பலூன் மனிதர்களும் பலிச் சடங்குகளும்: தீவிர‌வாத‌த்தின் நாவுக‌ள்

2001-இக்குப் பின் தில்லி, மும்பை, அகமதாபாத், பங்களூர், ஜெய்பூர், காஷ்மீர், வாரணாசி, ஹைதராபாத் ஆகிய இடங்களில் நடந்த குண்டு வெடிப்பு உட்பட தீவிரவாதத் தாக்குதல்களில் 700க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டு விட்டனர். இந்தத் தாக்குதல்களில் இரண்டு முக்கிய குணாதிசயங்களைக் காணலாம்: (i) பொதுமக்கள் குறிவைக்கப்பட்டது; (ii) இவற்றின் லட்சிய உள்ளீடற்ற குறியீட்டுத்தன்மை. காட்சிபூர்வ, வெளிப்பாட்டு வன்முறை.
இந்தச் செய்திகளை ஊடகங்களில் கேட்ட, பார்த்த பெரும்பாலானோர் "அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று இவர்களுக்கு என்ன கிடைக்கிறது. பெரிய படிப்பெல்லாம் படித்து விட்டு ஏன் குண்டு வைக்கிறார்கள். வேலை செய்து பிழைத்தால் என்ன?" என்பது போன்ற கேள்விகளைக் கேட்க நினைத்ததில் ஆச்சரியம் இல்லை. இவை முக்கியமான கேள்விகள். இவற்றுக்கு நேரடி பதில்கள் இல்லை. ஏனெனில் உலகமயமாக்கலின் சில மறைமுக விளைவுகள் இவை.
ராண்டு கார்ப்பரேசன் அறிக்கைப்படி உலகமயமாக்கலுக்குப் பின் 1990--96 கட்டத்தில் 50,000 பொதுமக்கள் அழிக்கப்பட்டனர். 1968 லிருந்து 89 வரையிலான வருடாந்திர தீவிரவாதக் கொலைகளின் எண்ணிக்கையான 1673-உடன் ஒப்பிடுகையில் இது 162% அதிகரிப்பு. 1996க்குப் பிறகு இப்போது கொலை சதவீதம் 200ஐத் தாண்டி விட்டது. குறிப்பாய், 1980கள் போலல்லாது இப்போது அரசுகள் அல்ல சம்மந்தமற்ற பொதுமக்களே உலகமெங்கும் பலியாகின்றனர். காரணம்? நாடு சார்ந்த ஆட்சி எல்லைகளுக்குள் தீவிரவாதம் இப்போது இயங்குவதில்லை. எண்பதுகளில் போன்று உள்ளூர் அரசு எந்திரத்தை, அதிகார அமைப்புகளைத் தகர்த்து உள்ளூர்ப் பிரச்சினைகளைத் தீர்ப்பதல்ல இன்றைய தீவிரவாத நோக்கம். சர்வதேச அரசியல் பிரச்சினைகளுக்கு எதிரான நிலைப்பாட்டைக் காட்ட, எதிர்ப்பு தெரிவிக்க தேமேவெனத் திரியும் மக்களைத் தாக்குவதே இன்றைய தீவிரவாதிகளின் பாணி.
கூட்டில் ஊன்பெருக்கி வம்சம் வளர்ப்பதே ஒரே முனைப்பாய்க் கொண்டு வாழும் உலக நாடுகளின் பட்டுப்புழுக் குடிமக்களை அல்கொய்தா போன்ற சர்வதேச தீவிரவாத அதிகார முகவர் ஒருங்கிணைப்புகள் தங்கள் வளர்ச்சி, வலிமை நிறுவும் சூதாட்டத்தில் மௌனப் பகடைகள் ஆக்கி வருகின்றனர். இதுவே இந்த நூற்றாண்டின் பெரும் துன்பியல் வரலாறு.
