திற்கான தயாரிப்பின் போது இடையூறுகளை தவிர்க்க முயலலாம். இது காம்பஸிஷன் எனப்படுகிறது.

அடுத்த படம் முதல் படத்தின் நகைமுரணை, இரு வேறு வாழ்வியல் அணுகுமுறை (வீரம் எனும் லட்சியமும், விட்டேந்தி சிந்தனையும்) முரண்களின் வேடிக்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறது.

குழந்தைகளின் உலகம் விளையாட்டு கற்பனைகளின் நூதனமும், பெரியவர்களால் அணுக முடியாத மிகைஎதார்த்த பிம்பங்களும் நிரம்பியது. குழந்தைகள் யானை மீதிருந்து பார்க்கையில் பெரியவர்கள் தங்கள் உலகில் சின்னவர்களாக தெருவதை கவனியுங்கள். இது ஆர்.கே. நாராயணின் "சுவாமி மற்றும் நண்பர்கள்" நாவலின் ஒரு காட்சியை நினைவுபடுத்துகிறது. இரு ஐந்தாம் வகுப்பு சிறுவர்கள் கட்டிப் புரண்டு மோதுவார்கள். இவர்களில் ஒருவன் உயரமானவன்; பிற சிறுவர்களுக்கு அவனைப்பற்றி பயங்கர சாகசக்காரன், பலசாலி என்று பிம்பம். நெருங்க அச்சம். சண்டை வெகு நேரம் நீடிக்கிறது. இனிமேல் யார் நினைத்தாலும் இந்த குஸ்தியை தடுக்க முடியாது, ஏனென்றால் நமக்குத் தெரிந்த பெரிய பலசாலியே இந்த மோதலில் ஈடுபட்டுள்ள நிலையில், அவனையே யாரால் தடுத்து, விலக்க முடியும் என்று மிகைகற்பனையில் வியக்கிறான் அதே வகுப்பில் படிக்கும் கடை சொல்லியான சிறுவன். அப்போது ஒரு ஆச்சரியம் நேர்கிறது. பள்ளி பீயுண் வந்து "இந்த பசங்களுக்கு இதே வேலையாப் போச்சு" என்று இருவரை எளிதாக தூக்கி விலக்கி விடுகிறார். "நம் நண்பனை தூக்கும் விலக்கும்படி மற்றொரு பெரிய பலசாலியா" என கதைசொல்லி குழந்தையின் பத்தாம்பசலித்தனத்துடன் வாயடைத்துப் போகிறான். மனித அணுகுமுறையின் சாய்வை குறிப்பிடுவதாக மற்றொரு தளத்திலும் இந்த படத்தை புரிந்து கொள்ளலாம். சிறுவர்களின் முகபாவ்த்தை காட்டாமல் பின்னிருந்து படம் எடுத்துள்ளதும் முக்கியம்: இதனால் பார்வையாளனின் கற்பனை தூண்டப்படுகிறது. வலது புறமிருந்து பீறிடும் அதீத வெளிச்சத்தை கட்டுப்படுத்தாததும், வழக்கமான உயரத்தில் வலது கோடியில் தெரியும் நபரை குரோப் (crop) செய்யாததும் குறைகள்.

அடுத்து இரு சிறுவர்களின் மனத்தடை அற்ற தருணம். இச்சிறுவர்களை வாயில் விரலிடாதபடி அவர்களின் தந்தை தொடந்து மிரட்டி வந்ததாகவும், அவர் அசந்த நேரம் விரலகள் மீண்டும் வாய்க்கு செல்ல தான் கிளிக்கியதாக தெரிவிக்கிறார் இந்த புகைப்படக்கலைஞர். படமாகும் நபர் கருவியை பொருட்படுத்தாத நேரத்தில் தான் சிறந்த படங்கள் உருவாகின்றன. பிரக்ஞை புகைப்படத்தின் எதிரி.


அடுத்த வண்ணப்படத்தில் என்னைக் கவர்ந்தது அதில் வரும் சிறுவனின் உடல் மொழி. அருவியின் குளிர் தாங்காமல் தோள் விடைக்கிறான். முகத்தில் குளித்த பூரிப்பு, உடலில் நடுக்கம், கண்களில் வெளிச்சம். மங்கலான அருவியும், காத்திருப்பவர்களின் முதுகுகளும் இச்சூழலை நிறுவும் பின்புலம். இந்தப் படம் ஏற்படுத்தும் பாதிப்பிற்கு சிறுவனை திரை முழுக்க ஆக்கிரமிக்கச் செய்யாமல் புகைப்படக் கலை பொன்விதிப்படி (ரூல் அஃப் தெ தெர்டு) கால்வாசி மட்டுமே வைத்து பிற பகுதியில் பின்னணி தெரியச்செய்தது மற்றும் அவனை செலக்டிவ் போகஸ் எனும் தேர்வு குவிமையம் செய்ததும் முக்கியம். அருவியிலிருந்து வெளியேறியதும் பெரும்பாலானோர் இறுகி விடுவோம்; குழந்தைகளும், குழந்தைமை தொலைக்காதவர்களும் விதிவிலக்கு.