தேசியம் கடந்த வன்முறை:
. இந்திய நகரங்களில் வெடிகுண்டுத் தாக்குதலுக்கு நம்மூர் தீவிரவாதிகள் அனுப்பிய மின்னஞ்சல் மிரட்ட முயல்வது போல் பழிவாங்குதல் நோக்கம் என்றால், அரிந்தம் சவுத்திரி சொல்வது போல், நக்சலைட் பாணியில் மோடி, மற்றும் அவரது அனுமார் பரிவாரைத் தான் குறிவைத்துத் தாக்கியிருக்க வேண்டும். அப்படிச் செய்யவில்லை என்பதும், பதிலாக குஜராத், காஷ்மீரில் என்ன நடக்கிறதென்றே கவலைப்படாத, சாப்பாட்டு மேஜைக்கும் கழிப்பறைக்கும் இடையே வாழ்கிற, அல்லது மூன்று வேளை உணவுக்கே உத்தரவாதமில்லாத பொதுமக்களே பலி கொடுக்கப்பட்டார்கள் என்பது, இவர்களது சிரத்தை உள்ளூர் வட்டத்துள் தவளைத்தாவல் செய்வதல்ல என்பதைக் காட்டுகிறது. உள்ளூர்ப் பிரச்சினைக்கான பதில் என வெளிப்படையாக போலியாகக் காட்டிக் கொண்டு, உண்மையில் சர்வதேச அடிப்படைவாத தட்டையான கொள்கைகளுடன், தீவிரவாத உரிமம்வழங்கும் முகவர் மையங்களான அல்கொய்தா போன்றவற்றுடன் செயலளவில் இணைவதும், இசுலாமிய அடிப்படைவாத உலகத்தில் பிரபலமடைவதுமே இந்த இந்தியத் தீவிரவாதிகளின் தேசிய எல்லை கடந்த தாக்குதல் நோக்கம். உலகமயமாக்க தீவிரவாதத்தின் தேசிய அடையாளம் கடந்த வன்முறைக்கு மற்றொரு உதாரணம் அகமது ஷா மசூது எனப்படும் அப்கானிய பாதுகாப்பு அமைச்சரின் படுகொலை. அல்கொய்தா இவரை வதிக்கப் பயன்படுத்தியது அப்கானியர்களை அல்ல. லண்டனில் வழங்கப்பட்ட பெல்ஜிய போலிக் கடவுச்சீட்டுகள் கொண்ட அல்ஜீரியர்களை.
பிற்போக்கு ச் சிந்தனையும், நவீனத் தொழில்நுட்ப பயன்பாடும்:
சர்வதேசத் தீவிரவாதிகளுக்கு இவர்கள் அடிப்படைவாதிகளானாலும், அதி நவீனத் தொழில் நுட்பங்களை, தகவல் தொடர்பு வசதிகளைப் பயன்படுத்துவதில் எந்தக் கூச்சமுமில்லை. இதுவே தொண்ணூறுகளுக்குப் பின்னான தீவிரவாதக் கூட்டமைப்பின் அசுர வளர்ச்சிக்குக் காரணம். அல்கொய்தா, முஜாகதீன் தீவிரவாதிகள் ஒன்றும் மலைவாசிகள் அல்ல, தொழில் நுட்பப் படிப்புகள் மெத்த படித்த மேல்தட்டு, உயர்மத்திய தட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை நினைவிற் கொள்வோம். அறிவு பெரும் அதிகாரமல்லவா! உலகெங்குமான ஜிகாத் தீவிரவாதக் குழுக்களுக்குப் பணம், திட்டமிடல், பயிற்சி, அறிவுரை என்று பலதரப்பட்ட ஆதரவுகளை சர்வதேசத் தீவிரவாதக் கூட்டமைப்புகளான முஜாகதீன், அல் கொய்தா தருகின்றன. தகவல் பரிமாற, தொடர்பு கொள்ள சாட்டிலைட் இணையத் தளங்கள், இணைய அரட்டை அறைகள் ஆகியவை பயன்படுகின்றன. இங்கிலாந்தில் வெடிப்பதற்காய் குண்டுகள் தயாரிக்க கபீல் அகமது எனும் பொறியியலாளர் இணையத் தளங்களில் உள்ள தகவல்களைத் தான் பயன்படுத்தினார். (உதாரணத்துக்கு எளிய முறையில் வெடிகுண்டு செய்முறைக் குறிப்புகள் சொல்லும் இந்த இணையத்தளத்தைப் பாருங்கள்: http://www.bombshock.com/archives/homemade_bombs/high_order/how_to_make_dynamite.html). தீவிரவாத ஒருங்கிணைப்போர் குழுக்கள் தங்கள் திட்டங்களை விவரிக்க பயணம் செய்ய, ஒரே இடத்தில் குழும வேண்டிய அவசியம் இன்று இல்லை; கணினி முன் இருந்து கொண்டோ அல்லது மடியில் லாப்டாப்பை வைத்து விமானத்தில் பறந்து கொண்டோ ஒரு பெரும் வெடிகுண்டு வரிசையைத் திட்டமிடும் பிரம்மாண்ட தீவிரவாத சங்கிலித் தொடரின் உள்ளூர்க் கண்ணியாக ஒருவர் இருக்கலாம். உலகத் தீவிரவாதத்தை வேரறுக்க இதனாலேயே மிகச்சிரமமாய் உள்ளது. 1980-இல் முழுக்க தேச ஆதரவை நம்பியிருந்த தனித் தீவிரவாதக் குழுக்கள், உலகமயமாக்கலுக்குப் பின் அல்கொய்தா போன்ற உரிமை அதிகார முகவர் ஒருங்கிணைப்புகளாக மாறி தேசமற்ற வலைஅமைப்புகள் மற்றும் சர்வதேச மதவாதம் ஆகியன பயன்படுத்தி அசுரவளர்ச்சி கண்டுள்ளன.
குறியீட்டு வன்முறை:
தீவிரவாதிகள் ரயில், சந்தை, பொதுக் கேளிக்கை தலங்கள், வழிபாட்டிடங்களில் நிகழ்த்தும் வன்முறை உள் நாட்டை ஒரேயடியாய் அழிவுக்கு இட்டுச் சென்று, சரணடைய வைக்க அல்ல. பொருள், உயிர்ச்சேதங்களையும் தாண்டி தேசம் தொடர்ந்து நடை போடுகிறது. குண்டு வெடித்த அடுத்த நாள் நகர மக்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு வேறு வழியின்றித் திரும்புகின்றனர். ஊடகங்கள் அவர்களது வீரத்தை, சமநிலையைப் போற்றிப் பாடுகின்றன. ஆனாலும் தீவிரவாதிகள் சளைக்காமல் குண்டுகள் வெடிப்பதன் காரணம், முக்கியமாய், இவ்வன்முறை பலி சடங்கு போன்று குறியீட்டு ரீதியானது என்பதாலே. பூசாரி குருதி தெறிக்கக் கோழியை அறுத்து பலி தருவது போல், அல்லது அதற்கு பதிலீடாக சாத்வீக கோவில்களில் செம்பூக்களும், செந்தூரமும் படைக்கப்படுவது போல் சின்னதும், பெரிதுமாக குண்டுகள் சிதற இந்தியாவில் நரபலி தரப்படுகிறது. இதனால் காஷ்மீர், அப்கானிஸ்தான், ஈராக்கில் அப்பாவி இஸ்லாமிய பிரஜைகள் பயனடையவோ, புஷ்டியாகவோ போவதில்லை என்றாலும், சர்வதேசத் தீவிரவாதிகளின் உலகில், உலக வர்த்தக மைய அழிப்பு போல், இவை ஒரு முக்கிய குறியீட்டு நிகழ்வுகளாய்க் காணப்படும். நம் உலகம் ஒரு பெரும் குருதி பலி வெளியாக இவ்வாறு மாற்றப்பட்டுகிறது. இந்தத் தீவிரவாதப் போர்கள் போர்களல்ல, காட்சிபூர்வ மிரட்டல்கள், பதில் மிரட்டல்கள். அல்கொய்தா, முஜாகதீன்களுக்குக் குட்டி பி.பி.ஓக்களான இந்திய முஜாகதீன் போன்றவை காட்டும் டிரெயிலர்கள்; எதிர்காலத்தில் இதன் வேலை வரலாற்றுப் பட்டியலில் இடம்பெறப் போகும் முதல் சில வரிகள்.