அடுத்து வருவது புல்கித் எனும் சென்னையைச் சேர்ந்த ஆரம்ப நிலை கலைஞரின் படம். போர்கிரவுண்டு என்றால் ஒரு பார்வையாளனுக்கு மிக அருகாமையில் முன்பாகத் தெரியும் படத்தின் பகுதி. இப்படத்தில் போர்கிரவுண்டிங் முறைப்படி கீழே கிடக்கும் மிதிவண்டி காட்டப்படுகிறது. ஆனால் குவிமையம் மிதிவண்டியில் இல்லை. அதனால் அது மங்கலாக மட்டுமே தெரிகிறது. இதன் பொருள் படத்தின் பேசுபொருள் மிதிவண்டி அல்ல என்பதே. அம்மூன்று விடலைச்சிறுவர்களின் பொழுதுபோக்கும் ஓய்வு அல்லது வெட்டித்தனம்தான் தலைமைப்பொருள். குவிமையம் அவர்கள்பால் உள்ளது. சைக்கிள் ஒரு உருவகம் மட்டுமே. இலக்கியத்தில் போன்றே புகைப்படத்திலும் உருவகத்தை நெருடாமல் சொல்லத்தெரிய வேண்டும். இப்படத்தின் வெற்றி அதுவே.

படத்தின் தலைமைப்பொருட்களை (ஜோடி) பின்னணியில் குவிமையத்துக்கு வெளியே வைத்து மங்கலாக்கி, ஃபோர்கிரவுண்டில் உள்ள உருவகத்தை (பூக்கள்) குவிமையப்படுத்துவதும் கற்பனையை அருமையாக தூண்டும்படி அமையலாம். கெ.எல். ராஜா பொன்சிங்கின் கீழ்வரும் படம் இதற்கு சிறப்பான உதாரணம். குவிமையம் ஜோடியில் இல்லாததனாலே அவர்களின் முகபாவங்கள் முழுக்க காட்டப்படாமல் பார்வையாளன் தன் மனக்கண் வழி இவ்வுறவாடலின் வெம்மையை உணர, ஆழமாய் பயணிக்க முடிகிறது.


அடுத்த படம் கார்த்திக் என்பவரது. இது கற்பனாவாத பாணியை சேர்ந்தது. தேவதையின் பாதங்கள் என்று தலைப்பு தந்துள்ளார். சட்டகத்தின் விளிம்பில் தலைமைப்பாத்திரத்தை நிறுவினால் நடக்கும் அல்லது அசையும் தோற்றம் கிடைக்கும் என்பது ஒரு புகைப்படக்கலை விதி. அவ்விதி இங்கு அருமையாக பயன்பட்டுள்ளது. ஒரு பாதம் தூக்கியுள்ளதும் நடத்தலை தூலமாக்குகிறது. பிடித்த சாணியில் வைத்த பூ, பட்டுப்பாவாடை, மற்றும் கொலுசின் நிறங்களின் ஒருமையை கவனியுங்கள். இந்த படத்தையும் ஆழமாக்குவது உருவகம் தான்: சாணியில் பூ. இப்பூ உறுத்தாமல் ஓரமாக தரப்பட்டுள்ளதும் முக்கியம். சட்டகத்துள் பெண்ணின் கால்கள் மட்டும் வருவது போல் பூ அம்ர்ந்துள்ள கோலத்தின் ஒரு பகுதி மட்டுமே தரப்பட்டுள்ளது. இந்த ஒப்பீட்டு ஒருமையின் வடிவாக்க நுட்பமும் இப்படத்தின் அழகியலுக்கு அவசியம்.

விஷ்ணுவர்த்தனின் கீழ்வரும் படத்தில் காட்சியின் ஆழம் நமக்கு நேரில் காணும் உணர்வைத் தருகிறது. சட்டகத்துள் காட்சியின் பல்வேறு கூறுகளை உள்ளடக்குவதை வலுயுறுத்துவது களத்தின் ஆழம் (depth of field) எனும் விதி. இப்படம் இதற்கு சிறந்த உதாரணம்.


அடுத்த இரு படங்கள் ஸ்ரீராம் மற்றும் நிதயசீலன் எனும் புகைப்பட மாணவர்களின் படைப்புகள். இரு படங்களிலும் அசையும் தலைமைப்பொருட்கள் அசையா பொருட்களால் புத்திசாலித்தனமாய் சமன்செய்யப்படுகின்றன. இந்த தொழில்நுட்பம் நகர்வின் விசையை காத்திரமாய் உணர்த்தவும் பயன்படுகிறது.
இப்படங்கள் பற்றின வேறு நுட்பமான அவதானிப்புகள் உண்டெனில் வாசகர்கள் என் மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்; மற்றொரு கட்டுரையில் அவற்றை விவாதிப்போம். இக்கலைஞர்களின் புகைப்படங்களை இம்முகவரிகளில் காணலாம்:

கார்த்திக்: http://www.flickr.com/photos/mimicrykarthik/
புல்கித்: http://www.flickr.com/photos/13768295@N00/
காயத்ரி: http://www.flickr.com/photos/mindspeephole/

விஷ்ணுவர்த்தன்: http://www.flickr.com/photos/vsquare/

ஸ்ரீராம்: http://www.flickr.com/photos/chennaihari/

நித்யசீலன்: http://www.flickr.com/photos/11569816@N05/

Comments

மிக நல்ல கட்டுரை. புகைப்படக்கலையைப் பற்றி ஒன்றும் தெரியாவிட்டாலும், சுவாரசியமான எழுத்து நடையால் இறுதிவரை வாசிக்கத் தூண்டினீர்கள். மூஞ்சி மட்டும் பிரதானமான படங்களைப் பார்த்துச் சலிக்கிறது. எல்லாக் கலையும் ஆழமான நுட்பங்களை உள்ளடக்கியதே. போகிறபோக்கில் எல்லாவற்றையும் பார்க்கும் அவசர நாட்களில் நுட்பமென்ன... நொடியென்ன...?
நன்றி தமிழ்நதி!