காவல்துறையால் கொல்லப்பட்ட ஆட்டிப்பின் கணினியிலிருந்து, பிபிஸி, சி.என்.என், ஐ.பி.என் ஆகிய செய்தி ஊடகங்களின் தொலைபேசி எண்கள் கிடைத்தன. ஆட்டிப்பின் கூட்டாளி ஆட்டிப்புக்குத் தொடர்ச்சியான குண்டுவெடிப்புகளின் மூலம் உலகப் புகழ் பெறும் ஆவேச வெறி இருந்ததாய்ச் சொல்லியுள்ளதைக் கவனியுங்கள். எதிர்காலத்தில் உலகமே கவனிக்கும் ஒரு வேண்டப்பட்ட தீவிரவாதியாக பி.பி.சியில் பேட்டி தரும் கனவு அவனுக்கு இருந்திருக்க வேண்டும். அதே போன்றே ஆட்டிப் ஒவ்வொரு முறையும் மின்னஞ்சல் அனுப்பும் போது மீண்டும் மீண்டும் அதைச் செப்பனிட்டு சிறப்பான மிரட்டலாக்க முயன்றதும், மின்னஞ்சலுக்காய் ஆர்வத்துடன் இயக்கச்சின்னம் உருவாக்கியதும் காட்சிபூர்வ மிரட்டல் தீவிரவாதத்துக்கு முக்கியமான தகவல்கள்.
இவற்றைத் திரும்பத் திரும்ப ஒளிபரப்பி நம் காட்சி ஊடகங்கள் நம் தனிமனித வெளியைச் சித்திரவதை முகாமாக்கும். நமது அகவெளியை உணர்வதிர்ச்சிக் கோளாறு நோயாளியின் பெரும் மனவெளியாக மாற்றும். உலகமயமாக்கலில் நாம் ஊடகத் தீவிரவாதத்தின் தாக்குதல்களிலிருந்து ஒரு போதும் தப்புவதே இல்லை.
இந்திய குண்டு வெடிப்புகளில் மேலும் சில பின்நவீனத்துவ தீவிரவாத அம்சங்களைக் காணலாம்: முன்கூட்டிய மிரட்டல் (மின்னஞ்சல் சவால்கள்), இதைத் தொடர்ந்த மனோதத்துவ போர்முறை (இஸ்லாமிய இனப்படுகொலைகளின் தண்டனையை இந்தியர்கள் இன்னும் பல தலைமுறைகளுக்கு அனுபவிக்கப் போகிறார்கள்), அறியப்படாத பின்னணியிலிருந்து தாக்குதல்கள் (அடுக்குமாடிக் கட்டிடத்தில் சராசரி கல்லூரி மாணவர்கள், பொறியியலாளர்களாகப் பின்னணி), எதிர்பாராத மாயாவித் தாக்குதல்கள் (தீவிரவாத சக்திகளின் பிடியிலிருந்து தில்லியை முழுக்க விடுவித்து விட்டோம் என்று காக்கிகள் மார்தட்டும் போது, சாதாரணமாய் பைக்கில் இருவர் வந்து கூட்டமான இடத்தில் குண்டு போட்டுச் செல்வது). நாட்டின் இண்டு இடுக்குகளிலெல்லாம் முளைத்து வந்து தாக்கும் ஒருவித சர்வவியாபகத் தன்மை பின்நவீனத்துவ தீவிரவாதத்தின் ஆகப்பெரிய அச்சுறுத்தல்.
அதிகார எல்லைகள் மாய உண்மைகள்:
ஒரு அர்த்தத்தில் உலகமயமாக்கலுக்குப் பின் பிரஜை--தேச உறவுகள் மெல்லத் தேய்ந்து அழிந்து வருகின்றன. இதற்கு ஒரு காரணமான தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி ஒருபுறம், வர்த்தகம், அறிவுத்துறைகளில் பெரும் வளர்ச்சியை மாயம் போல் நிகழ்த்திக் காட்டினாலும், தேசியம், தேசிய ஆட்சி எல்லைகள் கடந்த தீவிரவாத்தையும் உருவாக்கியுள்ளது. பாதுகாப்பு பற்றிய சம்பிரதாயக் கருத்தாக்கம் உறுதியான அதிகார எல்லைகளை, அது சார்ந்த எதிரியை முன்தீர்மானிக்கிறது. உதாரணமாய், ஆட்சி எல்லைக்கு அப்பாலிருந்து தாக்கி நாட்டைக் கைப்பற்ற விழைபவனே எதிரி. உலகமயமாக்கல் காலத்தில் ஆட்சியெல்லைகள் மறைந்து, உலகம் சுருங்கி விட்டபின், இந்த சம்பிரதாய 'எதிரி' மறைந்து விட்டான். இந்தப் பழங்கருத்தாக்கம் பின்நவீன தீவிரவாதத்தை சமாளிக்க உதவாது. தீவிரவாத கட்டுப்படுத்தலுக்கு ஊடகங்கள் பரிந்துரைக்கும் காவல் விசாரணைக் குழுக்களின் உள்நாட்டு ஒருங்கிணைப்பு, தகவல் பரிமாற்றம் மட்டும் போதாது. இவை பூனைக்கு மணி கட்டும் சாகசங்கள் மட்டுமே.
என்ன செய்யலாம்?
ஆட்சி எல்லை கடந்த தீவிரவாதத்தை ஆட்சி எல்லை கடந்து போய் சர்வதேச ராணுவ ஒருங்கிணைப்பு மூலம் கட்டுப்படுத்துவது சர்வதேச அளவில் ஒரு பிரபல மார்க்கம். தீவிரவாத முகாம்களோ, ஆதரவு சக்திகளோ இயங்கும் நாடுகளுக்கு சலுகைகள் கொடுத்து, தனியார் (இந்தியா)--நாடு (பிற நாடு) கூட்டுறவு அமைத்து தீவிரவாதிகளின் பொருளாதரவை, வளர்ச்சியை ஓரளவு கட்டுப்படுத்தலாம். அதாவது நம் வீட்டுத் திருடனை பக்கத்து வீட்டில் போய்ப் பிடிப்பது. இது எங்கு சிக்கலாகிறதென்றால், திருடன் அயல்வீட்டுக்காரனின் உறவுக்காரனாயிருக்கும் பட்சத்தில். இங்குதான் உலக அரசியல் செல்வாக்கும், ராணுவ பலமும் அவசியமாகிறது. வங்கதேசத்தில் தீவிரவாத முகாம்கள் நடப்பதாய் அறை கூவுவதை விட்டு விட்டு, இந்தியா அத்தேசத்திற்கு பொருளாதாரச் சலுகைகள், வர்த்தக ஆதரவுகள் தந்து, அவர்களின் ஆட்சி எல்லைகளுக்குள் அமெரிக்க பாணியில் இயங்க முயலலாம். ஆனால் விளைவுகள் அடிப்படை மனித அறத்துக்கு எதிரானவை.
தீவிரவாத முறியடிப்புப் போரின் மற்றொரு பக்கத்தையும் கவனிப்போம். மனித நேயமற்ற படுகொலைகளும், ஆக்கிரமிப்புகளும், சித்திரவதை முகாம்களுமே வாழ்வெல்லை கடந்த தனியார்--நாடு கூட்டுத் தீவிரவாத முறியடிப்புப் போர்களின் வரலாறு. இந்தியா எதிர்காலத்தில் உலக அரசியலில் அமெரிக்கா போல் ஒரு டினோசராக உருவாகும் பட்சத்தில், நம் ஒவ்வொருவரின் கைகளிலும் கழுவினால் மறையாத அப்பாவிகளின் குருதிக் கறை படியும் வாய்ப்புள்ளது. தீவிரவாத எதிர்ப்பில், பலவீனர்களின், ஏழை அப்பாவிகளின் மரண ஓலங்களும், அடக்குமுறைத் திமிறல்களும் நமது போர் பண்டமாற்றாக வேண்டாம்! சாத்தானோடு உணவருந்தும் போது, இருப்பதிலேயே நீளமான கரண்டியைப் பயன்படுத்துவோம்.
நகோரி, ஆட்டிப்பைப் போன்று பிற்போக்குக் கொள்கைகளும், அதிநவீனத் தொழில் நுட்பமும் தெரிந்த உலகமயமாக்கத் தீவிரவாதி முகமற்ற, மண்ணில் எங்கும் பிடிப்பற்ற ஒரு வெற்று மனிதன். காற்றூதிய பலூன் பொம்மை. பின்நவீனத்துவ மனிதனின் பூதாகாரமாய் வளர்ந்த சிதைந்த நிழல்கள் இவர்கள். பாதரசம் போல் உருண்டோடும் நம் ஒவ்வொருவரையும் போல் இவர்களும் பரிதாபத்துக்குரியவர்களே.

Comments